top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 361 - செல்வாக்குடையவர் முக்கியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-361

செல்வாக்குடையவர் முக்கியம்.!


 • இன்றைய அரசியில் சூழலில், தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பளிக்கிறார்கள். யாரிடம் பணம் இருக்கிறது என்று பார்த்த காலம் தாண்டி, யாரால் பெருவாரியான மக்களை கவர முடியும், யாருடைய செல்வாக்கு அதிகம் என்று கள ஆய்வு செய்து, வெற்றிவாய்ப்பை கணித்து, கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெரிய கட்சிகள் வழங்குகின்றனர்.

 • கிராமங்களில், எண்ணற்ற சின்னச்சின்ன தகராறுகள், கருத்துவேறுபாடுகள், சொத்துப் பிரச்சனைகள் வரும். ஆனால் நகரங்களைப்போல அவர்கள் உடனே நீதிமன்றத்திற்கு தூக்கிச் செல்வதில்லை. அந்த ஊரின் முக்கியஸ்தர் யாரவது ஓரிருவரை வைத்து, சமாதானம் பேசியும், பஞ்சாயத்து செய்தும் தீர்த்துக் கொள்கிறார்கள். இவற்றை தீர்க்க ஏன் ஊரின் முக்கியஸ்தரை, செல்வாக்குடையவரை அழைக்கிறார்கள்?

30-40 ஆண்டுகளுக்கு முன்னால், அரசியலில் இருப்பதற்கு மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருக்க வேண்டும் என்ற தேவை இருந்தது. இடைப்பட்ட காலத்தில், தேர்தல் செலவீணங்கள் அதிகரித்ததால், அது பணம் அதிகம் உள்ளவருக்கு என்று திசை திரும்பியது. இன்று நிறைய செல்வந்தர்கள் போட்டியிட வருவதால், திரும்பவும் பணத்தோடு செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்று பார்க்கிறார்கள். இந்த செல்வாக்கு மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, போக்கிரிகள் மத்தியிலும் எப்படி இருக்கிறதென்று இன்றைய அரசியல் களம் பார்க்கிறது;


பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, இரண்டு தரப்பு நியாயத்தையும் கேட்டு, உரிய முடிவை சொல்ல வேண்டும். அந்த முடிவை இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக எந்தவொரு பிரச்சனையிலும், யாராவதொருவர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே அதை தீர்க்கமுடியும். இருவருமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லாதபோதுதான் அவை பிரச்சனையாக உருவெடுக்கிறது. யாரும் விட்டுக்கொடுக்காதபோது, நீதிமன்றங்கள் அவற்றை சட்டத்தின்பேரால் உத்தரவிட்டு தீர்த்துவைக்கிறது. அதேசமயம், நீதிமன்றங்களை ஏறாதவர்கள், ஊரின் முக்கியஸ்தர்களின் உதவியை நாடுகின்றனர். இங்கு முக்கியஸ்தர்களாக அமருபவர்ளின் செல்வாக்கைப் பொறுத்துத்தான் அந்த வழக்கு தீர்வடையும். அவருடைய சமரசத்தை இருவரும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தீர்வு சாத்தியம். அதற்கு, அவர் அதிக செல்வாக்கு படைத்தவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், யாராவதொருவர் அவரது வழிகாட்டுதலை மதிக்காமல் நடந்துகொள்வார்.


இங்கு தேர்தல் என்பது ஒருகளம். பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வது ஒருகளம். அதே போல, வாழ்வில் எண்ணற்ற களங்களை நீங்கள் கடக்கவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் கோலோச்சுவர். அப்படி கோலோச்சும் நபர்கள் அனைவரிடமும் பொதுவாக இருக்கும் ஒரு விடயம், அந்த களத்தில் / அந்த துறையில் தனக்கென தனிப்பட்ட அடையாளத்தையும், செல்வாக்கையும் கொண்டிருப்பவராக அவர் இருப்பது.


இன்றைய நவீன யுகத்தில், எல்லாமே ஒரு தனிப்பட்ட அடையாளம் [பிராண்ட்] சார்ந்தவையாக மாறிவருகின்றன. பொருளானாலும், நபரானாலும், அவற்றிற்கு / அவர்களுக்கான தனித்தன்மை, தனி அடையாளம் இருந்தால் மட்டுமே மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அந்த தனித்தன்மையை உருவாக்காத பொருட்கள் சில நாட்களிலேயே சந்தையை விட்டு காணாமல் போகின்றன. தனித்தன்மையை / அடையாளத்தை உருவாக்காத நபர்கள், சில வாரங்களில் மறந்து போகிறார்கள். இங்கு சாதிக்க வேண்டுமென்றால், உங்களுக்கென்று தனி அடையாளமும், செல்வாக்கும் இருக்கவேண்டும்.


