“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-345
உணர்வுசார் நுண்ணறிவு..!
ஒரு பெரிய மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவிற்கு, வாகன விபத்தில் படுகாயம் அடைந்திருந்த ஒருவரை கொண்டுவந்தனர். அந்த நபரின் கை, கால்களில் ஏற்பட்ட பலத்த அடியின் காரணமாக அவை பெருமளவில் சிதைந்ததோடல்லாமல், அதீதமான இரத்தப்போக்கும் இருந்தது. அந்த பாதிக்கப்பட்ட நபருடன் வந்த குடும்பத்தினர், அவரை காப்பாற்றவேண்டி கதறினர். அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்குழு, அவரது ஒரு கை & ஒரு காலை அகற்றினால் தான் அவரை காப்பாற்ற முடியும் என்ற கருத்தை தெரிவித்தனர். இங்கே வலியால் துடிக்கும் நோயாளி ஒருபுறம், அவரை காப்பாற்ற வேண்டி நிற்கும் உறவுகள் ஒருபுறம், உயிரை காக்க கை-காலை அகற்றவேண்டிய கட்டாயம் ஒருபுறம். ஒரு மருத்துவராக அந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு தந்தையாக, இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் மகனின் கை-காலை அகற்றும் முடிவிற்கு ஒப்புதல் கேட்டால் என்ன செய்வீர்கள்?
உங்கள் குழந்தை ஒரு குறிப்பிட்ட பொம்மை வாங்கித் தருமாறு அடம்பிடிக்கிறது. ஒரு முக்கிய நிகழ்வில், உறவுகளுக்கு மத்தியில் அப்படி அடம்பிடிக்கும்போது, உங்களுக்கு நிறைய கோபம் வரும். ஆனால் அங்கே குழந்தையை திட்டவும், அடிக்கவும் முடியாது. அதேசமயம் தேவையில்லாமல் அந்த பொம்மைக்கு பணந்தை செலவு செய்வதும் வீணாகக்கூடும். இங்கு உங்களின் மனநிலையைவிட, உங்கள் பிள்ளையின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்படுவதுதான் அதிமுக்கியமாகிறது. சிறுபிள்ளைக்கு அறிவுரை சொல்லி புரிய வைக்கமுடியாது. ஆனால், அவர்களை சாமரத்தியமாக திசைதிருப்ப ஒவ்வொரு தாய்க்கும் வழி தெரியும். அந்த இக்கட்டான சூழ்நிலையில், உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, சாமர்த்தியமாய் உங்கள் பிள்ளையை கட்டுப்படுத்துவது உங்களின் நுண்ணறிவும், சாமர்த்தியமுமாகிறது.
விபத்துக்களில் அடிபட்டு வரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமான ஒன்று. இங்கு, எது சிறந்த தேர்வென்று அலசிப்பார்க்க அதிக நேரம் இருக்காது. 5-10 நிமிடங்களில் முடிவுகளை எடுத்து செயல்பட்டால் மட்டுமே அந்த நபரின் உயிரை காக்க முடியும். அதேசமயம், காப்பாற்றும் அவசரத்தில், தேவையில்லாதவற்றை செய்துவிடக்கூடாது. ஒரு மருத்துவராக, பல அவசர சிகிச்சை நோயாளிகளை பார்க்கும்போது உங்களுக்கு அனுபவம் கிடைக்கும். அதேசமயம், ஒரு தந்தையாகவோ, கனவராகவோ இருந்த, உங்களின் பிரியமானவரின் கைகளை அகற்ற அனுமதி கேட்கும்போது, உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, உடனடியாக முடிவெடுக்கும் பக்குவநிலை உங்களிடம் இருக்கிறதா?
பிள்ளைகள் அடம்பிடிப்பது போலத்தான், உங்களின் அன்றாட வாழ்வில் நிறைய பெரியவர்களும் அடம் பிடிப்பார்கள். குறிப்பாக எல்லா மாமியார்-மருமகள் சண்டையும் ஒருவரின் அடம்பிடித்தலில்தான் துவங்குகிறது; அங்கு நேராக சமாதானம் செய்யமுடியாது. அதே சமயம் சமாதானம் செய்யாமலும் இருக்க முடியாது. உங்கள் உணர்வுகளைத் தாண்டி, அவர்களின் உணர்வு நிலைகளை புரிந்து சாமர்த்தியமாய் சாந்தப்படுத்துவதுதான் அங்கு முக்கியம்.
