“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-353
எப்படி பதிலளிக்கிறீர்கள்.?
பொருளை சரிவர உபயோகிக்கத் தெரியாமல் தவறுசெய்துவிட்டு நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டிக், அதீதமாக தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து, கடுமையான வார்த்தைகளுடன் ஒரு மின்னஞ்சல் வருகிறது. தொலைபேசியில் தொந்தரவு செய்தது போதாமல், கடுமையான வார்த்தைகளுடன் மின்னஞ்சல் இருப்பதை பார்த்தவுடன் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது. உடனே பதிலுக்கு பதிலாக அவரது தவறுகளை சுட்டிக்காட்டி அவரின் அநாகரீகத்தை சுட்டிக்காட்டி நீங்களும் கடுமையாக பதிலெழுத வேண்டுமென்று யோசிக்கிறீர்கள். ஆனால் கோபப்பட வேண்டாம் என்று உங்கள் மேலாளர் பொறுமைகாக்கச் சொல்லிவிடுகிறார். ஏன்?
பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின்போது, ஆசிரியர் உங்கள் குழந்தை செய்யும் குறும்புகளை, தவறுகளை பெரிய பட்டியலாக சொல்கிறார். சரிவர படிக்காமல் இருந்த பிள்ளையின் மேல், இவ்வளவு குறைகள் பள்ளியில் சொல்லப்படுவது கேட்டு அதீதமாக கோபம் வரும். அந்த கோபத்தில் உங்கள் பிள்ளையை அங்கேயே இரண்டடி அடிக்கத் தோன்றும். ஆனால் அவ்விடத்தில் பொறுமைகாத்து விடுகிறீர்கள். ஏன்?
வாடிக்கையாளர் பக்கம் தவறு இருக்கும். ஆனால் அவரது மின்னஞ்சலுக்கு, பதிலுக்கு பதிலாய் நீங்களும் கடுமையான வார்த்தைகளுடன் பதில் எழுதினால், சில சமயம் வாடிக்கையாளர்கள் உங்கள் பதிலை மட்டும் சமூகவளைதளங்களில் பகிர்ந்து, நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் எழுதுவார்கள். பின் அதை சரிகட்ட படாதபாடு படவேண்டும். இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களில் சிலரை அழைத்துப்பேசி சரிசெய்யலாம். சிலருக்கு கட்டண அடிப்படையில் சரிசெய்து கொடுக்கலாம். அவரின் கோபத்திற்கு போட்டியாக நீங்களும் கோபப்பட்டால், உங்கள் நிறுவனத்தை தவறாக சித்தரித்துவிடுவார். பின் சிக்கல் உங்களுக்குத்தான். பொறுமையாக கையாண்டால், அந்த சேவையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வாடிக்கையாளரை திருப்திபடித்த முடியும்.
உங்கள் பிள்ளை, சொல்வதை கேட்காமல், அதீதமாக தவறு செய்யும்போது, எல்லோர் மத்தியிலும் அடித்துவிடலாம். ஆனால் அப்படி செய்வது நாகரீகமாக இருக்காது. உங்கள் பிள்ளைக்கும் நண்பர்கள் மத்தியில் அவமானமாகி விடும். அதனால், அவ்விடத்தில் பிள்ளையை சற்று முறைத்துப் பார்த்துவிட்டு அமைதிகாத்து விடுகிறீர்கள். ஒருவேளை அந்த பிள்ளையை அதீதமாக திட்டினால், அந்த பிள்ளைகள், தங்களின் தவறை புரிந்து கொள்வதற்கு பதிலாய், எதிர்பதமாக மாறிவிடுகிறார்கள். வேண்டுமென்றே அதீதமாக தவறு செய்கிறார்கள். அப்படி ஏட்டிக்கு போட்டியாய் மாறிவிடாமல் இருக்க, கோபப்படாமல் உங்கள் பிள்ளையுடன் பொறுமையாக அமர்ந்து பேச முயற்சிக்க வேண்டும்.
