top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

Updated: Oct 8, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-363

மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்...!


  • மிகஅன்யோன்யமாக இருந்த ஒரு குடும்பத்தில், திடீரென்று ஒருவரது மனைவி இறந்தார். மனைவிதான் எல்லாமே என்று இருந்த அந்த குடும்பத்திற்கு அது பேரதிர்ச்சிதான். ஆனால் 4-5 மாதங்களில் எல்லாம் பழகிப்போய் வாழ்க்கை நகர்ந்தது. வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்துக்கொண்டு எல்லாம் முன்னைப்போலவே நடந்தது. அந்த கணவருக்கு தன் ஆருயிர் மனைவி இல்லையென்ற வருத்தத்தை தாண்டி, ஏனையவையெல்லாம் இயல்பாகவே நடந்தது.

  • எங்கள் பகுதியில் இயங்கிய தொழில்களில், ஒருசிலவற்றை கொரோனா பெருந்தொற்றிற்கு பின் பார்க்கமுடியவில்லை. காரணம் விசாரித்ததில் 2 முதலாளிகள் தொற்றில் இறந்திருந்தனர். 5-6 கடைகள் பொதுமுடக்கத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு திறக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 2-3 வியாபாரிகள் கடன் தொல்லையால் வீட்டை விற்று கடனை அடைத்துவிட்டு, வேலைக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. ஆனால் ஒருவர் மட்டும் குடும்பத்தோடு தற்கொலை செய்திருந்தது அதிர்ச்சியளித்தது.

வாழ்வின் உங்களுக்கு நெருக்கமானவரை ஒரு நாள் இழக்கவேண்டிய தருணம் வரும். அல்லது, அவர்களை விட்டு நீங்கள் மரணிக்கக்கூடும். இது வாழ்வின் யதார்த்தம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு கடந்து செல்கிறோம். ஆனாலும் வெகுசிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வேதனையில் உழன்று அவர்களை மாய்த்துக்கொள்கிறார்கள். ஏனோ அவர்களுக்கு புரிவதில்லை!


கொரோனா பெருந்தொற்று பலரின் வாழ்க்கை தடம்புரண்டுவிட்டது நிதர்சனமான உண்மை. உயிரிழப்பு, வியாபார இழப்பு, தொழில்முடக்கம், பண நஷ்டம் என்று எண்ணற்றவை பலருக்கு நேர்ந்தது. மாற்றமுடியாத இந்த நெருக்கடியை ஏற்றுக்கொண்டுதான் இன்று பெருங்கூட்டம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இவற்றிற்கு பயந்து உயிரை மாய்ப்பது எந்த விதத்தில் சரியாகும்?


மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும், சில மாற்றங்கள் தனிமனிதர்களால் அப்போதைக்கு முடியாமல் போகும். அதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்டு கடந்து செல்பவர்கள், உரிய நேரம் வரை காத்திருந்து சாதிக்கிறார்கள். எப்படி முடியாமல் போகும் என்று ஏட்டிக்குபோட்டியாய் எதிர்கொண்டு நிற்கும் சிலர், களத்தின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர்.


அப்படி என்னவெல்லாம் உங்களால் மாற்றமுடியாமல் போகக்கூடும்;

  • சந்தையின் மாற்றங்கள்: உங்கள் கணிப்பில், எல்லா கள ஆய்வுகளையும் செய்த பின், புதிய பொருட்களை சந்தை படுத்த முயற்சிப்பீர்கள். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சந்தை அடியோடு மாறிவிடக்கூடும். உங்கள் கணிப்புகளையெல்லாம் மீறி சந்தை மாறிவிடக்கூடும்;

  • போட்டியாளர்கள் வருகை: எல்லாம் சரியாகவும், சீராகவும் போய்கொண்டிருக்கும் உங்கள் கடைக்கு அருகில், பெரிய கடைஒன்று திறக்கப்படக்கூடும். உங்களால் நேரடியாக போட்டியிட முடியாத அளவிற்கு பெரும் முதலீட்டில் வரக்கூடும்;

  • பொருளாதார சுழற்சி: உள்ளூர் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில், எப்போதும் ஏற்ற-இறக்கம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. நன்றாக போய்க்கொண்டிருக்கும் உங்கள் வியாராத்தில் சர்வதேச பொருளாதார சரிவுகளால், சர்வதேச போர்களால், பணவீக்கத்தினால், உங்கள் வியாபாரமே முடங்கிப்போகக்கூடும்;

