"உண்ணாமல் உறங்காமல்
ஓய்வின்றி ஓடினால் - சீக்கிரத்தில்
மண்ணாகிப் போக நேரிடுமே!"
நம்மில் பலர், அன்றாடம் காலை 4-5 மணிக்குத் துவங்கி, இரவு 10-11 மணி வரை ஓய்வின்றி உழைக்கின்றனர். எதற்காக இவ்வளவு கடுமையாக உழைக்கிறீர்கள் என்று கேட்டால், தனது பெண்டுபிள்ளைகளுக்கு பொருள் சேர்ப்பதற்காக ஓடுவதாக பதிலளிக்கின்றனர். ஆம்! முற்றிலும் உண்மைதான்! ஆனால் அந்த உழைப்பின் பலனை அவரும், அவரது குடும்பத்தினரும் முழுமையாக அனுபவிக்கின்றனரா என்றால், அதுபெரும் கேள்விக்குறிதான்? பொருள் சேர்க்க ஓடுபவர்கள், தினமும் எவ்வளவு நேரம் குடும்பத்துடன் செலவிடுகின்றனர் என்றால், அது மிகவும் சொற்பமானதாக இருப்பது வருந்தத்தக்கதே.
இரத்தம் ஊரும் வயதில், நேரங்காலம் பார்க்காமல் ஓடி ஓடி உழைத்து, ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமல் செல்வம் சேர்க்கின்றனர். இரத்தம் சுண்டும் வயதில், இழந்து ஆரோக்கியத்தை சரிசெய்வதற்காகவும், பிணிகளை தீர்ப்பதற்கும், சேர்த்த செல்வத்தையெல்லாம் மருத்துவத்திற்காக செலவிடுகின்றனர். பலரும் இப்படி ஆரோக்கியத்தை பற்றிகண்டுகொள்ளாமல் கெடுத்து, நிறைய செல்வம் சேர்த்து, பின் மருத்துவமனையில் ஈட்டிய செல்வத்தை செலவு செய்வதில் என்ன பயன்? நீங்கள் எத்தனை தான் செலவு செய்தாலும், பிணியினால் ஏற்படும் வலிக்கு எதைக்கொண்டு ஈடு செய்வது.
கணிணி-கைபேசி திரை
இன்றைய கணினிமயமான உலகில், பலர் வாழ்வின் பெரும்பாலான நேரம் கணினி திரையின் முன்னும், கைபேசி தொடுதிரையின் முன்னும் நகர்ந்திக்கொண்டிருக்கின்றது. சுமார் 12-13 மணி நேரம் இந்தத் திரைகளையே பார்த்துக் கொண்டு வேலை செய்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். சற்று யோசித்துப்பாருங்கள்! இப்படி அதீதமாக கண்களுக்கு வேலை தந்து கண்களை கொடுமை படுத்தினால், எத்தனை காலங்களுக்கு கண்கள் உங்களுக்கு ஒத்துழைக்கும்.
உழைப்பும் - உணவும்
அடுத்த பெரும் ஆட்கொள்ளி, ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்வது. கணிணி முன்னமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, உடல் உழைப்பு என்பது சுத்தமாகவே இல்லாமல் போய்விட்டது. இப்படி உடல் உழைப்பு குறைவாக இருக்கக்கூடிய வேலைகளை செய்பவர்கள், குறைந்தபட்சம் சில உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையேனும் பின்பற்ற வேண்டுமல்லவா? ஆனால், நடைமுறையில் இவர்கள் தான் பெரும்பாலும் உடல்நலத்திற்கு ஒவ்வாத, அதிக கலோரிகள் கொண்ட, “பீட்சா” “பர்கர்” போன்ற மேலைநாட்டு துரிதஉணவு வகைகளை வாங்கி நேரங்காலமின்றி சாப்பிட்டு, தொப்பையை வளர்த்து விடுகின்றனர்.
