“கையில் இருக்கும் வேலைகள் வளர்ந்து விரிந்து முழு நேரத்தையும் ஆக்கிரமித்து விடும்” [work expands so as to fill the time available for its completion]
- பார்கின்சன் விதி
[குறிப்பு: மேலே எழுதிய மொழிபெயர்ப்பு சரியா என்று யோசிக்காதீர்கள். அதில் பயன் ஏதுமில்லை. எனக்கு வருவதை எழுதுகிறேன். அதன் உட்பொருள் தெரிந்து செயல்பட்டால், உங்களின் நேரம் பொன்னானதாகிவிடும்]
பட்டால்தான் புரிகிறது
நான் சந்திக்கும் பல நண்பர்கள் [நான் உட்பட] எல்லோரும், எந்நேரமும், ஏதேனும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி ஒன்றும் பெரியதாய் எதையும் சாதிப்பதில்லை. ஏன் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் அவர்கள் வெற்றி பெறாமல் போகிறார்கள்? என்ற கேள்வி என் பதின்மவயது முதல் என்னை அவ்வப்போது குடைந்தெடுத்துக் கொண்டேயிருந்தது.
இந்தக் கேள்விக்கு விடைகாண எனக்கு பல ஆண்டுகள் ஆனது. ஆச்சர்யம் யாதெனில், நான் முன்னர் படித்த வரிகளேதான் இதன் விடையானது. ஆனால் அதை உணரத்தான் நான் வெகுகாலம் எடுத்துக்கொண்டேன். அந்த வரிகளின் உட்பொருள் எனக்கவ்வளவு எளிதில் புரியவில்லை. பல தருணங்களில் கஷ்டப்பட்ட பின்னர்தான், அந்த அறிவு வருகிறது. ஆயிரம் அறிவுரைகளும் அனுபவப் பகிரல்களைக் கேட்டாலும், சில விடயங்கள் நாமாக பட்டுத் தெரிந்தால்தான் புத்தியில் ஏறுகிறது.
இருப்பதால் நம்மிடம் வருகிறது
பல நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அலுவலகத்தில் தொடர்ந்து பரபரப்பாக இயங்கி இருப்பேன். மதிய உணவைக்கூட காலதாமதமாக எடுக்க நேரிட்டிருக்கும். அவ்வளவு பரபரப்பான தினத்தில் நான் எண்ணற்ற வேலைகளை முடித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் உண்மையில் அன்றைய தினத்தில் என்னுடைய உற்பத்தி அளவு குறைவாகவே இருந்திருக்கிறது. எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள், ஆலோசனை கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புக்கள் நிகழ்ந்திருக்கும். ஒரு நிமிடம் பொறுமையாக யோசித்தால் அந்த நிகழ்வுகளுக்கு என்னுடைய இருப்பு தேவையே இருக்கவில்லை என்பது தெரிகிறது. நான் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதற்காக, பல விடயங்கள் என்னிடத்தில் கொண்டு வரப்படுகின்றன. நான் அன்றைய தினம் இல்லாவிட்டால், என் குழுவினரே உரிய முடிவை எடுத்து அந்தச் செயலை செவ்வனே செய்து முடித்திருப்பார்கள்.
சில வாடிக்கையாளர்கள் ஏதேனும் கோப்புகளை கொடுக்க அலுவலகம் வருவார்கள். நான் அலுவலகத்தில் இருந்தால், என்னோடு அமர்ந்து 10-20 நிமிடம் உரையாடிவிட்டுப் போவார்கள். நான் இல்லாத பட்சத்தில், வந்த காரியமான கோப்பை உரியவரிடம் கொடுத்து விட்டு, கிளம்பியிருப்பார்கள். வியாபாரத்தை விரிவாக்கம் அதிக நேரம் வாடிக்கையாளருடன் செலவிட வேண்டியது அவசியம். ஆனால் அது வெறுமனே வெட்டிப் பேச்சாக இருக்குமானால், நமது நேரம் தேவையில்லாமல் வீணாகி உற்பத்தித் திறன் பாதிக்கிறது.
அன்றைய தினத்தின் இறுதியில் நம் உற்பத்தித் திறன் எவ்வளவு என்று அளந்துபார்த்தால், 50% சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சமையலைறை தந்த பாடம்
ஒருபுறம் எனது வாழ்வியல் முறையும், நேர மேலாண்மைச் சிக்கலும் இப்படி இருக்க, என் மனைவியின் சமையலறை செயல்பாடுகளை அவ்வப்போது கூர்ந்து கவனித்து வந்தேன். காலை 7 மணிக்குள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல காலை சிற்றுண்டியும், மதிய உணவும் தயாராகிவிடுகிறது. இதற்கும், அவள் காலை 5 மணிக்குத்தான் எழுகிறாள். ஆனால் அடுத்த இரண்டு மணிநேரங்களில் சமையல் அறையில் எல்லாம் தயார்.
