top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 328 - தலைமுறை இடைவெளி....!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-328

தலைமுறை இடைவெளி...!


  • நூற்றாண்டுகால பழமை வாய்ந்த நிறுவனம் ஒன்று, சென்ற நூற்றாண்டின் இறுதியில் கணிணி மயமாக்க திட்டமிட்டது. 5 ஆண்டுகள் போராட்டம், சில கோடிகளை முதலீடு, என்று செய்த முயற்சிகள் எதுவும் அவ்வளவாக பயனளிக்கவில்லை. கடைசியில், ஒரு ஆலோசகரின் அறிவுரையிம் பேரில், 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு, கட்டாய ஓய்வை அறிவித்து செயல்படுத்தினர். அதிக தொகை அவர்களுக்கு கட்டாய ஓய்வில் வழங்கப்பட்டதால், ஓரிருவரைத் தவிர, மற்றவர்கள் ஓய்வை ஏற்றனர். அடுத்த ஒராண்டில், கணிணி மயமாக்களும், மென்பொருள் பயிற்சிகளும் வேகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்று முடிந்தது. தலைமுறை இடைவெளியையும், அவர்களின் குணநலன்களையும் புரிந்துகொள்ளாமல் எடுத்த முதல்கட்ட முயற்சிகளும், முதலீடும் வீணாகிப்போனது! மாற்றத்தை விரும்பாத கூட்டம் குறையும்போது, விரும்புபவர்களின் கூட்டம் எல்லோரையும் இழுத்துச் சென்றுவிடுகிறது.

  • ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், தன்னுடைய புதிய படைப்புக்களை வழக்கம்போல அழகான புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிட்டார். வழக்கம் போல். நன்றாக விற்றன. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டபோது கிடைத்த வாசகர் வளர்ச்சி இந்த முறை ஏதுமில்லை. நூலுக்கு வரவேற்பு இருந்தாலும், விற்ற பதிப்புக்கள் சென்ற முறை இருந்த அதே அளவுதான். வாசகர் கருத்துக் கணிப்பில், புதிய தலைமுறையினர் வாங்கியது 30%-40% குறைந்துவிட்டதென்று தெரியவந்தது. இன்னும் ஆழமாக பார்த்தால், இன்றைய புதிய தலைமுறையினர், பதிப்பிட்ட புத்தகங்களுக்கு பதிலாக, இ-புத்தக முறைக்கு மாறிவிட்டது தெரியவந்தது. ஓரிரு மாதத்தில், அந்த நூலின் கணிணிவடிவ இ-புத்தகம் வெளியானபோது, அச்சிடப்பட்ட நூலைவிட இரண்டு மடங்கு அதிகம் விற்றது. இ-புத்தகத்தில், எழுத்தாளருக்கு கூடுதல் வருவாயும் வழங்கப்பட்டபோதுதான் அவருக்கு புரிந்தது, எழுத்துக்கும், வாசகருக்கும் தலைமுறை இடைவெளி இருப்பதைத்தாண்டி, இன்று நூல் அச்சிடுவதிலும், வாகரிடம் கொண்டு சேர்ப்பதிலும் நிறைய தலைமுறை இடைவெளி ஏற்படுள்ளது.

தன் ஓய்விற்கு 5-10 ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றபோது, புதியவற்றை கற்பதில் ஆர்வம் முற்றிலுமாய் குறைந்துவிடுகிறது. மீதமிருக்கும் வருடங்களை அப்படியே தெரிந்ததை வைத்து ஓட்டிச் செல்லலாம் என்ற எண்ணத்திற்கு பெரும்பாலானவர்கள் வந்து விடுகின்றனர. 1990-களில், கணிணிமயமாக்க முயற்சித்த எண்ணற்ற வங்கிகளுக்கு, இது பெரும் சவாலாக இருந்தது. இங்கே அந்த நிறுவனங்களுக்கு இருந்தது இரண்டு தேர்வுகள் தான் –

  1. ஊழியர்கள் மாற்றத்தை விரும்பாததால், பழைய முறையை அப்படியே தொடர்வது!!

