“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-341
வலிகளை எதுவரை தாங்குவீர்கள்......!
ஒருதாய், தன் மகவை ஈன்றெடுக்க, ஒரு மனிதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய உச்சகட்ட வலியை, முன்கூட்டி அறிந்தே ஏற்றுகொள்கிறார். அப்படித்தான் நானும், நீங்களும் இவ்வுலகில் பிறந்தோம். தனக்கென ஒரு மகவை, தன் குடிம்பத்திற்கு ஒரு சந்ததியை ஈன்றெடுக்க அந்தத் தாய் பேராசையுடன் உச்சகட்ட வலியை தாங்கிக்கொள்ளத் தயாராகிவிடுகிறார். படித்த / படிக்காத எல்லாத் தாய்மார்களும் இதற்கு விதிவிலக்கில்லாமல் தயாராகிவிடுகிறார்கள். அப்படி உச்சகட்ட வலியை பொறுத்துக்கொண்டு வாழ்வில் வெற்றியை எட்ட நீங்கள் எந்தளவிற்கு தயாராக இருக்கிறீர்கள்!
2003-ஆம் ஆண்டு வடஅமெரிக்க உட்டா மலைப்பகுதியில் ஆரன் இரால்ஸ்தன் என்ற ஒரு மலையேற்றவீரர் தனியாக பயிற்சித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பாறை நகரத்தொடுங்கியதில், அவரது இடதுகை அந்த பாறைக்கு இடையில் சிக்கிக்கொண்டது. தன்னிடம் இருந்த 350மிலி தண்ணீரையும், இரண்டு ரொட்டியையும் கொண்டு 5 நாட்கள் தாக்குப்பிடித்தார். இறுதியில் தன் கைப்பகுதியை தானே அறுத்து, அங்கிருந்து தப்பித்து வந்தார். கைகள் வெட்டக்கூட சரியான ஆயுதம் இல்லாமல், 5 நாள் பாதிப்பில் இயற்கையாகவே எழும்புகள் பாதிக்கப்பட்டு, சாதாரண கத்தியை வைத்து எழும்புகளை உடைத்து உயிர் பிழைத்தார். தன் கைபோனாலும் பரவாயில்லையென்று, எல்லா வலிகளையும் பொறுத்துக்கொண்டு உயிர்தப்பினார். அவருடைய அளவு வலியில் எதுவரை உங்களால் கடந்து நிற்கமுடியும்!
வலிகளை பொறுத்துக்கொண்டால்தான் எல்லாச் சாதனைகளும் சாத்தியம் என்று ஆயிரமாயிரம் வெற்றியாளர்கள் சொல்லிவிட்டார்கள். எண்ணற்ற புத்தகங்களிலும் அவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டன. எல்லாம் தெரிந்துதான் தாய்மார்கள் அடுத்த தலைமுறையை உருவாக்க தயாராகின்றனர். அதேபோல, வாழ்வில் எந்தவகையான கஷ்டம்வந்தாலும், என்ன அவமானம் வந்தாலும், எத்தனை தோல்விவந்தாலும், எத்தனை தண்டனை கிடைத்தாலும், எல்லாவற்றையும் கடந்து, எல்லா போராட்டங்களையும் சமாளித்து வெற்றிகொள்ள நீங்கள் தயாரா? ஒருமுறை யோசித்துப்பாருங்கள், உங்கள் வெற்றிக்கு இதுவரை அப்படி என்ன பெரிய வலியை பொறுத்துக்கொண்டிருக்ககிறீர்கள் என்று?
ஒருவர் தான் உயிர்பிழைக்க தன் கையையே வெட்டியெறிந்துவிட்டு தப்பித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற சூழ்நிலையில், அதையும் அரும்பாடுபட்டு செய்து தப்பித்திருக்கிறார். சிலசமயம் வாழ்வில் மீளாத்துயர நிலைகள் வரக்கூடும். சரிபடுத்த முடியாத சில இழப்புக்களும் ஏற்படக் கூடும். அந்த சூழ்நிலைகளில் மனமொடிந்து பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தற்கொலை அதற்கான முடிவா என்றால், “இல்லை” என்பதை எல்லோரும் நன்கறிவர். ஆனால், தோல்விக்கும், வலிக்கும் பயந்து விலகி ஒடுபவர்கள் அப்படித்தான் முட்டாள்தனங்களை செய்கிறார்கள். அப்படியான அசாதாரண சூழ்நிலைகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கின்றனவா? அதை சமாளிக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? எதுவரை பொறுத்துக் கொண்டிருந்தீர்கள்.
