“ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால், மற்றொருவர் தோற்க வேண்டும்”
“ஒருவருக்கு ஒரு ரூபாய் செலவாகிறதென்றால், இன்னொருவருக்கு அது வருவாயாகிறது”
இவை காலங்காலமாய் நாம் கேட்டுக்கொண்டு வரும் பொது விதிகள். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த வரிகள் உண்மைதான். ஆனால் 100% சதவிகிதம் இப்படித்தான் நடக்க வேண்டுமென்பது இயற்கையின் விதியா? என்றால் “இல்லை” என்பதே எனது பதில்.
அதெப்படி, யாரும் தோற்காமல் இன்னொருவர் வெற்றி காண முடியும்? என்று நீங்கள் உடனே என்னை கேள்வி கேட்க முற்படலாம். அதைப் பற்றி அலசிடத்தான் இந்த சிறிய கட்டுரை;
மாறிவரும் தேர்வு மதிப்பெண் முறைகள்
இன்று மேலை நாட்டுக் தேர்வு மதிப்பெண் முறைகளில், எண்ணற்ற மாற்றம் வந்துவிட்டன. முந்தைய காலங்களில், முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் என்று மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் வரிசைப் படுத்தினார்கள். அந்த வரிசைப்படுத்தல் முறை, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக எல்லா உளவியலாளர்களும் கூறி வந்ததைத் தொடர்ந்து, 1,2,3 என்று வரிசைப்படுத்தாமல், 90+, 80+, 70+ என்று பிரித்து A+, A, B, C, D என்று கிரேடு முறை வழங்கி வருகின்றனர். இதுவும் ஒரு வகை வரிசைப்படுத்தும் முறையாக இருந்தாலும், அதீத போட்டி பொறாமைகளை இந்தமுறை உருவாக்குவதில்லை. மாணவர்களுக்குள் ‘நான் வென்றேன், நீ நோற்றாய் என்ற போட்டி பொறாமைகளை வளர்க்கக்கூடாது என்று கல்வியாளர்கள் கருதியதால்’ எல்லோருமே வெல்கிறோம் என்கிற புரிதலை ஏற்படுத்த இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர்.
மனிதம் வெல்லட்டும்
யதார்த்தத்தில், எல்லோருமே ஒரு விடயத்தில் / ஒரு போட்டியில் வெற்றி பெறமுடியுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் தோன்றும்.
ஒரு ஓட்டப் பந்தயம் என்று ஓடினால், ஒருவருக்கு தானே முதல் பரிசு கொடுக்க முடியும். தனித்திறமை சார்ந்த விளையாட்டுக்களில் எல்லோருமே வெல்வதென்பது சாத்தியம் இல்லை. ஆனால் அந்த வெற்றி பெறும் நபர், தன் வெற்றியின் அகந்தையில் தோல்வியாளர்களை அவமதிக்காமல், அவர்களுக்கு ஆறுதல் கூறி ஊக்குவித்தால், அங்கு மனிதம் நிலைத்திடும். எதிராளி தோற்றிருந்தாலும், உங்களோடு நல்லுறவில் இருப்பார். அங்கு போட்டியாளர்களுக்கிடையே மனிதத்தன்மை வெற்றி பெறுவது சமுதாயத்திற்கு நல்லது. அந்த சமுதாய நல்லுரவையும், பரஸ்பர புரிதலையும் மையமாகக் கொண்டுதான் நாடுகளுக்கிடையே கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் மக்களின் தவறான புரிதலால், விளையாட்டுப் போட்டியென்பது ஏதோ கௌரவத்தின் அடையாளமாக, பரம எதிரிகளை வீழ்தும் போராட்டமாக சிலசமயங்களில் உருவகப்படுத்தப்பட்டு விடுகிறது.
