top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 347 - வெளிப்படைத் தன்மை அதிகரிக்கட்டும்...!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-347

வெளிப்படைத் தன்மை அதிகரிக்கட்டும்....!


  • ஒரு நிறுவனம், தன்னுடைய பொருட்களை எங்கு, யாரிடம் வாங்குகிறது என்று தெளிவுபட அறிவிக்கிறது. அந்த பொருட்களுக்கான அடிப்படை தர நிர்ணயங்களை, அவற்றிற்கான கால அளவுகளை பொதுமக்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறது. இந்த தரக்கட்டுப்பாடுகளுடன் இயங்கும்போது, நிறுவனத்தின் செலவு சற்று அதிகமாகி, பொருட்களின் விலை மற்ற போட்டியாளர்களை விட 5%-10% அதிகமாகவே இருக்கிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், அந்த நிறுவனம் தனக்கென தனியொரு முத்திரை பதித்து “ஹோல் புட்ஸ் மார்க்கெட்” என்ற பெயரில் அமெரிக்கா முழுதும் வெற்றிகரமாக இயங்குகிறது.

  • ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி மிகவும் கோபக்காரர். தன் நிறுவன மேலாளர்கள், ஊழியர்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் எதையும் அவ்வளவாக பொருட்படுத்தமாட்டார். அவர் எப்போது என்ன முடிவெடுப்பார், எதை, எப்போது, எப்படி மாற்றுவார் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் அவர் சொல்வதை அப்படியே எல்லோரும் செய்ய வேண்டுமென்று கட்டாயமாக்குவார். இப்படி சர்வாதிகாரியான ஒரு நிறுவனத் தலைமையின் கீழ், எப்போது, எப்படி நடந்துகொள்வார்கள் என்று கணிக்க முடியாத, வெளிப்படைத்தன்மையில் இல்லாத தலைமையின் கீழ், பணியாற்ற நீங்கள் தயாரா?

சந்தையில் எந்தகடையில் பொருள் வாங்குவதைக் காட்டிலும், “ஹோல் புட்ஸ் மார்க்கெட்”-டில் பொருள் வாங்குவது சற்று விலை அதிகமாக இருக்கும் என்று எல்லோரும் சொல்வார்கள். அதேசமயம், அங்கு வாங்கினால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக உட்கொள்ளலாம் என்று சொல்வார்கள். அந்த கடையில் விற்றால், அது எல்லா தரக்கட்டுப்பாடுகளையும் கடந்து, வாடிக்கையாளர் உபயோகத்திற்கு ஏற்றதென்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் அந்த நிறுவனம் ஆழமாக விதைத்துள்ளது. அது அவர்கள் நிறுவனத்தின் உயரிய தர நிர்ணயங்களாலும், முழுமையான வெளிப்படைத் தன்மையினாலும் கிடைக்கபெற்ற நற்பெயர். அப்படி நம்பிக்கைக் குரிய, வெளிப்படைத்தன்மையுடைய கடைகள், நிறுவனங்கள் உங்கள் பகுதியில் என்னென்ன இருக்கின்றன?


நிறுவனத்தின் கொள்கைகள் என்ன? இலக்குகள் என்ன? எதிர்பார்ப்புகள் என்ன? என்று தெரியாவிட்டால், ஒரு ஊழியராக நீங்கள் என்ன செய்வீர்கள்? தினமும் வேலைக்கு வருவீர்கள், சொன்ன வேலையை, எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவீர்கள். இங்கு வளர்ச்சிக்கான ஊழியர் பங்களிப்பு என்ன இருக்கும். ஏதோ வேலைக்கு வந்தோம், சொன்னதைச் செய்தோம், சம்பளம் வாங்கினோம் என்ற பிடிமானமில்லாத தன்மைதானே இருக்கும். இப்படி இருந்தால் நிறுவனம் வளர்ச்சி அடையுமா?


எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, ஏன் செய்யவேண்டும்? என்று ஒவ்வொரு செயலுக்குமான காரண-காரியங்களை வெளிப்படையாக நிறுவனம் நிர்ணயித்தால், அதில் பங்கெடுக்கும் ஊழியர்கள் தெளிவுடன் இருப்பார்கள். அவர்கள் பங்களிப்பும் சரியாண புரிதலுடன் இருக்கும். அந்த புரிதல் மேம்படும்போது, அவர்களின் படைப்பாற்றலின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிப்பார்கள். அவர்களின் ஆலோசனைகளை, கருத்துக்களை மேலாளர்களிடம் தைரியமாக எடுத்துரைப்பார்கள். நிறுவனமும், மேலாளர்களும் வெளிப்படையாக இருக்கும்போது, ஊழியர்களும் நம்பிக்கையானவர்களாக, வெளிப்படையானவர்களாக இருக்க வாய்ப்பு அதிகரிக்கும்.


