top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 348 - தியானம் எவ்வளவு அவசியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-348

தியானம் எவ்வளவு அவசியம்...!


  • இந்தியாவைக் கடந்து உலகம் முழுவதும் வெற்றியாளர்கள் மத்தியில் பொதுவாய் காணப்படும் ஒரு முக்கிய குணாதிசயம் “மன ஒருநிலைப்படுதல்” என்ற நிலை. அதற்கு நாம் தியானம் என்று இங்கு சொல்கிறோம். வெவ்வேறு மொழிகளில், கலாச்சாரங்களில் அதற்கு வெவ்வேறு பெயர்கள். ஆனால் வெற்றியை நோக்கிய பயனத்தில் எல்லோருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய விடயம், மனஉளைச்சல், மனஅழுத்தம், வேலைப்பழு என்று எல்லாவற்றையும் “மன அமைதியும்”, “மனதின் ஒருநிலைப்பாடும்”. இதற்கான ஒரே வழி, அமைதியாய் சில நிமிடங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது மட்டுமே. இன்று உலகின் முதல் தலைமுறை பணக்காரர்களாய் வளர்ந்து நிற்கும் வாரன் பவ்வட், பில் கேட்ஸ் முதற்கொண்டு எண்ணற்ற வெற்றியாளர்களை, தலைமைப் பொருப்பில் இருப்பவர்கள், தங்களை எப்போதும் விழிப்புநிலையில் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் முக்கியமான முறை “தியானம்”;

  • வழக்கமாக மூச்சுப்பயிற்சியும், தியானமும் செய்துவந்த ஒரு நிறுவன அதிகாரி, ஏதோ முக்கிய திட்டச் செயல்பாட்டில் ஈடுபட்டு, அதிக நேரம் அலுவலகத்தில் செலவிட்டதால், சரியான உறக்கம் இருக்கவில்லை. அவரது வழக்கமான தியான பயிறச்களையும் செய்யவில்லை. அதனால் பெரிதாய் எந்தவொரு பாதிப்பையும் ஆரம்பத்தில் உணரவில்லை. நாட்கள் போகப்போக உறக்கக்குறைபாடு உடல் நிலையை பாதித்தது. மருத்துவர்கள் மாத்திரைகளின் மூலம் உறக்கத்தை கட்டாயமாக்கி உடலை தேற்றினர். ஆனால் அவரது மனஅழுத்தமும், உளைச்சலும் குறையாமல் தினம் தினம் அதிகரித்தது. கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தூக்கியெரிந்துவிட்டு போய்விட வேண்டுமென்ற உச்சகட்ட விரக்திக்கு தள்ளப்பட்டார். பின் தன் குருவின் ஆலோசனைப்படி மீண்டும் தியானப் பயிற்சியை துவங்கியவர், படிப்படியாய் கவனமாக மனஅழுத்தம் தரும் செயல்களை பக்குவமாக கையாண்டார். பொறுமையை முதலிலேயே அவர் கடைபிடித்திருக்கலாம், இதற்கு தியானம் ஒன்றும் தேவையில்லை என்று நீங்கள் வாதிடலாம்? ஆனால் நடைமுறையில் மனஅமைதியையும், ஒருநிலைப்பாட்டையும், பொறுமையையும் வளர்க்க தியானம் தவிர்த்து, வேறென்ன வழியிருக்கிறதென்று நீங்களே யோசியுங்கள்!

மனதை ஒரு நிலைப்படுத்தினால் தான், கவனச் சிதறல் இல்லாமல், எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஒவ்வொரு நாளும் செயல்களை சிறப்பாக செய்வதைப் பொறுத்துத்தான், ஒவ்வொருவரின் வெற்றி வாய்ப்புக்கள் பிரகாசமாகின்றன. ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் நமக்கே பல மனஅழுத்தங்கள் வரும்போது, பல கோடிகளை சம்பாதிக்க நூற்றுக்கணக்கானவர்களை வைத்து வேலைவாங்கி சமாளிக்கும் முதலாளிகுக்கு எத்தனை மனஉளைச்சல் இருக்கும். நாம் அவசரத்தில் தவறாக முடிவெடுத்தால் நஷ்டம் சிறிய அளவுதான். அதேசமயம், பெரிய மேலாளர்கள், முதலாளிகள் தவறாக முடிவெடுத்தால் பெரிய நிறுவனமே சீரழிவதோடு அதைச் சார்ந்த எத்தனை நபர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகும். அப்படி தவறான முடிவுகள் எடுக்கப்படாமல் இருக்க, கூடியவரை அவர்கள் மனஅழுத்தத்தையும், உளைச்சலையும் சாமர்த்தியமாக கையாண்டால் மட்டுமே முடியும். அதற்கு அவர்கள் அந்த சூழ்நிலையிலிருந்து வெளிவந்து அவற்றை மூன்றாம் நபரின் கண்ணோட்டத்தில் அவ்வப்போது பார்த்தால் மட்டுமே சாத்தியப்படும். அன்றாட அதிவேக வாழ்க்கை முறையில் எனக்குத் தெரிந்தவரை, இந்த அழுத்தம், உளைச்சலை சமாளிப்பதற்கான ஒரே முறை “தியானம்” & “மூச்சுப்பயிற்சி”.


