top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 333 - கட்டுப்படுத்த முடியாதவைகள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-333

கட்டுப்படுத்த முடியாதவைகள்...!


  • மாவட்ட அளவில் ஒரு வில்வத்தைப் போட்டி நடந்தது. பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற போட்டி, சற்று கடுமையாகவே இருந்தது. நன்கு பயிற்சி பெற்ற சிலமாணவர்கள் அருமையாக அம்புகளை தொடுத்தார்கள். ஆனால், அந்த பகுதியில் வீசிய அதிக காற்றின் காரணமாக அவர்களால் இலக்குகளை துல்லியமாக அடிக்கமுடியவில்லை. அதேசமயம் போட்டி நடத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் வெற்றி பெற்றார். தோல்வியுற்ற மாணவர்கள், காற்றை பெரிய காரணமாக தங்களின் பயிற்சியாளரிடம் கூறினார்கள். அன்று அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறினார்கள். உண்மைதான் இயற்கையின் செயலை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமா?

  • தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். உங்கள் வெற்றியை தீர்மானிப்பது வாக்காளர்கள். அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதேசமயம் நீங்கள் நல்லவர் என்று பெயரெடுத்திருந்தால், முன்னர் கிடைத்த வாய்ப்புக்களில் மக்களுக்கு நல்ல சேவை புரிந்திருந்தால், உங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். பள்ளித் தேர்வில் என்ன கேள்விவரும் என்பது உங்கள் கையில் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் படித்திருந்தால், என்ன கேள்வி வந்தாலும் உங்களால் வெற்றிகான முடியும்;

நீங்கள் விளையாடுவது வில் வித்தையோ, குழிப்பந்தாட்டமோ [கோல்ப்], ஈட்டி எரிதலோ, விளையாட்டு எதுவானாலும், உங்களால் கட்டுப்படுத்தக் கூடிய விடயங்கள் சில இருக்கும், கட்டுப்படுத்த முடியாத விடயங்கள் சில இருக்கும். நல்ல பயிற்சி, உடல் தகுதி, மனதை ஒருமுகப்படுத்துதல் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில், அதேசமயம் காற்று, மழை போன்ற இயற்கை சூழ்நிலை மாற்றங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் நீங்கள், இந்த கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளால் தோல்வியுற்றால், அதை காரணமாக சொன்னால் உலகம் ஏற்குமா? உடனே உங்களை பார்த்து கேட்கப்படும் கேள்வி “வெற்றி பெற்றவரும் அதே சூழலில்தானே போட்டியிட்டு வென்றார்?”. இந்த கேள்விக்கு உங்களிடம் உரிய பதில் இருக்கிறதா?

உங்களால் கட்டுப்படுத்த முடியாதவைகள் இருக்கும். அதே எல்லோருக்கும் பொதுவானது. அந்த சவாலான தருணத்தை எப்படி நேர்த்தியாக திட்டமிட்டு கடக்கிறீர்கள் என்பதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. அந்த வில்வித்தைப் போட்டியில், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கு காற்றின் வேகத்தையும், அதன் போக்கையும் கவனிக்க முடிந்தது. அந்த காற்றின் போக்கிற்கு ஏற்ப அவன் அம்புகளை கணித்துத் தொடுத்ததன் மூலம் வெற்றிபெற முடிந்தது. காற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, அது பயனற்ற முயற்சி என்று விலகினால், எல்லாவற்றிலுமிருந்து விலகியோட வேண்டியதுதான்.

தேர்வுத்தாள் கடினமென்று சொல்கிறார்கள். அதேசமயம், ஒருசிலர் அதில் 100/100 வாங்குகிறார்கள். எல்லாவற்றையும் நன்கு படித்தவனுக்கு கேள்வித்தாளில் கடினம் என்று சொல்ல ஒன்றுமிருக்காது. படிக்காதவனுக்கு எல்லாமே கடினம் தான். தேர்தலில் போட்டியிடுபவன், பணத்தை கொடுத்து ஜெயிக்கலாம் என்று கணக்குப்போட்டால், அதையே எதிராளியும் நினைத்தால் நிலைமை என்னவாகும். வாக்காளரின் வாக்கை பெற, பணத்தைக் காட்டிலும் நற்செயல்தான் நிரந்தரவழி என்பதை உணர்ந்து தன் செயல்களால் வெல்பவன் நிரந்தர வெற்றியாளனாகலாம்;