இதில் ஆச்சர்யம் யாதெனில், அந்த 2 மணிநேரத்திலும் அவளது கவனம் சமையல் அறையில் மட்டும் தனிப்பட்டு இருப்பதில்லை. அவ்வப்போது வெளிவந்து குழந்தைகளை எழுப்பி, தயார்படுத்தி, வாசல் தெளித்து கோலமிட்டு, என்று சின்னச்சின்ன வேலைகள் பல நிறைவேறியிருக்கும். எப்படி இந்த இரண்டு மணி நேரத்திற்குள் எல்லா காரியங்களும் சரிவர நடந்து முடிகிறது? இதை நான் செய்வதானால் 4-5 மணி நேரம் எடுக்குமே! என்று தோன்றியது.
எல்லோருக்கும் 24 மணிநேரம்தான்
இது சமையலறை என்று மட்டுமில்லை, எண்ணற்ற வெற்றியாளர்களை கவனித்தால் அவர்களின் உற்பத்தித் திறன் பன்மடங்காக இருப்பதை நம்மால் காணமுடியும். நமக்கு இருக்கும் அதே 24 மணி நேரம்தான் அவர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் நம்மை காட்டிலும் அதிக நேரத்தை உடற்பயிற்சி செய்வதிலும், நூல் வாசிப்பிலும், குடும்பத்துடன் நேரம் செலவிடுதலிலும், சமுதாய நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதிலும் செலவிடுகிறார்கள். ஆனால் அவர்களின் உற்பத்தித்திறன், நம்மைக் காட்டிலும் அதிகம். அது எப்படி?
எப்படி உற்பத்தித்தறன் அதிகரிக்கிறது
அது எப்படி? இது எப்படி? என்று கேள்விகளில் மட்டுமே நிறுத்துவதில் பயனில்லை. இந்தக் கேள்விகளுக்கென நேரடியான / துல்லியமான பதில் ஏதும் இல்லை. எல்லாம் அவரவர் நேரம், காலம், சூழ்நிலை சார்ந்த செயல்பாடுகளே பதிலாகின்றன. பல ஆண்டுகளாக நான் பார்த்து, அறிந்து, உணர்ந்து சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். இது வெறும் ஆரம்பம் பட்டியல்தான்:
வெற்றியாளர்கள்,
அப்போதைக்கு அவசியமானதை மட்டும் எடுத்து செய்கிறார்கள். அவசியமில்லாதவற்றைப் பற்றி அதிகம் யோசிப்பதே இல்லை;
அடுத்து செய்ய வேண்டிய வேலைக்கு முன்கூட்டியே தயாராகிறார்கள் (உதா:- என் மனைவி சில பொருட்களையும், காய்கறிகளையும் முந்தைய தினமே எடுத்து தயாராக வைத்து விடுகிறாள்);
கூடியவரை பல செயல்களை தானியங்கி ஆக்குகிறார்கள்;
ஆதாய சேதாரங்களை கருத்தில்கொண்டு, பணிகளை பிறருக்கு பகிர்ந்தளித்து, செயல்களை செவ்வனே செய்ய வைக்கிறார்கள்;
எல்லாச் செயல்களுக்கும் அதற்குரிய நேரத்தை அளவிட்டு அதற்குள் முடிக்கும் வண்ணம் செயல்படுகிறார்கள் (நேரம் இருக்கிறதென்று, எப்போதும் காலம் தாழ்த்துவது இல்லை);
தேவையற்றவைகளுக்கு ‘இல்லை’ ‘வேண்டாம்’ என்று தெளிவுபட கூறிவிடுகிறார்கள் (ஏற்றுக்கொண்டு மாட்டிக் கொள்வதில்லை);
தன் தனித்திறன் மேம்பாடு, நேரமேலாண்மை, மனிதவள வேளாண்மை ஆகிய விடயங்களில் அதிக கவனம் செலுத்தி, உரிய திட்டமிடலை அனுதினமும் செய்கிறார்கள்;
இன்னும் இதுபோன்ற எண்ணற்ற சிறுசிறு விடயங்களிலும் விழிப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுகிறார்கள்.