உடலை வழுப்படுத்த தினமும் உடற்பயிற்சி செய்வதுபோல, அன்றாடம் ஒவ்வொருவரும் தங்களின் மனதிற்கும் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இந்த மனதிற்கான பயிற்சி, அவர்களின் எல்லாவிதமான மன அழுத்தங்களையும், உளைச்சலையும் சமாளிக்க பேருதவியாய் இருக்கும். இந்த மனதிற்கான அன்றாட பயிற்சியை செய்யாததால், மனஅழுத்தம் குறையாமல், படிப்படியாய் உடல்நிலை பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த சில பெரிய நிர்வாக அதிகாரிகளின் திடீர் மாரடைப்பு மரணங்கள். இந்த மனஅழுத்தத்தையும், உளைச்சலையுமே சுட்டிக்காட்டியிருக்கிறது. அதிலும் ஆரோக்கியத்தில் கவனமாய் தினம் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்த இவர்களுக்கு மாரடைப்பு என்பது எல்லோருக்கும் பேரதிர்ச்சி. உடல்நிலையைப் பற்றி வெளியாட்கள் கவனிக்கலாம். ஆனால் மனநிலை எப்படி இருக்கிறதென்று அவரவருக்கு மட்டும்தானே தெரியும்!


அன்றாட மன ஒருநிலைப்படுதலுக்கான பயிற்சியை செய்பவர்கள், செய்யாதவர்கள் மத்தியில் என்னென்ன வேறுபாடுகள் காணப்படுகின்றன?

  • தியானப் பயிற்சி, அன்றாட மனஅழுத்தத்தையும், உளைச்சலையும் சாமர்த்தியமாய் கையாளும் பக்குவத்தை தருகிறது. மனஅமைதி இல்லாதவர்களுக்கு இந்த அழுத்தம் கவனச் சிதறலை ஏற்படுத்துவதுடன், அதிகமாக உணர்ச்சிவயப்பட வைக்கிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் போகலாம்!

  • மனஅமைதி, கையிலிருக்கும் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வழிவகுக்கிறது. முக்கியமில்லாதவற்றை தவிர்க்கவும், நேரப் பயன்பாட்டை மேம்படுத்தவும், தியானம் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கிறது;

  • மனஅமைதி, செயல்களை உள்ளிருந்து பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து விடுபட்டு, வெளியிலிருந்து பார்க்கின்ற கண்ணோட்டத்தை அதிகரிக்கிறது. அது பல புதுமைகளை படைக்க வாய்ப்பாகிறது;

  • தியானம், உணர்வுசார் நுண்ணறிவை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுகிறது;

  • யதார்த்தங்களை கணிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் மனஅமைதி வழிகாட்டுகிறது. உணர்ச்சிவயப்-படாமல் அமைதியாக பேசுவதற்கும், மற்றவர்களின் செயல்களை கவனிப்பதற்கும், நடந்து முடிந்தவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் ஏற்றுக்கொள்ளவும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், மனஅமைதியும், தியானமும் சிறந்த துவக்கப்புள்ளியாகிறது.

மேலே சொன்ன பயன்கள் ஒரு சிறு பட்டியல்தான். தியானத்தின், மன அமைதியின் பயன்களை வார்த்தைகளில் விளக்குவதைவிட, அவரவர் அனுபவத்தில் கண்டுணர்வது மட்டுமே சரியான ஒன்று. ஒரு பெரிய வெற்றியாளராக உருவெடுக்க உங்களுக்கு ஆசையிருந்தால், எண்ணற்ற கட்டங்களை, சிக்கல்களை, மன அழுத்தங்களை நீங்கள் கடக்கத் தயாராக இருக்கவேண்டும். அந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலகிவிடாமல் இருக்க, உங்கள் மனதை அனுதினமும் தயார்படுத்தவேண்டும். அதற்கு, தினமும் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானப் பயிற்சிகள் உங்களுக்கு பேருதவியாய் இருக்கும்!


தியானமும், யோகமும் பழைமையென்று எண்ணிவிடாதிர்கள்

அவை பழமைக்கு பழமை – புதுமைக்கு புதுமை!


மனஅமைதி, மன ஒருநிலைப்பாடு என்பது

காலம் சார்ந்த விடயமல்ல;

மதம், இனம், மொழி சார்ந்த விடயமல்ல;

அவை மனதிற்கான அன்றாட பயிற்சி மட்டுமே

உடலைப் பேணுவதுபோல மனதையும் பேணுதல்

இன்றைய அவசர உலகின் அத்தியாவசியமாகிவிட்டது;


மனஅழுத்தம், உளைச்சல், அமைதியின்மையை தவிர்க்க

மாத்திரைகள் பக்கம் போவதைவிட

அன்றாட தியானமும், மூச்சுப்பயிற்சியும் – உங்களுக்கு

சிறந்த வழிகாட்டியாக இருக்குமென்று நான் நம்புகிறேன்!


உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும்,

சோதனைமுயற்சியாக ஓரிரு மாதங்கள்

கவனமாக தியானத்தை முயற்சித்துப்பாருங்களேன்!


- [ம.சு.கு 22.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page