உங்கள் நிறுவனத்தில் ஊழியர்களின் நம்பிக்கையை அதிகரிக்க,

  • முதலில் நிறுவனம் தன்னுடைய முடிவுகள், செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க வேண்டும்.

  • நிறுவனம் எப்படி செயல்படும், பதிலளிக்கும் என்று ஊழியரால் கணிக்க முடியாத சூழ்நிலை நிலவினால், ஊழியர்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும்.

  • அதேசமயம், நிறுவனத்தின் கொள்கைகள் இதுதான், இவற்றிலிருந்து விலக யாருக்கும் அனுமதி கிடையாது என்று தெளிவாக வரையறுக்கப்பட்டால், அதை எல்லா தருணங்களிலும் பாகுபாடின்றி செயல்படுத்தினால், ஊழியர்கள் செயல்பாடும் அந்த வரையறைக்குள் தெளிவாக இருக்கும்.

  • ஒருவேளை நிறுவனம் தன் ஊழியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டினால், செயல்பாடுகளை ஆளுக்கு ஆள் மாற்றினால், ஊழியர்களுக்கு தாங்கள் எப்படி நடத்தப்படுவோம் என்ற தெளிவில்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்;

நிறுவனத்தின் செயல்பாட்டில், கொள்கையில், இலக்குகளில் வெளிப்படைத் தன்மை தெளிவுற இருந்தால்,

  • ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிக்கும்

  • முடிவெடுப்பதில் அதிக தெளிவிருக்கும்

  • வெளிப்படைத்தன்மை, பிரச்சனைகளையும் / சிக்கல்களையும் எளிதாய் தீர்க்க வழிவகுக்கும்

  • என்ன தேவை என்பது தெளிவாக இருப்பதால், எதை, எப்போது, எப்படி, யார் செய்ய வேண்டுமென்ற தெளிவு எல்லோரிடமும் இருக்கும்;

  • நிறுவனத்தின் இலக்குகள் சரிவர புரிந்துகொள்ளப்பட்டு, ஊழியர்களின் பங்களிப்பும், படைப்பாற்றலும் நாளுக்குநாள் அதிகரிக்கும்;

  • ஊழியர்கள் தங்கள் செயல்களுக்கு முழுப்பொருப்பேற்றுக் கொள்வார்கள்

வியாபார விடயங்களைத் தாண்டி, உங்கள் அன்றாட குடும்ப வாழ்விலும் இந்த வெளிப்படைத்தன்மை இருந்தால்

  • குடும்ப உறுப்பனர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு அதிகரிப்பதோடு, நம்பிக்கையும் அதிகரிக்கும்;

  • நட்பும், உறவுகளும் மேம்பட வாய்ப்பு அதிகரிக்கும்;

  • உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் படிப்படியாய் குறைந்து, எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு இலக்கை நோக்கி செயல்பட முன்வருவார்கள்;

  • வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும்போது, உங்கள் மருத்துவ ஆலோசகர்கள், சட்ட ஆலோசகர்கள், முதிலீட்டு ஆலோசகர்களால் உங்களுக்கு சரியான தீர்வுகளை சொல்ல முடியும;

  • எந்தவொரு குடும்பசிக்கலானாலும், சமுதாய சிக்கலானாலும், உங்கள் எண்ணங்கள், தேவைகள், கொள்கைகள் தெளிவுடன் வெளிப்படுத்தப்படுவதால், அந்த சிக்கல்களுக்கு தீர்வுகாண்பது எளிதாக இருக்கும்;

வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் இடங்களில்

குழப்பங்களுக்கான வாய்ப்பு குறைந்துவிடுகிறது.

யாருக்கும் இரகசிய நோக்கமும் / இலக்கும் இல்லாதபோது

ஒற்றுமையுணர்வு இயல்பாய் அதிகரிக்கிறது.


நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை

ஊழியர் மத்தியிலும், வாடிக்கையாளர் மத்தியிலும்

நம்பிக்கையை அதிகரித்து

உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கும்!


மனிதர்கள் - வெளிப்படையானவர்களிடம் விரும்பி வருகிறார்கள்!

சூதுவாது நிறைந்தவர்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள்!


தனிப்பட்ட ஆதாயங்களைத் தாண்டி

ஒற்றுமையை வளர்க்க, புரிதலை அதிகரிக்க

பங்களிப்பை மேம்படுத்த, ஸ்திரத்தன்மையை மேம்படுத்த

கூடியவரை வெளிப்படைத்தன்மையை அதிகரியுங்கள்!


- [ம.சு.கு 21.09.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

コメント


Post: Blog2 Post
bottom of page