மேலாண்மை கம்பசூத்திரமல்ல
இந்தப் பட்டியல் ஏதோ மிகப் பெரிய நிறுவன மேலாண்மை சார்ந்த விடயம் என்று எண்ணிவிடாதீர்கள். இதை அப்படியே உங்கள் சமையலறைக்கும், அன்றாட அலுவலக வேலைக்கும் பொருத்திப் பாருங்கள். இந்த மேலாண்மை விடயங்களை பல இல்லத்தரசிகள் வெவ்வேறு கோணங்களில் செயல்படுத்துவது தெரியும். இவற்றை பொருட்படுத்தாமல் மாயப்பெட்டியின் (தொலைக்காட்சி) முன்னும், கைபேசியிலும் நேரம் கழிக்கும் குடும்பங்கள், எதற்கெடுத்தாலும் கடை உணவுகளை வாங்கியுண்டு, உடல் உபாதைகளில் அல்லல்படுவதும் இயல்பாகக் காணலாம்.
நேரத்தின் விலை
‘காலம் பொன் போன்றது’ என்ற பொன்னான வரிகள் நம் எல்லோருக்கும் தெரியும். மணிக்கு வெறும் 10 ரூபாய் சம்பாதிப்பவர் உள்ளார். அதற்கு நேரெதிராக கோடி ரூபாய் சம்பாதிப்பவரும் இருக்கிறார். இந்த இருதுருவங்களுக்கும் இடையில், நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்களின் ஆசை
எந்தப்பக்கம் பயணிக்கவேண்டும்? பத்தா - கோடியா?
உங்களின் நேரம் பொன்னாக வேண்டுமா? மண்ணாக வேண்டுமா?
உங்களின் நேரத்தைப் பொன்னாக்க விரும்பினால், அதற்கு நீங்கள்
செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிடுங்கள்;
செயல்களின் அவசர அவசியங்களை பிரித்தெடுங்கள்;
அவசரமோ-அவசரமில்லையோ! அவசியமான செயலாக இருந்தால், அதை எப்போது செய்யவேண்டும் என்று தெளிவாக திட்டமிடுங்கள்;
நீங்களே செய்யவேண்டுமென்ற அவசியமில்லாத செயலானால், அது எத்தனை அவசரமானதாக இருந்தாலும், கூடியவரை அதை நீங்கள் செய்யாமல், தேவைக்கேற்ப உங்கள் குழுவினருக்கு பகிர்ந்தளித்து செய்ய வைத்திடுங்கள்;
செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், அதற்குரிய நேர அளவை நிர்ணயுங்கள். அந்த செயலை அந்த குறித்த நேரத்திற்குள் முடிக்கப் பழகுங்கள்;
மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும், தொடர்ந்து மறு ஆய்வு செய்து கொண்டேயிருங்கள். ஏனெனில் ‘காலம் வெகு சீக்கிரத்தில் மாறுகிறது’ - இன்று தேவையாக இருப்பது, நாளை தேவையில்லாமல் போகலாம்.
நேரத்தை வீணாக்காதீர்கள்
நீங்கள் எத்தனை தன்னம்பிக்கை புத்தகங்களைப் படித்தாலும், மேலாண்மை நூல்களை வாசித்தாலும், இந்த ‘நேரம்’ ‘செயல்’ சார்ந்த சாதாரண விதிகள்தான் வெவ்வேறு வார்த்தைகளில் விவரிக்கப்பட்டிருக்கும். இவை கேட்பதற்கும், படிப்பதற்கும் சாதாரணமாகத் தெரியலாம். செயல் & நேர மேலாண்மையை அன்றாடம் செயல்படுத்திப் பாருங்கள்.
உங்களின் இயல்பான சோம்பேறித்தனம், அவ்வளவு எளிதில் உங்களிடம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தவிடாது. ஒன்றிரண்டு நாள் ஏதோ உத்வேகத்தில் நீங்கள் ஓடினாலும், உங்களின் இயல்பான சோம்பல் உங்களை மறுபடியும் கட்டியிழுத்துவிடும். உங்களின் சோம்பேறித்தனத்தை நீங்கள் தொடர்ந்து வெற்றிகொண்டு, அனுதினமும் உங்களின் செயல்பாட்டுகளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், உங்களின் வெற்றிப்பாதையில் வரக்கூடிய எந்தவொரு தடைகளையும் தகர்த்தெரிவது எளிதாகும்.
மறந்துவிடாதீர்கள்
நேரத்தின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால்
வேடிக்கை மனிதராய் சாக நேரிடும்;
உங்கள் கட்டுப்பாட்டில் நேரம் இருந்தால்
சாதனை மனிதரென சரித்திரம் சொல்லும்;
எதை? எங்கு? எப்படி? யாரால்?
செய்யவேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுங்கள்;
எல்லாவற்றிற்கும் உரிய நேரத்தை வழங்கி
வழங்கப்பட்ட உரிய நேரத்தில் முடித்து
வெற்றி சரித்திரத்தை எழுதுங்கள்;
- [ம.சு.கு – 01-06-2022]
Bình luận