top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 337 - தாக்குப்பிடித்து நிற்கிறீர்களா.....?

Updated: Sep 12, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-337

தாக்குப்பிடித்து நிற்கிறீர்களா...?


  • சதுரங்க ஆட்டத்தில், ஒரு சிலர் தன் காய்கள் எதையும் இழக்கக்கூடாதென்று பொறுமையாக விளையாடுவார்கள். ஒரு சிலர் இராணிக்கு இராணி, யானைக்கு யானை என்று தடாலடியாக விளையாடுவார்கள். தன் காய்களை காத்து விளையாடுபவர்களின் வெற்றிவாய்ப்பானது, பெரும்பாலும் அவரது சாமர்த்தியத்தில் இருக்கிறது. அதே சமயம் காய்களை நேருக்குநேர் பழிகொடுத்து விளையாடுபவருக்கு, அவரது அணியின் பலம் குறையத் துவங்குகிறது. அவரது வெற்றிவாய்பானது, எதிராளியின் தவறுகளில் இருக்கிறது.

  • எங்கள் ஊரில், புதிய முயற்சியாக கோடை விடுமுறையில் ஒருமுறை ஐந்துநாள் மட்டைப்பந்தாட்டப் போட்டி நடத்த முடிவுசெய்து போட்டியை ஆரம்பித்தார்கள். வழக்கமான ஆட்டவிதியின் படி இரண்டு சுற்றுகள் ஐந்து தினங்களுக்குள் ஆடி முடிக்க வேண்டும். ஒருவேளை முடியாவிட்டால், ஆட்டம் சமநிலையில் முடியும். சர்வதேச ஆட்டங்கள் பல அப்படி ஐந்து நாள் போதாமல் சமநிலையில் முடிந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் ஊரில் நடத்தியபோட்டி, இரண்டு சுற்றுகளும் சேர்ந்தே ஒருநாள் கூட தாண்டவில்லை. இரண்டு அணியினராலும் நீண்ட நேரம் தாக்குபிடிக்க முடியவில்லை. குறிப்பாக ஒரு வீரர்கூட 100 பந்துகளை சந்திக்கவில்லை. எல்லோரும் 40-50 பந்துகளை தாண்டும்போது களைத்துப்போய் தவறுகளை செய்துவிடுகிறார்கள். அதே நிலைமை பந்துவீச்சிலும் இருந்தது.

சதுரங்கத்தில், நேருக்கு நேர் மோதல் மற்றும் காய்களில் இழப்பில்ர இருவரது பலமும் ஒரே அளவு குறைந்தாலும், விளையாடுபவர்களுக்கு மேற்கொண்டு திட்டமிடும் வாய்ப்பு குறைந்து விடுகிறது. இராணி, யானை, மந்திரிகள் இருந்தால், உங்களால் பல கோணங்களில் திட்டங்களை வடிவமைக்க முடியும். இதில் எது குறைந்தாலும், உங்கள் திட்டமிடுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. உங்கள் முக்கிய காய்களை இழக்காமல், எதிராளியின் முக்கிய காய்களை வீழ்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. அதற்கு முதற்கண் நீங்கள் களத்தில் எப்போதும் முழுபலத்துடன் இருக்க வேண்டும். உங்களால் தாக்குபிடிக்க முடியாவிட்டால், உங்களுக்கான வாய்ப்பு குறையத்துவங்கிவிடுகிறது.


ஒரு நாள் ஆட்டம், 20 ஓவர் ஆட்டம் போல மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு 5 நாள் ஆட்டம் ஆடிப்பார்க்க ஆசையிருந்தது. ஆனால், அந்த 5 நாட்கள் தாக்குப்பிடித்து ஆடுகின்ற அளவிற்கு யாரிடமும் பொறுமையும், நிதானமும், திட்டமிடலும் இருக்கவில்லை. இரண்டு அணியும் வழக்கம்போல அதிவேகமாக ஆடி 90-100 ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டத்தை இரண்டு முறையும் முடித்தது. இந்த 5 நாள் விளையாட்டை 2-3 முறை முயன்றும் எதுவுமே ஒரு நாளுக்கு மேல் நீடிக்கவில்லை. அப்போது சின்ன வயதில் “ஏன்” புரியவில்லை. வளர்ந்தபின், வியாபார களத்தில் சவால்களை சந்தித்தபோதுதான் தாக்குப்பிடித்து நிற்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்த புரிதல் ஏற்பட்டது. எவ்வளவு சீக்கிரத்தில் நாம் உணர்வுகளால் தூண்டப்பட்டு அவசரகதியான செயல்களை செய்கிறோம் என்பதை உணர பல சின்னச்சின்ன தோல்விகள் வழிவகுத்தன.


