top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 344 - பணியிட கலாச்சாரம் எப்படி....?”

Updated: Sep 19, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-344

பணியிட கலாச்சாரம் எப்படி....?


 • ஒரு டைடல் பார்க் கட்டிடத்தல் இயங்கிவந்த இரண்டு மென்பொருள் நிறுவனங்களும் வெவ்வேறு விதமான சவால்களை சந்தித்தன. ஒன்றில் ஊழியர்கள் 5-6 மாதத்திற்கு மேல் தங்குவதில்லை. இன்னொரு நிறுவனத்தில் ஊழியர்கள் நீண்ட நாட்கள் இருந்தாலும், உற்பத்தியளவு மிகவும் குறைவாக இருந்தது. இரண்டு நிறுவனங்களும் என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்துவிட்டன. ஆனால், என்ன பிரச்சனை என்று புரியாமல் திணறினர்.

 • ஆப்பிரிக்க பழங்குடி இனமக்கள் மத்தியில் இருக்கும் ஒரு பழக்கவழக்கம் மிகவித்தியாசமானது. அவர்கள் குழுவில் இருக்கும் யாராவதொருவர் தவறுசெய்தால், அவரை தண்டிப்பதற்கு பதிலாக, அவரை ஊரின் நடுவில் நிறுத்தி இரண்டு நாட்களுக்கு அவர் இதுவரை செய்த நல்லவைகள், செய்த உதவிகள் எல்லாவற்றையும் சொல்லி, அவருக்காக தாங்கள் எல்லோரும் இருக்கிறோம், எங்கள் எல்லோருக்காகவும் நீ இருக்கவேண்டும் என்ற ஒற்றுமை உணர்வை புரிய வைக்கின்றனர். தங்களுக்குள் ஒருவர் தவறுசெய்யும் போது அதை தண்டிக்காமல், எல்லோருடைய நலனுக்காக ஒன்றுகூடி அவரை மாற்றும் இந்த கலாச்சாரம் இன்றும் அவர்களை ஒரே குடும்பமாக வாழ வைக்கிறது. அப்படி ஒரு கலாச்சாரத்தை உங்கள் வீட்டில், ஊரில், அலுவலகத்தில் படிப்படியாக உங்களால் கட்டமைக்க முடியுமா?

ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் நிலைப்பதில்லை. இன்னொன்றில் நிலைக்கின்ற ஊழியரின் உற்பத்தித் திறன் அவ்வளவாக இல்லை. இதை ஆய்வு செய்த ஒரு மேலாண்மை நிபுணர், நிறுவனம் & ஊழியர்களுக்குள்ளான கலாச்சாரம் அப்படி கட்டமைந்துள்ளதை முக்கிய காரணமாக சுட்டிக்காட்டினார். ஆனால் கலாச்சாரத்தை எப்படி உடனே மாற்றுவது? என்ற பெரிய சவால் நிறுவனத்தின் முன் வந்தது.

 • முதலில் ஊழியர்களின் தேவைகள், அசௌகரியங்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்;

 • மாதமொரு முறை, மனிதவளத் துறை அதிகாரிகள் எல்லா ஊழியர்களுடனும் கலந்துரையாடினர்;

 • ஊழியர்கள் மத்தியில் விஷமத்தை விதைக்கும் புல்லுருவிகளை கண்டு பொறுமையாக களைந்தனர்;

 • மேலாளர்களுக்கும், துறைத்தலைவர்களுக்கும் நிறைய மேலாண்மை பயிற்சிகள் அளித்து நிறுவன கலாச்சாரத்தின் அடித்தளத்தை முறைப்படுத்தினர்;

 • ஊழியர்களிடமிருந்து நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறதென்பதை ஒவ்வொரு துறையிலும் தெளிவாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது; அதற்கான வளப்பங்கீடுகள் என்ன என்பதை ஊழியர்களின் கருத்துக்களை கேட்டு நிர்ணயித்தனர்;

 • ஒவ்வொரு ஊழியரின் அலோசனையும், பரிந்தரைகளும் கேட்கப்பட்டன. அவைகளின் ஏற்புடையவற்றை செயல்படுத்துவதும், பொருந்தாதவற்றிற்கு உரிய விளக்கமளிக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்தன;

கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில், இரண்டு நிறுவனங்களின் கலாச்சாரமும் படிப்படியாக மாறின. இன்றைய தினம், இந்த இரண்டு நிறுவனங்களிலும் சேர, மிகுந்த போட்டி நிலவுகிறது.


