“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-340
வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரியுங்கள்...!
இன்று தகவல் பரிமாற்றத்தின் பிரதானமாய் இருக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை 2014-ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அன்றைய தினம் பெரும்பாலான நாடுகளில் வாட்ஸ்அப்பின் சேவை இலவசமாகவே இருந்தது. விளம்பர வருவாயும் அவ்வளவாக இருக்கவில்லை. ஆனாலும், ஒவ்வொரு பயனாளருக்கம் குறைந்தபட்சம் $40-க்கும் அதிகமாக கொடுத்து அந்த நிறுவனத்தை பேஸ்புக் வாங்கினார்கள். அன்றைய தினத்தில், கிட்டத்தட்ட 1.25 இலட்சம் கோடிக்கு அந்த வாட்ஸ்அப் நிறுவனம் வாங்கப்பட்டது. தகவல் தொழிநுட்பத்துறையில் அதிக விலையில் வாங்கப்பட்ட நிறுவனம் அது. அந்த நிறுவனம் கொண்டிருந்த வாடிக்கையாளர் [பயனாளர்கள் / உபயோகிப்பவர்கள்] எண்ணிக்கையை மட்டுமே பிரதானப்படுத்தி விலை நிர்ணயிக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான வியாபாரங்கள் இணையவழிக்கு மாறிவருகின்றன. வாங்குவதும், விற்பதும் வீட்டிலிருந்தே நடக்கவேண்டிய தேவை அதிகரித்து விட்டது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றிற்குப்பின், இன்று இணையவழிதான் எல்லாம் என்றாகிவிட்டது. இங்கு வாடிக்கையாளரை வரவேற்று, உபசரிக்க முடியாது. வாடிக்கையாளர் தேடும்பொருள் தரமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்க வேண்டும். இணையத்தில் மற்ற வியாபாரிகள் என்ன விலைக்கு கொடுக்கிறார்கள் என்பது அங்கேயே வாடிக்கையாளருக்கு தெரியும்போது, போட்டி கடுமைதான். இங்கு ஒரு பொருளுக்கு அதிக இலாபம் ஈட்டுவது கடினம். அதேசமயம், நிறையவிற்று இலாபத்தொகையை அதிகரக்கமுடியும். அதற்கு அவர்கள் நிறைய வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்கவேண்டும். இவர்கள் 5 ரூபாய் இலாபத்திற்கு 5 பொருள் விற்பதைக்காட்டிலும், 2 ரூபாய் இலாபத்திற்கு 20 பொருள்விற்க முயிற்சிக்கிறார்கள். அது வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சாத்தியமாகிறது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு விலை கொடுத்து வாங்கியபோதுதான், உலகம் வாடிக்கையாளர் எண்ணிக்கையின் அதிசயத்தை உணர்ந்தது. அவ்வளவு விலை கொடுத்தது தவறென்று சில முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் அந்த கைப்பற்றல் தான், இன்றுவரையிலும் பேஸ்புக் நிறுவனத்தின் மிகச் சிறந்த கையகப்படுத்துதலாக இருக்கிறது. இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில், எல்லோரும் வாடிக்கையாளர் / உபயோகிப்பாளர் எண்ணிக்கையில் அளப்பதற்கு அது மிகப்பெரிய உதாரணமானது.
இணையவழி வியாபார சந்தையில், போட்டிகள் மிகஅதிகம். அதேசமயம் சந்தையும் மிகப்பெரியது. ஒரு இடத்தில் இருக்கும் கடையை தேடி வாடிக்கையாளர் வருவதற்கான தேவையில்லை. கடை எங்கிருக்கிறது என்ற கவலையில்லாமல், ஆயிரமாயிரம் வாடிக்கையாளர்கள் வந்து இணையத்தில் பொருளை வாங்குகின்றனர். இந்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க, எண்ணற்ற ஆரம்பகட்ட சலுகைகளை அளிக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து தக்கவைக்க, பலதிட்டங்களை செயல்படுத்துகிறார்கள். உங்கள் பிறந்த நாளுக்கு, திருமண நாளுக்கு, வாழ்த்துச் செய்திகளை குறுஞ்செய்திகளாக அனுப்பி, வாடிக்கையாளருடன் தொடர்பில் இருக்க தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.