வாழ்க்கைப் பயனத்தில், வலி என்பது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வந்து போகும். உடல் ரீதியாக வருகின்ற வலியை தாங்க, உடல் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டியது முக்கியமாகிறது. மனவலிகளை தாங்க, தன்னம்பிக்கையும், மனதைரியமும் முக்கியமாகிறது. இவை அனைத்தும் நீங்களாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய அடிப்படைகள். உங்களைத் தவிர வேறுயாராலும் உங்கள் ஆரோக்கியத்தை பேன முடியாது. உங்கள் தன்னம்பிக்கையை வலுப்படுத்த முடியாது. உங்கள் வெற்றிப்பாதையில் வரும் சரிவுகளையும், சிக்கல்களையும், வலிகளையும் சமாளித்து முன்னேற உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் முழுவதும் தயாராக இருக்கவேண்டும்.
அன்றாடம் பயிற்சி, கூடுதல் பயிற்சி என்ற உடல் வலியை பொறுத்துக்கொண்டு பயிற்சி எடுப்பவரால் மட்டுமே விளையாட்டில் சாதிக்க முடிகிறது.
தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் கடந்து, தொடர்ந்து முயற்சிப்பவர்களால் மட்டுமே புதிய சாதனைகள் படைக்க முடிகிறது;
சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் அடிபட்டு, பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டவர்கள், வீருகொண்டு எழுந்து படைத்த சரித்திரங்கள் இங்கு ஏராளம்;
வெற்றிக்காக உழைக்கும் மக்கள், தாங்கிக்கொள்ளும் / கடந்தபோகும் வலிகள் பலவிதங்களிக் மாறுபடுகின்றன;
எங்கு, எதற்காக, எவ்வளவு வலியை பொறுத்துக்கொள்கிறோம் என்பது, அவரவர் இலட்சியங்கள், தன்னம்பிக்கைக்கு ஏற்ப மாறுபடுகிறது;
சில வலிகள் வெற்றியைக் காட்டிலும், தாங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக கடைசி மூச்சுவரை பொறுத்துக்கொள்கிறார்கள்;
வலிகளை பொறுத்துக்கொள்வது ஒருமிகப்பெரிய உளவியில் சார்ந்த நிலை. ஒருசிலரால், அதீத வலிகளையும் மனதைரியத்தில் பொறுத்துக்கொள்ள முடிகிறது. ஒருசிலருக்கு மருத்துவர் எடுக்கும் சிறு ஊசியைக் கண்டாலே பயந்துவிடுகிறார்கள்; அவர்கள் வளர்ந்த சூழ்நிலை, சந்தித்த வலிகள், கடந்து வந்த பாதை எல்லாமே அவர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது;
கிடைக்கப்போகும் வெற்றி, செல்வம், புகழ் எவ்வளவு, அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எவ்வளவு நிறைவைத் தரும், என்பதைப்பொறுத்து, அதற்கு எதுவரை வலிகளை பொறுத்துக் கொள்ளலாம் என்று பலரும் மனக்கணக்கு போட்டு போராடுகின்றனர். ஒருசிலர் எல்லையை தொடும் முன்னர் பயந்தோ, போதுமென்றோ விலகிவிடுகின்றனர். ஒருசிலர் திட்டமிட்டதை வடி கூடுதல் வலி ஏற்பட்டாலும், பரவாயில்லை என்று கடைசிவரை போராடி வெற்றிகொள்கின்றனர்;
உங்களுடைய இலக்கு என்ன?
உங்களுடைய வலிகள் என்ன?
உங்களால் எதுவரை அந்த வலிகளை பொறுத்துக்கொண்டு முன்னேற முடியும்?
நீங்கள் தாங்கித்தாங்கி மறத்துப்போன வலிகள் என்னென்ன?
இந்த சுயஅலசலை உங்களுக்குள் நீங்கள் செய்துகொள்ளுங்கள். உங்கள் வெற்றிப்பாதையில் வரும் வலி என்னும் பெரிய சவாலை, நீங்கள் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்? வலிகளை இன்னொருவருக்கும் கொடுக்க முடியாது. உங்கள் உடல் வலிமையையும், மன வலிமையையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அனுதினமும் வலிமைப் படுத்துங்கள், வெற்றி உங்களுடையதே!!
வலியை உங்களால் எதுவரை பொருத்துக்கொள்ள முடியும்;
எதுவரை உங்களால் உணர்வுகளை கட்டுப்படுத்தி பயனிக்க முடியும்;
எதுவரை சுயநலம் தாண்டி பொதுநலனுக்காக போராட முடியும்;
எல்லா வெற்றிக்கும் ஒருபங்கு கஷ்டம் இருந்தே தீரும்
அந்த கஷ்டம் எங்கு, எப்படி, எந்தளவு வருமென்று யாருக்கும்தெரியாது!
ஆனால் இன்றுவரையிலும், வரவேண்டியவைகள் பெரும்பாலும்
அதற்குரிய கஷ்டத்தை கடந்து வந்துகொண்டேதான் இருக்கிறது!
வெற்றியை சமைக்க, வலிகளை அறுப்போம்!
வலிகளை குறைக்க திட்டமிட்டு உழைப்போம்!
உழைப்பு மட்டுமே வெற்றியின் ஆணித்தரமான பாதை!
- [ம.சு.கு 15.09.2023]
Comments