களத்தில் யாருடன் மோதுகிறோம், எத்தனை பேருடன் மோதுகிறோம் என்பது ஒருபுறம் இருக்க, அந்த களத்தில், எதுவரை உங்களால் தாக்குப்பிடித்து நிற்கமுடியும் என்பது இன்னொரு முக்கியவிடயமாகிறது. 10-20 போட்டியாளர்கள் இருக்கும் களத்தில், ஆக்ரோஷமாக போராடி, ஓரிருவரை வீழ்த்தி பின் களைத்துபின் வாங்கினால், எப்படி வெற்றியாளராக முடிசூடமுடியும். எல்லா போட்டியாளர்களையும் சமாளித்து, அவர்களில் சிறந்தவராக நீங்கள் திகழ்ந்தால் மட்டுமே உங்களால் மூடிசூடமுடியும். அதற்கு நீங்கள் தொடர்ந்து களத்தில் நீடித்திருப்பது அதிமுக்கியமாயிற்றே!

  • உங்கள் ஊரில் மராத்தான் ஓட்டப்பந்தயம் வைக்கிறார்கள். 26 மைல் ஓடும் மராத்தான் ஓட்டத்தை, எத்தனை பேர் கடைசி வரை ஓடிமுடிக்கிறார்கள்?

  • உடல் எடையை குறைக்க தேகபயிற்சி சாலையில் சேருகிறார்கள். எத்தனை பேர் தொடர்ந்து 6 மாதம் வருகிறார்கள்?

  • புத்தகங்கள் படிக்கவேண்டும் என்று நிறைய வாங்குகிறார்கள். ஆரம்பத்தில் 10-20 நாட்கள் படிக்கிறார்கள். பின்னர் ஏனோ அவற்றை தொடுவதே இல்லை!

  • இன்றைய தினம் நிறைய வேலைகளை முடிக்கவேண்டுமென்று புத்துணர்ச்சியுடன் துவங்குறீர்கள். சில மணிநேரங்களில், அந்த உத்வேகம் குறைந்து சாதாரண நிலைக்கு திரும்பிவிடுகிறீர்கள். மாலையில் பார்த்தால், எண்ணியதில் பாதிகூட முடிக்கப்பட்டிருக்கவில்லை. ஏன் இந்த புத்துணர்ச்சியும், உத்வேகமும் நீண்ட நேரம் நீடிப்பதில்லை!

பூமியில் பிறந்த எல்லோருக்கும் சாதிக்க வேண்டுமென்று ஆசை இருக்கிறது. ஆனால் ஏன் ஒருசிலரால் மட்டும் அது முடிகிறது, மற்றவர்களால் அது முடிவதில்லை.

  • 30%-க்கும் அதிகமானோர், தங்களுக்கு என்ன வேண்டும் என்ற தெளிவில்லாமல் இருக்கிறார்கள்

  • 30%-க்கும் அதிகமானோர், என்ன தேவை என்று தெரிந்தாலும், அதற்கான முயற்சியில் முதல் அடியை எடுத்து வைப்பதே இல்லை

  • 30%-க்கும் அதிகமானோர், முயற்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த பயனத்தில் எந்தவொரு சின்ன தடங்கள் வந்தாலும், உடனே இது தனக்கு ஒத்துவராது என்று விலகிவிடுகிறார்கள்;

  • மீதமுள்ள 10% பேர்தான் இலட்சியம் நோக்கிய பயனத்தில் வெகுதூரம் பயனிக்கிறார்கள். அவர்களுள் தாக்குப்பிடிக்க முடிபவர்கள் இறுதிப்போட்டியில் நுழைகிறார்கள், ஏனையவர்கள் தாங்களால் இனி முடியாது என்கிற இடத்தில் நிற்கிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையில், உங்களுக்கு போட்டி இந்த 10% பேர்தான். மீதமுள்ள 90% பேரை நீங்கள் பொருட்படுத்தவே வேண்டியதில்லை. ஆனால் இந்த 90% பேர்தான் வாய்கிழிய நிறைய பேசுவார்கள். அந்த 10% பேரைக் கடந்து உங்களால் களத்தில் ஸ்திரமாக நிற்கமுடிந்தால், உங்கள் வாழ்விற்கும், வெற்றிக்கும் நீங்கள் தான் எஜமானன்.


நிறைய போட்டியாளர்கள் இருப்பதாய் தெரியும் – ஆனால்

அதில் 90% பேர் பாதியிலேயே ஓடிவிடுவார்கள்;

நீங்கள் போட்டியிட்டு வெல்ல வேண்டியது

வெறும் 10% பேருக்கும் குறைவுதான்;


அந்த 10% பேரை இனங்கண்டு மோத – நீங்கள்

களத்தில் தாக்குபிடித்து நிற்கவேண்டும்;

அந்த 90% பேரைப்போல நீங்களும் விலகுபவரானால்

போட்டி, வெற்றி என்ற கனவுகளை மறந்துவிடுங்கள்!


மராத்தான் போட்டியானால்

26 மைலைக் கடக்கும்வரை ஓடவேண்டும்;

வியாபாரம், ஆராய்ச்சி எதுவானாலும்

வெற்றிகாணும் வரை திரும்பத்திரும்ப ஓடவேண்டும்;


ஓயாமல் ஓடுபவருக்கு மட்டுமே வெற்றி சொந்தம்;

கால்வலிக்கிறது, உடல் களைத்துவிட்டது என்பவருக்கு

வந்த இடம் மட்டுமே மிச்சம்!!


- [ம.சு.கு 11.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page