top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 358 - விலையில் ஜாக்கிரதையாக விளையாடுங்கள்.!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-358

விலையில் ஜாக்கிரதையாக விளையாடுங்கள்....!


 • சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். அதில் மூன்று நபர்கள் முட்டைகளை விற்பனை செய்கிறார்கள். ஒரு முட்டை 5 ரூபாய் என்று வியாபாரம் ஆரம்பிக்க, போட்டியின் காரணமாக விலையை 4-க்கு குறைக்கிறார்கள். இப்படி குறைத்துவிற்றால் நஷ்டம் ஏற்படும் என்பதை புரிந்துகொண்ட வியாபாரி, ரூபாய் 4 வீதம் மற்ற இரண்டு பேரிடமும் இருந்த முட்டையை மொத்தமாக வாங்குகிறார். சிறிது நேரத்திற்கு பிறகு, போட்டி இல்லாததால், எல்லா முட்டையையும் ரூபாய் 6 வீதம் விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார். மாலைக்குள் எல்லா முட்டையும் ரூபாய் 6- 7 வீதம் விற்பனை செய்கிறார். இங்கு யார் சாமர்த்தியசாலி? யார் முட்டாள்? வியாபாரிகள் முட்டாளா? வாடிக்கையாளர்கள் முட்டாளா?

 • ஆரம்ப காலங்களில், ஒரு கைப்பேசி அழைப்பிற்கு, நிமிடத்திற்கு ரூபாய் 6-7 வரை வசூல் செய்தார்கள். இன்று மாதம் 100 ரூபாய் செலுத்தினால், மாதம் பூராவும் பேசிக்கொண்டே இருக்கலாம் என்கிற அளவிற்கு தொலைத்தொடர்பின் விலை குறைந்துவிட்டது. இங்கே, வாங்குவதற்கு ஆளில்லை என்பதனால் குறையவில்லை, மாறாய் வாங்குவதற்கு நிறைய ஆள் இருந்தும் குறைகிறது. காரணம், உற்பத்தியாளர்கள் அதிகரித்துவிட்டனர். போட்டிகள் அதிகரித்துவிட்டன. அதுவும் உள்ளூர் மட்ட போட்டியல்ல – சர்வதேச அரங்கிலான போட்டி. இந்த போட்டியின் விளைவாய், வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் கைப்பேசியிம், தொலைதொடர்பு சேவையும் கிடைக்கிறது. இங்கும் விலையை கட்டுப்படுத்த நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இன்னும் அந்தளவிற்கு ஒற்றுமை வரவில்லை. வந்தால், முதல் உவமையின் கூத்துதான்.

முட்டை வியாபார கதையை பார்த்தீர்கள். இதுதான் போட்டிகளை ஒழித்து ஏகாதிபத்திய முறை வியாபாரம் என்பது. இப்படி நடந்தால், எல்லா நஷ்டமும் இறுதியில் வாடிக்கையாளர் தலையில்தான் வந்து விழும். மேலும், அதை அவர்களால் தவிர்க்கவும் முடியாது. இந்த கதையில் வியாபாரத்தை, இலாபத்தை இழந்தவர்கள் மற்ற இரு வியாபாரிகள். இப்படித்தான் ஒவ்வொரு விவசாயிகளிடமும் விலைகுறைவாக வாங்கி சந்தையில் தரகர்கள் காசு பார்க்கிறார்கள். எப்போதும் போட்டியிடும் வியாபாரிகள், வாங்கும் விலை விடயத்தில் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். உற்பத்தியாருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். இதே இன்னொரு கோணத்தில், பல உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து விலையை கட்டுப்படுத்துகிறார்கள். இங்கு யார் சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரோ, அவர் நிர்ணயிப்பதுதான் விலை. மற்ற எல்லாமே வெறும் கண்துடைப்புக்கள் தான்.


கைப்பேசிகளின் விலையும் குறைந்துவிட்டது. இணைப்புக்கான கட்டணமும், அழைப்பிற்கான கட்டணமும் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் சேவை நிறுவனங்கள் இலாபத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உற்பத்தி முறைமைகளை மாற்றி விலையை குறைத்துவிட்டனர். வாடிக்கையாளர்களை அதிகரித்து, உரிமக் கட்டணத்தை பகிர்ந்துவிட்டனர். புற்றீசல் போல பலநிறுவனங்கள் இருந்தன. பெரும்பாலானவை, இந்த விலை யுத்தத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிட்டன. இறுதியில் 2-3 பேர் மட்டுமே நிலைக்கக்கூடும். அப்போது, அவர்கள் ஒன்றுசேர்ந்து விலையை நிர்ணயிப்பார்கள். அன்று வாடிக்கையாளர் தான் பலிகடா!