குழந்தைகளிடம், அதீதமாக நாம் உணர்ச்சிவயப்பட்டால், அவர்கள் ஏட்டிக்குப் போட்டியாய் மாறிவிட வாய்ப்பதிகம். இளஇரத்தம், எதையும் செய்யத் தூண்டும். அங்கு சாமர்த்தியமாய் கோபம் காத்து, அவர்களை மாற்றுவதுதான் புத்திசாலித்தனம். அதைவிடுத்து கோபத்தில் குதித்தால், எல்லாம் பாழாகிவிடும். அதேபோல, நிர்வாகத்திலும் சிலபல தவறுகள் அவ்வப்போது நிகழும். எல்லாவற்றிலும், ஊழியர்களை மற்றவர்கள் மத்தியில் திட்டி நடவடிக்கை எடுத்தால், காலப்போக்கில் எல்லா ஊழியர்களும் விலகிவிடுவார்கள். உணர்ச்சி வயப்பட்டு திட்டுவதில் பயனில்லை. அவர்களுக்கு சரியாக புரியவைத்து திருத்துவதுதான் முக்கியம்;
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு எல்லோரும் ஒலியெழுப்புவதில் பயனில்லை. மன அழுத்தம் தான் அதிகரிக்கும். மாறாக பொறுமைகாத்து, இசையை கேட்டு மனதை அமைதிபடுத்தலாம்
மேலாளர், உங்கள் பணிகுறித்த குற்றங்குறைகளை சுட்டிக்காட்டும் போது, உங்களை நியாயப்படுத்த வாதிடலாம். ஆனால் அதனால் மேலாளருடனான உறவுதான் பாதிக்கும். மாறாக அவரின் கருத்துக்களை ஏற்று மாற்றிக்கொள்ள முயற்சித்தால், எல்லோருக்கும் பயனளிக்கும்;
சமூக வளைதளத்தில் உங்களைப்பற்றி தவறான கருத்துக்கள் சொல்லப்படலாம். சிலர் அநாகரீகமாக எழுதக்கூடும். அவர்கள் மட்டத்திற்கு நீங்கள் இறங்கி பதிலளிப்பதற்கு பதிலாக, அவர்களை உங்கள் கணக்கில் இருந்து அப்புறப்படுத்துவது நல்லது;
அலுவலகத்தில் திடீரென்று ஏற்படும் பெரிய தீ விபத்துக்களிம் போது, பீதியடைந்து எல்லோரையும் அச்சுறுத்துவதற்கு பதிலாக, தீயணைப்பு வாகனத்திற்கு அழைப்பது, ஆம்புலன்ஸ்க்கு அழைப்பது, மக்களை வெளியேற்றுவது போன்ற அவசர கால நடவடிக்கைகளை பொறுமையாக கையாண்டால், இழப்புகள் குறைவதோடு, சூழ்நிலை சீக்கிரத்தில் கட்டுப்பாட்டில் வரும்;
குடும்பத்தில் சில மனக்கசப்புகளினால், சண்டை பெரிதாகும். ஏட்டிக்குப்போட்டியாய் பேசிக் கொண்டிருக்காமல், சற்று அமைதிகாத்து, பின்னர் சமாதானம் செய்தால், உறவுகள் நீடிக்கும்; அவசரத்தில் வார்த்தைகளை விட்டால், உறவுகளில் பெரிய பிளவுகள் ஏற்பட்டுவிடக்கூடும்;
வாடிக்கையாளருக்கு, அவர் வாங்கிய பொருளில் பிரச்சனையென்றால் உடனே கத்தச் செய்வார். சிறிய பிரச்சனையைக்கூட பெரிதாக்குவார். அந்த சூழ்நிலைகளில் உணர்ச்சிவயப்படாமல், பொறுமையாக பதிலளித்து சேவை புரிந்தால், பெரிய பிரச்சனைகூட சிறிதாக முடிந்துபோகும்;
