top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 350 - நிறுவனத்தின் ஆதரவு கட்டமைப்பு...!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-350

நிறுவனத்தின் ஆதரவு கட்டமைப்பு...!


  • எங்கள் ஊரில் மின்மோட்டார் தயாரிக்கும் நிறைய நிறுவனங்கள் உண்டு. 40-50 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பைத் துவங்கிய பலநூறு சிறு நிறுவனங்களில், 4-5 மட்டும் பெரிதாய் வளர்ந்துவிட்டன. 40-50 நிறுவனங்கள் இன்றும் சிறிய அளவிலேயே இருக்கின்றன. ஏனையவை நஷ்டத்தில் மூடப்பட்டுவிட்டன. எல்லோருமே சிறியளவில் சிறப்பாகத்தான் துவங்கினார்கள். ஆனால் ஏனோ எல்லோராலும் வளரமுடியவில்லை. ஏன்?

  • ஒரு நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் துறையில் திறமைவாய்ந்த மேலாளர் இருந்தார். அவர் பல பெரிய வாடிக்கையாளர்களிடம் பேசி நிறைய வர்த்தகங்களை கொண்டுவந்தார். ஆனால் அவர் 7-8 மாதங்களிலேயே வேலையை இராஜினாமா செய்வதாக முதலாளியிடம் சொன்னார். ஏன் என்று கேட்டபோது, என்னால் வாடிக்கையாளர்களிடம் பேசி நிறைய வர்த்தகங்களை கொண்டுவர முடியும். ஆனால் தரமான பொருட்களை, குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தி செய்துகொடுக்க இங்கே போதுமான கட்டமைப்பும், திறமையான ஊழயர்களும் இல்லை. அதனால் என் உழைப்பு வீணாவதோடு, எனக்கும் வாடிக்கையாளர் மத்தியில் கெட்டபெயர் வருகிறதென்று சொன்னால். இப்படி வர்த்தக வாய்ப்பிருந்து, உங்களால் சரியான நேரத்தில், தரமான பொருட்களை உற்பத்தி செய்துகொடுக்கமுடியாம் திணிறியிருக்கிறீர்களா?

எல்லா நிறுவனங்களும் சிறியளவில் தான் முதலில் ஆரம்பிக்கப்படுகின்றன. அவற்றை வளர்க்க முதலாளிகள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் வளர்ச்சியின் அளவு நிர்ணயமாகிறது. உற்பத்தியையும், சந்தைப்படுத்துதலையும் படிப்படியாக கவனித்து வளர்க்கும் நிறுவனங்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகின்றன. இரண்டு ஒருசேர செய்யமுடியாதவர்கள் திணறி தோற்கின்றனர்.


ஒரு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அடிப்படை படிநிலைகள் என்னென்ன?

  • முதற்கட்டம் ஒரு பொருள் தயாரிப்பும், சந்தைப்படுத்துதலும் சரியாக செய்யப்பட வேண்டும்

  • அதன் தயாரிப்பு முறைகளை சீர்படுத்தி, தர நிர்ணயங்களை வகுத்து ஒரு சிறுகுழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதேவண்ணம் சந்தைப்படுத்தல் முறைகளை நிர்ணயித்து, ஒழுங்குபடுத்தி, அதை ஒரு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • அனுதினமும், ஏற்படுத்தியுள்ள முறைகள் சரியாக இயங்குகின்றனவா? தரக்கட்டுப்பாடுகள் சரியாக இயங்குகிறதா? வாடிக்கையாளர் சேவைக்கான முக்கியத்துவம் போதுமானதாக இருக்கிறதா? என்று அறிக்கை வாயிலாகவும், நேரடி கண்காணிப்பிலும் கவனித்துகொண்டிருக்க வேண்டும்;

  • அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, என்ன பொருளை தயாரிப்பது, எந்த புதிய சந்தையில் நுழைவதென்று ஆராய்ந்து வேலையை துவக்க வேண்டும்.

