“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-360
பூஜ்ஜிய நம்பிக்கையில் ஆரம்பிக்கவேண்டும்...!
வங்கியில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இரண்டு அதிகாரிகள் சரிபார்த்து அனுமதிப்பார்கள். பணப்பெட்டக அறைக்கு இரண்டு சாவிகள் வெவ்வேறு நபர்களிடம் இருக்கும். அவர்களில் ஒருவர் விடுமுறையில் செல்வதானால், அந்த சாவியை வேறொரு அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் போகவேண்டும் – இரண்டு சாவியையும் ஒருவரிடமே எக்காரணம் கொண்டும் கொடுக்கக் கூடாது என்று எண்ணற்ற கட்டுப்பாடுகளை வங்கிகள் வகுத்திருக்கும். இந்த கட்டுப்பாடுகளைத் தாண்டி அவ்வப்போது முன்னறிவிப்பில்லாத சில திடீர் சோதனைகளும் நடத்தப்படும். இவை அனைத்தும் ஏன்? வங்கிக்கு தன் ஊழியர் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லையா என்று நீங்கள் கேட்கலாம்?
சமீபத்தில் ஒரு வங்கிக்கணக்கில் 10 இலட்ச ரூபாய் திருட்டு போனதுபற்றி விசாரனை நடைபெற்றது. எப்படி இரண்டடுக்கு பாதுகாப்பு இருக்கும் வங்கிக் கணக்கில் சுலபமாக இணையத்தில் திருட முடிந்ததென்று ஆச்சரியமாக இருந்தது. இறுதியில் அந்த திருடன் பிடிபட்டபோது, அவனிடம் இரகசிய குறியீடுகள் எப்படி கிடைத்தன என்று விசாரித்தார்கள். பணத்தை இழந்தவரின் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் விளையாடும் போது, இந்த இரகசிய குறியீட்டு எண்களை பற்றி பேசியதை கேட்டறிந்து கொண்டனர் என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை நம்புவதில் தவறில்லை. ஆனால் அவர்களுக்கு தகவல்களின் முக்கியத்துவம் தெரியாத வயதில், அவர்களுக்கு தேவையில்லாதவற்றை சொன்னால், இப்படித்தான் இரகசியங்கள் வெளியே கசியும், நஷ்டமும் ஏற்படும்.
ஒருவேளை வங்கி தன் ஊழியர்கள் மேல் முழுநம்பிக்கை வைத்து கட்டுப்பாடுகளை குறைத்தால் நிலைமை என்னவாகும். எல்லாம் சரியாக சென்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை ஆயிரம் கிளைகளோடு பத்தாயிரம் பேர் வேலை செய்யும் வங்கியில், யாராவது ஓருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு திருடினால் / ஏமாற்றினால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுத்தினால், வங்கியின் நிலைமை என்னாவது? காப்புப் பெட்டகத்தில் இருக்கும் வாடிக்கையாளர் பொருட்கள், நகைகள் திருட்டுப்போனால், எப்படி அவர்களுக்கு பதில் சொல்வது?
பணிபுரியும் பத்தாயிரம் ஊழியர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று வங்கி எப்படி கண்காணிக்க முடியும்? எந்த நபர்களைப் பற்றியும் கவலைப்படாமல், யாருடைய நேர்மையையும் சந்தேகப்படாமல் சரியாக இருக்கவே, வங்கி பூஜ்ஜிய நம்பிக்கை திட்டத்தை அமல் படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் செய்கிறது. ஒருவேளை இந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் போனால், சிக்கமாட்டோம் என்ற தைரியத்தில், உள்ளிருப்பவர்களே ஏமாற்றத் துவங்குவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கும். ஏனெனில் பணத்தேவை எல்லோருக்கும் இருக்கிறது. சிக்க மாட்டோம் என்று தெரிந்தால், பேராசையில் தவறு செய்ய ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே இருக்கும்.
வங்கி அட்டையின் இரகசிய குறியீடுகள் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது. அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்பது விதி. ஆனால் தன் குடும்பத்தினர் நம்பிக்கையானவர்கள் என்று எண்ணி சொல்கிறார்கள். அவர்கள் அதன் முக்கியத்துவம் புரிந்து வெளியே பேசாமல் இருந்தால் பரவாயில்லை. தேவையில்லாத இடத்தில் அவற்றை சத்தமாக பேசினால், அந்த தகவல்கள் மற்றவர்களுக்கு தெரியத்தானே செய்யும். என் வீட்டு அலமாரியில் இத்தனை தங்கம் இருக்கிறதென்று விளம்பரப்படுத்தினால், வீட்டுச் சாவியை இந்த இடத்தில் வைப்போம், அலமாரி சாவியை இந்த இடத்தில் வைப்போம் என்று வெளியில் சத்தமாக பேசினால், ஒருநாள் திருடன் பூட்டை உடைத்து நுழையத்தானே செய்வான்!