வியாபாரத்திலும் அப்படி பிடிவாதக்காரர்கள், அகங்காரம் பிடித்தவர்கள், கோபக்காரர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களின் முகத்திற்கு நேராய் இதை சொல்ல முடியாது. ஆனால் உங்கள் காரியம் ஆகவேண்டுமானால், அவர்களின் உணர்வுகளை புரிந்து சாமர்த்தியமாய் நீங்கள்தான் செயல்பட வேண்டும். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்பதற்காக நீங்கள் கோபப் படமுடியாது, அதேசமயம் விட்டுவிட்டு போய்விடவும் முடியாது. உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவதோடு, மற்றவர்களின் உணர்வுக் கொந்தளிப்புக்களை சாதுர்யமாய் சமாளித்து சாதிக்கவேண்டும். அதுதான் உங்களின் உணர்வுசார் நுண்ணறிவின் வெளிப்பாடு;
உணர்வுசார் நுண்ணறிவு என்பதில் உள்ள முக்கியமான விடயங்கள் சில;
சுய விழிப்புணர்வு [தன்னுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளும் அறிவு]
சுய கட்டுப்பாடு [உணர்வுகளை கடந்து தன்னுடைய செயல்களை கட்டுப்படுத்தும் ஆற்றல்]
சுய உந்துதல் [தன் மீதான நம்பிக்கை உணர்வை மூலதனமாக்கி விடாமுயற்சி செய்யும் திறன்]
அனுதாபம் [பிறர் உணர்வுகளை புரிந்து, அவற்றை மதித்து செயல்படுதல்]
சமூகப் பிணைப்பு [சூழ்நிலைகள், உணர்வுகளுக்கேற்ப சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி கட்டுப்படுத்துதல்]
எனக்குத் தெரிந்த சிலவற்றை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன். உணர்வுசார் நுண்ணறிவு என்பது இன்றைய விஞ்ஞான உலகத்தின் அடிப்படையாகி விட்டது.
வீடு முதல் நாடு வரை
உணவு முதல் உறவு வரை
துவக்கம் முதல் முடிவு வரை
எல்லாவற்றிலும் எல்லோருக்கும்
உணர்வுநிலை மேம்படுவது இயல்பே!
அந்த உணர்வுநிலையை கட்டுப்படுத்தி
சாமர்த்தியமாய் நெறிப்படுத்துபவன் வெல்கிறான்!
உணர்வில் வெடிப்பவன் தோற்கிறான்!
பொறுமையாக அனுகக்கூடிய மேலாளர், கடினமான ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பேசவிட்டு, அவர்களின் உணர்வு கொந்தளிப்புக்களை கொட்டித்தீர்க்கும் வரை அமைதியாக கேட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருகிறார்;
கைதேர்ந்த விற்பனையாளர், வாடிக்கையாளரின் தேவையை, உணர்வு நிலையை புரிந்து, வார்த்தை ஜாலங்களைக் கொண்டு வியாபாரத்தை முடிக்கிறார்;
படிக்கின்ற மாணவர்கள், சரியான திட்டமிடல் மூலம், கடைசிகட்ட அவசரங்களை தவிர்த்து, எல்லாவற்றையும் சரியாக படித்து சூழ்நிலையை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள்;
குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்ளும் பெற்றோர்கள், அவர்களை உரிய சூழ்நிலைகளுக்கு மட்டும் வெளிப்படுத்தி, முறைப்படுத்தி வைக்கின்றனர்;
ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்கள் உணர்வு நிலை ஒருபுறம் இருக்க, அந்த நிகழ்வு சார்ந்த மற்றவர்களின் உணர்வுநிலை வெவ்வேறு விதமாக இருக்கிறது. உங்களைமட்டும் பிரதானப்படுத்தி, உங்கள் உணர்வுகளை திணிக்க நினைத்தால், பெரிய குழப்பமும், தோல்வியும் ஏற்படும். உங்கள் உணர்வுகளை நெறிப்படுத்தி, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து, சூழ்நிலைக்கேற்ப எல்லோரையும் அரவணைத்தால், வெற்றி எளிதாகும்!
நிறைய படித்திருப்பீர்கள் – ஆனால்
எதை, எங்கு, எப்படி பயன்படுத்தவேண்டுமென்ற
சூழ்நிலை அறிவு உங்களிடம் இருக்கிறதா?
உங்களுக்கு சிலவற்றை பார்த்தால் அதீத மகிழ்ச்சி ஏற்படும்
சிலவற்றை பார்த்தால் அதீத கோபம் வரும்
சிலவற்றை பார்த்தால் அழுகை வரும்
சிலவற்றை கேட்டாலே உணர்வுநிலை தடம்பிரழும்
நிகழ்வுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாதபோது
உங்களால் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடிகிறதா?
உங்கள் உணர்வுளை அறிந்து கட்டுப்படுத்துவது ஒருபுறம்!
எதிராளியின் உணர்வுகளை புரிந்து வியூகத்தை மாற்றியமைப்பதும்
கூட்டத்தின் உணர்வுகளை உணர்ந்து
சாமர்த்தியமாய் சமாதானம் செய்வதும் மறுபுறம்!
இந்த மனித இனமே உணர்வுநிலை சார்ந்த ஒன்றுதான்!
எல்லாவற்றிலும் உணர்வுகளின் தாக்கம்தான் இங்கு அதிகம்!
இங்கு பல தோல்விகளின் மூலகாரணமே உணர்ச்சிப்பெருக்குதான்!
உணர்வுகளை சாமரத்தியமாய் உணர்ந்து கட்டுப்படுத்த முடிந்தால்,
இங்கு எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் தானாய் வந்துசேரும்!!
- [ம.சு.கு 19.09.2023]
Comentarios