top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-364

சாவதற்குள் அனுபவியுங்கள்...!


  • எங்கள் ஊர்களில் அவ்வப்போது குடும்பங்களுக்கிடைய சொத்துத்தகராறுகள் வரும். ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் கூட பேசுவார்கள். தந்தையின் சொத்துச் சண்டையில் அந்த பெற்றோர்களுக்கு நரக வேதனை இருப்பதை பார்த்திருக்கிறேன். இப்படி சொத்துச் சண்டையினால், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் நிரந்தமாய் பிரிந்து எதிரிகளாக எண்ணிக்கொள்வதைக் காட்டிலும் மனித இனத்தின் முட்டாள் தனம் வேறென்ன இருக்கமுடியும்!

  • இன்போஸிஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. நாராயண மூர்த்தியும், அவரது மனைவி சுதா மூர்த்தியவர்களும் இந்த தலைப்பிற்கு ஏற்ற ஒரு நல்ல உதாரணம். அவர்கள் தங்கள் உழைப்பால் சேர்த்த செல்வம் அளவில்லாதது. ஆனால் சாதாரண உடையில் வலம் வரும் திருமதி சுதா மூர்த்தியவர்கள் அதை அனுபவிக்கிறார்களா என்ற சந்தேகும் உங்களுக்கு வரும்? உண்மையில் அவர்கள் ஆனதத்தையும், மனநிறைவையும் ஏழைகளுக்கு கொடுப்பதில் பார்த்தார்கள். தங்கள் சொத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனம் அமைத்து அளவில்லாமல் கொடுத்து மகிழ்கிறார்கள். தன் அனுபவங்களை எழுத்தாக்கி எண்ணற்ற படைப்புக்களை கொடுத்துள்ளார்கள்.

கூடிவாழ்ந்தால் கோடிநன்மை என்று முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால் சொத்துச்சண்டையில் ஒருவருக்கொருவர் எதிரிகளாக நிற்பதும், பெற்றோர்களை நிர்கதியாய் விடுவதும் அன்றாடம் பார்க்கிறோம். மற்ற குடும்பங்களில் நிகழ்வதைப்பார்த்து நம் குடும்பத்தை திருத்திக்கொள்ளாமல், அதேபோல இங்கும் சொத்துக்கு சண்டை ஆரம்பிப்பவர்கள் தான் ஏராளம். அப்படி சண்டையிட்டு வாங்குபவர்கள் அதை நிறைவாக அனுபவிக்கிறார்களா?


நிறைய செல்வம் சேர்த்து, அதை அழியாமல் பார்த்துக்கொள்ள முயற்சிக்கும்போதுதான் எல்லா பயமும், மனவேதனையும் வரும். உங்களுக்கு போதுமானது போக ஏனையவற்றை மற்றவருக்கு கொடுப்பதில் ஒருவகை மனநிறைவை காணலாம். ஒருவேலை கொடுக்காவிட்டாலும், அதை உங்கள் வாழ்நாளில் அனுபவங்களை சேர்க்க செலவு செய்தால் கூட, வாழ்க்கையை வாழ்ந்தோம் என்ற மனநிறைவு கிடைக்கும்.இரண்டுமில்லாமல், பணத்தை கல்லாப்பெட்டியில் பூட்டிவைத்து செல்லரிக்கவிடுவதில் என்ன பயன்?


இன்றைய வாழ்வியல் முறையில் என்னதான் நடக்கிறது?

  • தன்னிடம் போதுமான செல்வம் இருந்தாலும், செலவு செய்வதற்கு தயக்கம். இல்லையென்று யாசிப்பவருக்கு ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை.

  • உடன் பிறந்தவர்களுடன் சண்டையிட்டு சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். ஒன்று அந்த சொத்துக்களை ஊதாரித்தனமாக அழிக்கிறார்கள் அல்லது அப்படியே சேர்த்துசேர்த்து வைக்கிறார்கள். உறவுகளை சேர்க்க வேண்டும் என்ற உணர்விற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, உடமைகளை சேர்பதற்குத்தான் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கிறார்கள்;

  • ஆண்டு முழுவதும் பணம் சம்பாதிக்கும் ஆசையில், வேலை-வேலை என்று தொடர்ந்து ஓடுகிறார்கள். கணவன்-மனைவி இருவரும் ஓடுகிறார்கள். சிலசமயம் இருவரும் வெவ்வேறு நேரத்திற்கு வேலைக்கு செல்வதால், அவர்கள் சந்திப்பதே குறைந்துவிடுகிறது. இப்படி ஓடுபவர்களின் குடும்பத்தில் பிள்ளைகளின் கதி என்னவாகும் என்று யோசித்துப்பாருங்கள்;

  • ஒரு சிறு தலைவலி, ஜுரம் வந்தால் கூட, மருத்துவரை அணுகி உடலை கவனிக்காமல், ஏதாவதொரு மாத்திரையை வாங்கிப் போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடிவிடுகிறார்கள். இந்த வலிகள் வருவதே, உங்களுக்கு ஓய்வு தேவை என்பதை சுட்டிக்காட்டத்தான். ஆனால் அதை புறந்தள்ளி பணத்தின் பின்னால் ஓடினால், உங்கள் வாழ்விற்கான அர்த்தம்தான் என்ன?

