“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-334
கவலைப்படுவதற்கென்று ஒருநேரம்..!
என் நண்பர் ஒருவர், எந்த பிரச்சனை வந்தாலும் அதை பெரிதாய் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் எல்லோருடனும் சிரித்துப்பேசுவார். அதேசமயம், அவருக்கு வரும் பிரச்சனைகளையும் திறம்பட கையாண்டுவிடுவார். அது எப்படி கவலைகள் வரும்போது, அதைப்பற்றி யோசிக்காமல் மற்றவர்களோடு அவரால் களிப்புற முடிகிறதென்று கேட்டால், “கவலைப்படுவதற்கென்று தனியாக ஒரு நேரம் வைத்துக்கொள், எப்போதும் அதையே நினைத்துக்கொண்டிருந்தால், இயல்பாக செயல்பட முடியாது” என்கிறார். அவர் கூறுவது போல, தனியாக நேரம் ஒதுக்கி கவலைப்படுவது சாத்தியமா?
ஒரு நிறுவனத்தில், அதன் மேலாளர் தன் ஊழியர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதை அந்த வாரம் முழுவதும் சொல்லிக்காட்டிக் கொண்டே இருப்பார். ஊழியரின் தவறுக்கு ஒருமுறை கூப்பிட்டு திட்டுவதோடு நிறுத்தாமல், அவரைப் பார்க்கும்போதெல்லாம் அதைப் பற்றியே அவரிடமும், அடுத்தவரிடமும் பேசுவதால், அந்த ஊழியருக்கு அங்கு வேலைசெய்வதே வெறுப்பாக இருக்கும். பலருக்கு அந்த நிறுவனத்தின் வேலை பிடித்திருந்தாலும், அந்த மேலாளரின் அணுகுமுறை பிடிக்காமல், வேலைக்கு சேர்ந்த 6 மாதத்தில் வேலையை விட்டுச் சென்றுவிடுகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் வெவ்வேறு விதங்களில், வெவ்வேறு திசைகளிலிருந்து வந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சனை தீரும்போது, புதிதாய் இன்னொன்று முளைக்கும். எந்த பிரச்சனையும் இல்லாமல் சும்மா இருக்கிறோம் என்றால், அப்படி சும்மா இருப்பதே ஒரு கட்டத்தில் பிரச்சனையாக நேரும். இப்படி வரும் பிரச்சனைகளை பற்றி அதீதமாக தொடர்ந்து யோசித்து மனதை மென்மேலும் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், வாழ்க்கை நிம்மதியாக போகுமா?
ஒருவருக்கு பணக்கஷ்டம். கடன் அதிகமாகிவிட்டது. கடன்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அதையே நாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தால், அதிலிருந்து எப்படி விடுபடுவது. நிலைமை சரிசெய்ய, வேலைக்குபோய், நன்றாக உழைத்து சம்பாதித்தால் தானே, படிப்படியாய் அந்த கடன் தொல்லையிலிருந்து விடுபடமுடியும்.
ஒருவருக்கு பிள்ளைகள் சரிவர படிப்பதில்லை, சொன்ன பேச்சை கேட்பதில்லை என்று வருத்தம். ஆனால் அதை நாள்முழுதும் யோசிப்பதில் பயனுண்டா? பிள்ளைகளுடன் குறிப்பிட்ட அளவு நேரம் செலவிட்டு, அவர்களின் வளர்ச்சிக்கு உதவினால் நிலைமை சீராகும். அதைவிட்டு எப்போது பார்த்தாலும் அதையே பேசுவதும், திட்டுவதுமாக இருந்தால், அவர்கள் எதிர்பதமாகவே இருப்பார்கள் அல்லவா!
கணவன்-மனைவிக்குள் பிரச்சனை. உறவுகளுக்குள் பிரச்சனை. அண்டை வீட்டாருடன் பிரச்சனை. எல்லாவற்றையும் தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்தால், பிரச்சனை தீருகிறதோ இல்லை, ஒரு கட்டதில் வாழ்வின் மீது வெறுப்பு வந்து, தவறான முடிவுகளுக்கு வழியேற்பட்டுவிடும். மாறாக கவலைகளை பட்டியலிட்டு, ஒவ்வொன்றாக வழிதேடினால், படிப்படியாக அவற்றை சமாளித்து வெளியே வரலாம்.
பிரச்சனை இல்லாத சூழ்நிலை எதுவுமே இல்லை. ஆனால் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது தான் இங்கு பெரும் பிரச்சனை. தொடர்ந்து அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தால், அதற்கான விடை கிடைக்காது. அவற்றிலிருந்து விடுபட்டு, அவற்றைக் காணும் கண்ணோட்டம் மாறுபடும்போது, புதிய வழிமுறைகள் தோன்றும்.