  2. மாற்றம் காலத்தின் அவசியமாகிவிட்டதால், மாற்றத்தை விரும்பாதவர்களை வெளியே அனுப்பிவிட்டு, முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது!!

முன்னேறத் துடித்த நிறுவனங்கள் 2-வது தேர்வை எடுத்தது. ஏனையவைகள் 1-வது தேர்விலேயே நின்று 8-10 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேறின. அந்த சூழ்நிலைகளில், ஊழியர்களுக்கும் இரண்டு தேர்வுகள்தான் இருந்தன;

  1. மாற்றத்தை ஏற்று, புதியவற்றை கற்று, நிறுவனத்தின் வளர்ச்சியுடன் தானும் வளர்வது!

  2. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், புதியவற்றை கற்க ஆர்வமில்லாமல், நிறுவனத்தில் இருந்து சீக்கிரம் வெளியேறுவது!

நீங்கள் நிறுவனத்தின் இயக்குனராகவோ, முதலாளியாகவோ இருந்தால், உங்கள் தேர்வு என்ன? நீங்கள் ஊழியராக இருந்தால், உங்கள் தேர்வு என்ன?


முந்தைய தலைமுறையினர், எழுத்துக்களை அச்சிடப்பட்ட நூல் வடிவில் படிக்க விரும்புகின்றனர். அதேசமயம் இன்றைய தலைமுறையினர், நூலைச் சுமப்பது கடினம் என்பதால், அவற்றை கணிணி / கைபேசி திரையில் எங்குவேண்டுமானாலும் படிக்கும் படி இருக்கவேண்டும் என்று இ-புத்தகத்தை விரும்புகின்றனர். ஒரு எழுத்தாளராக, பதிப்பாளராக இரண்டு வடிவங்களையும் புரிந்து வெளியிட்டால், நீங்கள் இரண்டு தலைமுறை வாசகர்களையும் அரவணைத்து செல்லலாம். ஏதாவதொன்றை மட்டும் வெளியிட்டால், இன்னொருசாரார் அதை கண்டுகொள்ளாமலே போகக்கூடும்.


இந்த தலைமுறை இடைவெளி வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.

  • அன்று நாம் பள்ளியில் கற்ற முறையில் இன்று பாடங்கள் இல்லை. கல்வி முறைமை மாறிவிட்டது. அதை புரிந்து கொள்ளாமல் மாணவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தால் பயனிருப்பதில்லை.

  • அன்று பயன்படுத்திய பயணம் செய்த முறைகள், தகவல் தொடர்பு முறைகள் எல்லாம் மாறிவிட்டன. இன்று அவற்றின் வேகம் பலமடங்கு அதிகரித்துவிட்டன. எங்கு எது நடந்தாலும், அடுத்த சில விநாடிகளில் உங்கள் வீட்டுத் திரையில் அவை காட்டப்பட்டு விடுகின்றன.

  • உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று அத்தியவசிய தேவைகளுக்காக உழைத்த தலைமுறை இன்றில்லை. இன்று ஆடம்பரம், சமுதாய அங்கீகாரம், நிறுவனத்தின் அமைப்பு என்று வெவ்வேறு கோணங்களில் ஊழியர்கள் பார்க்கிறார்கள். வேலை கிடைக்க வேண்டும் என்று ஊழியர்கள் தவமிருந்த காலம் போய், ஊழியர்களை வேலையில் தக்கவைக்க வேண்டி முதலாளிகள் தவம் இருக்கும் நிலை இருக்கிறது;

  • அன்றாட தேவயான உண்ணும் உணவிலும், உடுத்தும் ஆடையிலும், ஆயிரமாயிரம் புதுமைகள், வகைகள் வந்துவிட்டன. ஏதாவது ஒன்றிரண்டை மட்டும் வைத்துக்கொண்டு உங்களால் கடைநடத்த முடியாது. ஏனெனில் ஒரு வாடிக்கையாளர் குடும்பம் வந்தால், அவர்கள் 4 நபருக்கு, 5-6 விதமான மாறுபட்ட எதிர்பார்ப்புக்களும், தேவைகளும் இருக்கின்றன.