இப்படி வளர்ந்துவிட்ட தொப்பையினால் ஏற்படும் உடல் உபாதைகளை குறைக்க, உடற்பயிற்சி கூடம் ஓடுகின்றனர். எதற்காக இந்த தவறான அணுகுமுறை? நம் அன்றாட பணி முறைக்கு ஏற்ற, சத்தான உணவுகளை, சரியான நேரங்களில் சாப்பிட வேண்டியது தானே! இத்தனை கஷ்டப்பட்டு உழைப்பது, நாமும் நம் குடும்பமும் சரியாக சாப்பிடுவதற்குத்தானே! பின்னர் ஏன் இந்த சாப்பாடு விடயத்தில், பொறுப்பற்றிருக்க வேண்டும். இந்த பொறுப்பற்ற தன்மையினால், அந்த குறிப்பிட்ட தனிமனிதன் அல்லல்படுவதைத்தாண்டி, அவனது குடும்பத்தினரும் அவனை கவனிக்க, அலைய வேண்டியுள்ளது.
இரவு விருந்து கலாச்சாரம்
அடுத்தபடியாக இன்றைய இளைஞர்கள் மத்தியிலும், நடுத்தரவயதினர் மத்தியிலும், அதிகமாக பரவிவரும் இரவுநேர கேளிக்கை விருந்து கலாச்சாரம். சமுதாய நல்லுறவுக்கு விருந்துகள் நடைபெறுவதும், பங்கேற்பதும் அவசியம்தான். ஆனால், இன்றைய காலகட்டத்தில் தொட்டதற்கெல்லாம் இரவு விருந்தென்று ஆரம்பித்து, அளவிற்கு அதிகமான மதுப்பழக்கம் சமுதாயத்தில் பரவுகிறது.
அதுவும் இன்றைய தமிழகத்தில், தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. அரசாங்கமே, மதுவின் வருமானத்தை பெரிதாய் நம்பியிருக்கும் இழிநிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. சமுதாயத்தில், பாதிக்கும் மேற்பட்டோர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது நம்மெல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த கலாச்சார சீரழிவைத் தாண்டி, இந்த பொருப்பற்ற இரவுவிருந்துகளும், மதுப்பழக்கமும், எண்ணற்ற வாழ்வியல் சார்ந்த நோய்களாக பெரும்பாலான மக்களை பாதித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
வாழ்வியல் சார்ந்த நோய்கள்
இன்றைய மக்கள் தொகையில், 35 வயதை கடந்தவர்களில் பெரும்பாலானோர், இரத்தக்கொதிப்பு, உடல் பருமன், நீரிழிவு போன்ற ஏதேனுமொரு உடல் உபாதையில் சிக்கி அவதியுறுவது சாதாரணமாகிவிட்டது. பெரியவர்கள் மத்தியில் இருந்துவந்த இந்த வாழ்வியல் சார்ந்த நோய்கள், இன்று குழந்தைகளையும் வெகுவாக பாதிக்க தொடங்கிவிட்டது. என் அருமை மக்களே! உங்கள் வாழ்க்கை முறையில் ஏன் இத்தனை அலட்சியம்.
படிப்பறிவு குறைவாக இருந்த காலகட்டத்தில்கூட, உடல் உழைப்பின் காரணமாக மக்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருந்தனர். படிப்பறிவு அதிகரித்தபின், மக்கள் தங்கள் ஆடம்பர மோகத்தினால், ஆரோக்கியத்தை கவனிக்காமல் இருப்பது, அந்த கற்றலுக்கே மரியாதை இல்லாமல் செய்துவிட்டது.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை
பண்டைய வாழ்க்கை முறைமையில், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை இயற்கையோடு இயைந்து அமைத்திருந்தனர். உதாரணத்துக்கு, அவர்களின் பெரும்பாலான வேலைகள், சூரிய ஒளியைச் சார்ந்து இருந்தன. அன்று மின்சாரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் வேறுவழியின்று அப்படி வாழ்ந்தனர் என்று ஒருசிலர் வாதாடலாம். அது உண்மை என்றாலும், அந்த இயற்கையுடனான வாழ்க்கைமுறைமை, மனிதனுக்கு போதிய உழைப்பு-ஓய்வை முறைப்படுத்தியது.
சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பிக்கும்போது, எல்லோரும் வீடுகளுக்கு திரும்பி, சீக்கிரமாக உறங்கச் சென்றனர். காடுகழனி வேலைகளை அதிகாலை 4-5மணிக்கு துவக்கினர். உச்சிவெயில் நேரங்களில், ஓய்வெடுத்தனர். அது அவர்களுக்கு, புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை குறைத்தது. இந்த கதிர்களைப் பற்றிய அறிவெதுவும் இல்லாமலேயே, அவர்கள் அதை தவிர்த்து ஆரோக்கியம் காத்தனர்.
அன்று அதிகாலையில் குறித்த நேரத்தில் எழுவதற்கும், இரவு உறங்கச்செல்லவதற்கும், எந்த ஒரு கடிகாரமும் இல்லை. ஆனால் இன்று சொல்லப்படும் “சிர்காடியன் ரிதம்” என்பது, அன்றைக்கு இயல்பாக தங்கள் வாழ்க்கை முறைமையில் அமைத்து, குறித்த நேரத்தில் உறங்கி, எழுந்து, எல்லா செயல்களும் இயல்பாக நடந்தன. அந்த இயல்பான வாழ்க்கை முறைமையின் காரணமாக, அன்றைக்கு வாழ்வியல் சார்ந்த நோய்கள் ஏதும் பெரிதாக இல்லை. அதனால் பலர், 100 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ முடிந்தது.
அன்றைக்கும் - இன்றைக்கும்
இன்றைய அவசர உலகம், எல்லாவற்றிலும் வேகத்தை அதிகரித்துவிட்டது. இந்த வேகம், நமது மரணத்தையும் துரிதப்படுத்திவருகிறது. அமைதியாக, பொறுமையாக சென்று கொண்டிருந்த நம் பழமையான வாழ்க்கை முறைமைக்கு இந்த ராக்கெட் வேகசெயல்பாடு பெரிய அதிர்ச்சிதான்.
அன்று
உடல் உழைப்பு அதிகமாக இருந்தது.
உடல் உழைப்பின் காரணமாக, உடல் தசைகளுக்கு போதுமான ஓய்வு தேவைப்பட்டது.
இயற்கையில், சூரிய சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு போதிய ஓய்வு எடுத்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இன்று
உடல் உழைப்பு குறைந்து விட்டது
எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. தொழிற்சாலைகள் தொடங்கி சமையலறை வரை, எங்கும், எதிலும், எல்லாம் இயந்திரமயம்.
இன்னொருபுறம், ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய வேலைகளின் அளவுகள் அதிகரித்துவிட்டன.
உடல் உழைப்பு குறைந்தாலும், மனஉளைச்சல், மனஅழுத்தம் ஏற்படும் வகையிலான வேலை அதிகரித்திருக்கிறது.
இந்த மனஅழுத்தம், மனஉளைச்சலுக்கு என்னதான் பெரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், போதுமான உறக்கத்திற்கு நிகரான நிரந்தர தீர்வு ஏதுமில்லை [எல்லா மருந்துகளும் உங்களை உறங்க செய்து குணப்படுத்தவே செய்கிறது].