உங்களுக்கு பணக்கஷ்டம் இருக்கிறதென்றால், காலையில் ஒரு 15 நிமிடம் ஒதுக்கி, யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும், இப்போது எவ்வளவு இருக்கிறது, யாருக்கு கொடுப்பது, யாரிடம் பேசி நேரம் வாங்குவது என்று தெளிவுற திட்டமிட்டு, அடுத்த வேலைக்கு போனால், வேலையை சரிவர செய்து பணம் சம்பாதிக்க முடியும். அதைவிடுத்து வேலைசெய்யும் நேரமெல்லாம் அவருக்கு என்ன சொல்வது, இவருக்கு என்ன சொல்லவதென்று கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால், வேலை எப்படி சரியாக நடக்கும்?
நிறுவனத்தில் ஊழியர்கள் தவறு செய்துவிட்டால், அவர்களை அழைத்து அதை சுட்டிக்காட்டி உரிய திருத்தம் செய்கிறீர்கள். அதைவிடுத்து, தன் தவறை உணர்ந்து சரி செய்துவிட்ட ஊழியருக்கு, அந்த தவறை தொடர்ந்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தால் அவர் எப்படி நிம்மதியாக வேலைசெய்வார். ஒருமுறை சொல்லி திருத்திவிட்டு, அதைப் பற்றி பேசுவதையும், கவலைப்படுவதையும் விட்டுவிட வேண்டும். அதைவிடுத்து, தவறுகளையே நினைத்து வருத்துப்பட்டுக்கொண்டு, அதை குத்திக்காட்டிக்கொண்டே இருந்தால், உங்களிடம் யார் வேலை செய்வார்கள்?
உங்கள் தவறுகள், பிரச்சனைகள் எல்லாவற்றையும் பற்றி கவலைப்பட தனியாக நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஒதுக்கப்பட்ட 15-30 நிமிட நேரத்தில், உங்கள் பிரச்சனைகள், கவலைகள் எல்லாவற்றையும் பட்டியலிடுங்கள். ஒருவேலை அழவேண்டிய தேவையிருந்தால், மனம்விட்டு அழுதுவிடுங்கள். அடுத்து, பட்டியலில் உள்ள ஒவ்வொரு பிரச்சனையையும் இன்றும், நாளையும் எப்படி சமாளிப்பதென்று யோசித்து செயல்படுத்துங்கள். அந்த 30 நிமிடத்தை கடந்தபின், உங்கள் எண்ணம் முழுதும் அவற்றை செயல்படுத்துவதில் இருக்கட்டும். ஆரம்பத்தில், இடையிடையே கவலைப்படுவதை கஷ்டப்பட்டு தள்ளிப்போடுங்கள். பழகப்பழக, உங்கள் கவலைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, கையில் இருக்கும் வேலையை கவனமாக செய்து வெற்றிகான வழிபிறக்கும். அந்த கவலைகளை அதற்கான நேரத்தில் யோசித்து வழிகளை கண்டுபிடியுங்கள்.
உங்கள் பிரச்சனைகளுக்கு நேரம் ஒதுக்கி கவனிக்கும்போது, அவற்றை பட்டியலிட்டு முறையாக தீர்க்க முயற்சிக்கும்போது, அவற்றை படிப்படியாக தீர்க்கும் வழிகள் தானாக கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில், கவலைகளின் மேல் சிந்தனையை செலுத்தாமல், வேலையின் மீது கவனம் செலுத்தினால், மனம் நிம்மதியாகவும், அமைதியாகவும் இருப்பதோடு, வாழ்க்கை அர்த்தமுடையதாக நகரும். அது எப்படி கவலைப்படுவதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க உட்கார முடயும்? என்று என்னிடம் கேட்காதீர்கள். அதற்கான வழியை நீங்கள்தான் யோசிக்க வேண்டும். எப்போது கவலைப்படுவது, எப்போது அவற்றை தூர வைத்துவிட்டு வேலையை கவனிப்பது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது!
தினம் முழுவதும் கவலைப்பட்டு
கவலையினால் உடலை வருத்தி
வாழ்க்கையும் கவலையும் ஒன்றாக்கினால்
வாழ்வதன் பொருளே கவலையாகிவிடும்!
கவலைப்படுதவதற்காகவா பிறந்தீர்கள்?
வாழ்வின் இடையில் வரும் கவலைகளுக்கு
அளவாக நேரம் ஒதுக்கி அதை திறம்பட கையாண்டால்
அதுவும் வந்தவழி போய்விடுமே!
கவலைமறந்து வாழ்வதற்காகத்தானே
மறதியை கொடுத்தான் இறைவன்!
கவலைக்கான நேரம்தவிர்த்து
ஆக்கத்தை நோக்கி கவலைமறந்து உழைப்போம்!
இங்கு எல்லாமே நம் கட்டுப்பாட்டில்
நம் எண்ணம்போல் உருவாகும் என்று உறுதியாக நம்புவோம்!
- [ம.சு.கு 08.09.2023]
Comments