“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-323
அளவு கடந்த விரிவாக்கமா...?
பெண்கள் பிரத்யேக ஆடைகளுக்கான ஒரு சிறிய கடையை ஒருவர் துவக்கினார். படிப்படியாக ஒரு வருடத்தில், நிறைய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிக்கவே, கடையின் அளவு போதவில்லை. பக்கத்து கடையையும் சேர்த்து வாடகைக்கு எடுத்து விரிவுபடுத்தினார். வியாபாரம் நன்றாக செல்வதை பார்த்து அவர் நண்பர்கள் பக்கத்து ஊர்களில் விரிவாக்கம் செய்ய பரிந்துரைத்தனர். சிறிய ஆய்விற்குப்பிறகு, நண்பர்கள் முதலீடு & வங்கிக் கடன் மூலம் ஒரே சமயத்தில் 5 இடங்களில் விரிவாக்கம் செய்தார். பெரிய அளவில் விளம்பரம் செய்து வெற்றிகரமாக துவக்கினார். ஆறுமாதகாலம் நன்றாக சென்றுகொண்டிருந்த வியாபாரம், வழக்கமான சந்தை மந்தநிலை வந்தபோது திணற ஆரம்பித்தது. சந்தையில் எல்லாத் தொழில்களின் வளர்ச்சியும் மந்தமடைந்த நிலையில், அவர் கடனுக்கு வட்டிகட்டவும், கடைக்கு வாடகை கொடுக்கவும் திணறினார். அடுத்து சந்தை சரியாகும் சமயத்தில், அவரிடம் நடப்பு மூலதனம் இல்லாமல் புதிய ஆடை வடிவமைப்புக்கள் வரவழைக்க வழியில்லாமல் திண்டாடினார். ஒருகட்டத்தில் கடன் அவரை விழுங்கியது. எல்லாவற்றையும் இழந்து ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றார். உங்கள் பகுதியில் எத்தனை கடைகள் சீக்கிரமாக விரிவாக்க முயற்சித்து, இப்படி நஷ்டப்பட்டு மூடியிருக்கிறார்கள்!
வாடகை வீட்டில் வசிக்கும் ஒருசிலர், சொந்தமாக வீடுகட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு, தங்கள் சேமிப்புக்களையெல்லாம் முதலீடு செய்து, மீதத் தேவைக்கு வங்கிக்கடன் வாங்கி வீடுகட்டுகின்றனர். அப்படி கட்டப்படும் வீடுகளில் சுமார் 10% பேர் அந்த வீட்டை 3-5 ஆண்டுகளில் விற்றுவிடுவதாக புள்ளிவிரம் தெரிவிக்கிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அதிகமான கடன், வேலையிழப்பு, வருமானம் குறைவுற்றது, உடல்நலம் பாதிப்பு என்று நிறைய காரணங்களை கூறியுள்ளனர். அவற்றில் பெரும்பாலும், அவர்களின் வருவாய்க்கும், கடனுக்குமான சமநிலை தவறியதால் ஏற்பட்டுள்ளதென்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உங்கள் வீட்டில், உங்கள் உறவுகள் மத்தியில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா?
வியாபாரத்தை வளர்க்க, அதிக பொருளீட்ட, வியாபார அளவுகளை விரிவாக்கினால் தான் முடியும். அதேசமயம், அந்த விரிவாக்கம் உங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அளவுகளில் இருக்கவேண்டியது அதிமுக்கியம். சந்தையில் ஒருசமயம் நல்ல வியாபாரமும், ஒருசமயம் மந்தநிலையும் மாறிமாறி வரும். நன்றாக வியாபாரம் ஆகும் காலத்தை மட்டும் கருத்தில் வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் திட்டமிட்டால் சிக்கல்தான். ஒருவேளை மந்தநிலை வரும் காலங்களில், வாடகை, வட்டி, சம்பளம் என்ற செலவுகளை எப்படி சமாளிப்பதென்ற திட்டமிடல் இருக்கவேண்டும். அவற்றைப்பற்றி கவலைப்படாமல் விரிவாக்கிய நிறுவனங்கள், வந்த வேகத்தில் (ஓராண்டுக்குள்) கடைகளை மூடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். உங்கள் வியாபாரம் இப்போது எந்தளவில் இருக்கிறது. அதற்கான விரிவாக்கத் தேவையை நீங்கள் எப்படி முடிவுசெய்கிறீர்கள்?