இன்றைய தொழில்நுட்ப வளரச்சியில், உலகம் சுருங்கிவிட்டது. தகவல் தொடர்பு கட்டமைப்புக்கள் உலகத்தை உங்கள் கையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டன. இந்த வளர்ச்சி மிகப்பெரிய ஆதாயத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தினாலும், அதில் சில ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்கிறது. நல்லவைகளை பார்க்கும் சமுதாயத்தில் சில தீய சக்கதிகளும் இருக்கத்தான் செய்கிறது. கணிணிகளுக்கு “வைரஸ்” எனும் பல அழிக்கும் செயலிகளை அனுப்பி, முக்கிய தகவல்கள் சேகரிப்பை அழிக்கின்றனர். அரசாங்க கட்டமைப்பு, வங்கி கட்டமைப்பு, இராணுவ கட்டமைப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து தகவல்களை திருடுகின்றனர். பல தகவல் தொடர்புகளை இடைமறித்து திரித்து விடுகின்றனர். இவையனைத்தையும் யார் செய்தார்கள் என்று தெரியாத வண்ணம் இணையத்தில் செய்துவிடுவது மிகப்பெரிய சவால். அடிப்படையில் இவற்றைத் தவிர்க்க, நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரேவழி – யாரையும் நம்பாமல், எல்லாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது மட்டுமே!
வாழ்க்கையில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் அப்படி கடினமாக உழைப்பவர்களில் சிலர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் முட்டாள்தனமாக செயல்பட்டு ஈட்டியவற்றையெல்லாம் இழந்து நிற்கின்றனர். உங்கள் நிறுவன கட்டமைப்பை, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் போது, என்னவெல்லாம் செய்யவேண்டும்;
ஊழியர்கள் நம்பிக்கை / நாணயங்களைப் பற்றி பொருட்படுத்தாமல், அடிப்படை பாதுகாப்பு கட்டமைப்புக்களை கட்டாயம் செய்துவிட வேண்டும்;
எதையும் ஒருவரை மட்டும் முழுமையாக நம்பி விட்டுவிடக்கூடாது. குறிப்பாக செல்வங்களை கையாள்பவர்களுக்கு, போதுமான சோதனை கட்டமைப்புக்கள் ஏற்படுத்தி செயல்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும்;
இரகசியக் குறியீடுகள் என்றால், அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருங்கள்;
யாரிடம், எந்தெந்த குறியீடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், யாராவது வேலையை விட்டுப்போனால், அவரிடம் பகிரப்பட்ட குறியீடுகளை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதல் நெறிகள் நிறுவனத்தில் கட்டமையுங்கள்;
இவை வெறும் சிறிய உதாரணங்கள் தான். ஒவ்வொரு துறைக்கும், சூழ்நிலைக்கும், நபர்களுக்கும் ஏற்ப, உங்கள் பாதுகாப்பு திட்டமிடல் சீர்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
ஏமாந்து இழந்தபின், முன்ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும் என்று வருத்தப்படுவதில் பயனில்லை. எல்லா துறைகளிலும், எல்லா செயல்களிலும் பூஜ்ஜிய நம்பிக்கையில் முழுமையாக ஒருமுறை ஆய்வு செய்து பாருங்கள். எதுவேண்டுமானாலும் தவறாகலாம் என்ற நோக்கில் முன்ஜாக்கிரதையான கட்டமைப்பை ஏற்படுத்துவது அதிமுக்கியம். உங்கள் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி இழப்பு ஏற்படுமானால், அதில் வரும் நஷ்டத்தை தவிர்க்க போதுமான காப்பீடு செய்துகொள்ளுங்கள்.
மறந்துவிடாதீர்கள் – எல்லா விடயங்களிலும், அவ்வப்போது பூஜ்ஜியத்திலிருந்து அலசிப்பாருங்கள். உங்களை திருத்திக்கொள்ள, சூழ்நிலைகளை மாற்றியமைக்க, நிகழும் தவறுகளை கண்டுபிடிக்க, நிறுவனத்தை கட்டுப்படுத்த, நேர்மை-நாணயங்களை பாதுகாக்க, உங்களின் இந்த அலசல் முக்கியமானது. இந்த அலசல் நிறுவனத்தின் கட்டுபாடுகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்கிறீர்கள், உங்கள் பயனங்களை எப்படி திட்டமிடுகிறீர்கள், உங்கள் ஆரோக்கியத்தை காக்க எப்படி திட்டமிடுகிறீர்கள், உறவுகளை எப்படி கையாள்கிறீர்கள் என்ற எல்லா விடயத்திலும் எப்போதும் பூஜ்ஜிய நிலையில் அவ்வப்போது ஆய்வு செய்துகொண்டு, போதிய மாற்றங்களை செய்வது நல்லது.
வாழ்க்கை என்பதே ஒரு நம்பிக்கைதான் – ஆனால்
எல்லாவற்றையும் அப்படியே நம்பினால்
ஏமாற்றுபவர்களுக்கு அது எளிதாகி விடுமே!!
தெரிந்தவர்கள், பழகியவர்களை நம்புகிறீர்கள் – ஆனால்
தவறுதலாக உங்கள் இரகசியங்களை அவர்
வெளியில் சொல்லமாட்டார் என்பதற்கு - என்ன நிச்சயம்!
வீட்டை திறந்துவைத்துவிட்டு - திருட்டுப் போனால்
காவல்காரரை குறைசொன்னால், நஷ்டம் யாருக்கு?
நம்பவேண்டியவற்றிற்கு நம்பிக்கை வைக்கலாம் – ஆனால்
எல்லாவற்றிற்கும் கண்மூடித்தனமாக நம்பிக்கைவைத்து
எல்லாவற்றையும் இழந்தபின்
நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர் என்று
குறைசொல்வதால், இழந்தவை மீண்டும் வந்துவிடுமா?
யார்வேண்டுமானாலும் வந்துபோகலாம் என்கிற இடத்தில்
எல்லா பாதுகாப்பையும் செய்துவிடுங்கள் – ஏனெனில்
உங்களால் எல்லோரைப்பற்றியும் அறிந்துவைத்திருக்க முடியாது!
- [ம.சு.கு 04.10.2023]
Comments