“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-356
"நேரத்தை" கொண்டு விளையாடுங்கள்...!
மூன்று மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஒரு மாணவன் 25 மதிப்பெண் கொண்ட கட்டுரையை முதலில் விளாவாரியாக எழுதியதில் நேரம் போய்விட, கிட்டத்தட்ட 50 மதிப்பெண்ணுக்கான கேள்விகளுக்கு பதில் எழுதவில்லை. இன்னொருவன் கட்டுரையை தவிர்த்து மற்றைய 75 மதிப்பெண்ணுக்கான கேள்வி பதில்களை எழுத முயற்சித்து முடிந்தவரை எழுதினான். இறுதியில் கட்டுரையை எழுத நேரமிருக்கவில்லை. மூன்றாவது மாணவன், தனக்கு நன்கு தெரிந்த பதில்களை மட்டும் முதலில் கவனித்து எழுதி முடித்துவிட்டு, கட்டுரைக்கு வந்து, தெரிந்தவற்றை எழுதினான். இறுதியில் மீதமிருந்த சொற்ப நிமிடங்களில் விட்டுப்போனவற்றை முயற்சித்துப் பார்த்தான். இவர்களில் யார் அதிக மதிப்பெண் பெறுவார்கள்?
கால்பந்தாட்டப் போட்டி நடக்கிறது. இரண்டு 45 நிமிட பகுதிகளாக, கிட்டத்தட்ட 90 நிமிடம் வீரர்கள் தொடர்ந்து ஓட வேண்டும். எல்லா வீரர்களும் கடைசி 5 நிமிடங்களில் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் போதுமான இடைவெளியில் சிறு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். யாரை எப்போது களத்தில் எவ்வளவு நேரம் விளையாடச் சொல்ல வேண்டும், யாருக்கு சிறிது ஓய்வு தேவை என்று மேலாளரும், பயிற்சியாளரும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வீரர்கள், தங்கள் சக்தியைக் காத்து, பந்தைக் கொண்டு சிலசமயம் நேரம் கடத்துவார்கள், சிலசமயம் ஆக்ரோஷமாக தாக்குவார்கள், சிலசமயம் வேண்டுமென்றே வெளியில் உதைப்பார்கள். இவையனைத்தும் ஒரு திட்டம்தான். தங்கள் அணி முன்னிலை வகிக்கும் போது ஒரு உத்தியும், பின் தங்கியபோது ஒருவித உத்தியும் மாற்றிமாற்றி அவர்கள் கையாள்வது கண்கூடத் தெரியும். இங்கு இருக்கின்ற நேரத்தில் எப்படி வெற்றி காண்பதென்ற ஒரே நோக்கம் தான் எல்லோருடைய புத்தியிலும் ஓடும்.
தேர்வு எழுதுவதில் எண்ணற்ற முறைமைகளை கடைபிடிப்பார்கள். ஒருசிலர் தெரிந்ததை மட்டும் முதலில் சீக்கிரம் எழுதி முடிப்பார்கள். ஒரு சிலர் வரிசையாக எழுதிக்கொண்டு வருவார்கள். ஒரு சிலர் மதிப்பெண்ணுக்கு ஏற்ப நேரம் செலவிட்டு எழுதுவார்கள். ஒரு சிலர் நேரத்தை கடத்துவதற்காக எதையாவது எழுதுவார்கள். 25 மதிப்பெண் கட்டுரைக்கு நேரம் செலவிட்டு 75 மதிப்பெண் பகுதியை சரிவர செய்யாமல் ஒருவன் இருக்க, தெரிந்ததை மட்டும் தெளிவாக எழுதி எளிதாக ஒருவன் தேர்ச்சியடைகிறான். இருக்கின்ற அளவான நேரத்தில், எப்படி அதிகமதிப்பெண் பெறுவது என்பதுதான் இங்கு குறிக்கோள். அந்த ஒரு கட்டரையை எவ்வளவு சிறப்பாக எழுதினோம் என்பது இரண்டாம் பட்சம்தான். கட்டுரையின் சிறப்பைவிட, வாங்கிய மதிப்பெண் தான் முக்கியம் என்கிற இடத்தில், கூடியவரை அதிக மதிப்பெண்களை நோக்கி பதிலளிக்க முயற்சிக்கிறவன் வெற்றி பெறுகிறான்.
விளையாட்டுப் போட்டியில் கடைசி நிமிடம் வரை யார் முழு சக்தியுடன் போராடுகிறார்களோ, அவர்களுக்காண வெற்றிவாய்ப்பு அதிகம். நீண்ட நேரப் போட்டியில், யாராலும் கடைசி வரை தாக்குபிடிக்க முடியாது. அதனால், தங்கள் ஆட்டத்தின் தாக்குதலையும், தற்காப்பையும் அவ்வப்போது மாற்றியமைப்பார்கள். தொடர்ந்து தாக்குதல் போக்கையே கடைபிடித்தால், வீரர்கள் சீக்கிரம் களைத்துவிடுவார்கள் என்பது அணித்தலைவருக்கு தெரியும். அவ்வப்போது, ஒருசிலருக்கு ஓய்வு கொடுத்து மாற்று வீரரை களமிறக்குவார். போட்டியின் போக்கிற்கேற்ப, 5 நிமிடங்களுக்கொரு முறை ஏதாவதொரு மாற்றத்தை செய்துகொண்டேதான் இருப்பார்கள். ஏனெனில், வெற்றி என்பது, வெறும் உடல் திறமையில் மட்டும் தீர்மாணிக்கப்டுவதில்லை, நேரத்தை எப்படி சாமர்த்தியமாக பயன்படுத்துகிறோம் என்பதிலும் அடங்கியிருக்கிறதென்பது அவர்களுக்குத் தெரியும்.
