“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-349
உடல் மொழியின் தாக்கம்..!
உங்கள் பிள்ளை பள்ளியில் இருந்து வந்ததும், பள்ளியில் என்னென்ன நடந்ததென்று சொல்லும். அதேசமயம் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கும். உங்கள் பிள்ளை எப்படி பதில் சொல்கிறது, உங்கள் கண்களை பார்த்து பேசுகிறதா, உடல் அசைவுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்து, பிள்ளை உண்மையை சொல்கிறதா? இல்லையா? என்று நீங்கள் யூகித்து விடுவீர்கள். குழந்தை அமைதியாக இருந்தாலோ, சம்மந்தமில்லாமல் பேசினாலோ, தயக்கம் தென்பாட்டாலோ, ஏதோ பிரச்சனையில் சிக்கியுள்ளதை உணர்வீர்கள். இப்படி உங்களால் எந்த அளவிற்கு உங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்களின் உடல் மொழிகளை புரிந்துகொள்ள முடிகிறது?
ஒரு கூட்டத்தில் இருக்கும்போது, பெண்ணின் கண் அசைவில், பிள்ளைகளும், கனவனும் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ப நடக்கிறார்கள். அலுவலகத்தில் மேலாளரின் முகபாவனைகளைப் பார்த்து, அவ்விடத்தில் இருப்பதா? போவதா? பேசவேண்டுமா? பேசக்கூடாதா? செய்யவேண்டுமா? கூடாதா? என்று ஊழியர்கள் உணருகிறார்கள். யார்-யாரைப் பார்த்து பேசுகிறார்கள், யார் நேருக்குநேர் பார்ப்பதை தவிர்க்கிறார்கள், பேச்சில் என்ன நடுக்கம், பேசும்போது ஏன் வியர்க்கிறது, ஏன் கைகளை பிசைந்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு அசைவிலும் எதிரில் பேசுபவரின் பேச்சைக் கடந்து அவரது எண்ணத்தை கணிக்க முடியும். அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் இந்த உடல் அசைவுகளை தங்களுக்கு சாதகமாக்கி, தாங்கள் சொல்ல விரும்பியதை எளிதாக மற்றவர்களின் எண்ணங்களுக்கு கொண்டு சேர்த்துவிடுகிறார்கள்.
உங்களுக்கு நன்றாக பழக்கப்பட்டவர்கள், அவர்களின் அன்றாட செயல்களை கூர்ந்து கவனித்தவர்களுக்கு, அவர்களுள் ஏற்படும் சிறு உடல்அசைவு மாற்றத்தையும் கண்டுகொள்ள முடியும். அனுபவம் வாய்ந்தவர்கள், அதற்கான காரணங்களையும் எளிதில் கணித்து விடுவார்கள்.
பொதுவாக வார்த்தைகளாக எல்லாவற்றையும் கூறினாலும், ஒவ்வொரு தருணத்திலும் நம் உடல் அசைவுகள் பலவிதமான செய்திகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும்.
முகபாவனைகள் [கண் / வாய் / மூக்கு / புருவத்தின் அசைவுகள்]
தலை அசைவுகள்
கையசைவுகள்
குரல் ஏற்றத் தாழ்வுகள்
நின்ற நிலை / உட்கார்ந்த நிலை
கால் அசைவுகள்
வியர்த்தல் / உடல் நடுக்கம்
இந்த 7-8 அங்கங்களின் ஒவ்வொரு விதமான அசைவில் மனிதர்கள் பல்லாயிரம் விதமான தகவல்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். முன்கூட்டிய திட்டமிட்டு சைகை தகவல் பரிமாறும்போது, அது ஒரு மொழியாக மாறிவிடுகிறது. அதேசமயம், நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவற்றின் இடையே நீங்கள் தெரிந்தோ-தெரியாமலோ ஏற்படுத்தும் உடல் அசைவுகள், நீங்கள் சொல்லும் கருத்துக்களை உங்களுக்குள் எப்படி கையாள்கிறீர்கள் என்பது தெரியவரும்.
உங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துக்களை மற்றவர்களை செய்யச் சொல்லும்போது, உங்கள் உடலில், முகத்தில் உறுதி இருக்காது.
