“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-326
கடன் எவ்வளவு கொடுக்கிறீர்கள்...?
அன்றாடம் 1000 ரூபாய் கடன் வாங்கி, சந்தையில் தக்காளி வாங்கி, வண்டியில் வீதியில் விற்பவர், மாலைக்குள் அதை 1500 ரூபாய்க்கு விற்று, போதுமான இலாபம் சம்பாதிக்கிறார். அதேசமயம், அந்த 1000 ரூபாய் தக்காளியை 2000 ரூபாய்க்கு விற்கும் கடைக்காரர், ஏனோ காரணத்தால் நஷ்டப்பட்டு கடையை மூடினார். வாங்கியதைவிட இரட்டிப்பு விலைக்கு விற்பவருக்கு, பொருளும் விற்றுத் தீர்ந்த நிலையில், ஏன் நஷ்டம் ஏற்பட வேண்டும். இது சாத்தியமா?
வங்கிகளின் வாராக் கடன்கள் பற்றி கடந்த 10 ஆண்டுகளாக போதுமான அளவிற்கு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் அலசி செய்திகள் வெளியிட்டுவிட்டன. சமீபத்தில் 95 ஆண்டுகால பழமை வாய்ந்த லட்சுமி விலாஸ் வங்கி, வாராக் கடன் அதிகரிப்பால், அப்படியே பூஜ்ஜிய விலைக்கு கைமாறியது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, வாராக் கடன்களின் காரணத்தினால் தானே துவங்கியது. செயற்கையாக உருவாக்கப்பட்ட கடன் மீதான கடன் பத்திரங்கள் அளவுகடந்து விற்கப்பட்டன. அந்த அடிப்படை கடன்கள் குறித்த நேரத்தில் வராமல் போகவே, அதன் மீதான கடன்பத்திரங்கள் எல்லாம் மூழ்கின!
அன்றாடம் வண்டியில் வைத்து விற்பவன், தெருத்தெருவாக சென்றுவிற்று, அன்றைய பணத்தை அன்றைக்கே வாங்கி கணக்கை முடிக்கிறான். இலாபமோ, நஷ்டமோ, அன்றைய தினம் கணக்கு முடித்து மீத பணத்தோடு வீடு திரும்புகிறான். ஆனால், நிரந்தரமாக கடைவைத்து வியாபாரம் செய்பவன், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கிறான். ஒரு சில இடங்களில் புத்தகம் போட்டு மாதம் முழுவதும் கடனுக்கு வியாபாரம் செய்துவிட்டு, அடுத்தமாதம் அவர்களுக்கு சம்பளம் வரும்போது வசூலிக்கிறான்.
அப்படி கடனுக்குகொடுத்தது, அடுத்த மாதம் வசூலாவதில் தாமதமானாலோ, வராமல் போனாலோ, மேற்கொண்டு பொருட்களை கொள்முதல் செய்ய வழியில்லாமல் இவன் வெளியில் கடன் வாங்குகிறான். இந்த சுழற்சி சரிசெய்யப்படாமல் தொடர்ந்தால், சீக்கிரத்தில் பணப்பற்றாக்குறையினால் கடையை மூடுகிறான். அவன் பொருளை இலாபத்திற்குத்தான் விற்றான். ஆனால் அவனது இலாபமெல்லாம் கணக்கு ஏட்டில் மட்டும் தான் இருக்கும். ரொக்கமாக கையில் இல்லை. ரொக்கமெல்லாம் வாடிக்கையாளர் கையில் சிக்கிக்கொள்கிறது. இப்படி உங்கள் வியாபாரத்தில் நீங்கள் ஈட்டிய இலாபங்கள் எந்தளவிற்கு வாடிக்கையாளரிடம் வாராக் கடன்களாக மாட்டியிருக்கின்றன?
கடனுக்கு கொடுத்து மூழ்குவது வியாபாரங்கள் மட்டுமல்ல! இங்கு எல்லா வங்கிகள் வளர்ச்சியும் வீழ்ச்சியும் வாடிக்கையாளருக்கு கொடுக்கும் கடன், எந்தளவிற்கு சரியாக வசூலாகிறது என்பதைப்பொருத்தே அமைகிறது. இந்த வராக்கடன்களால் ஏற்படம் நஷ்டத்தை ஈடுகட்ட வங்கிகள் கடனுக்கான வட்டி சதவிகிதத்தை அதிகரிக்கின்றன. வீட்டுக்கடனுக்கான வட்டி 10% சதவிகிதம். ஆனால் கடன் அட்டையின் மீதான வட்டி 30%. ஏனென்னில் வீட்டுக்கடனில், பணம் வசூலாகாவிட்டால், அடமானமாக பெற்ற வீட்டை ஏலம் விட்டு பணத்தை வசூலிக்கலாம். ஆனால் கடன் அட்டைகளுக்கு கொடுத்தபணம், வரவில்லை என்றால், நஷ்டம் தான். இந்த வட்டிவிகித எல்லைகளைத் தாண்டி வாராக் கடன் அதிகரித்தால், வங்கி திவால் தான்!!