  • புதிய பொருள், புதிய சந்தையில் மேற்கூறிய படிநிலைகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி, அதை ஸ்திரப்படுத்தி, செயல்பாடுகளை கண்காணித்துக் கொண்டு, அடுத்த புதிய சந்தையை எடுக்கலாம்;

இப்படித்தான் எல்லா பெரும் வர்த்தக சாம்ராஜ்யங்களும் வளர்ந்துள்ளன. அவர்கள் யாரும் ஒரே சமயத்தில் எல்லாவற்றிலும் குதித்துவிடவில்லை. ஒரு துறையை, ஒரு பொருளை, ஒரு சந்தையை கையிலெடுத்து திறம்பட கட்டமைத்தார்கள். அதை கண்ணுக்கருத்துமாக இயக்குவதற்கான குழுவை தயார் செய்தார்கள். அவற்றை நிர்வகிக்க திறமையான மேலாளர்களை நியமித்தார்கள். அவர்களின் செயல்களையும், வியாபார மாற்றங்களையும் தொடர்ந்து கண்காணித்தார்கள். தேவைப்படும் இடங்களில் / சமயங்களில் உரிய ஆலோசனை வழங்கி பிரச்சனைகளை தீர்த்து வழிநடத்தினர். ஒன்றை ஸ்திரப்படுத்திவிட்டு அடுத்த புதிய சவாலுக்கு தயாரானார்கள்.


ஒவ்வொரு தொழில்முனைவோரும், கடுமையான உழைப்பின்மூலம் ஒரு புதிய பொருளை உருவாக்கி சந்தை படுத்துகிறார்கள். அவற்றை பலர் திறம்பட சந்தைப்படுத்தி சிறியளவில் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் அவர்களில் வெகுசிலர் மட்டுமே அவற்றை பெரியளவில் கொண்டு செல்கிறார்கள். ஏனையவர்கள் அதே சிறியளவில் நின்றுவிடுகின்றனர் அல்லது பெரிதாக்கும் முயற்சியில் தோற்று, இருப்பதையும் இழந்துவிடுகின்றனர். ஏன் ஆர்வமும், உழைப்பும் இருக்கும் தொழில்முனைவோரால், தன் தொழிலை பெரிய அளவில் கொண்டுசெல்ல முடிவதில்லை?

  • தன் வியாபாரத்தை பெரிய அளவில் கொண்டுசெல்ல அடிப்படையாக ஒரு ஆதரவு ஊழியர் குழுவை நிறுவனத்திற்குள் அவர்களால் கட்டமைக்க முடியாமல் போவது ஒரு முக்கிய காரணம்;

  • வியாபார சந்தையில், எண்ணற்ற போட்டிகளுக்கு நடுவே, புதிய தொடர்புகளை ஏற்படுத்தி / வலுப்படுத்தி, வெளியில் அவர்களால் ஆதரவு வட்டத்தை உருவாக்க முடியாமல் இருப்பது அடுத்த முக்கிய காரணமாகிறது;

தான் ஒருவன் மட்டுமே ஓடி சாதித்துவிடுவேன் என்று ஆரம்பத்தில் நம்பிவிடுகிறார்கள். சிறியளவில் இருக்கும்போது, அது சாத்தியமாகிறது. ஆனால் அவற்றை பெரிதாக்க, அவருக்கு அவரைப்போல ஆர்வமுள்ள பலபேர் தேவைப்படுகிறார்கள். ஆரம்பத்தில் தேடாமல் விட்டதால், பின்னர் கிடைப்பது கடினமாகிறது. ஒரு நம்பிக்கையான கூட்டம் கிடைக்காவிட்டால், எந்தவொரு பெரிய வெற்றியும் சாத்தியமில்லை. எல்லா தொழில்முனைவோரும் கோட்டைவிடும் முக்கியமான இடம் இதுதான். அவர்கள் அதீத திறமைபடைத்தவர்களாக இருந்தாலும், அவருக்கு பக்கபலமாக இருக்க ஊழியர் குழுவும், முதலீட்டாளர்கள் குழுவும் இல்லாவிட்டால், பெரிய வெற்றி சாத்தியமில்லாமலே போய்விடுகிறது.