  • நிம்மதியான வாழ்க்கைக்கு முதற்கட்டம் உடல் ஆரோக்கியம் முக்கியம். ஆனால் தினமும் உடற்பயிற்சி, யோகாசனம் செய்வதற்கு நேரம் ஒதுக்குகிறார்களா? வீட்டிலும் கணிணியை வைத்துக்கொண்டு அலுவலக வேலையையே பார்க்கிறார்கள். எல்லா செல்வத்தையும் சேர்த்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று நீங்கள் உட்கார நினைக்கும் வயதில், உங்கள் பெரும்பகுதி நேரம் மருந்து மாத்திரைகள், வலிகளுடன் தான் இருக்கும். அந்தளவிற்கு வாழ்வியல் நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் நோய்கள் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கிறது;

  • செல்வம் நிறைய சேர்த்தவர்கள், நிம்மதியாக இருக்கிறார்களா என்று பார்த்தால் – அதுவும் இல்லை. ஒன்று இன்னும் நிறைய செல்வம் சேர்க்க வேண்டுமென்ற பேராசையில் உழல்கிளார்கள், அல்லது சேர்த்துள்ள செல்வத்தை இழந்துவிடுவோமோ, யாராவது ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்;

  • வாழ்க்கையென்பது முழுக்க முழுக்க அனுபவம் மட்டுமே. உங்கள் வாழ்வின் இறுதிக்காலங்களில் உங்கள் அனுபவமும், வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகளுமே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் செல்வத்தைக்கொண்டு உலகம் சுற்றிப்பார்த்திருந்தால், எண்ணற்ற மக்களையும், கலாச்சாரங்களையும், சிறந்த இடங்களையும் பார்த்த நிறைவும், மலரும் நினைவுகளும் இருக்கும். பெட்டியில் பணத்தை வைத்துக்கொண்டு பாதுகாத்துக்கொண்டே இருந்தால், இறுதி காலத்தில் ஏக்கமும், குற்ற உணர்வுமே மிஞ்சும்;

  • ஆரம்பகாலத்தில் பணத்தின் பின்னால் ஒடிக்கொண்டு, தங்களுடைய பிள்ளைகளை கவனிப்பதில்லை. அவர்களுக்கு நல்ல கல்வி கொடுப்பதாக எண்ணி உறைவிடப் பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். அவர்களுக்கு உறவுகளின் மீதான அபிமானம் குறைந்துவிடுகிறது. பின்னர் அவர்கள் என்றுமே பெற்றோர்களுடன் வீட்டில் ஒன்றுவதில்லை. படிப்பு, வேலை என்று நிரந்தரமாக வெளியே போய்விடுகிறார்கள். பெற்றோர்களுக்கு இது புரியும் போது அவர்களுக்கு வயதாகியிருக்கும். அப்போது அவர்கள் பிள்ளைகள் யாருமே அருகில் இருப்பதில்லை; வயதான காலத்தில் பிள்ளையும், பேரக்குழந்தைகளும் அருகில் இல்லாமல் உங்கள் வாழ்வில் என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது?

எனக்குத் தெரிந்த சிலரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மேற்சொன்னவற்றை பட்டியிலிட்டுள்ளேன். இன்னும் எண்ணற்ற முட்டாள் தனங்களில் நம் மக்கள் வாழ்க்கையை அனுபவிக்காமல் சாகிறார்கள். கல்வி கற்றது, வெறும் செல்வம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல. அதைக் கொண்டு எப்படி வாழ்வை நிறைவாக வாழ்வதென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.


இந்த மண்ணில் பிறந்த சில நல்ல ஆன்மாக்கள், தான் சேர்த்த செல்வத்தையெல்லாம், மக்கள் சேவைக்கு கொடுத்து மனம் மகிழ்கிறார்கள். அவர்களைப்போல நான் உங்களை தாராளப்பிரபு ஆக கட்டாயப்படுத்தவில்லை. குறைந்தபட்சம், நீங்கள் ஈட்டிய செல்வத்தைக்கொண்டு, உங்கள் மனைவி பிள்ளைகளுடம், கஞ்சத்தனம் இல்லாமல், போதுமான அளவு செலவு செய்து வாழ்வில் மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் கூட்டுங்கள்.


செல்வம் பலகோடி சேர்க்கலாம் – ஆனால்

அதை கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால்

அதனால் உங்களுக்கென்ன இலாபம்?

சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்?


உங்கள் பிள்ளைகளுக்காக சேர்க்கிறேன் என்று சொல்லாதீர்கள்!

நல்ல பிள்ளைக்கு உங்கள் பணம் தேவையில்லை

நீங்கள் சேர்த்துவைக்கும் நற்பெயரும், புண்ணியமும் போதும்!

தீய பிள்ளைக்கு நீங்கள் பொருள் கொடுத்தும் பயனிருக்காது!


நீங்கள் இருக்கும் போது குடும்பத்தோடு நேரம்செலவிடுங்கள்!

ஈட்டியபொருளில் போதுமான அளவு செலவளியுங்கள்!

உலகைவிட்டு பிரியும் முன்

உலகைச்சுற்றிப் பார்த்துவிடுங்கள்!

இறுதிக்காலத்தில் நீங்கள் அசைபோட இந்த

நினைவுகள் மட்டுமே சுகமாகும்!

ஒன்றும் அனுபவிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்திச்சாகாமல்

இருக்கும்போதே தர்மத்தின் பாதையில்

எல்லாவற்றையும் அனுபவித்துவிடுங்கள்!



- [ம.சு.கு 08.10.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Comentários


Post: Blog2 Post
bottom of page