வங்கிகள், பெருநிறுவனங்களின் கடன் மேலாண்மை ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் வியாபாரத்திற்கு வருவோம்;
உங்கள் வியாபாரத்தில், எத்தனை சதவிகிதம் ரொக்கத்திற்கும், கடனுக்கும் விற்பனையாகிறது?
ரொக்கத்திற்கும், கடனுக்கும் விற்கப்படும் பொருட்களுக்கு விலையில் வேறுபாடு இருக்கிறதா? அல்லது அந்த கடனுக்கான வட்டியை நீங்கள் கையிலிருந்து கட்டுகிறீர்களா?
நீங்கள் எவ்வளவு நாட்களில் கொடுக்கவேண்டுமென்று சொல்லி கடனுக்கு கொடுக்கிறீர்கள்?
வாடிக்கையாளர் உரிய நாளில் பணத்தை கொடுக்கிறாரா? அப்படி அவர் ஒருவேளை கொடுக்க மறந்தால், அதை முன்கூட்டியே நியாபகப்படுத்தவும், வசூலிக்கவும், தனியாக ஊழியர்களை நியமித்து அவற்றை வசூல் செய்கிறீர்களா?
ஒவ்வொரு ஆண்டும், உங்கள் வாராக் கடன்கள் எவ்வளவு சதவிகிதம் இருக்கின்றன?
வரவேண்டிய பணத்தின் தாமதங்கள் எவ்வளவு, என்ன காரணம், மாற்று உபாயங்கள் என்ன என்பதற்கான அறிக்கைகள் தினமும் உங்களுக்கு வருகிதா? அவற்றைப்பற்றி ஊழியர்களுடன் அலசுகிறீர்கள்?
நீங்கள் கொடுக்க வேண்டியவைகளுக்கு நீங்கள் தான் எஜமானன். அதேபோல உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டியவற்றிற்கு, அதை கொடுக்க வேண்டியவர்தான் எஜமானர். வாடிக்கையாளர் உறவை பாதிக்காமல், எப்படி கொடுத்த கடனை பக்குவமாக வசூலிப்பதென்பது ஒருவகையான வியாபாரக் கலை.
கஷ்டமும், நஷ்டமும் வேண்டாம் என்றால் கடன் கொடுக்காமல் இருந்து விடலாம். ஆனால் இன்றைய போட்டி நிறைந்த உலகில், கடனுக்கான வியாபாரம் தான் அதிகம். சில்லறை விற்பனையில் மட்டுமே ரொக்கம் பெரும்பாலும் சாத்தியப்படுகிறது. எல்லா மொத்த வியாபாரங்களும் பெரும்பாலும் கடனுக்குத்தான் நடக்கிறது. அந்த கடனுக்கு கொடுத்து வாங்கும் வியாபாரத்தில், வாடிக்கையாளர் உறவை பாதிக்காமல், அளவோடு கடன் கொடுத்த, தாமதமில்லாமல் வசூலிக்கத் தெரிந்தவன் இங்கு வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கலாம். வசூலிக்க முடியாதவன், சீக்கிரத்தில் போட்ட பணத்தையெல்லாம் இழந்து கடையை சாத்தலாம்!!
வியாபாரத்தில் கடன் வாங்குவதில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும்
இரண்டு மடங்கு கடன் கொடுத்து-வசூலிப்பதில் கவனம் செலுத்தினால்தான்
வியாபாரம் நீண்ட நாள் நிலைத்திருக்கும்;
கடனுக்கு வாங்கி பெரிய வாடிக்கையாளர்கள் ஓரிருவர் கைவிரித்தால்
உங்கள் வியாபாரத்தின் எதிர்காலம் கேள்விக்குறிதான்!
இங்கு பொருளை நஷ்டத்திற்கு விற்று இழந்தவர்களைக் காட்டிலும்
கடனுக்கு கொடுத்து வசூலிக்க முடியாமல் இழந்தவர்கள்தான் அதிகம்!
யாருக்கு - கடனுக்கு கொடுக்கிறோம்?
எவ்வளவு - கடனுக்கு கொடுக்கிறோம்?
அதை வசூலிப்பதற்கான உத்திரவாதம் என்ன?
கடனுக்கான காப்பீடு ஏதாவது எடுத்துள்ளீர்களா?
இவையனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால்
வியாபாரம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்!
கடனுக்கு கொடுப்பதும் வசூலிப்பதும் உங்கள் கைமீறினால்
சீக்கிரத்தில் கடையை நிரந்தரமாக மூட வேண்டிவரும்!
- [ம.சு.கு 31.08.2023]
Comments