top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 355 - வியாபாரத்தில் போர்த்தந்திரம்!"

Updated: Sep 30, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-355

வியாபாரத்தில் போர்த்தந்திரம்..!


  • கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு, அரசாங்க நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள், தொலைதொடர்பு சேவை வழங்கிக் கொண்டிருந்த சந்தையில், திடீரென்று ஒரு புதிய நிறுவனம் நுழைந்து, ஒரு ஆண்டிற்குள் சந்தையில் முதலிடம் பிடிக்க முடியுமா என்று கேட்டால், முடியும் என்று ஒரு நிறுவனம் நிரூபித்து காட்டியது. வழக்கமான சின்ன இலவச சலுகை, ஆரம்பச் சலுகை என்று சிறிதாய் செய்யாமல், ஓராண்டுக்கு இலவச சேவை என்று சந்தையின் அஸ்திவாரத்தையே முற்றிலுமாய் அசைத்தது. அமெரிக்க இராணுவம் திடீரென்று இரண்டு அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்த உலக யுத்தத்தையே முடிவிற்கு கொண்டுவந்த யுத்திபோல, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் “4ஜி” சேவையின் அதிரடி, நாட்டின் தொலைதொடர்பு கட்டமைப்பையே மொத்தமாக மாற்றியமைத்தது.

  • நாடுகளுக்கிடைய அவ்வப்போது துவங்கும் பொருளாதார யுத்தம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகச் சந்தையில், ஒரு நாடு தன் முதன்மைத்துவத்தை நிலைநிறுத்த, வரிகள் எதுவும் இல்லாமல், எண்ணற்ற சலுகைகளுடம் குறைந்த விலையில் சந்தையில் பொருட்களை விற்கும். இப்படி திடீரென்று மலிவு விலை கொண்டுவரும் போது, அப்போதைக்கு சந்தையில் இருக்கும் மற்ற நாட்டு பொருட்கள் யாவும் பெரிய அளவில் நிராகரிக்கப்படும். இதே யுத்தியைத்தான், எண்ணற்ற பெரிய நிறுவனங்கள், தங்களின் முதன்மைத் துவத்தை நிலைநிறுத்தவும், போட்டி நிறுவனங்களை நசுக்கவும் எல்லா சந்தைகளிலும் செய்துகொண்டிருக்கின்றன. உங்கள் வியாபாரத்தில், அப்படியொரு யுத்தியால் நீங்கள் மற்றவரை நசுக்கலாம் அல்லது நீங்கள் நசுக்கப்படலாம். அப்படி உங்களைச் சுற்றி எந்த நிறுவனம், எந்த சந்தையை ஆட்டிப்படைக்க முயற்சிக்கிறதென்று தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருவதற்கு முன்னர் வரை, மாதம் 500-1000 ரூபாய் செலுத்தி பெற்ற சேவைகள் கிட்டத்தட்ட இலவச நிலைக்கு வந்தது. இன்று “5ஜி” தொழில்நுட்பமும் சேர்ந்துவிட்டது. அன்றாட தொலைக்காட்சி சேவையைக்கூட மக்கள் கைப்பேசியில் பார்க்கத் துவங்கிவிட்டனர். போர் முறைகளில் கையாளப்படும் “அதிர்ச்சி & பிரமிப்பு யுத்தி” [ஷாக் & ஆவ் ஸ்ட்ரேடஜி] போல், ஜியோ நிறுவனத்தின் வரவு, ஒருபுறம் சந்தையில் இருக்கும் வியாபாரிகளுக்கு பேரதிர்ச்சியாக இருக்க, மறுபுறம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பிரமிப்பை அளித்தது. தொலைதொடர்பு & தகவல் பரிமாற்ற முறைமைகள் முற்றிலும் நிகழ்நிலை [ஆன்லைன்] தளத்திற்கு சீக்கிரத்தில் மாறியது.