எதிராளிகளை நசுக்கும் வியாபார தந்திரங்கள்
வியாபார விடயத்தில், ஒரு சிறு வரலாற்று சம்பவத்தை முதலில் உதாரணமாக பார்க்கலாம். வெள்ளையருக்கு எதிராக நம் வ.உ.சிதம்பரனார், கப்பல் வாங்கி வர்த்தகம் தொடங்கியபோது, அதை அழிக்க வெள்ளையர்கள் எண்ணற்ற சலுகைகளை பயணிகளுக்கு வழங்கி, வ.உ.சி-யின் கப்பல் தொழிலுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தினர். தொடர் நஷ்டத்தால் வ.உ.சி தொழிலை விட்டு விலகியதும், கட்டணங்களை பல மடங்காக உயர்த்தினர். இதுதான் முதலாளித்துவ பொருளியலின் பெரும் சாபக்கேடான விடயம். தான் மட்டுமே இலாபம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சக போட்டியாளரை நசுக்க நினைப்பது மிகக் கொடூரம். இந்த வியாபார தந்திரத்தை புரியாமல், இன்றைக்கு கிடைக்கும் இலாபத்தை மட்டும் மனதில் கொண்டு, வாடிக்கையாளர்கள் அந்த முதலாளிகளின் பின்சென்று மாட்டிக்கொள்கின்றனர். போட்டி இல்லாத காலங்களில், அந்த முதலாளிகள் விலையை கடுமையாக உயர்த்தி, முன்னர் ஏற்பட்ட நஷ்டத்தை தற்போதைய பன் மடங்கு லாபத்தின் மூலம் ஈடு செய்து விடுகிறார்.
இந்த வியாபார சூழ்ச்சிகளை பலர் அறிந்திருந்தாலும், பெரும்பாலானோர் வியாபார போட்டியின் காரணமாக இன்றைக்கு கிடைக்கும் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இயங்குகின்றனர். ஒருவேளை நம்மவர்கள் அன்று வ.உ.சி-யுனுடைய கப்பலை பயன்படுத்தியிருந்தால், வர்த்தகத்தில் சமமான போட்டி இருந்து வியாபாரிகளுக்கு தரமான சேவை கிடைத்திருக்க வாய்ப்பாகியிருக்கும். ஆனால் வெள்ளையர்கள் தங்களின் ஏகபோக வர்த்தக முறைக்கு வழி வகுக்க, இந்தியர்களை நசுக்க, தந்திரமாக காய்களை நகர்த்தினர். விளைவு, இறுதியில் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களுமே அந்த விலையேற்றச் சுமையை சுமக்க வேண்டி வந்தது.
தோல்வியிலும் களிக்கலாம்
எல்லா இடங்களிலும் நாம் வெல்வது தான் ‘வெற்றி’ என்றில்லை. சில இடங்களில், தோற்பது கூட நமக்கு மனநிறைவைக் கொடுக்கலாம். நீங்கள் உங்கள் குழந்தைகளோடு சதுரங்கம், சீட்டு, தாயம் போன்று ஏதேனுமொரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்போது, உங்கள் குழந்தை, உங்களை வெற்றி பெறுவதில் அடையும் மகிழ்ச்சியை காண்பதில் தான் உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியும், வெற்றியும் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் வென்று, குழந்தை மனம்வருந்தி நின்றால், உங்களுக்கும் அது வருத்தத்தையே தரும். அப்படித்தான் வெற்றியும், மகிழ்ச்சியும், சில தருணங்களில் உங்களின் தோல்வியிலும், விட்டுக்கொடுப்பதிலும் ஒளிந்திருக்கிறது.
இல்லறத்தில் ஜெயிக்க நீங்கள் தோற்கவேண்டும்
இல்லற வாழ்வில், ‘வெற்றி’ என்பது கணவன்-மனைவிக்கிடையே யார் வெற்றி பெறுகிறார் என்பதை விட, யாரொருவர் மற்றவரை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்கின்றார் என்பதில் தீர்மானமாகிறது. ஏனைய உறவுகளுக்கு மத்தியிலும், நாம் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், சின்ன சின்ன தவறுகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்தால், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அதையே “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று சுருக்கமாக நம் முன்னோர் சொல்லிச் சென்றனர்.
