top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 327 - என்னென்ன காப்பீடு செய்துள்ளீர்கள்...?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-327

என்னென்ன காப்பீடு செய்துள்ளீர்கள்..?


  • வாகனங்களுக்கு உரிய காப்பீடு செய்திருக்க வேண்டுமென்று சட்டமிருக்கிறது. ஆனால் அது என்ன காப்பீடு என்று தெரியுமா உங்களுக்கு? ஒருசமயம் எனக்குத் தெரிந்தவர் வாகன காப்பீடு இல்லாததால், ஓராயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினார். அப்போது “இது என் வண்டி, நான் காப்பீடு எடுக்கிறேன் – எடுக்கவில்லை, வண்டிக்கு சேதாரமானால் காப்பீட்டில் காசு கேட்காமல் என் காசில் சரிசெய்து கொள்கிறேன், இதற்கேன் அரசாங்கம் காப்பீடு வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறது?” என்று கேட்டார். அவரது கேள்வி நியாயமானதாக தோன்றுகிறதா? அந்த கேள்வி சரியா?

  • தொழிற்சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டால், உயிர்களை காக்க, சேதாரத்தை குறைக்க பேரிடம் மேலாண்மை இருக்க வேண்டுமென்று முன்னர் படித்தோம். உயிர்களை காத்தீர்கள், சேதாரத்தை குறைத்தீர்கள். ஆனால் ஏற்பட்டுருக்கும் சேதங்களால் வியாபாரம் துவங்க 1-2 மாதங்கள் ஆகலாம். இழப்புகளை சரிசெய்ய சிலகோடிகளில் செலவாகலாம். ஏற்கனவே கடன் வாங்கி வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள், இந்த இழப்பை எப்படி சமாளிப்பார்கள்? யார் பணம் தருவார்கள்? ஒருவேளை விபத்தில் உயிர்சேதங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு எங்கிருந்து நஷ்டஈடு கொடுப்பது?

வாகன காப்பீடு இருந்தால், வாகனத்திற்கு ஏற்படும் விபத்து சேதாரங்களுக்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிவிடும். காப்பீடு இல்லாவிட்டால், உங்கள் பணம்தான் செலவாகும். இதற்காகவே இந்த அரசாங்கம் காப்பீட்டிற்கு இத்தனை போக்குவரத்து காவலர்களை வைத்து அபராதம் வசூலிக்கிறது என்று கேட்காதீர்கள். அரசாங்கம் உங்கள் வண்டிக்கு காப்பீடு இருக்கிறதா என்று கேட்பதில்லை. உங்கள் வண்டி ஒருவேளை விபத்து ஏற்படுத்தினால், அதனால் பாதிக்கப்போகும் மூன்றாம் நபருக்கு நஷ்டஈடு வழங்க, வாகன மூன்றாம் நபர் காப்பீடு இருக்கிறதா என்றுதான் சோதிக்கிறார்கள். அரசாங்கத்திற்கு உங்கள் வண்டிமீது அக்கரை இல்லை. பொதுமக்கள் மீதான அக்கரையில்தான் அந்த சட்டங்கள். நீங்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு, 5000 அபராதம் கட்டிவிட்டு போய்விடுவீர்கள். அந்த விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்குவது யார்? நீதிபதி உங்களை கொடுக்கச் சொல்லும்போது, உங்களிடம் பணமில்லை என்று நீங்கள் கைவிரித்தால், அவர்கள் கதி என்ன? அதற்குத்தான் இத்தனை மெனக்கெட்டு அரசாங்கம் வாகனத்தின் மூன்றாம் நபர் காப்பீட்டை சோதிக்கிறது!!


இங்கு எல்லாவற்றிற்கும் ஒருநாள் அழிவு இருக்கிறது. அந்த அழிவு, நம் காலத்தில், நம் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களுக்கு ஏற்படும்போது, அவற்றை சரிசெய்யவேண்டிய அவசியம் வருகிறது. கைக்கும்-வாய்க்குமென அளவான சம்பாத்தியத்தில் போய்கொண்டிருந்தால், திடீரென்று ஏற்படும் பெரிய இழப்புகளுக்கு எங்கிருந்து பணம் வரும். தொழிற்கூடத்தில் தீ விபத்தோ, நிலநடுக்கத்தால் சேதமோ, இயந்திர கோளாறுகளால் விபத்தோ – எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவற்றை சரிசெய்ய ஒரு கோடி செலவு செய்வதற்கு பதிலாய் முதலில் ஒரு இலட்சம் செலவுசெய்து காப்பீடு செய்திருந்தால், சேதாரத்தை சரிசெய்வதற்கான செலவை அந்த காப்பீட்டு நிறுவனம் கொடுத்திருக்குமே!