உலகமே ஒரு பெரிய பொருளாதாரச் சந்தையாகிவிட்ட களத்தில், இன்று உலகப்போர்களுக்கு பதிலாக, பொருளாதார யுத்தங்கள்தான் பலவிதங்களில் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. ஒரு காலத்தில் அமெரிக்கா சந்தையை கட்டுப்படுத்தியது. இன்று சீனா கட்டுப்படுத்துகிறது. அடுத்தபடியாக, அந்த இடத்திற்கு நம் பாரதம் முயற்சிக்கிறது. வியாபாரம் இன்று ஒரு யுத்தமாகிவிட்டது. நாடுகளுக்கு மட்டுமல்ல, தனி மனிதர்களுக்கும் தான். ஒரு பொருளை, ஒரே சந்தையில் நூறுபேர் விற்கின்றனர். ஒரே தெருவில் மூன்று மளிகைக் கடைகள். போட்டிகள் அளவுகடந்து விட்டன. இந்த போட்டிநிறைந்த சந்தையில் நீங்கள் தாக்குப்பிடுத்து நிற்க ஏதாவதொரு யுத்தியை பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். உங்கள் வியாபாரத்தைக் காப்பாற்ற, சந்தையில் முக்கியத்துவம் பெற, நீங்கள் கையாளும் போர் யுத்தி என்ன?


என்னென்ன மாதிரியான போர் யுத்திகளை, இன்றைய வியாபாரச் சந்தை எப்படி கையாண்டுவருகிறது;

  • சந்தைப் பிரிவு – யுத்தகளத்தில் எப்படி வீரர்கள் திட்டமிட்டு பிரிந்து, ஒவ்வொரு பகுதியாக தாக்கி முன்னேறுகிறார்களோ, அதுபோல, நிறுவனங்கள் சந்தையை பல பிரிவுகளாக பிரித்து திட்டங்களை வகுத்து செயல்படுத்துகின்றன;

  • சந்தை நுண்ணறிவு – எதிராளியின் பலம்-பலவீணம், திட்டங்கள் என்ன என்பது பற்றி பலவிதங்களில் தகவல்கள் சேகரிக்கப்படுவது போல, இன்று நிறுவனங்களும் எண்ணற்ற ஒற்று வேலைகளை செய்கின்றன;

  • கூட்டணி வியூகங்கள் – ஒரு எதிரியை வீழ்த்த யாரை துணைகொள்ள வேண்டுமென்று போரில் கூட்டு சேர்வதுபோல, இன்று வியாபாரத்திலும், சட்டத்திற்கு புறம்பாக பல கூட்டணிகளை வைத்து சந்தையை கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன;

  • கொரில்லா யுத்தமுறை (கரந்தடிப் போர்முறை) – சிறுசிறு குழுக்களாக ஒழுங்கற்ற முறையில் ஆங்காங்கே எதிர்பாராமல் தாக்குவது போல, வியாபார நிறுவனங்கள் கணிக்க முடியாத விதங்களில் ஆங்காங்கே பொருட்களையும், விலையையும் கட்டுப்படுத்தி, சிறு நிறுவனங்களை விரட்டி சந்தையை ஆட்டிப்படைக்கின்றன;

  • வளங்களில் பங்கீடு – யுத்த களத்தில் ஆயுதம், உணவு, வீரர்கள் என்ற மூன்று வளங்களையும் உபயோகிக்கும் விதத்தைப் பொறுத்து வெற்றி தீர்மாணமாகும். அதுபோலத்தான் இன்று வியாபார வளர்ச்சியும் வளங்களின் பங்கீட்டைப் பொறுத்து அமைகிறது;