உங்களுக்கு பிடித்தமானவற்றை பேசும்போது, உங்கள் பேச்சில் நம்பிக்கையும், அழுத்தமும், புன்னகையும், கையசைவுகளும் ஆணித்தரமாக இருக்கும்;
நீங்கள் யாரைப்பார்த்து பேசுகிறீர்கள், கண்களை நேருக்குநேர் பார்க்கிறீர்களா? என்ன தொனியில் பேசுகிறீர்கள் என்பதைப் பொருத்து உங்கள் பேச்சின் நம்பகத்தன்மை கணிக்கப்படும்;
உங்கள் வார்த்தைகளைக் கடந்து, உங்கள் முகபாவனைகள், கையசைவுகள், உடல் அசைவுகளைப் பொறுத்து உங்கள் பேச்சின் தாக்கம் மாற்றவர்களிடம் சென்று சேரும். யாரொருவர், பேசும் வார்த்தைகளுடன், தன் உடல் அசைவுகளிலும் கவனமாக இருந்து ஆணித்தரமாக தகவலை அடுத்தவர் எண்ணங்களுக்கு கொண்டு சேர்க்கிறாரோ, அவரால், எதிரில் இருப்பவர்களை எளிதாக ஈர்த்து வயப்படுத்த முடியும்.
உங்கள் பேச்சைக் கடந்து, உடல் மொழியில் மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன?
கூடியவரை நேருக்குநேர் கண்களை பார்த்துப் பேச வேண்டும்;
புன்னகை, பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே களைந்துவிடும். எல்லா விடயங்களிலும், உங்கள் முகபாவனைகளில் கவனமாக இருக்க வேண்டும்;
உங்கள் கையசைவுகள், உங்கள் கருத்தை முற்றிலும் வலியுறுத்தும் விதத்தில் அமைக்க வேண்டும்;
எங்கு, யாரிடம், என்ன பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உட்கார்ந்து பேசுவதா? நின்று பேசுவதா? என்று நீங்கள் தெளிவுற தீர்மாணிக்கவேண்டும்;
ஒருவரிடம் எவ்வளவு தூரத்தில் நின்று பேசவேண்டும்? தொட்டுப் பேச வேண்டுமா-வேண்டாமா? என்று நபரைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும்;
பேச்சில் ஏற்ற-இறக்கங்கள் எப்படி இருக்கவேண்டும், எதை நிறுத்தி நிதானமாக சொல்ல வேண்டும், எதை வேகமாக சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டு பேசவேண்டும்;
எதிரிலிருப்பவர் எந்த எண்ணவோட்டத்தில் இருக்கிறார், அவரது உடல் அசைவுகள் எப்படி என்பதை புரிந்துணர்ந்து, அதற்கேற்ப உங்கள் பேச்சும், உடல் மொழியும் இருக்க வேண்டும்;
உங்கள் பேச்சைக் கடந்து, நீங்கள் இரண்டு விடயங்களில் கவனமாக இருக்கவேண்டும்
மற்றவர்கள் சார்ந்துள்ள சமுதாயம், அவர்களின் பழக்கவழக்கம், பேச்சுமுறை, அவர்களின் அறிவுநிலை, அவர்களின் இன்றைய மனநிலை, அவர்களின் உடல் அசைவுகள் என்று எல்லாவற்றையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்;
நீங்கள் பேசும்போது, உங்கள் உடல் அசைவுக் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்;
உங்கள் பேச்சு பலமானதாக இருக்க வேண்டுமானால், உங்கள் உடல்மொழி அதை ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டும். அதற்கு, நீங்கள் பேசும்போது, உங்கள் செய்கைகள் எப்படி இருக்கிறதென்பதை கவனித்து உரிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள்! வெற்றி நிச்சயம்!
வார்த்தைக்ள பாதி, செய்கைகள் பாதி
இதுதான் தேருக்குநேரான தகவல் பரிமாற்றத்தின்
எழுதப்படாத விதி!
யார் உண்மை பேசுகிறார், யார் சொல்வது பொய்!
யார் தைரியசாலி, யார் பயந்து போயிருக்கிறார்!
யார் மகிழ்ச்சியாக இருக்கிறார், யார் வேதனைப்படுகிறார்!
இவையனைத்தையும் உங்கள் வார்த்தைகளைக் காட்டிலும்
உங்கள் உடல் மொழி தெளிவாக மற்றவர்களுக்கு காட்டிவிடும்!
உங்கள் பேச்சுக்கும், உடல் அசைவுக்கும் சம்மந்தமில்லாவிட்டால்
அவை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பயனற்றுப்போகும்!
உங்கள் வார்த்தைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவேண்டுமானால்
உங்கள் உடல்அசைவுகள் அதற்கு ஆணித்தரமாக வலுசேர்க்க வேண்டும்!
பேசும் மொழியோடு, உடல் அசைவுகளிலும் கவனம் செலுத்துங்கள்!
சொல்வதை எல்லாவிதத்திலும் ஆணித்தராமக சொல்லுங்கள்!
- [ம.சு.கு 23.09.2023]
Comentários