இங்கு எல்லாவற்றிலும் ஏதேனுமொரு கட்டுப்படுத்த முடியாத ஓரிரு தடங்கள்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். தோல்விக்கு அதை எப்போது வேண்டுமானாலும் காரணமாக சொல்லி எளிதாக தப்பிக்கலாம். ஆனால் அதே சூழ்நிலையில் ஒருவன் வெற்றி பெருகிறான் என்ற நிதர்சனத்தை உணர்ந்தால், உங்களின் கண்ணோட்டம் மாறும். நீங்கள் கட்டுப்படுத்த முடயாததென்று எண்ணுபவைகளை எப்படி சாமர்த்தியமாக கடந்துவரவேண்டுமென்று யோசிக்கத் தோன்றும். ஆம்! காற்றின் வருகையையோ, அதன் வேகத்தையோ உங்களால் முன்கூட்டியே அறிய முடியாது. ஆனால் ஒருவேலை காற்றுவந்தால், அதன் போக்கை கவனித்து, அதற்கேற்ப உங்கள அம்புகளை எப்படி தொடுக்கவேண்டுமென்று உங்களால் திட்டமிட முடியும். உங்கள் அம்பின் கோணமும், இழுவிசையும், அதற்கேற்ப அனுசரிக்கப்பட்டால், இலக்கு கட்டாயம் துல்லியமாக தாக்கப்படும்.


அப்படித்தான் உங்கள் அன்றாட வாழ்வு, கல்வி, வியாபாரம் என்று எல்லா விடயங்களும்; எல்லா இடங்களிலும் நிறைய கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை வெற்றிகரமாக கடந்து செல்ல, அந்த நிகழ்வுகளின் போக்கை கவனித்து அதற்கேற்ப உங்கள் செயல்களை திட்டமிடுவதில்தான் உங்கள் சாமர்த்தியமும், வெற்றியின் சூத்திரமும் அடங்கியிருக்கிறது. அதற்கான முயற்சிகளை எடுக்காமல் மற்றவர்களைப் போல, தோல்விக்கான காரணத்தை சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? அல்லது வெற்றியை உங்கள் வசப்படுத்தப் போகிறீர்களா?

  • சந்தையில் விலை ஏற்றம-இறக்கம் இருக்கலாம். அதற்கேற்ப உங்கள் கொள்முதல் இருந்தால், உங்கள் இலாபம் மாறப்போவதில்லை. விலை ஏற்ற-இறக்கம் குறித்து நீங்கள் கவலை கொள்ளவும் தேவையில்லை;

  • போக்குவரத்து நெரிசலில் சிக்கி போகவேண்டிய இடத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படலாம். ஒன்று முன்னதாக கிளம்பி இந்த நெருக்கடியை தவிர்த்திருக்கலாம். அல்லது, தாமதத்திற்கு பதட்டப்படாமல், சந்திக்கவேண்டியவருக்கு உரிய தகவல் சொல்லிவிட்டு, சாலையில் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில், அந்த சந்திப்புக்கு மேற்கொண்டு தயார் செய்யலாம்; ஒரு சந்திப்பில் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை என்பது யதார்த்தம்.

கட்டுப்படுத்த முடியாதவைகள் என்ன? அவற்றை எப்படி கையாள்வதென்று இங்கு நான் பட்டியலிடப் போவதில்லை. உங்கள் அன்றாடன் வாழ்வின் சூழ்நிலைகளுக்கேற்ப அவற்றை நீங்களே பட்டியலிடுங்கள். அவற்றை எப்படி சந்தித்து கடந்து வரப்போகிறீர்கள் என்பதை நீங்களே திட்டமிடுங்கள். வெற்றி உங்கள் கையில்!


இங்கு எல்லாமே கட்டுப்படுத்த முடியாதவைகள் தான்! - அதே சமயம்

இங்கு எல்லாமே கட்டுப்படுத்தக் கூடுயவைகள் தான்!

இரண்டிற்குமான வேறுபாடு,

உங்கள் கண்ணோட்டத்திலும், செயலிலும் இருக்கிறது.


தோல்விக்கு கதையும் காரணமும் தேடுகிறீர்களா? – அல்லது

எப்படி வென்றேன் என்று வரலாறு சொல்ல விரும்புகிறீர்களா?


போட்டிச் சூழ்நிலை எல்லோருக்கும் பொதுவாக இருக்கும்போது

இந்த கட்டுப்படுத்த முடியாதவைகளின் மீதான உங்கள் அணுகுமுறை

உங்கள் வெற்றியை தீரமாணிக்கிறது!

காற்றின் போக்கையும், சந்தையின் போக்கையும் கவனித்து

சாமர்த்தியமாக கடப்பவர்களால் மட்டும்

சரித்திரம் படைக்கப்படுகிறது!


- [ம.சு.கு 07.09.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page