  • முன்னேறுதல்-பின்வாங்கல் – யுத்தகளத்தில் சூழ்நிலைக்கேற்ப முன்னேறுவதும், பின்வாங்குவதும் மாறுபடும். சில சமயங்களில் எதிரியை ஏமாற்றுவதற்காகக்கூட பின்வாங்குவதுபோல மாயை உருவாக்குவார்கள். இன்று எல்லா பெரிய நிறுவனங்களும், எண்ணற்ற விதங்களில் சந்தையையும், போட்டியாளர்களையும் இப்படித்தான் குழப்பி சந்தையை கட்டுப்படுத்தி வருகிறார்கள்;

  • அதிர்ச்சி-ஆச்சரியம் : யுத்தகளத்தில் வெற்றியை தீர்மாணிப்பது சில அதிர்ச்சிகரமான தாக்குதல்களும், ஆச்சரியமான திறமை வெளிப்பாடுகள் தான். வியாபாரக் களமும் இன்று இப்படித்தான் ஆட்டிப் படைக்கப்படுகிறது;

  • தொழில்நுட்பத்தின் பயன்பாடு – இன்று யுத்தகளங்கள் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு எல்லாவற்றையும் கண்காணித்து வருகிறது. வியாபாரக் களம் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல தகவல்களை திரட்டி யாருக்கு, என்ன, எப்போது தேவையென்று கணித்து சந்தையில் கோலோச்சுகிறது;

மேற்கூறிய யுத்திகளின் பயன்பாடு, ஒரு சிறிய உதாரணப் பட்டியல் தான். எந்தக்களம்? எதிரியார்? அவரது பலம்-பலவீணம் என்ன? என்பதை பொறுத்து, பெரு நிறுவனங்கள் யுத்திகளை மாற்றி சந்தையில் தன் முதன்மைத் துவத்தை தக்கவைக்க போராடுகிறது. உங்களைச் சுற்றி, எந்ததெந்த நிறுவனங்கள் என்னென்ன மாதிரியான யுத்திகளை கையாள்கிறது, எப்படி சந்தையை கட்டுப்படுத்துகிறது என்பதில் மிகவும் கவனமாக இருங்கள்! எப்படி போர்களத்தில் கவனம் அதிமுக்கியமோ, இந்த வியாபாரக் களத்திலும் உங்கள் கவனம்தான் எல்லாவற்றிலும் பிரதானமானது;


வியாபார களத்தில் இன்று அளவுகடந்த போட்டி நிலவுகிறது!

எல்லா சவால்களையும் கடந்து நீங்கள் ஜெயிக்க

உங்கள் திறன்களை மேம்படுத்துவதோடல்லாமல்

எதிரியின் பலவீனங்களை தெரிந்து வீழ்த்த வேண்டும்!


இங்கு எல்லா சந்தைக்கும் ஒரு எல்லை உண்டு – அந்த

வாய்ப்புக்களை ஒருவரிடமிருந்து மற்றவர் தட்டிப்பறிக்கிறார்!

இங்கு பலம் பொருந்தியவர் நீண்டகாலம் நிலைத்திருக்கிறார்!

பலமற்றவர் சீக்கிரத்தில் எல்லாவற்றையும் இழந்து ஓடுகிறார்!


நீங்கள் முதன்மை நிலையை அடைய

நிறைய எதிரிகளை வீழ்த்த வேண்டியிருக்கும்!

உங்கள் முதன்மை நிலையை தக்கவைக்க

நிறைய போட்டியாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கும்!

இரண்டையும் வெவ்வேறு கோணத்தில் செயல்படுத்த

போர்த் தந்திரங்கள் உங்களுக்கு கைகூடவேண்டும்!


போர்த் தந்திரம் மட்டுமே

சூழ்நிலைகளை உங்களுக்கு புரியச் செய்து

ஏற்புடையதை சாதுர்யமாக நிகழ்த்த வழிகாட்டும்!

அதேசமயம், தந்திரங்களைக்கொண்டு

யாருக்கும் நம்பிக்கை துரோகமும் செய்துவிடாதீர்கள்!


- [ம.சு.கு 29.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page