“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-346
வழக்கமானவற்றை தானியங்கியாக்குங்கள்...!
வீட்டிற்கு தினமும் காலையிலும், மாலையிலும் பால் வாங்கவேண்டும். நாளிதழ் வாங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து கடைக்குச் சென்று வாங்கிவரலாம். அது நடைபயிற்சி செய்த மாதிரியும் இருக்கும். அதேசமயம் அனுதினமும் சென்றுவர உங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறதா? அப்படி இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள்?
மாதாமாதம் நீங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை குறிப்பிட்ட தேதியில் கட்டவேண்டும். மாதாமாதம் மின்சார கட்டணம், தொலைபேசிக் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்று மாதத்திற்கொருமுறை காப்பீட்டு சந்தா கட்டவேண்டும், வருடாவருடம் வீட்டுவரி, குடிநீர் வரி செலுத்த வேண்டும். இந்த செயல்கள் அந்த குறிப்பிட்ட தேதியில் தவறினால், அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் கவனித்து செய்கிறீர்கள். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு அபராதம் செலுத்தியிருப்பீர்கள். சிலவற்றை மறதியினால் தவறவிட்டு அபராதம் செலுத்தியிருப்பீர்கள். ஆனால் இன்று, இவையணைத்தையும் தானியங்கியாக்க வங்கிச் செயலிகள் வழிவகுத்து விட்டன. அவற்றில் எதையெல்லாம் நீங்கள் பயன்படுத்தி நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துகிறீர்கள்!
அதிகாலையில் பால் பொட்டலமும், நாளிதழும் வீட்டின் முன்வாசலுக்கு கொண்டுவந்து தருபவரிடம் சொல்லி அவற்றை தானியங்கி ஆக்கிவிட்டர்கள். நீங்கள் காலை சீக்கிரம் எழுந்தாலும் சரி, தாமதமாக எழுந்தாலும் சரி, பாலும், நாளிதழும் உங்கள் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும். தினமும் சில்லரை கொடுப்பதற்கு பதிலாய் மாதமொருமுறை மொத்தமாக கொடுத்தால் போதும். அன்றாடம் 15-20 செலவு செய்ய வேண்டிய நேரத்தை அப்படியே தானியங்கியாக்கி மிச்சப்படுத்திவிடுகிறார்கள். இது போல, உங்கள் அன்றாட வாழ்வில் எத்தனை செயல்களை தானியங்கியாக்கி நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறீர்கள்?
பள்ளிக்கு பிள்ளைகள் சென்றுவரும் வேலையை பள்ளிவாகனத்திடம் ஒப்படைத்துவிட்டீர்கள்!
சுத்தம் செய்து நறுக்கி வைக்கப்பட்ட காய்கறி பொட்டலங்களை நேரடியாக வாங்குகிறீர்கள்!
வீட்டு உபயோகப்பொருட்கள் எல்லாம் தானியங்கி கட்டுப்பாட்டுடன் அமைத்து வருகிறீர்கள்!
வாகனத்தில் கியர் மாற்றவேண்டிய அவசியம் இல்லாமல் தானியங்கி கியர் வண்டிக்கு மாறுகிறீர்கள்!
தகவல் அனுப்புவதையும், பதில் தருவதையும் கணிணியில் தானியங்கி ஆக்கிவருகிறீர்கள்!
எதுவெல்லாம் மனிதன் கஷ்டப்பட்டு செய்துகொண்டிருந்தானோ, அவற்றில் பெரும்பாலானவை இன்று தானியங்கியாக நடக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இப்படியாக எண்ணற்ற நேரத்தை மிச்சப்படுத்தும் நீங்கள், அந்த நேரத்தை கொண்டு என்ன சாதித்துள்ளீர்கள் என்று உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள்?
செய்வதையே திரும்பத்திரும்ப செய்வதானால், சீக்கிரத்தில் சோம்பேறித்தனமும், மெத்தனப்போக்கும் வந்துவிடுகிறது. மெத்தனப்போக்கு வருகின்ற இடத்தில், தவறுகள் நேர அதிகவாய்ப்பு உருவாகிவிடுகிறது. அவற்றைத் தவிர்க்கத்தான் இந்த தானியங்கி முறைகள் பேருதவியாய் இருக்கிறது. உங்கள் செயல்களை எப்படி தானியங்கி ஆக்குவது?