என்னென்ன காரணங்களுக்காக விலை ஏற்ற-இறக்கத்தில் நிறுவனங்கள் விளையாடுகின்றன என்றால்;

 • சந்தையில் தங்களின் பங்கை நிலைநிறுத்த விலைகளை மாற்றியமைக்கிறார்கள்

 • புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, சலுகை விலைகளை அள்ளி வீசுகிறார்கள்

 • வர்த்தகத்தை அதிகரிக்க / விற்பனையை கூட்ட விலையை குறைப்பதும், இலாபத்தை அதிகரிக்க விலையை கூட்டுவதும் மாறிமாறி நடத்துகிறார்கள்

 • புதிய போட்டியாளர்கள் வருகின்றபோது, அவர்களை ஆரம்பத்திலேயே முடித்துவிட விலையை குறைக்கிறார்கள்

 • ஆரம்பகட்ட பிரிசோதனை முயற்சிகளில், சோதிப்பதற்காக அவ்வப்போது இலவசமாகக்கூட வழங்குகிறார்கள்;

இப்படி தங்களின் இஷ்டம் போல ஏற்றவும் இறக்கவும் கூடாது, பொருட்களின் சந்தையையும், விலையையும் யாரொருவரும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதற்காக, அரசாங்க பலவிதமான சட்டதிட்டங்களை வகுத்திருக்கறது. உத; ஊழியர்கள் ஊதியச் சட்டம், வீட்டு வாடகைச் சட்டம், பெட்ரோலிய பொருட்களுக்கான நிர்ணய முறைமைகள், விவசாய பொருட்களுக்கான ஆதார விலைகள, வட்டி விகித கட்டுப்பாடுகள் என்று வாடிக்கையாளர்கள் நலனுக்காக, அரசாங்கம் பலசட்டங்களால் ஏகாதிபத்திய விற்பனை முறைமை வராமல் பார்த்துக்கொள்ள முயற்சிக்கிறது.


ஆனால், நடைமுறையில் எண்ணற்ற உற்பத்தியாளர்கள் ஒன்றுகூடி விலையை ஏற்றிவிடுகிறார்கள். சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உண்டாக்கி விலையை ஏற்றிவிடுகிறார்கள். போட்டிகளை ஒழிக்க, கட்டுப்பாடில்லாமல் விலைகளை சில நாட்கள் குறைத்து சந்தையில் போட்டியாளர்களை விரட்டுகிறார்கள். விலை ஏற்றுவதும்-இறக்குவதும் நிறுவனத்தின் / வியாபாரியின் சாமர்த்தியம். நீங்கள் உங்கள் பொருளின் விலையில் விளையாட நினைக்கிறீர்களா? நீங்கள் மறக்ககூடாதவைகள் என்னென்ன?

 • பொருட்களின் விலை குறித்த சட்டதிட்டங்களை முழுவதுமாக தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்

 • உங்கள் சந்தை எது? போட்டியாளர்கள் யார்? என்பதில் தெளிவாக இருங்கள்!

 • உங்கள் செயலுக்கான எதிர்வினையாற்றல் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள்;

 • பொட்களின் இருப்பு, வாடிக்கையாளர் தேவை, உற்பத்தியின் அளவு போன்ற விடயங்களை முழுவதுமாய் கருத்தில் கொள்ளுங்கள்;

நீங்கள் இலாபம் பெற, விலை சரியாக நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியம். குறைவாக இருந்தால், நஷ்டத்தில் நீங்கள் வெளியேற நேரிடும். விலையை அதிகரித்தால், போட்டியாளர்கள் உங்களை வெளியேற்ற முயற்சிக்கக் கூடும். சூழ்நிலைக்கேற்ற விலை நிர்ணயம் செய்வது உங்கள் கையில். விலையில் விளையாடுவது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியைக் கொண்டு போரிடுவது போன்றது. விலையின் மாற்றம் எப்படி வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். கவனத்தோடு விளையாடுங்கள்! வெற்றி நிச்சயம்!


சந்தையை கட்டுப்படுத்த

போட்டியாளர்களை வெல்ல

விலையை ஏற்றி-இறக்கி விளையாடுகிறீர்களா?


வியாபாரத்தில் விலை ஒரு அபாயகரமான ஆயுதம்

அதை சாமர்த்தியமாக பயன்படுத்தி

கோடிகளை சம்பாதித்தவர்களும் உண்டு!

தவறான விலை நிர்ணயத்தால்

எல்லாவற்றையும் இழந்து தெருக்கோடிக்கு வந்தவர்களும் உண்டு!


சந்தையில் பொருளின் விலை தான்

உங்கள் இருப்பை தீர்மாணிக்கும்

உங்கள் போட்டியை தீர்மாணிக்கும்

உங்கள் முக்கியத்துவத்தை தீர்மாணிக்கும்

உங்கள் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும்


விலை மாற்றத்தை நீங்கள் கட்டுப்படுத்தினால்

சந்தையின் வல்லமை உங்கள் கையில்!

சந்தையின் விலைமாற்றத்திற்கு நீங்கள் கட்டுப்பட்டால்

உங்கள் வியாபாரம் சந்தையின் பிடியில்!

நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்களா? அல்லது கட்டுப்படுகிறீர்களா?


- [ம.சு.கு 02.10.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page