“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-351
உங்கள் குழுவின் திறன் வளர்ச்சி..!
இன்றைய தினம், தொழில்நுட்பத் துறையில் இருக்கும் எல்லா நிறுவனங்களும் மாதமொரு புதிய செயலி, தொழில்நுட்பம், என்று ஏதாவதொரு புதுமைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது செயற்கை நுண்ணறிவு அந்தவகையில் அதிவேகமாக ஆராயப்பட்டு, சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தனை மாற்றங்களை ஒரு முதலாளி மட்டும் தானே ஆராய்ச்சி செய்து கொண்டுவர முடியுமா? அப்படி கூகுள், ஆப்பிள் நிறுவன முதலாளிகள் மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்தால், இவ்வளவு புதுமைகள் உங்களுக்கு கிடைத்திருக்குமா?
புகைப்படச் சுருள் தயாரிப்பில் வெற்றிகண்ட கோடாக் நிறுவனம். தன் ஊழியர்களின் டிஜிட்டல் தொழில்நுட்ப முயற்சியை ஊக்குவிக்கவில்லை. அதனால் அந்த நிறுவனமே இன்று இல்லாமல் போனது. அப்படி உங்கள் ஊழியர்கள் புதியவற்றை ஆராய தயாராக இருக்கிறார்களா? அவர்களின் புதிய கற்றலுக்கும், ஆராய்ச்சிக்கும் உங்கள் நிறுவனம் என்ன ஊக்கம் அளிக்கிறது?
கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல், நம் ஊரில் இருக்கும் சிறிய உற்பத்திச் சாலைகள் வரை, எல்லா இடங்களிலும் ஊழியர்களின் கற்றல் & பயிற்சி இன்று அதிமுக்கியம் ஆகவிட்டது. இன்றைய போட்டி நிறைந்த உலகச்சந்தையில், நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், உங்கள் திறன்களை மட்டும் வளர்த்துக்கொண்டால் போதாது. உங்களுடைய நிறுவனத்தின் ஊழியர்கள் திறமைகளும் அதற்கு ஈடாக வளர்க்கப்பட வேண்டும்.
சந்தையில் ஏற்படும் எல்லா சவால்களையும் சந்தித்து சமாளிக்க, புதுமைகளுக்கும், முற்றிலுமான மாற்றத்திற்கும் தங்களை தயார் படுத்திக்கொள்ள, உங்கள் ஊழியர்களும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அது நூல் வாசிப்பாக இருக்கலாம், பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதாக இருக்கலாம், புதிய முயற்சிகளை நிறுவனத்தில் செய்வதாக இருக்கலாம், முறைமை எதுவானாலும், அவர்கள் புதியவற்றை கற்கிறார்களா? தங்களின் அறிவை பட்டை தீட்டுகிறார்களா? என்பதுதான் இங்கு முக்கியம்.
உங்கள் நிறுவனத்தின் எல்லா ஊழியர்களும், அவரவர் தனிப்பட்ட திறன்களை தொடர்ந்து வளர்க்க, நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்;
குழுவின் தலைவராக, நிறுவனத்தின் முதலாளியாக, முதற்கண் நீங்கள் புதியவற்றை கற்பதற்கும், மாற்றங்களை செய்வதற்கும் தயங்காதவராக, சிறந்த முன்னுதாரணமாக இருக்கவேண்டும்;
உங்கள ஊழியர்களிடமிருந்து உங்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்;
உங்கள் குழுவினர் படிக்க, தேவையான எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்;
ஊழியர்கள், தானாக முன்வந்து ஆர்வமுடன் கற்கும் வகையில், அவர்களை ஊக்குவிக்க வேண்டும்;
ஊழியர்களின் புதிய கற்றல், பயிற்சி, முயற்சிகள் குறித்த பின்னூட்டமும், ஆய்வும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்; அவர்களின் கற்றல் முயற்சி எந்தளவு இருக்கிறதென்று நீங்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்க வேண்டும்;