20-ம் நூற்றாண்டுதான், எண்ணற்ற தலைமுறை இடைவெளியை ஒரே நூற்றாண்டுக்குள் கண்டிருக்கிறது. 100-200 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த காலம் போய், இப்போது 10 ஆண்டுக்கொரு முறை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். மக்களின் வளர்ப்புமுறை, பொருளாதார சூழ்நிலை, கல்வி முறை, வியாபார-வர்த்தக முறை, எண்ணங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, மேற்கத்திய நாட்டினர் 20-ம் நூற்றாண்டினரை கீழுள்ளவாறு பிரித்திருக்கின்றனர்.

  • 1901-27 – [கிரேடஸ்ட் ஜெனரேசன்]

  • 1928-45 – அமைதி தலைமுறையினர் [சைலன்ட்] – உலக யுத்தகாலங்களில் பிறந்தவர்கள்

  • 1946-64 – [பூமர்கள்] – உலக யுத்தங்களுக்குப்பின் பிறந்தவர்கள்

  • 1965-80 – எக்ஸ் தலைமுறையினர் [ஜெனரேஷன் எக்ஸ்]

  • 1981-96 – [மில்லனியல்ஸ் / ஜெனரேஷன் ஒய்]

  • 1987-2012 – [ஜெனரேஷன் இசட்]

  • 2013-..... – [ஜெனரேஷன் ஆல்பா]

[குறிப்பு ; இவைகளில் பலவற்றிற்கு இன்னும் உரிய தமிழ் சொற்கள் அகராதியில் வரவேயில்லை.]


உங்கள் வாழ்வில், வியாபாரத்தில், கற்றல் பயனத்தில் இந்த தலைமுறை இடைவெளியை எப்போதும் மறந்து விடாதீர்கள். இன்றைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்லும் விதமும், முந்தைய தலைமுறையினருக்கு சொல்லவேண்டிய விதங்களிலும் எண்ணற்ற மாற்றம் இருந்தால்தான், உங்களால் எல்லோரையும் வெற்றிகரமாக அரவணைத்துச் செல்லமுடியும். என்னதான் எண்ணிம நாணயங்கள் [டிஜிட்டல் கரண்சி] வந்துவிட்டாலும், இன்னும் அவற்றை தெரியாத மக்கள் இருக்கும்வரை, அரசாங்கம் ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கமுடியாது, ஏனெனில் எல்லாத் தலைமுறையினரையும் அரவணைத்து செல்லவேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைப்போல, உங்கள் நிறுவனம், பொருட்கள், ஊழியர், வாடிக்கையாளர் என்று எல்லாவற்றிலும் தலைமுறை இடைவெளி விடயத்தில் கவனமாக இருந்துவிட்டால், உங்கள் வெற்றியை யாராலும் அசைக்க முடியாது.


கையில் சாப்பிடும் தாத்தாவும் இருக்கிறார் – அதேசமயம்

எதிரிலமர்ந்து கரண்டியில் சாப்பிடும் பேரனும் இருக்கிறார்!

இருவரும் ஒரே இடத்தில் ஒருசேர இருப்பதால்,

எல்லாவற்றையும் அனுசரித்து போகும்விதத்தில்

உங்கள் வியாபாரத்தை கட்டமையுங்கள்!


வியாபார கொள்கையும், ஊழியர் பங்களிப்பும்

உற்பத்தி முறைமையும், வாடிக்கையாளர் தேவையும்,

அரசியல் சூழ்நிலைகளும், பொருளாதார நிலையும்

தலைமுறை இடைவெளியில் நிறைய மாறிவிட்டன!


தலைமுறைகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள்

பொருட்களும், சேவையும், விளம்பரமும் இருந்துவிட்டால்

உங்கள் பயணம் எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்!



- [ம.சு.கு 02.09.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page