top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 336 - தலைமைப் பண்புகள்...!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-336

தலைமைப் பண்புகள்...!


  • ஒரு இயந்திர உற்பத்திச்சாலையின் நிறுவனர், தன் மகனை பொறியியல் படிக்க வைத்து, தன்னுடைய தொழிலில் அடுத்த வாரிசாக பணியமர்த்தினார். நன்கு படித்திருந்த அவரது மகன், இயந்திர உற்பத்தி முறைமைகளை சீக்கிரம் கற்றுக்கொண்டு, சில புதிய முறைமைகளையும் பரிசோதித்தார். அடுத்த கட்டமாக இயந்திர வடிவமைப்புத் துறைக்கு தலைமை ஏற்கச் செய்தார். அவரது மகன் சற்று முன்கோபக்காரராக இருந்ததால், ஊழியர் மத்தியில் சலசலப்புக்கள் அதிகரித்தன. சிலமாதங்களில், முக்கிய ஊழியர்கள் வேலையை விட்டு விலகினர். நிலைமை புரிந்துகொண்ட நிறுவனர், மகனை சமாதானம் / சாந்தப்படுத்த முயன்றார். மேற்கொண்டு இழப்பைத் தடுக்க, தன் மகனை புகழ்பெற்ற கல்லூரியில் 2 வருட மேலாண்மை படிப்பில் சேரவைத்தார். இளரத்தம், களத்தில் கற்றுக்கொள்ள தவறியவற்றை பாடங்களில் படிக்க ஆரம்பித்தபோது, களத்தோடு ஒப்பிட்டு தலைமைப் பண்புகளை ஒவ்வொன்றாக புரியத் துவங்கினார்.

  • நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் சில அரசாங்க நிறுவனங்கள், துறைகள், அவற்றின் துறைத் தலைவர்கள் மாறும்போது, பெரிய மாற்றங்களை சந்திக்கும். ஒரு சில தலைமை பொறுப்பாளர்கள், முடிவுகளை எடுப்பதை தாமதிப்பதாலும், ஆளுமை இல்லாததாலும், அந்த துறையின் செயல்பாடு 6-9 மாதங்களுக்குள் முற்றிலும் சீரழிந்துபோகும். தலைமைப் பொருப்பில் இருப்பவர்கள் ஊழியர்களை அனுசரித்து, தங்கள் துறையில் இலக்கு, இலட்சியங்களுக்கு ஏற்ப திட்டமிடுதலும், ஊக்குவித்தலும் செய்யாமல், வெறுமனே அரசாங்க சம்பளத்தில் பொழுதை கழிக்க முற்படுவதால், சரியான தலைமைப் பண்புகளற்ற தலைமையில் அந்த துறையும், நிறுவனமும் வீழ்ச்சியில் சிக்கிக்கொள்கிறது;

தன் மகனை நன்றாக பொறியியல் படிக்கவைத்து நிபுனராக்கினார். மகன் பொறியியலில் கைதேர்ந்திருந்த அளவிற்கு, மனிதவியல் மேலாண்மை புரிந்திருக்கவில்லை. தலைமையில் இருப்பவர்கள், ஊழியர்கள் நலன், எதிர்பார்ப்புக்களை புரிந்து நடந்துகொள்ளத் தவறினால், சலசலப்புக்களும், இராஜினாமாக்களுமே அதிகரிக்கும். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், அரசாங்கம், மூலப்பொருட்கள் வழங்குபவர்கள் என்று எல்லோரையும் தலைமை அனுசரித்து, அவர்களை வழிநடத்தினால் மட்டுமே நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டும். தலைமைப் பண்புகள் இல்லாமல் முடிவுகளை இஷ்டம்போல எடுத்தால், காலப்போக்கில் நிறுவனம் சின்னபின்னமாகிவிடும்;


நல்ல தலைமையில் சிறப்பாக இயங்கிவந்த பல அரசு இயந்திரங்கள், தலைமை மாற்றம் ஏற்பட்டவுடன் முற்றிலும் சீரழிந்துள்ள கதைகள் நிறைய பார்த்திருக்கலாம். மக்கள் பணி என்கிற கடமையுணர்வும், ஒன்றாய் இணைந்து செய்யவேண்டுமென்கிற ஊழியர் ஒருங்கிணைப்பு பண்பும் இல்லாமல் போகின்றபோது, அந்த துறையின் வளர்ச்சிக்கான பங்களிப்பு பூஜ்ஜியமாகி விடுகிறது.