தலைமைப்பொறுப்பு – சுயநலம்
தலைவனாகப் பொறுப்பேற்கக் கூடியவர், தன் தனிப்பட்ட வளர்ச்சி, தன் குடுப்பத்திற்கு செல்வம் சேர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டால், நாளடைவில் தன்னைச்சார்ந்த குழுவையே முற்றிலுமாய் இழக்க நேரிடலாம். இன்றைய போட்டிநிறைந்த முதலாளித்துவ சமுதாயத்தில், சுயநலவாத தலைமை கொண்ட அமைப்புக்களில், அந்த குழு முழுவதும் சுயநலவாதிகளாக மாறிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி சுயநலக்காரர்களாக மாறிவிடும் அணியென்பது, சமுதாயத்திற்கு பெரிய அவமானச்சின்னமாக, சாபக்கேடாகி விடுகிறது. எந்த ஒரு தலைவன் தன்னுடைய தனிப்பட்ட வெற்றியை விட, தன் குழுவின் வெற்றிக்கு வழிவகுக்க பாடுபடுகிறானோ, அவனையே சரியான தலைவனாக மக்கள் ஏற்று ஆக்கத்தையும், சமுதாய வளர்ச்சியை நோக்கி முன்னேறுவார்கள்.
கொள்ளை இலாபம்
வியாபாரத்தில் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, பொருளின் விலையில் எண்ணற்ற ஏற்ற-இறக்கம் காணப்படுவது இயல்பு. ஒரு வியாபாரி தன்னுடைய இலாபம் குறிப்பிட்ட சதவீதம் என்று நிர்ணயித்து, மூலப் பொருட்களின் வரத்து, தன் இருப்புநிலை, சந்தையின் தேவை அடிப்படையில் முறையான இலாபத்துடன் வியாபாரம் செய்யும்போது, யாருக்கும் பெரிய பாதிப்போ, வருத்தமோ இருப்பதில்லை.
ஆனால், அதே வியாபாரி, சந்தையில் ஏதேனும் காரணங்களினால் வரத்து குறையும் போது, வாய்ப்பை பயன்படுத்தி தன்னிடம் மட்டுமே இருக்கும் இருப்பை, பன் மடங்கு லாபத்திற்கு விற்பனைசெய்ய முற்பட்டால், அப்போதைக்கு மக்கள் வேறு வழியின்றி வாங்கினாலும், பின்னாளில் அவரிடம் தொழில் செய்ய விரும்ப மாட்டார்கள். இன்னொரு போட்டியாளர் யாரேனும் கடை திறந்தால், கூட்டம் தானாக அங்கு செல்லத் தொடங்கிவிடும். சமய-சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இலாப-நஷ்டங்களை சற்று மாற்றுவது வியாபார இயல்பு. ஆனால் அதே சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, கொள்ளை இலாபம் பெற முயல்வது, இன்னொருவருக்குப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். அதன் விளைவாய் நீண்டகால நோக்கில், அந்த வாடிக்கையாளரை இழந்து வியாபாரத்தையும் இழக்க நேரிடும்.
வாடிக்கையாளரின் வெற்றியே வியாபாரத்தின் வெற்றி
வியாபாரத்தில் லாபம் மட்டுமே வெற்றியல்ல. சில சமயங்களில் நஷ்டம் இல்லாமல் தப்பிப்பதும் பெரிய வெற்றிதான். பல தருணங்களில், போட்டியாளர்களும் வியாபாரத்தில் நிலைத்திருக்க வழிவகுப்பது வெற்றிதான். தெரிந்த சிறுசிறு போட்டியாளர்களை நசுக்க முனைந்தால், புதிய போட்டியாளர்கள், பலமானவர்களாக வரக்கூடும். புதியவர்கள் வருகின்ற பட்சத்தில், பல வாடிக்கையாளர்களை இழக்க நேரிடலாம்.