அன்றாடம் திரும்பத்திரும்ப செய்கின்ற வேலைகளை பட்டியலிடுங்கள். அவற்றில் தினமும் யோசித்து முடிவெடுக்கவேண்டிய செயல்களை தனியாக பிரித்துவிடுங்கள்;
பெரிதாய் முடிவுகள் எதுவும் தேவைப்படாத காரியங்களை செய்கின்ற தானியங்கி செயலிகளை தேர்வுசெய்யுங்கள் (அல்லது) அந்த சேவைகள் வெளியிலிருந்து கிடைக்கிறதா என்று பாருங்கள்;
எந்த காரியத்திற்கு அடுத்து எதை செய்யவேண்டும், ஒருவேலை தவறானால் எங்கு நிறுத்தி எச்சரிக்க வேண்டும் என்ற வரிசைமுறைமையை தெளிவாக வகுத்திடுங்கள்;
அவற்றை சோதனைமுறையில் செயல்படுத்தி தவறுகளை திருத்துங்கள்.
சோதனை வெற்றிகண்டபின் களத்தில் செயல்படுத்துங்கள். அவ்வப்போது அவை சரியாக செயல்படுகிறதா என்று பரிசோதியுங்கள்;
உங்கள் செயல்களை தானியங்கியாக்குவதன் மூலம் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?
நேரம் மிச்சமாகும் / செலவு குறைந்து பணம் மிச்சமாகும்
தவறுகள் ஏற்படுவது குறையும்
நீங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், செயல்கள் தானாக நடந்தேறும்
உங்கள் நிறுவனத்தின் உற்பத்தியளவு தானாக அதிகரிக்கும்
பலவேலைகள் தானியங்கியாகும்போது, உங்களால் போதியளவு ஒய்வெடுக்க முடியும்
இன்று தானியங்கி முறைகள் எந்தளவிற்கு வந்திருக்றதென்று இணையத்தில் தேடிப்பாருங்கள்.
ஓட்டுனரில்லாமல் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது?
உங்கள் வாகனம் வீட்டருகில் வந்தால், தானாக வீட்டின் முன்கதவு திறக்கிறது. குளிப்பதற்கு தண்ணீர் சூடாக ஆரம்பிக்கிறது.
ஒருவரின் கண்ணசைவில், கையசைவில் பல இயந்திரங்கள் இயங்குகின்றன;
இன்னும் சில காலத்தில், உங்கள் எண்ணங்களை கண்டறிந்து செயல்படும் அளவிற்கு செயற்கை அறிவு கொண்ட இயந்திர மனிதன் தயாராகிவிடுவான். இந்த தானியங்கிகளை அறிந்து உங்கள் வேலைகளை எளிமையாக்கி, உங்களை மேம்படுத்திக்கொள்ள தவறினால், எதிர்காலத்தில் நீங்கள் தேவையற்றவராகி விடக்கூடும்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்து
தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க
உங்கள் சோம்பேறித்தனங்கள் செயலை பாதிக்காமலிருக்க
கூடியவரை செயல்களை தானியங்கி ஆக்குங்கள்!
செய்வதையே திரும்பத்திரும்ப செய்வதில்
புதிதாய் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?
அவற்றை தானியங்கியாக்கி நெறிமுறை வகுத்துவிட்டு
புதியவற்றை நோக்கி நீங்கள் பயனியுங்கள்!
புதுமைகள் படைக்க
வழக்கமானவற்றின் பாரத்தை குறையுங்கள்!
வழக்கமானவற்றை, தவிர்க்கமுடியாதவற்றை
தானியங்கியாக்கி எல்லாவற்றையும் முடித்துக்காட்டுங்கள்!
பெரிய வெற்றிக்கு
உங்கள் இயக்கம் மட்டும் போதாதது!
உங்கள் சுற்றியுள்ளவர்களும், இயந்திர உலகமும்
கணிணி மாயையும் உங்களுக்காக உழைக்க வேண்டும்!
சிந்தனை தேவையில்லாதவற்றை தானியங்கியாக்குங்கள்!
மற்றவைகளை செய்ய உங்களுக்கு நேரம் தானாய் கிடைக்கும்!
- [ம.சு.கு 20.09.2023]
Comments