ஊழியர்களுக்குள் உறவு மேம்பாடு, ஒருவருக்கொருவர் உதவுதல், கூட்டு முயற்சி, கற்றுக்கொடுத்தல், வெளிப்படையான கருத்துப் பகிர்வு, போன்றவற்றை எல்லாவகையிலும் ஊக்குவிக்க வேண்டும்;
புதிய முயற்சிகள் மேற்கொள்பவர்களை ஊக்குவிப்பதோடு, சில தோல்விகள் நேரும் பட்சத்தில், அவர்களுக்கு துணையாக இருந்து, நம்பிக்கை இழக்காமல் வழிநடத்த வேண்டும்;
ஊழியர்கள் கற்பதற்கும், புதிய முயற்சிகள் மேற்கொள்ளவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால், அது அவர்கள் தவறாமல் செய்வதற்கு ஏற்றதொரு வழிமுறையாக இருக்கும்;
ஊழியர்களின் கற்றல் முயிற்சி, அறிவுத்தேடல் ஆளுக்கு ஆள் மாறுபடும். நபர்களுக்கு ஏற்ப, அவர்களை வழிநடத்துவதில் ஒவ்வொரு மேலாளரும் கவனமாக இருக்கவேண்டும்;
இந்த தொடர் கற்றலை உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரமாக்கினால்
போட்டி நிறைந்த சந்தையில், எதிர்வரும் புதிய சவாலை சந்திக்க உங்கள் நிறுவனம் எல்லா நேரங்களிலும் தயார் நிலையில் இருக்கும்;
மாற்றங்களை வரவேற்று செயல்படுத்தும் உத்வேகம் நிறுவனத்தினுள் நிரந்தரமாக இருக்கும்;
உங்கள் ஊழியர்களே மாற்றத்தின் முன்னோடிகளாக இருப்பார்கள்;
ஊழியர்களின் பங்களிப்பில், உற்பத்திப்பெருக்கமானது, சந்தை சராசரிகளை கடந்து உச்சத்தை தொடும் வாய்ப்புகள் அதிகம்;
ஊழியர்கள் அடுத்தடுத்து நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்று நடத்த தயாராகிக் கொண்டே இருப்பார்கள். நிறுவனத்தின் விரிவாக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, ஊழியர்கள் ஆர்வமுடன், காத்திருப்பார்கள்;
வெற்றியை நோக்கிய பயனத்தில், நீங்கள் ஒருவர் மட்டுமே வெற்றிபெற வேண்டுமென்று தவறாக கணக்கு போட்டுவிடாதீர்கள். யாரும் தனிமனிதனாக பெரிய வெற்றி பெற்றுவிட முடியாது. எல்லா பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களும், எண்ணற்றவர்களின் பங்களிப்பில் உறுவானதுதான். உடனிருப்பவர்கள் முதலாளிகலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு ஊழியராக, ஒரு தனிநபராக அவரது தனிப்பட்ட திறன்மேம்பாடு, அவருக்கு மனநிறைவை ஏற்படுத்தும். அவர்களின் மனநிறைவு, அவர்கள் உங்களோடு நீண்டகாலம் பயனிக்க வழி ஏற்படுத்தும்.
ஒரு நம்பிக்கையான குழு
திறமையான குழு
மாற்றங்களுக்கும் வரவேற்கும் குழு
உங்களோடு பயனித்தால்,
இந்த உலகத்தில் சாதிக்க முடியாததென்று எதுவும் இல்லை!
ஏற்கனவே பழக்கத்தில் உள்ளதை செய்வதானால்
சிறிய வெற்றியோடு காலம் கழிக்க வேண்டியதுதான்;
புதியவற்றை கற்பவர்கள், புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள்
மட்டுமே சரித்திரங்களை படைக்கிறார்கள்.
நீங்கள் மட்டும் தனிநபராக போராடாமல்
அந்த புதுமைகளுக்கு உங்கள் குழுவும் சேர்ந்து தயாரானால்
உங்கள் வெற்றி வாய்ப்பு மேலும் பிரகாசமாகும்!
பூமியின் சூழற்சி வேகம் மாறவில்லை – ஆனால்
உள்ளிருக்கும் எல்லாமே வேகமாக மாறிவருகிறது!
தொழில் நுட்பம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது!
தொழில் நுட்ப மாற்றங்களுக்கு
நீங்களும், உங்கள் நிறுவனமும் தயாராக இருக்க வேண்டுமானால்
ஊழியர்களின் தொடர் கற்றலையும், திறன்மேம்பாட்டையும்
கட்டாயமாக்கி மாற்றத்திற்கு தயாராக வைத்திருங்கள்!
- [ம.சு.கு 25.09.2023]
Comments