ஆப்பிரிக்க மக்களின் கலாச்சாரம், மனித இனத்தின் மிகப்பெரிய சொத்து. அவர்கள் வளர்க்க என்னும் ஒற்றுமை உணர்வுதான் மனித இனம் நிலைத்திருப்பதற்கான ஒரே வழி. அந்த ஒற்றுமையான கலாச்சாரம் உங்கள் நிறுவனத்தில் இருந்தால் எப்படி இருக்கும்?

 • ஒருவருக்கொருவர் கேட்காமலேயே உதவி செய்வார்கள். ஒருவரிடம் இருந்து இன்னொருவர் எளிதாக கற்றுக்கொள்வார்;

 • யாரும் யாருக்கும் போட்டியில்லாமல், எல்லோருடைய வளர்ச்சி / வெற்றியில் எல்லோருக்கும் பங்கும் மகிழ்ச்சியும் இருக்கும்;

 • ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சிக்கல்களை சமாளித்து காரியங்களை முடித்துவிடுவார்கள்;

 • நிறுவனத்தின் இலக்கு, அவரவர்களின் இலக்காக உணரப்பட்டு, தலைமை வழிகாட்டியின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் எந்த தாமதமும், சோம்பேறித்தனமும் இல்லாமல் சிறப்பாக நடந்தேறும்;

இன்றைய ஊழியர்கள் மத்தியிலும், நிறுவனத்திலும் பொதுவாக காணப்படும் நான்குவிதமான கலாச்சாரங்கள் என்னவென்றால்?

 • ஊழியர்களும், நிர்வாகத்தினரும் ஒன்றிற்குள் ஒன்றாக ஒரே குடும்ப உணர்வுடன், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, உதவிபுரிந்து இருக்கின்ற கூட்டாட்சி கலாச்சாரம்;

 • புதுமைகளைப் படைக்க, முடியாதவற்றை சாதிக்க தூண்டும், அதிகாரப்பதிவு கொண்ட கலாச்சாரம். திறமையானவர்கள் முடிவெடுத்து செயல்பட முழு அதிகாரம் வழங்கும் கலாச்சாரம்;

 • சந்தை சார்ந்த, இலாபத்தையும், போட்டியில் முதல் நிலை அடைதலை மட்டுமே குறியாகக் கொண்ட பொருளியல் கலாச்சாரம்;

 • மேலதிகாரி சொல்வதை அப்படியே கீழ்நிலை ஊழியர்கள் கேட்டு வழிநடக்க வேண்டும் என்ற அதிகாரவெறி படைத்த கலாச்சாரம்;

இன்றைய தினம், பல்வேறுபட்ட பெயர்களில், பல்வேறு விதங்களில், மேற்சொன்ன கலாசாரங்கள் நம்முடைய அலுவலகங்களில் வெவ்வேறு விதங்களில் பரவிக் கிடக்கின்றன. இவற்றில் நீங்களும், நானும் மூழ்கி கூட்டத்தோடு கோவிந்தா போடுகிறோம். அதில் உள்ள குறைகளை குறைகளாக மட்டும் சிறுசிறு கூட்டமாக பேசி பொழுதைக் கழிக்கிறோம். உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தை, ஊழியர்களின் பிணைப்பை, ஒற்றுமையை, புரிந்துணர்வை, விட்டுகொடுத்தலை, உதவிக்கரம் நீட்டுதலை, அறிவுப் பகிர்தலை மேம்படுத்த, இதுவரை நீங்கள் என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள்?


உறவுகள் போற்றும் ஒரு கலாச்சாரம்

உரிமைக்கு குரல் கொடுக்கும் ஒருகலாச்சாரம்;

வஞ்சகம் விதைக்கும் ஒருவித கலாச்சாரம்;


ஒற்றுமையில் வேற்றுமை காண்பது ஒரு கலாச்சாரம்;

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஒரு கலாச்சாரம்!


ஆயிரமாயிரம் விதங்களில் பழக்கவழக்கங்களும்

கலாச்சாரங்களும் ஆங்காகங்கே பரவிக்கிடக்கின்றன;


உங்கள் சமுதாயத்தை நல்லமுறையில் கட்டமைக்க

நீங்கள் கடைபிடிக்கவேண்டியதுஒன்றுதான்;

உழைப்பிற்கும், ஒருங்கிணைப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து

உறவுக்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் அளித்து

எல்லாவேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை காணும்

ஒரு சமத்துவ உணர்வை கலாச்சாரமாக

முதலில் நீங்கள் கடைபிடிக்கத் துவங்க வேண்டும்;

உங்கள் பழக்கம், படிப்படியாய் மற்றவர்களின் பழக்கமாக மாறும்;

நிறுவனம் மாறும்போது, வெற்றித் திறவுகோல் தானாய் திறக்கும்!!


- [ம.சு.கு 18.09.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page