நிறுவனத்தின் வெற்றிக்கு, வீழ்ச்சிக்கும் காரணமாகும் சிலமுக்கிய தலைமைப் பண்புகள் என்னென்ன?

  • அடிப்படை விழிப்புணர்வு [தன் தனிப்பட்ட ஆற்றல் & திறன்கள், தன் குழுவின் ஆற்றல், தனி நபர்களின் திறன்குறித்த முழமையான புரிதல்]

  • இலக்கு, இலட்சியங்களை நிர்ணயித்தல் [இலக்குகள் நிரணயித்து, திட்டமிட்டு செயல்படுத்துதல்]

  • தகவல் பரிமாற்றம் [சொல்ல வேண்டியதை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொல்கின்ற ஆற்றல்]

  • தீர்வுகள் / முடிவெடுத்தல் [பிரச்சனைகளைக் கண்டு விலகாமல், முடிவுகளை நாளையென்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் கலந்தாய்வு செய்து முடிவெத்தல்]

  • ஊக்குவித்தல் [எல்லா சூழ்நிலைகளிலும் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொள்வதோடு, மற்றவர்களையும் ஊக்குவித்து வழிநடத்துதல்]

  • புரிதல் / அனுதாபம் [ஊழியர் பிரச்சனைகளை, தேவைகளை புரிந்துகொள்தல், வாடிக்கையாளர் பிரச்சனை, ஆதங்கங்களை பொறுமையாக கேட்டறிதல்]

  • ஒழுக்கம் [உரிய கொள்கைகளை வகுத்து அதன் வழி சுயஒழுக்கத்துடன் நடத்தில்]

  • தைரியம் [சவால்கள் எப்படி வந்தாலும், சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனதைரியம்]

  • அனுசரித்தல் [மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தன்னை மாற்றிக்கொள்வதும், தன்னைச் சார்ந்தவர்களை அனுசரிப்புதும்]

  • முன்னுதாரணமாக நின்று வழிநடத்துதல் [ஒழுக்கத்தை, நேரம்தவறாமையை, நாணயத்தை தானே முன்னுதாரணமாக நின்று செயல்படுத்த வைத்தல்]

  • நேர மேலாண்மை [இருக்கின்ற நேரத்தை திட்டமிட்டு திறம்பட பயன்படுத்துதல்]

  • கருத்து / விமர்சனங்களை கேட்டறிதல் [தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று பிடுவாதம் பிடிக்காமல், மற்றவர்களின் கருத்துக்கள், விமர்சனங்களை கேட்டறிந்து மாற்றங்களை செய்தல்]

  • பணிவு & ஆளுமை [எல்லாத் தருணங்களிலும் போதுமான பணிவுடன் இருத்தல் – அதேசமயம் சரியானவற்றை கண்டிப்புடன் செயல்படுத்தும் ஆளுமையும் கொண்டிருத்தல்]

இந்த பட்டியல் ஒரு சிறிய உதாரணம் தான். நிறுவன மேலாண்மை, உற்பத்தி மேலாண்மை, மனிதவள மேலாண்மை, வரவு-செலவு மேலாண்மை என்று எண்ணற்றவைகளின் கூட்டு முயற்சிதான் மிகப்பெரிய வெற்றிகளின் மூலாதாரம். உங்கள் தலைமைப் பண்புகளைப் பற்றி சுயஅலசல் செய்திருக்கிறீர்களா? உங்கள் வளர்ச்சிக்கும், மந்த நிலைக்கும் என்னென்ன காரணங்கள் என்று கண்டுபிடித்தீர்களா?


தனியாகச் செய்யும்போது

ஆரம்பமும் முடிவும் உங்களோடு முடிந்துவிடும்;


குழுவாக செயல்படும் இடத்தில் - ஒவ்வொருவரின்

எண்ணங்கள், தேவைகள், செயல்பாடுகள்

எல்லாமே பலகோணங்களில் இருக்கும்போது

அவர்களை அனுசரித்து வழிநடத்த

தலைமையிடம் நிறைய பொறுமையும்,

ஆளுமையும், அனுசரிப்பும் தேவைப்படும்;

இந்த திறன்களை வளர்க்க நீங்கள் தயாரா?


எல்லா பெரிய வெற்றியின் பின்னும்

ஒரு தலைமையின் கனவும், ஆளுமையும்

அடிப்படை தேவையாகிறது!

அந்த தலைமையை எற்கும் பண்புகள்

உங்களிடம் இருக்கின்றனவா!!


- [ம.சு.கு 10.09.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page