“நேரம்” என்பது எல்லோருக்குமான ஒரு எல்லைக்குட்பட்ட செல்வம். ஒரு நாளைக்கு எல்லோருக்குமே 24 மணிநேரம் இருப்பதுபோல. ஒவ்வொரு களத்திலும், எல்லாவற்றிற்கும் நேரம் ஒரு எல்லைக்கோடாக கட்டாயம் இருக்கும். அந்த எல்லைக்குள் எப்போது புக வேண்டும், எப்போது வெளியேறிவிட வேண்டும், எவ்வளவு வேகமாக செயல்பட வேண்டும், எவ்வளவு மெதுவாக செய்யவேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று சரியாக முடிவு செய்வதில்தான் உங்கள் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.
நீங்கள் வெற்றிபெற விரும்பினால்,
எதையும் செய்வதற்கு, எவ்வளவு நேரம் இருக்கிறது, எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை தெளிவாக முதலில் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்;
போதுமான பயிற்சிகள் முன்னறே பெற்றிருந்தால், செய்கின்ற வேலையை தைரியமாகவும், சீக்கிரமாகவும், சரியாகவும் செய்துமுடிக்க முடியும்;
எந்த களத்திலும், அந்த போட்டிக்காண விதிமுறைகளை முதலில் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த போட்டியில் உள்ள நேரக் கட்டுப்பாடுகள், போட்டியில் அதனுடைய தாக்கம் எப்படி என்பதை முதலில் அலசிப்பார்க்க வேண்டும்;
முயல்-ஆமை கதைபோல நிதானம் தான் வெற்றி என்று இருந்துவிடாதீர்கள். அந்த கதையின் அடுத்த தொடர்ச்சியான வேகமும், விவேகமும் வெற்றி என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்;
எப்போது வேகம் தேவை, எங்கே மெதுவாக போக வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்;
முடிவெடுப்பதில் காலம் தாழ்த்தி விடாதீர்கள். தவறான முடிவுகளால் வெற்றியை இழந்தவர்களைக் காட்டிலும், முடிவெடுக்க தாமதித்ததால் வெற்றியை தவறவிட்டவர்கள் தான் இங்கு ஏராளம்;
எந்த செயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும், எது மதிப்பெண்ணை கூட்டும், என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, உங்கள் கவனத்தை முதலில் அதன் மீது பிரதானப்படுத்துங்கள்;
மன அழுத்தம், மன உளைச்சல் எப்படி வேண்டுமானாலும் வரும். நேரத்தின் நிர்பந்தத்தில் வரும் இந்த சிக்கல்களை நேரத்தைக் கொண்டே சமாளிப்பதுதான் உங்கள் தனிப்பட்ட சாமர்த்தியும்;
களத்தில் ஓடிக்கொண்டே இருந்துவிடாதீர்கள். எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருங்கள். ஓய்வெடுக்காமல் ஓடினால், முக்கியமான கட்டத்தில், உங்களிடம் போதிய சக்தியில்லாமல் திண்டாடக் கூடும்;
எல்லாவற்றிற்கும் ஒரு மாற்றுத்திட்டம் எப்போதும் உங்கள் சிந்தனையில் இருக்கட்டும். ஏனெனில், சில நெருக்கடியான சூழ்நிலைகளில் உங்களுக்கு யோசிக்க நேரமும், வாயிப்பும் இருக்காது. அடுத்த நொடி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அதைப்பற்றி நீங்கள் முன்னறே அசைபோட்டிருந்தால், மாற்று வழியை உடனே செயல்படுத்த முடியும்;
களத்திற்கு தக்கபடி, உங்கள் நேரத்தை பயன்படுத்த வேண்டும். எதிரயை நீங்கள் ஆக்ரோஷமாக தாக்கி அழிக்கலாம், அல்லது எதிரியை ஆடவிட்டு களைப்பேற்றி வெற்றி கொள்ளலாம், அல்லது எதிரிக்கு வாய்ப்பே அளிக்காமல் வெற்றிகொள்ளலாம்;
எப்போது உங்கள் கையில் இருக்கும் இரண்டு பெரிய ஆயுதங்கள் (1) உங்கள் திறமை (2) நேரம். இவையிரண்டையும் சாமர்த்தியமாக பயன்படுத்தினால், வெற்றி நிச்சயம்!!
சிலவற்றை சீக்கிரம் செய்வதில் இலாபம் கிடைக்கிறது!
சிலவற்றை தாமதிப்பதில் இலாபம் கிடைக்கிறது!
சிலவற்றை செய்யாமல் விடுவதில் இலாபம் கிடைக்கிறது!
செயலை துவங்கும் நேரம்
செயலை செய்வதற்கு தேவையான காலம்
அவ்வப்போது பின்வாங்கும் / ஓய்வெடுக்கும் காலம் – என்று
நேரத்தை எப்படி உங்கள் கைப்பாவையாக வைத்து
செய்யும் செயல் கட்டுப்படுத்துகிறீர்களோ
அதற்கேற்ப உங்கள் வெற்றி தீர்மாணமாகிறது!
போர்களமோ, வியாபாரக் களமோ, குடும்பமோ
எப்போது முன்செல்ல வேண்டும்
எப்போது பின்வாங்க வேண்டும்
எப்போது ஒதுங்கிவிட வேண்டும்
என்று தெரிந்து கவனமாக செயல்பட்டால்
எல்லா சவால்களையும் சமாளித்து
வெற்றிகாண முடியும்!!
- [ம.சு.கு 30.09.2023]
Kommentare