காப்பீட்டிற்கு கட்டவேண்டிய சந்தாவை, பணம் செலவாகிறதே என்று கவலைப்பட்டு கட்டாமல் விட்டதால், சேதாரம் ஏற்பட்டபோது, எல்லாவற்றையும் இழந்துநின்றவர்கள் நம்மில் ஏராளம்! அப்படி நீங்கள் எந்த காப்பீட்டை கட்டாமல் விட்டுள்ளீர்கள்?


காப்பீடு என்பது வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் இலாபத்தை குறிவைத்து செய்யும் செலவோ, செயலோ அல்ல! அது, ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால், அந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்கான ஒரு செலவினம். பெரிய நஷ்டங்களை நம்மால் தாங்க முடியாது. அதனால், இலட்சம் பேர் சேர்ந்து ஓரிருவருக்கு ஏற்படும் நஷ்டங்களை பகிர்ந்துகொள்வதுதான் காப்பீடு. சிறிய செலவினத்தை பார்த்து, பெரிய நஷ்டங்களில் சிக்கினால், இழப்பு யாருக்கு?

  • தொழிற்கூடங்களிலுள்ள உடமைகளுக்கு எல்லா வகையான காப்பிடுகளும் உண்டு. நீங்கள் செய்துவிட்டீர்களா?

  • உங்கள் உயிருக்கு காப்பீடு உண்டு. உங்கள் திடீர் இழப்பினால் உங்கள் குடும்பம் பொருளாதார சிக்கலில் தவிக்காமலிருக்க அது பேருதவியாக இருக்கும். எவ்வளவு தொகைக்கு உங்களை காப்பீடு செய்துள்ளீர்கள். நீங்கள் காப்பீடு செய்துள்ள தொகை உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு போதுமானதாக இருக்குமா?

  • இன்றைய அவசர உலகத்தில், மருத்துவ செலவுகள் மலைக்க வைக்கிறது. அதை சமாளிக்க போதுமான மருத்துவ காப்பீடு செய்திருக்கிறீர்களா?

  • உங்களை நம்பியுள்ள ஊழியர்களுக்கு, விபத்து ஏற்பட்டால் நஷ்டஈடு கொடுக்க, ஊழியர் நலன் சார்ந்த என்னென்ன காப்பீடுகளை எடுத்துள்ளீர்கள்?

முனைப்புடன் காப்பீடுகளை எடுத்துவிட்டீர்கள். நீங்கள் எடுத்துள்ள எல்லா காப்பீடுகளும் எப்போது காலாவதியாகும்? எப்போதைக்குள் மறுசந்தா செலுத்த வேண்டுமென்று தெரியுமா உங்களுக்கு? காப்பீடு காலாவதியாவது தெரியாமல், காப்பீடு இருக்கிறதென்று கண்டுகொள்ளாமல் சுற்றித்திறிபவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் பிறந்ததேதியை நினைவில் வைத்து கொண்டாடும் நீங்கள், உங்கள் காப்பீட்டு சந்தா தேதிகளையும் குறித்துவைத்து புதுப்பித்தால், அதற்கான முழுப்பயனும் வரும். இல்லாவிட்டால், காப்பீடு செய்தும் பயனில்லாமல் போனதே என்று பின்னொருநாளில் வருத்தப்பட வேண்டியதுதான்!!


உயிர்களுக்கு காப்பீடு; உடமைகளுக்கு காப்பீடு;

மருத்துவத்திற்கு காப்பீடு; பயனத்திற்கு காப்பீடு;

வர்த்தகத்திற்கு காப்பீடு; வழக்குகளுக்கு காப்பீடு;

வாகனத்திற்கு காப்பீடு; வாராக் கடனுக்கு காப்பீடு;

நாணயத்திற்கு காப்பீடு; நஷ்டஈட்டிற்கு காப்பீடு;

அப்பப்பா எத்தனை வகை காப்பீடுகள்! – இவற்றில்

உங்கள் தேவைக்கு என்னென்ன காப்பீடு செய்துள்ளீர்கள்?


காப்பீடு செய்கிறீர்கள்;

எவ்வளவு தொகைக்கு? என்னென்ன அபாயங்களுக்கு?

காப்பீட்டு பத்திரத்திலுள்ள சரத்து-சாராம்சங்கள் என்னென்ன?

இவையனைத்தையும் தெரிந்தும், புரிந்தும் செய்கிறீர்களா?

செய்த காப்பீட்டை உரிய நேரத்தில் புதுப்பிக்கிறீர்களா?


காப்பீட்டு விடயத்தில், இங்கே கேள்விகள்தான் அதிகம்

இதற்கான விடைகள் உங்கள் செயலில்தான் கிடைக்கப்பெறும்?


- [ம.சு.கு 01.09.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page