வாழ்க்கை ஒழுங்குமுறை
உடல் உழைப்பினால் களைப்புருபவர்களுக்கு, தினமும் 6-7 மணிநேர ஓய்வு, அவர்களின் தசைகளை தளர்த்தி புத்துணர்வு பெறச் செய்யும். ஆனால் மனஅழுத்தம் குறைய, நீண்ட தியானம் தேவை. தியானம் செய்ய பெரும்பாலானவர்கள் முயற்சிப்பது இல்லை. தியானம் முறையாக செய்யத் தெரியாதவர்களுக்கு, தினமும் குறைந்த பட்சம் 8 மணி நேர தூக்கம் தேவைப்படுகிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி - எழுகின்ற ஒரு ஒழுங்குமுறை தேவை. அந்த ஒழுங்குமுறை இருந்தால் மட்டுமே, உறக்கம் ஒரே சீராக தடையின்றி இருக்கும். ஒருநாள் இரவு 8 மணிக்கு உறங்குவது, அடுத்த நாள் 12 மணிக்கு, ஒரு நாள் 10 மணிக்கென்னு தினமும் வெவ்வேறு நேரங்களில் உறங்கி, காலை 6 மணியிலிருந்து 10 மணிவரை எப்பொழுதுவேண்டுமானாலும் எழுவதென்று ஒழுங்கற்ற முறையில் உறங்கி எழுந்தால், உடலும் மனமும் முறையாக ஓய்வு பெறாது.
உறக்கம், ஓய்வு குறித்து எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடந்து விட்டன. பல நூறு புத்தகங்கள் வெளிவந்து விட்டன. எத்தனை நூல்களைப் படித்தாலும், நீங்கள் எவ்வளவுக்ககெவ்வளவு உங்களின் அன்றாட வாழ்க்கைமுறையை ஒழுங்குபடுத்தி, உங்களின் ஓய்வு-உறக்கத்திற்கான நேரத்தை முறைப்படுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களின் மனஅழுத்தம் மனஉளைச்சல் குறைந்து, மனநிறைவு ஏற்படும். சான்றோர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுதிய எல்லா நூல்களும், “ஒழுங்குமுறை” வேண்டுமென்ற ஒரே கருத்தைத்தான் வலியுருத்துகின்றன.
நீங்கள் சாதிக்க விரும்பினால் – வயதுக்கேற்ற
குறைந்தபட்ச 7-8 மணிநேர உறக்கம் வேண்டும்;
அந்த உறக்கம் சீரான நேர இடைவெளியில்
தவறாமல் நிகழ்தல் வேண்டும்;
முறையான ஓய்வும்-உறக்கமும்
உங்களை புத்துணர்வடையச் செய்து,
அடுத்து வெற்றி பயணத்துக்கு உங்களை தயார்படுத்தும்.
ஆரோக்கியம் காத்து அனுபவியுங்கள்
அரசனானாலும் ஆண்டியானாலும், முறையாக தனது ஆரோக்கியத்தையும் கவணித்துக் கொள்பவர்களால் மட்டுமே நீண்டகால நோக்கில் எதையும் ஒரு ஸ்திரத் தன்மையுடன் வழிநடத்திச்செல்ல முடியும். உங்கள் மனம் போதிய அமைதியில் இருந்தால், உங்களால் உங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் நல்ல முறையில் வழிநடத்த முடியும். உங்களின் மனஅழுத்தம் குடும்பத்தை பாதித்தால், அது உங்களை மேலும் நிம்மதி இழக்கச் செய்யும்.
கடின உழைப்பு உங்களின் வெற்றிப்பாதையை எளிமையாக்கும். அந்தப் வெற்றியை நோக்கிய பாதையில் பயணிக்க, உங்களின் உடலும் உள்ளமும் ஒத்துழைக்கவேண்டுமே. மேலும், வெற்றி பெறும் நாளில் அதை சுவைக்க நீங்கள் இருக்க வேண்டும் என்பதும் அதிமுக்கியமாயிற்றே. விழித்துக்கொள்ளுங்கள்!!
மறவாதீர்
சோர்வுகளைக் களைய - சிறந்த மருந்து உறக்கம்!
தோல்விகளைக் களைய - சிறந்த மருந்து நம்பிக்கை!
அனுதினமும் இருமருந்தும் தவறாது உட்கொள்ளுங்கள்;
வாழ்க்கை ஆரோக்கியமாய் அர்த்தமுள்ளதாய் முன்செல்லும்!
- [ம.சு.கு - 25-06-2022]
Comentarios