பழைய போட்டியாளர்களுக்கு மத்தியில், தரமான சேவையை மட்டுமே பிரதானமாக கொண்டு வியாபாரம் செய்பவர், தனக்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தை கட்டமைத்து அமோகமாக வியாபாரம் செய்ய முடியும். அப்படி தரமான பொருட்களை சரியான விலையில் வழங்கிவருவது, வாடிக்கையாளருக்கு தங்களின் தேர்வு சரியானதுதான் என்ற மனநிறைவைக் கொடுப்பதோடு, அவர்களை வெற்றி பெற்றதாக உணர வைக்கும். அப்படி வியாபார வளர்ச்சியுடன், வாடிக்கையாளரையும் வெற்றி பெற்றதாக உணரவைப்பதுதான், வியாபாரத்தின் மிகப்பெரிய வெற்றி.
சுயநலத்தைத் தாண்டி
சுயநல நோக்கில் மட்டும் பார்த்தால், நாம் தனிப்பட்ட முறையிலே வெற்றி பெறவே எல்லோரும் ஆசைப்படுகிறோம். உலகில் உள்ள அனைவருமே சுயநல நோக்கிலேயே இருந்துவிட்டால், மக்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாகத் தாழ்ந்து சீரழிந்துவிடும். சுயநலம் அதிகரிக்க அதிகரிக்க பொய்யும், புரட்டும், களவும், அநீதியும், அதர்மமும், ஏமாற்றுதலும், நம்பிக்கை துரோகமும் அதிகரித்து சமுதாயம் சீக்கிரத்திலேயே சீரழிந்து விடும்.
நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற சுயநலத்தைத் தாண்டி, நம்மைச் சார்ந்தவர்களும், நம் சமுதாயமும் வெற்றி பெற வேண்டும் என்று பறந்த நோக்கில் உழைத்தால், நாம் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயம் தானாக உருவாகி நம் வாழ்வை வளப்படுத்தும். மாறாய் சுயநலத்தோடு செயல்பட்டால், தற்போதைக்கு இலாபமும் மகிழ்ச்சியும் கிடைத்தாலும், நீண்ட கால நோக்கில் அது பேரழிவுக்கு வழிவகுக்கும். பொது நலத்தோடு பல தலைவர்கள் இருப்பதாலேயே, நாடும், மனித சமுதாயமும் இன்றும் நிலைத்திருக்கிறது;
போட்டியில் ஜெயிப்பது வெற்றி – ஆனால்
எல்லா ஜெயித்தலும் வெற்றியாகாது;
மனைவி குழந்தைகளிடம் தோற்பது வெற்றி;
தன்னை நம்பியவரை ஜெயிக்கவைப்பது வெற்றி;
அடுத்தவரையும் வெற்றி பெறவைத்து
நாம் வெற்றியடைவதுதான் உண்மையான வெற்றி;
ஏனெனில் வெற்றியாருடைய தனிப்பட்ட சொத்துமல்ல;
வெற்றி என்பது நம்மைச் சார்ந்தவர்கள்
நமக்களிக்கும் ஒரு அங்கீகாரமே;
அந்த அங்கீகாரத்தை அளிக்க
அவர்களும் வெற்றிபெற்று உங்களோடு இருந்தால்தான்
வெற்றியின் சுவையை களிக்க முடியும்;
போட்டிகளில் வெற்றி-தோல்வி என்பதைவிட
எப்படி வெற்றி-வெற்றி என இருவரும்
வெற்றிபெறுவதென்று பாருங்கள்;
தோல்வியாளர்கள் இல்லாத சமுதாயம் உருவானால்
அதைவிட சிறந்த சொர்க்கம் எங்கு உள்ளது!!
- [ம.சு.கு 27.08.2022]
Kommentare