ஒரு வியாபார சாம்ராஜ்யத்தை கட்டமைக்க

  • முதலில் சமுதாயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்லதொரு பொருள் தேவை

  • அந்த பொருளை பெரிய அளவில் வாங்கக்கூடிய சந்தை தேவை

  • அதை தரமாக தொடர்ந்து உற்பத்தி செய்ய ஒரு நிறுவனக் கட்டமைப்பும்.

  • அந்த கட்டமைப்பை சிறந்த முறையில் நிர்வகிக்க ஒரு நம்பிக்கையான கூட்டம் தேவை

ஒரு நம்பிக்கையான ஆதரவு கட்டமைப்பை உங்கள் நிறுவனத்தில் உங்களால் நிறுவ முடிந்தால், உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது. இதை ஏற்படுத்தும் முயற்சியில்தான் பலரும் தோற்றுவிடுகின்றனர். நம்பிக்கையான தொழிலாளர்களை தேடிப்பிடிக்க முடியாமல், தங்கள் தம்பி, மாமன், மைத்துனர் என்று உறவுகளை அமர்த்துகின்றனர். திறமையில்லாதவர்களை நம்பிவிடும்போது நிறுவனத்தின் வளர்ச்சி வெகுவாக பாதித்துவிடுகிறது. உங்களிடம் திறமை இருப்பது மட்டும் போதாது. உங்கள் நிறுவனத்தை பெரிய அளவில் வளர்க்க, உங்களுக்கு உறுதணையாக பெரிய அதரவு கட்டமைப்பை நிறுவனத்தின் உள்ளும், புறமும் ஏற்படுத்த வேண்டும்.


நீங்கள் எவ்வளவு பெரிய திட்டத்தை கையிலெடுத்தாலும், சேர்ந்து சாதிக்கலாம் என்கிற நம்பிக்கையுடைய கூட்டம் உங்களோடு இருந்தால், எல்லா சவால்களையும் முறியடித்து வெற்றிகாணலாம். இப்போது உங்களிடம் அப்படியானதொரு ஆதரவு கட்டமைப்பு இருக்கிறதா? ஒருவேலை இல்லாவிட்டால், இன்றிலிருந்து அந்த கட்டமைப்பை ஏற்படுத்த துவங்குங்கள்;


நீங்கள் ஒருவராக ஒரு தொழிலை நிர்வகிக்கலாம்

ஒரு சந்தைக்கு கொண்டு சென்று விற்கலாம்

பலநூறு பொருட்களை கையாள்வதற்கும்

பலநூறு சந்தைகளில் விற்பதற்கும்

உங்கள் ஒருவரால் முடியுமா?


நீங்கள் பெரிதாய் செய்யவேண்டுமானால்

அதை உங்களுக்காக செய்துதர ஒரு

நம்பிகையான ஆதரவுக்கூட்டம் இருக்கவேண்டும்;

ஊழியர்களாகவும், நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்,

அந்த பெருங்கூட்டமாக உங்களிடம் இருக்கவேண்டும்;


உங்களுக்கான ஆதரவு கூட்டம் எவ்வளவு பெரிதோ

அந்த கூட்டத்தை எவ்வளவு திறம்பட உங்களால் நிர்வகிக்கமுடிகிறதோ

உங்கள் வெற்றியின் அளவு அதற்கிணையாய் பெரிதாக இருக்கும்!

பெரிய வெற்றிக்கு தேவையான ஆதரவு கட்டமைப்பை

இன்றிலிருந்து அமைக்கத் துவங்குங்கள்!


- [ம.சு.கு 24.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page