  • தொழில்நுட்ப மாற்றம்: ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் உங்கள் நிறுவனம் கைதேர்ந்திருக்கக்கூடும். ஆனால் புதிய தொழில்நுட்ப வரவுகள், உங்கள் பொருட்களை தேவையற்றதாக்கக் கூடும்;

  • அரசாங்க கொள்கை மாற்றங்கள்: ஒரு குறிப்பிட்ட அரசு கொள்கையின் அடிப்படையில், சலுகைகளின் அடிப்படையில் உங்கள் தொழில்கள் இயங்கக்கூடும். அரசின் திடீர் கொள்கைமாற்றாங்கள் அந்த தொழிலையே இலாபமற்றதாக்கக்கூடும்;

  • ஊழியர்கள் மாற்றம்: நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு, அதன் ஊழியர்களின் பங்களிப்பில் இருக்கிறது. நிபுணத்துவம் பெற்ற ஒரு சில ஊழியர்கள் திடீரென்று வேலையை இராஜினாமா செய்யக்கூடும்;

  • இயற்கை சீற்றங்கள்: நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்கள், சில இயற்கை சீற்றங்களால் [புயல், மழை, நிலநடுக்கம், தீ....] திடீரென பாதிக்கப்படக்கூடும். எதிர்பாராத நோய் பெருந்தொற்றுகளும் எல்லாவற்றையும் முடக்கக்கூடும்;

  • தலைமுறை கைமாற்றம்: குடும்ப தொழில்களில், அடுத்த தலைமுறையினர் அந்த தொழிலை ஏற்று நடத்த தயாராக இருக்கலாம், அல்லது இல்லாத சூழ்நிலை ஏற்படலாம். வாரிசுகள் அதிகம் இருக்கும் பட்சத்தில் தகராறுகளும் வரக்கூடும்.

  • மரணம்: வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்ததின் நிதர்சனமான ஒன்று. குடும்பத்தின் முக்கிய நபர்களின் திடீர் இழப்புகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதை தாங்கிக்கொண்டு குடும்பங்கள் எழுந்து நிற்க வேண்டும்;

இவையனைத்தும் ஒரு சிறு உதாரணப்பட்டியல் தான். வியாபார பயனத்தில், அன்றாட வாழ்க்கைப் பயனத்தில் எண்ணற்ற நெருக்கடிகளை நீங்கள் சந்திக்கக்கூடும். உங்களால், அவற்றில்

  • பலவற்றை உடனுக்குடன் சரிசெய்ய முடியும்

  • சிலவற்றை திட்டமிட்டு மாற்றமுடியும்

  • சிலவற்றை நேரம் கொடுத்து சரிசெய்ய முடியும்

  • ஒருசிலவற்றை உங்கள் காலத்தில் மாற்றவே முடியாமல் போகலாம்

  • வெகுசிலவற்றை என்றென்றைக்கும் மாற்றவே முடியாமல் இருக்கக்கூடும்

இவற்றில் நீங்கள் சந்திக்கு சிக்கல் என்ன வகை, களத்தின் யதார்த்தம் என்ன என்பதைப் பொருத்து, சாமர்த்தியமாக முடிவெடுக்கவேண்டியது உங்கள் கையில். தவறாக முடிவெடுத்த நடக்காதவற்றின் பின்னால் வெகுதூரம் சென்றால், பொன்னான நேரமும், எதிர்காலமும்தான் வீணாகும்;


எல்லாவற்றையும் நம் எண்ணம் போல் கட்டமைக்க

நம் எல்லோருக்குமே ஆசையிருக்கிறது – ஆனால்

எல்லா சமயங்களிலும் அது சாத்தியமா?


சிலவற்றை மாற்றியமைக்க ஆசைப்பட்டு

பெரிய அளவில் முயற்சி செய்வோம் – ஆனால்

எந்த முயற்சியும் பயனளிக்காமல்

மாற்றமுடியாத சூழ்நிலை உருவாகும்!

அதற்காக மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்!

மாற்றமுடியாததை ஏற்றுக்கொண்டு கடந்து செல்லுங்கள்!


இன்றைக்கு மாற்றமுடியாதவற்றிற்காக வருந்திக்கொண்டு

உங்கள் வாழ்க்கையை வீணடித்துவிடாதீர்கள்!

இன்றைக்கு மாற்றமுடியாததை,

என்றுமே மாற்றமுடியாமல் போகாது!

எல்லாமே மாறுகின்ற காலம் வரும்!

காலம்வரும்வரை முனைப்போடு காத்திருந்து மாற்றுங்கள்!


- [ம.சு.கு 07.10.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page