top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 359 - பொருட்களின் வரத்தும், இருப்பும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-359

பொருட்களின் வரத்தும், இருப்பும்..!


  • 2021-22 ஆண்டுகளில், உலகளவில் “சிப்” உற்பத்தி பாதிப்பின் காரணமாக சொகுசுக் கார் [மகிழுந்து] உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து மைக்ரோ சிப் [நுண்சில்லு]களின் தேவை அதிகரித்தது. ஆனால் பல நாடுகளில் இருந்த கோவிட் கட்டுப்பாடுகளால், உற்பத்தியை முழுமையாக நடத்தமுடியவில்லை. அதனால், சந்தையில் சிப்-களின் வரத்து வெகுவாக குறைந்தது. வாகனங்களுக்கான தேவை அதிகரித்தபோது, இந்த சிப்-கள் இல்லாமல் பல்லாயிரம் வாடிக்கையாளர்கள் காத்திருக்க நேரிட்டது.

  • வீட்டில் திருமணம் & இதர விழாக்களுக்கான சமையல் பட்டியலில் கட்டாயம் உப்புமாவிற்கான ரவை 5-10 கிலோவும், பெரிய வெங்காயத்தை கூடுதலாகவும் எழுதுவார்கள். ஒரு வேலை உணவு தீர்ந்து போனால், இரவு நேரத்தில் கடையில் எதுவும் கிடைக்காமல் போனால், கடைசியில் வந்தவர்களுக்கு சூடாக உப்புமாவாவது சமைத்துக் கொடுக்கலாம் என்கிற முன்னேற்பாட்டில் அதை வாங்குவார்கள். உணவிற்கான பந்தி துவங்கும்போது பரிமாறுவதற்கான பொருட்கள் எல்லாம் தயாராகிவிட்டதா என்று பார்ப்பார்கள். ஒருவேளை வடை குறைவாக இருந்தால், அந்த பந்தியில் பற்றாக்குறை தெரியாமல் இருக்க, வடை வைப்பதையே நிறுத்திவிடுவார்கள். பாதி பேருக்கு கொடுத்து பாதிபேருக்கு இல்லை என்று சொல்வதை தவிர்த்துவிடுவார்கள். சாதத்தை முதலில் அளவாக வடிப்பார்கள். ஆனால் குழம்பு, இரசங்களை சற்று கூடுதலாக செய்வார்கள். பந்தியில் கூட்டத்தின் போக்கை பார்த்துவிட்டு, ஊறவைத்த அரிசியை சமைப்பார்கள். சாதம் தீரும்முன் அடுத்த வேக்காடு முடிந்திருக்கும். இவையணைத்தும் சமையல் கட்டிற்கான விநியோகச் சங்கிலி மேலாண்மை. இதை எப்படி உங்கள் தொழிலில் நீங்கள் செய்கிறீர்கள்!

சிப்-கள் உட்பட எண்ணற்ற வாகன பாகங்களை, சரியாண நேரத்திற்கு வந்தடையும் வண்ணம், எல்லா பெரிய தொழிற்சாலைகளும் தங்கள் பொருள் வரத்துக்களை கட்டமைத்திருந்தனர். நாளைய உற்பத்திக்கு இன்று மூலப்பொருட்கள் வரும்விதம் கட்டமைத்திருந்தார்கள். இதன் மூலம் மூலப்பொருட்கள் இருப்பு வைக்கும் தேவையும், அதற்கான முதலீட்டுத் தேவையும் குறைவாகவே இருந்தது.


வீட்டு விசேடம், சமையல், பந்தி வழங்குதலில் விநியோகச் சங்கிலியை பார்த்திருப்பீர்கள். ஏதாவதொரு நிகழ்வில், ஒரு சமையல்காரர் எப்படி எல்லோருக்கும் சூடான தோசை, பூரி வழங்க ஏற்பாடு செய்கிறார் என்று கவனியுங்கள். வீட்டில் உங்கள் அம்மா மளிகைப் பொருட்கள், காய்கறிகளை எவ்வளவு இடைவெளியில் வாங்குகிறார், எப்படி பத்திரப்படுத்தி வைக்கிறார் என்பதை கவனியுங்கள். இந்த விநியோகச் சங்கிலி வீட்டிற்கும், உணவிற்கும் மட்டுமானது அல்ல. எல்லா நிறுவனங்களின் இயக்கமே இந்த விநியோகச் சங்கிலியை சார்ந்துதான் இருக்கிறது.


இன்று ஒவ்வொறு பெரிய உற்பத்தி நிறுவனத்திற்கும் எண்ணற்ற மூலப்பொருட்கள் உலகம் முழுவதிலுமிருந்து வரவேண்டி உள்ளது. ஓரிரு கப்பல்கள் வரத் தாமதித்தால், இங்கு தொழிற்கூடமே நிறுத்தவேண்டிய நிலைகூட ஏற்படுகிறது. உங்கள் உற்பத்தியும், வியாபாரமும் உங்களுக்கு வரேவேண்டிய மூலப்பொருள் வரவதிலும், உங்கள் பொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்வதிலும் இருக்கிறது.


