top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 339 - 10,000 மணிநேர பயிற்சி…!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-339

10,000 மணிநேர பயிற்சி....!


  • “அவுட்லையர்ஸ்” என்கிற தனது புத்தகத்தில், மால்கம் கிளாட்வெல் பல இடங்களில் 10,000 மணிநேரங்கள் செய்கின்ற பயிற்சி எப்படி ஒருவரை அதில் நிபுணராக்குகிறது என்பதைப்பற்றி குறிப்பிட்டு இருப்பார். எந்த துறையிலும் சராசரிகளை கடந்து ஒரு பெரிய நிபுணராக உருவாக, பெரிய படைப்பாளியாக உருவாக, அந்த துறை உங்கள் கைவசப்பட, நீங்கள் குறைந்தது 10,000 மணிநேரங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்று திரு. மால்கம் குறிப்பிடுகிறார். ஒரு புல்லாங்குழல் வாசிக்க குறைந்தபட்சம் 100-200 மணிநேரங்கள் பயிற்சித்தால் மட்டுமே அது உங்களுக்கு பிடிபடுகிறது. அதில் நிபுணத்துவம் பெற, இசைகளை கேட்டு குறிப்புகளை எழுத, சொந்தமாக இசை அமைக்க எத்தனைக் காலம் தேவைப்படும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

  • தன்னம்பிக்கை நூல்கள் சிலவற்றை படித்தால், உங்கள் பழக்கவழக்கங்களை மாற்ற, நீங்கள் தொடர்ந்து 21 நாட்கள் புதிய பழக்கங்களை கடைபிடித்தால் அது தானாக மாறிவிடும் என்கிறார்கள். ஒருசில ஆசிரியர்கள் 18 நாள் போதும் என்கிறார்கள். ஒருசிலர் 3 மாதம் தொடர்ந்து முயற்சித்தால் மாறிவிடும் என்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு கால அளவை குறிப்பிட்டாலும், உங்களால் அப்படி எந்த பழக்கத்தை எத்தனை நாட்களில் மாற்ற முடிந்ததென்று யோசித்துப்பாருங்கள். புதிதாய் ஏற்படுத்திய பழக்கங்கள் எவ்வளவு சீக்கிரத்தில் உடைந்து பழைய நிலைமைக்கு திரும்பினீர்கள் என்று அலசிப்பாருங்கள். ஒரு புள்ளிவிவரம், 75%-80% மக்கள் அப்படி 21-90 நாட்கள் முயற்சித்து மாற்றினாலும், சீக்கிரம் பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டதாக கூறுகிறார்கள். இரத்தத்தில் ஊறிவிட்ட பழைபழக்கங்கள் வாய்ப்பு கிடைக்கும்போது தலைதூக்கவே முயற்சிக்கிறது. அந்த இரத்தத்தில் ஊறிய பழக்கங்கள் விலகி புதிய பழக்கங்கள் உங்கள் இரத்தத்தில் ஊறி [இயல்பான வழக்கமாக] நிரந்தமாக எவ்வளவு காலம் தேவைப்படும் என்று நீங்களோ யோசியுங்கள்!!

10,000 மணிநேர பயிற்சி என்பது, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்றென்று நிறைய விமர்சனங்கள் திரு. மால்கமின் நூலுக்கு எதிராக வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இதுவரை யாரும் நிபுணத்துவத்திற்கான மாற்று வழி என்ன என்று உறுதிபட கூறவில்லை. 10,000 மணிநேரம் என்பது தேவையில்லை, சீக்கிரத்தில் நிபுணத்துவம் பெறமுடியும் என்கிறார்கள். ஆனால் 1000-2000 மணிநேரங்களில் பெரும் நிபுணரானவரை இதுவரை யாரும் காண்பிக்கவில்லை [வெகுசிலர் பிறப்பிலேயே நிபுணத்துவம் கொண்டிருந்த விதிவிலக்குகளை தவிர்த்து].


ஓவியரோ, கவிஞரோ, ஆராய்ச்சியாளரோ, எழுத்தாளரோ, வழக்கறிஞரோ, பேச்சாளரோ, யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் பல ஆயிரம் மணிநேரங்கள் தங்களின் சிந்தனைகளையும், முயற்சியையும் செய்யாமல் அந்த துறையில் செலுத்தாமல் வென்றுவிடவில்லை. இன்று சிறந்த பேச்சாளர்களாக இருப்பவர்களிடம் இதுவரை எத்தனை புத்தகங்களை படித்துள்ளீர்கள், எத்தனை முறை பேசியிருக்கிறீர்கள் என்று கேட்டுப்பாருங்கள். அவர்களும் 200-300 புத்தகங்களை, 200-300 மேடைகளுக்கு குறையாமல் பேசியவர்களாகத்தான் இருப்பார்கள்.