உங்கள் வாழ்க்கைக் களத்தில், உங்கள் வெற்றியை தீர்மாணிக்கும் செல்வாக்கை எப்படி நீங்கள் வளர்த்துக் கொள்வது?

 • முதற்கண் உங்கள் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும்; மற்றவர்களுக்கு நீங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்;

 • உங்கள் துறையில், ஆளமான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்; மற்றவர்களை வழிநடத்தும் அளவிற்கான முழுமையான அறிவும், அனுபவமும் இருந்தால், அந்த அறிவைப்பெற ஒரு கூட்டம் எப்போதும் உங்களைச் சுற்றி வரும்;

 • உங்கள் துறையின் எல்லா வல்லுனர்களுடனும் உறவு பாராட்டுங்கள். உங்கள் தொடர்புவட்டம் கூடியவரை பெரிதாக இருக்கட்டும்;

 • செல்வாக்கு செல்லுபடியாக, நாணயத்துடன் நாநயமும் அதிமுக்கியம். உங்கள் பேச்சாற்றலை கவனமாக வளர்த்துக் கொள்ளுங்கள்;

 • எல்லா நேரங்களிலும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவராக இருங்கள் – ஏனெனில் சுயநலம் பாராட்டுபவர்கள் எவ்வளவு செல்வாக்கு படைத்திருந்தாலும், அவர்களிடம் முகஸ்துதியாளர்கள் மட்டுமே சேருவார்கள்;

 • உங்கள் துறையில் புதுமைகளை புகுத்துபவராக இருங்கள். பிரச்சனைகளுக்கு மாறுபட்ட தீர்வுகளை ஆலோசியுங்கள்;

 • பொறுமையாக இருக்கப் பழகுங்கள். அவசரக்குடுக்கைகளை யாரும் நம்பி பின் தொடருவதில்லை;

 • இக்கணம் வரையிலான மாற்றங்களை, முன்னேற்றங்கள் எல்லாவற்றையும் அறிந்துவைத்திருங்கள்;

 • எப்போதும் உங்களைச் சார்ந்தவர்களின் கருத்துக்களை மனம்திறந்து கேளுங்கள். சரியாண கருத்துக்களை செயல்படுத்துங்கள், அல்லது உரிய விளக்கங்களை கொடுத்து அவர்களுக்கு புரிய வையுங்கள்;

 • எங்கும், எப்போதும், பணிவுடன் இருங்கள்;

 • உங்களுக்குகென்றதொரு தனி அடையாளத்தை கவனமாக வளர்த்துக்கொள்ளுங்கள்;

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் அறிவு, அனுபவம், சமுதாயத்துடனான இணக்கம், தொடர்புவட்டம் என்று எல்லாவற்றையும் கவனாக வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சுயநலத்தை தாண்டி, சமுதாய நலனில் உண்மையான அக்கறையை நீங்கள் வெளிப்படுத்தும்போது, உங்களை இந்த சமுதாயம் கட்டாயம் ஏற்றுக்கொள்ளும். நாளடைவில், உங்கள் வாக்கை ஒரு பெருங்கூட்டம் ஏற்று நடக்கும்;


நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் – ஒன்று

நீங்கள் செல்வாக்கு படைத்தவராக இருக்கவேண்டும்;

அல்லது செல்வாக்கு படைத்தவரது முழு ஆதரவு

உங்களுக்கு இருக்க வேண்டும்;


இங்கு யாருடைய வாக்கு செல்லுபடியாகிறதோ

அவர் பின்னால்தான் கூட்டம் நிற்கிறது;

யார் பின்னால் பெரும் கூட்டம் நிற்கிறதோ

அவரால் மட்டுமே பெரிய சாதனைகள் சாத்தியமாகிறது!


உங்களாலும் மக்கள் உள்ளங்களை வெல்ல முடியும்;

உங்கள் வாக்கை செல்லுபடியாக்க முடியும்;

நீங்கள் நம்பிக்கையானவராகவும், நாணயமானவராகவும்

மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவராகவும்

பேச்சாற்றல் கொண்டவராகவும் இருந்தால்

உங்கள் செல்வாக்கும் கட்டாயம் செல்லுபடியாகும்!


- [ம.சு.கு 05.10.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentários


Post: Blog2 Post
bottom of page