ஒருவர் கிராமத்தில் மளிகைக்கடை துவங்கினார். அங்கிருந்த 100 குடும்பங்களுக்கு சிறப்பாக விற்பனை செய்து இலாபம் சம்பாதித்தார். ஆனார் அவரது இலாபம் தொடர்ந்து ஒரே அளவில் இருந்தது. ஏனெனில் அங்கு சந்தையின் அளவு சிறியது. 400 பேர் வசிக்கும் கிராமத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அளவுதான். வியாபாரம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அங்கு விற்பனை ஒரு அளவு வரை மட்டும்தான். அதேசமயத்தில் நகரத்தில் தொடங்கப்பட்ட மளிகைக்கடை விரிவாக்கம் செய்யப்பட்டது. 2000 வாடிக்கையாளர்களைத் தாண்டி வியாபாரம் விரிவடைந்தது. நகரத்தில் சந்தையின் அளவு பெரிதாக இருந்ததால், சிறந்த சேவையின் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது.
இன்றைய உலகில், உங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு, வாடிக்கையாளர் எண்ணிக்கையும், அவர்கள் உங்கள் நிறுவனத்தின் மீதுகொண்டுள்ள விசுவாசமுமே முக்கிய காரணிகளாகின்றன. உங்கள் நிறுவனத்தின் மீதான விசுவாசம் அதிகரிக்க, உங்கள் பொருட்களின் தரமும், மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையும் வழிவகுக்கும். அதன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் பரிந்துரை, வியாபாரத்தை மேலும் விருத்தியடையச் செய்யும்.
வாடிக்கையாளர்கள் வருகையை அதிகரிக்க, பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்று என்னவெல்லாம் செய்கிறார்கள்;
எல்லாவற்றையும் வீட்டிலிருந்த தேர்வு செய்து வாங்கிக்கொள்ள இணையவழி விற்பனையை அதிகரித்து விட்டார்கள்;
வாடிக்கையாளர்களின் தேவைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து சேகரித்து, அவர்களின் தேவைக்கேற்ப விளம்பரங்களை முன்னிலைப்படுத்தி வாடிக்கையாளரை ஈர்க்கிறார்கள்;
ஒரு வாடிக்கையாளர், இன்னொரு புதிய வாடிக்கையாளரை அறிமுகம் செய்தால், அவருக்கு அன்பளிப்புக்களை வாரி வழங்குகிறார்கள்;
வாடிக்கையாளர்கள், ஒரு நிறுவனத்தின் சேவைகுறித்து கருத்து தெரிவிக்க, புகைப்படங்களை பதிவேற்ற வேண்டுகின்றனர். வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் குறித்த கருத்துக்கள், நட்சத்திர அளவீடுகள், புதிய வாடிக்கையாளரை ஈர்க்க வழிவகுக்கிறது;
தொடர்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள், அதிநவீன சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்க முயற்சிக்கின்றனர்;
தங்களின் வியாபாரம் விளம்பரங்களை, சமூக வளைதளங்களுக்கு ஏற்றவகையில் வடிவமைத்து, எண்ணற்ற புதிய வாடிக்கையாளர்கறளுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
இதுவொரு சிறிய பட்டியல்தான். இன்று வாடிக்கையாளர் வருகையை அதிகரிக்க, நிறுவனங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. இத்தனை வாடிக்கையாளரை அதிகரிக்க, இவ்வளவு செலவு செய்யவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். உங்கள் நிறுவனத்தை வளர்க்க, உங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க, நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?
என்னதான் சிறந்த பொருள், சிறந்த சேவை இருந்தாலும்
அதை வாங்கி உபயோகிக்க எத்தனை வாடிக்கையாளர் உள்ளனர்
அவர்கள் என்ன விலை கொடுத்துவாங்க தயாராக இருக்கின்றனர்
என்பதை பொருத்துத்தான் உங்கள் வியாபாரத்தின் எதிர்காலமே!
வாடிக்கையாளர் தான் வியாபாரத்தின் முதுகெழும்பு!
வாடிக்கையாளர் எண்ணிக்கையே இன்றொரு பெரிய சொத்து!
அதிலும் விசுவாசமான வாடிக்கையாளர் அதிகமென்றால்
நிறுவனத்தின் விலை, அதன் முதலீட்டைக் கடந்து
வாடிக்கையாளர் எண்ணிக்கையில் தீர்மானமாகிறது!!
இலாபத்தின் அளவு குறைந்தாலும் பரவாயில்லை
நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படாத வரை
தொடர்ந்து வாடிக்கையாளர் எண்ணிக்கையை கூட்டுங்கள்
எண்ணிக்கையும், வாடிக்கையாளர் விசுவாசமும் அதிகரிக்க அதிகரிக்க
நிறுவனத்தின் வியாபாரமும், எதிர்காலமும் மேலும் வழுவடையும்!!
- [ம.சு.கு 14.09.2023]
Comments