10,000 மணிநேரம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபடாதது என்று விமர்சகர்கள் சொல்வதை பொருட்படுத்தாமல், உங்களால் எத்தனை மணிநேரங்களை ஆக்கப்பூர்வமாக செலவிட்டு பயிற்சியை மேம்படுத்தி வெற்றியாளராக முடியும் என்று பாருங்கள். உங்கள் நிபுணத்துவத்தை நோக்கிய பயனத்தில் நீங்கள் தான் இராஜா. உங்கள் முடிவில் வரும் வெற்றியும்-தோல்வியும் உங்களுடையதே!


உணவுக்கட்டபாடு மேற்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களில் 65% பேர், மூன்று மாதத்திற்கு பின் முன்பைவிட அதிக குண்டாகி விடுகிறார்கள். கஷ்டப்பட்டு 90 நாட்கள் வாயை கட்டுப்படுத்தி வைக்கும் அவர்கள், 5 கிலோ எடை குறைந்ததும் இனி கட்டுப்பாடுகள் போதும் என்று பழைய படி சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். எடை கட்டுப்பாடில்லாமல் உயர்ந்து விடுகிறது. வெறும் 100-200 நாள் பழக்கத்தில் எதுவும் நிரந்தரமாக மாறிவிடாது என்பது தான் நிதர்சனம். புதிதாக வந்த பழக்கம் 100-200 மணிநேரம் தான். ஆனால் உங்களின் பழைய பழக்கங்கள் பல்லாயிரம் மணிநேரங்களாக உங்கள் இரத்தத்தில் ஊறியுள்ளது. அது சிறு வாய்ப்பு கிடைத்தாலும் மீண்டும் துளிர்க்கவே முயற்சிக்கும். அதை நிரந்தரமாக வெல்ல வேண்டுமானால், நீங்கள் தொடர்ந்து கவனத்துடன் சில ஆயிரம் மணிநேரங்கள் பயிற்சிக்க வேண்டும். உங்கள் கவனம் சிதறினால், பழையவை தானாக துளிர்விடத் துவங்கிவிடும்!


10,000 மணிநேரம் என்பது நியாபகம் கொள்வதற்கு எளிதாக இருக்கும்பொருட்டு திரு.மால்கம் குறிப்பிட்டுள்ளார். அதுவொரு சராசரிதான். எப்படிப்பட்ட தருணத்திலும் உங்களால் நேராக நடக்க முடிகிறதென்றால், அதற்கு ஒரே காரணம், நீங்கள் பல ஆயிரம் மணிநேரங்கள் நடந்து பயிற்சி செய்துவிட்டீர்கள். எல்லா சூழ்நிலைகளையும் சந்தித்து உங்கள் கட்டுப்பாட்டை உறுதி செய்துகொண்டீர்கள். வாகனம் ஆடினாலும், நிலநடுக்கம் வந்தாலும், உங்களை உங்களால் சமன்படுத்தி நிற்கவும், நடக்கவும் முடியும். நீங்கள் உறக்கத்தில் எழுந்தாலும், நினைவுகளை முற்றிலுமாய் இழந்தாலும், உங்களால் நிற்கவும், நடக்கவும் முடியும். இதுதான் இறுதிக்கட்ட நிபுணத்துவம். இந்த நிலைவர, உங்களுடைய பழக்கம் வாழ்வின் அங்கமாக வேண்டும். எந்தவொரு பழக்கமும் உங்கள் நினைவுகளின் அங்கமாக, அன்றாட வாழ்வின் அங்கமாக, பல ஆயிரம் மணிநேரங்கள் பயிற்சிக்கப்பட வேண்டும்.


உங்கள் நிபுணத்துவத்திற்கு

எத்தனை மணிநேர பயிற்சி தேவையென்பது

உங்கள் திறம் சார்ந்தது – ஆனால்

எதுவும் சீக்கிரத்தில் கைகூடிவிடாது

பல ஆயிரம் மணிநேங்கள் பயிற்சித்தால் மட்டுமே

உண்மையான நிபுணத்துவம் என்பது சாத்தியம் – ஏனெனில்

எல்லாவகையான சூழ்நிலைகளையும் அனுபவத்தில் சந்திக்காமல்

நிபுணத்துவம் பெறுவது சாத்தியமில்லை

அந்த அனுபவத்தை பெற

பல்லாயிரம் மணிநேரங்கள் பலசூழ்நிலைகளில்

பயிற்சித்திருந்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்திருக்கும்!


நிபுணத்துவத்திற்கு 10,000 மணிநேர பயிற்சியென்பது

வேதவாக்கல்ல! ஒரு சராசரி அளவுகோல் மட்டுமே!


உங்கள் நிபுணத்துவத்தை நோக்கிய பயனத்தில்

எவ்வளவு தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!

எந்தளவிற்கு நிபுணத்துவம் பெற்றிருக்கிறீர்கள்!

உங்களுக்கு நீங்களே சுய அலசல் செய்து பாருங்கள்!


- [ம.சு.கு 13.09.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page