வேலைக்கான நேர்க்காணலில் உங்கள் உணர்வுகளை சோதிக்க கேள்விகளை கடுமையாக்குவார்கள். அங்கு அவசரத்தில் உணர்ச்சிவயப்பட்டால் பயனேதும் இருக்காது. அவர்களின் நோக்கத்தை புரிந்துகொண்டு அமைதியாக பதிலளிப்பது, உங்களுக்கான வேலையை உறுதிசெய்யும்;
பங்குச் சந்தையில் பெரிய சரிவு ஏற்படுவதுபோல செய்திகள் வரும். உடனே உங்கள் பங்குகள் எல்லாவற்றையிம் விற்றால் இழப்புதான் ஏற்படும். சூழ்நிலையை முழுவதுமாக புரிந்துகொண்டு, தற்காலிக மாற்றங்களை பொருட்பத்தாமல் நீண்டகால முதலீட்டுக்கொள்கைகளை மனதில் வைத்து, முடிவுகளை எடுத்தால், முதலீடுகள் பத்திரமாக இருக்கும்;
இப்படி ஆயிரமாயிரம் சூழ்நிலைகள் உங்களை அன்றாடம் உணர்ச்சிப் பெருக்கிற்கு தூண்டிவிடும். அவற்றிற்கு பழிகடா ஆகாமல், பொறுமைகாத்து, தீர்க்கமாக யோசித்து பதிலளித்தால், நிலைமை கைமீறாமல் கட்டுப்பாட்டில் இருக்கும்; எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் பொறுமையிழக்காமல் இருக்க
முதலில் உங்களை நீங்கள் முழுவதுமாய் புரிந்துகொள்ள வேண்டும்;
சூழ்நிலைகளை, காரண-காரியங்களை முழுவதுமாய் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்;
மற்றவர்கள் சொல்லவருவதை பூரணமாக கேட்டு பின் பதிலளிக்க வேண்டும்.
அனுமானங்களை குறைத்துக் கொண்டு, கள யதார்த்தத்தை முழுமையாக கேட்க வேண்டும்;
உங்கள் தரப்பு மட்டும் சரியென்று எண்ணாமல், எதிர்தரப்பு நியாயத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும்;
மன அழுத்தும், மன உளைச்சல் மிகுந்த தருணங்களில், சூழ்நிலையிலிருந்து சற்றுவிலகி, மனதை அமைதிப்படுத்திய பின் பதிலளிக்க வேண்டும்;
எல்லா தருணங்களிலும், வார்த்தை உபயோகங்களில் கவனமாக இருக்கவேண்டும்;
கோபத்தில் வார்த்தைகள் வரும் - பதிலளித்தால் வாக்குவாதமாகும்!
செய்யாத தவறுக்கு திட்டுவிழும் - நியாயப்படுத்த முயன்றால் சண்டைவரும்!
மடக்கி மடக்கி கேள்விகேட்டு குழப்புவார்கள்
பதிலளித்துக்கொண்டிருந்தால் தீரவே தீராது!
கேள்விக்கு பதிலளிப்பவர்கள் ஒருவிதம்!
கேள்விகளை பொருட்படுத்தாதவர்கள் ஒருவிதம்!
கேள்வியின் வேரை அறுப்பவர்கள் கடைசிவிதம்!
தவறை நியாயப்படுத்துபவர்கள் ஒரு வகை!
தவறென்று தெரிந்தே திரும்பச் செய்பவர்கள் ஒருவகை!
தவறை ஏற்று திருத்திக்கொள்பவர்கள் கடைசிவகை!
எதுவொன்றிற்கும் நீங்கள் பதிலளிக்கலாம்!
பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்!
வேண்டுமென்றே திரும்பச் செய்யலாம்!
நிரந்தரமான, ஏற்புடைய தீர்வைச் செய்யலாம்!
உணர்ச்சிவயப்பட்டு பழிக்குப்பழி எடுப்பதில் பயனில்லை!
உணர்வுகளை ஊக்கமாக்கி சாதிப்பதில்தான் உயர்வு இருக்கிறது!
- [ம.சு.கு 27.09.2023]
コメント