ஒவ்வொரு வேலைக்கும், உங்களுக்கு வரவேண்டியவை, உங்களிடமான இருப்பு, நீங்கள் கொடுக்க வேண்டியவை என்று மூன்று பாகங்கள் உண்டு. உங்களுக்கு வரவேண்டியவைகள் குறித்த நேரத்தில் வந்து கொண்டிருந்தால், எந்தவொரு பற்றாக்குறையும் இருக்காது. ஒருவேளை வருவதில் சிறுதாமதம் ஏற்படும்போது, உங்களிடம் போதுமான இருப்பு இருந்தால், தற்காலிக பற்றாக்குறையை சமாளித்துக் கொள்ளலாம். இரண்டையும் தாண்டி தேவை அதிகரித்தால், பற்றாக்குறையில் தான் காலம் கடக்க வேண்டும். பற்றாக்குறை இருக்கவே கூடாதென்று உங்கள் கையிருப்பை அதிகப்படுத்துவதும் சாத்தியமில்லை. ஏனெனில் அதற்கு முதலீடு அதிகம் தேவைப்படும். மேலும் பொருட்களின் தொழில்நுட்பம் மாறும்போது இந்த இருப்புகள் வீணாகிவிடும்;


உங்களுக்கு வரவேண்டியவைகள், நீங்கள் சந்தைக்கு கொண்டு செல்லவேண்டியவைகள் உட்பட உங்களின் விநியோக சங்கிலி சிறப்பாக நடக்க, என்னென்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் மூலப்பொருட்கள் என்னென்ன? அவை எங்கிருந்து வருகின்றன? அவை வருவதற்கான கால அவகாசம் எவ்வளவு? என்பது குறித்த தெளிவான புரிதலும், திட்டமிடலும் இருக்க வேண்டும்!

  • உங்கள் நிறுவனத்தில் இருப்பு எவ்வளவு வைக்க வேண்டும் என்ற கணக்கீட்டில் கவனம் இருக்க வேண்டும். நிறைய வைப்பது முதலீட்டை முடக்கும், குறைவாக வைப்பது, வர்த்தக வாய்ப்பை பாதிக்கும். நீங்கள் சொல்லும் பொருட்கள் வந்து சேர 10 நாட்கள் ஆகுமென்றால், உங்களிடம் குறைந்தபட்சம் 12-15 நாட்களுக்கான இருப்பு இருந்தால் தானே சாத்தியம். எல்லாம் தீரும் சமயத்தில், மூலப்பொருள் வேண்டும் என்று கேட்டால் எப்படி கிடைக்கும்?

  • உங்கள் பொருட்களுக்கான வாடிக்கையாளர் தேவை எப்படி? எந்தெந்த ஊர்களில் தேவை எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்து, உங்கள் பொருட்களை எந்த சந்தைக்கு அருகாமையில் கொண்டு சென்று இருப்பு வைக்க வேண்டுமென்று முடிவு செய்ய வேண்டும். உத; ஆரம்பத்தில் பொருட்களை விநியோகம் செய்ய 3-4 நாட்கள் எடுத்துக்கொண்ட அமேசான் நிறுவனம், இன்று பல பொருட்களை ஒரே தினத்தில் கொண்டுவந்து கொடுக்கிறது.

  • சந்தையின் எதிர்பார்ப்பை பொறுத்து உங்கள் உற்பத்தியை திட்டமிடுவீர்கள். உற்பத்தியின் அளவைப் பொருத்து மூலப்பொருட்களுக்கான தேவையை கணக்கிடுவீர்கள். இந்த திட்டமிடலைப் பொருத்து எல்லா வரத்தும், இருப்பும் தீர்மாணமாகும். இதை சரிவர கவனிக்காமல் விட்டால், அவ்வப்போது பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பற்றாக்குறையும் உங்களுக்கு ஒரு வர்த்தக இழப்பு. அதேசமயம், ஏதொன்றின் அதீத இருப்பும், உங்கள் மூலதனத்தை பயனற்றதாக்கும். எது, எங்கு, எப்படி, எப்போது கிடைக்கும் என்பதைப்பொருத்து உங்கள் விநியோகச் சங்கிலியை திட்டமிடுங்கள். நீங்கள் வைக்க வேண்டிய இருப்பும், நீங்கள் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவைகளையும் பொருத்து, உங்கள் திட்டமிடலை சீர்படுத்துங்கள்!


மூலப்பொருட்கள் போதுமான கையிருப்பு இல்லாவிட்டால்

வரவேண்டிய பொருட்கள் நேரத்திற்கு வரத்தவறினால்

உற்பத்தி பாதிப்பில் நஷ்டம் வரும்!

உற்பத்தியான பொருட்கள் கையிருப்பில் நாள்பட தங்கிவிட்டால்

முதலீட்டுப் பணத்திற்கான வட்டி நஷ்டமாகும்!


சந்தையில் பற்றாக்குறை எப்போதுவேண்டுமானாலும் வரும்!

பற்றாக்குறையை சமாளிக்க

உங்களிடம் போதுமான இருப்பு இருந்தால்

அப்போதைய சந்தைக்கு நீங்கள் தான் எஜமானன்!

நீங்கள் நிர்ணயிப்பதுதான் விலையும், விற்பனையும்!


மூலப்பொருட்களானாலும் சரி

இறுதி விற்பனைப் பொருளானாலும் சரி

எவ்வளவு கையிருப்பு இருக்கவேண்டும் என்பதை

தொடர்ந்து சந்தை நிலவரத்திற்கு ஏற்ப

அலசிப்பார்த்து கையிருப்பு வையுங்கள்

இலாபம் நிச்சயம்! வெற்றி நிச்சயம்!



- [ம.சு.கு 03.10.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page