“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-324
தரக்கட்டுப்பாட்டில் தவறவிடாதீர்கள்..!!
எனது நண்பர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட உணவு விடுதிக்கு மட்டுமே சாப்பிடப் போவார். அங்கு பொதுவாக கூட்டம் அதிகமிருக்கும். அதனால் உணவு வழங்குவதும் தாமதமாகும். இருந்தாலும், அங்குமட்டுமே போவார். ஏனெனில் அங்கு உணவின் தரமும், சுவையும் எப்போதும் ஒரேமாதிரி நன்றாக இருக்கும். அங்கு சற்று உணவுப் பொருட்களின் விலை அதிகம்தான். ஆனால் நிலையான தரத்திற்கு ஒப்பிடுகையில் பரவாயில்லை. அப்படி நீங்கள் எந்த உணவகத்தை தேர்வு செய்து வைத்திருக்கிறீர்கள்?
ஒரு நண்பர் வழக்கமாக தன் வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு நாவிதரிடம் மட்டுமே முடி திருத்தம் செய்யச் செல்வார். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு போக மாட்டார். அந்த நாவிதர் எப்போதும் பொறுமையாக எப்படி வெட்ட வேண்டும், என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று கேட்டு செய்வார். வெட்டும்போது சில மாற்றங்களை சொன்னாலும், மனம்கோனாமல் மகிழ்ச்சியுடன் செய்வார். அவரது தரமான சேவையை கருத்தில் கொண்டு, நண்பர் எவ்வளவு நாள் தாமதமானாலும், அவரிடம் மட்டுமே வெட்டுவார். அப்படி நீங்கள் எந்தெந்த சேவைகளில் குறிப்பிட நபரிடம் மட்டும் செல்கிறீர்கள்?
குறிப்பிட்ட உணவு விடுதி, குறிப்பிட்ட இரக ஆடைகள், குறிப்பிட்ட நிறுவன வீட்டு உபயோகப் பொருட்கள், குறிப்பிட்ட சேவை நிறுவனம் என்று மக்கள் இன்றையதினம் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்யத் துவங்கிவிட்டார்கள். வீட்டிற்கு கட்டில், நாற்காலி வாங்கச் செல்கிறோம். அவை உடனடித் தேவையாக இருந்தாலும், தயார் நிலையில் விலை குறைவாக இருக்கும் சிலவற்றை வாங்காமல், கடைக்காரரிடம் தரமாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தி தங்கள் எதிர்பார்ப்பு போல செய்துதரச் சொல்கிறோம். அவர் ஒரு மாதம் தாமதமாக கொடுக்கிறார். அவரைத் திட்டிக்கொண்டே வாங்குகிறோம். அவை தரமாக இருக்கிறது. இரண்டாண்டுகள் கழித்து திரும்பவும் அதே கடைக்கு அவரிடமே தான் சென்று அடுத்த பொருளை வாங்குகிறோம். இந்தமுறை, சென்றமுறை போல தாமதமாக்கி விடாதீர்கள் என்று சொல்கிறோம். ஒரு வேளை சென்றமுறை அவர் உரிய நேரத்தில் தரக்குறைவாக கொடுத்திருந்தால், இந்த முறை அந்த கடைக்கு நீங்கள் சென்றிருப்பீர்களா?
தாமதமாக கொடுத்தார் என்று ஓரிரு வாரங்கள் பேசுவோம். 1-2 மாதங்கள் நினவில் வைத்திருப்போம்.
விலை அதிகம் என்பது குறித்து ஓரிரு மாதங்கள் பேசுவோம். 4-5 மாதங்கள் நினைவு வைத்திருப்போம்
தரம் சரியில்லை என்பதை அந்த பொருளைப்பார்க்கும் போதெல்லாம் யோசிப்போம். அந்த பொருளை தூக்கிவீசிய பின்னும், அந்தக்கடையில் வாங்கியது தரமில்லை என்று 10-15 ஆண்டுகளுக்காவது நினைவில் வைத்திருப்போம்
இது தான் மனித இயல்பு. இப்போது நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள். சீக்கிரத்தில் கொடுப்பதையா? நிலையான தரத்துடன் கொடுப்பதையா?
தரத்தில் கவனம் செலுத்திய நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கின்றன. அதேசமயம், தரத்தை பொருட் படுத்தாமல், இலாபத்தை பொருட்படுத்தி நிறுவனங்கள், ஆரம்பத்தில் நிறைய வருவாய் ஈட்டினாலும், நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாமல் விலக நேர்கிறது. தரமாக செய்ய முற்படும்போது, அதிக நேரம், கூடுதல் விலை, புதுமையான முயற்சிகளின் குறைபாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இறுதியில் பொருள் தரமாக இருப்பதால், மற்றவையெல்லாம் காலப்போக்கில் மறந்துபோகிறது. எத்தனை ஆண்டுகள் கழித்தாலும், எந்த கடையில் வாங்கியது தரமாக இருந்தது, எங்கு வாங்கியது சரியில்லை என்பதை மக்கள் மறப்பதில்லை.
மக்கள் ஏன் எல்லாவற்றைக் காட்டிலும் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?
தரமாக வாங்கிவிட்டால், அடிக்கடி பழுதேற்படும் தொந்தரவு இல்லாமல் பொருட்களை பயன்படுத்தலாம்;
பொருட்களை முக்கிய தருணங்களில் நம்பி பயன்படுத்தலாம். எப்போது இது வேலை செய்யாமல் காலைவாரிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை!
இரட்டிப்பு விலை கொடுத்து வாங்கினாலும், அதன் நீண்டகால தொந்தரவற்ற பயன்பாடு, அந்த விலையை முற்றிலும் ஈடுகட்டிவிடும்;
எவ்வளவு போட்டியாளர்கள் இருந்தாலும்
எவ்வளவு விலைமலிவு சண்டை நிலவினாலும்
குறிப்பிட்ட நிறுவனத்தில் தரமான பொருட்களுக்கான சந்தை
விலை அதிகமென்றாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!
ஒருசிலர் தரத்தைக் காட்டிலும்
விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்! – ஆனால்
அவர்கள் தற்காலிகமான வாடிக்கையாளர்கள்;
அடுத்தமுறை அதே நிறுவனப் பொருளை வாங்குவது உறுதியில்லை!
வேறொன்று ஒரு ரூபாய் குறைவென்றால்
உடனே அதற்கு தாவிவிடுவார்கள்!
அதேசமயம், நிலையான தரத்தை கவனிக்கும் வாடிக்கையாளர்கள்
50% விலை கூடுதலானாலும்
தரக்கட்டுப்பாடு நிரூபிக்கப்பட்ட நிறுவனத்தின்
பொருட்களை மட்டுமே தேடித்தேடி வாங்குவார்கள்!
இரண்டு வகை நிறுவனங்களுக்கு மத்தியில்
எந்தவகை நிறுவனமாக உங்களுடையதை கட்டமைக்கப்போகிறீர்கள்?
- [ம.சு.கு 29.08.2023]
Comentarios