பலகாரணங்களுக்காக, எல்லோருமே சொந்தவீடு கட்டவேண்டுமென்று தவமிருந்து கட்டுகின்றனர். ஆனால் அவர்களின் வருவாய்க்கு ஏற்ற அளவில் கடன் வாங்குகிறார்களா என்றால், அங்குதான் குளறுபடி ஏற்படுகிறது. ஆரம்பத்தில் சிறிய வீடாக இருந்தால் போதும் என்று திட்டமிட்டு ஆரம்பிக்கிறார்கள். வேலை நடக்கும்போது, நமக்கான ஒரே வீடு, இது இருக்கட்டும், அது இருக்கட்டும் என்று கூடுதலாக நிறைய வசதிகளை சேர்க்கிறார்கள். வீட்டின் அடிப்படை கட்டமைப்பைவிட, இந்த கூடுதல் வசதிகளின் முதலீடுதான் செலவதிகம். ஒவ்வொன்றையும் செய்ய, இங்குமங்கும் கடன் வாங்குகிறார்கள்.
வங்கிக்கடன் அளவிற்கு ஆரம்பத்தில் திட்டமிட்டவர்கள், பளிங்குக்கல், மரவேலை, அழகுபடுத்துதல் என்று எக்கச்சக்க வெளிக்கடன்பட்டு விடுகிறார்கள். அதைத் தொடர்ந்து புதுமனை புகுதலை பகட்டிற்காக செலவுசெய்து பெரிதாய் கொண்டாடி மேலும் கடனை அதிகரித்துக் கொள்கிறார்கள். புதுமனைக்கு வந்தவர்கள் இன்னும் நிறைய யோசனைகள் சொல்ல, எல்லாமே கடன்தான். 2-3 ஆண்டுகள் எப்படியோ சமாளிக்க, ஒருகட்டத்தில், வாடகை வீட்டிலிருந்த போதாவது நிம்மதியாக இருந்தோம், இப்போது எல்லாவற்றிலும் பற்றாக்குறை, பஞ்சப்பாட்டு என்று கூறி, கடனை அடைக்க கடைசியில் வீட்டை விற்கின்றனர். ஆசையாசையாய் கட்டிய வீடு, கடனை நம்பி பெரிதாய் கட்டியது, கடன்கட்ட முடியாமல் விற்கநேரிடுகிறது.
வியாபாரமோ, வீட்டு விவகாரமோ, உடல் ஆரோக்கியமோ, எதையும் கட்டுப்பாட்டு எல்லையை கடந்து செய்யும்போது அது முற்றிலும் சிதைந்துபோக வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலை வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் முதலீட்டின் அளவைவிட, கடன்அளவு அதிகரிக்காமல் இருக்கட்டும்;
வியாபாரத்தில், ஏறுமுகம் இருப்பதுபோல, இறங்குமுகம் இருக்கும் என்ற நிதர்சனத்தை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். வியாபார மந்தநிலை சற்று அதிக காலம் நீடித்தால் எப்படி சமாளிப்பதென்ற திட்டமிடல் ஆரம்பத்திலேயே இருக்க வேண்டும்;
நீங்கள் எவ்வளவுதான் முதலீடு செய்தாலும், பல இடங்களில் சந்தையில் அளவிற்கு ஒரு எல்லை உண்டு. 1000 பேர் வாழும் கிராமத்தில் 10,000 பேருக்கு இருப்பு வைத்தால், யாருக்கு நஷ்டம்!
கடன் அளவுகடந்து அதிகரிக்கும் போது, எப்படியும் கட்டிவிடலாம் என்று அதிக வட்டிக்கு கடன் வாங்கி சமாளிக்காதீர்கள். சில சொத்துக்களை விற்று கடனை குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
“எலிவலையானாலும் தனிவலை வேண்டுமென்பது சரிதான்” - ஆனால் அங்கு நீங்கள் கடன் தொல்லையில்லாமல் இருந்தால்தானே நிம்மதியாக இருக்கமுடியும். வசதியான வீட்டிற்கு ஆசைப்பட்டு கடனாளி ஆகி நிற்காமல், அளவோடு திட்டமிடுங்கள்;
அரசாங்கங்கள் நிறைய திட்டங்களை செயல்படுத்துவேன் என்று அறிவிப்புக்களை வெளியிடுகிறது. ஆனால் வருவாய் அளவு குறைவாக இருக்கும்போது, ஒவ்வொரு திட்டமும் 1 ஆண்டுக்கு பதிலாய், 5 ஆண்டுகள் எடுக்கின்றன. அதுவரையில், சாலையை தோன்டிப் போட்டது அப்படியே கிடக்கிறது. மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்ற பெயரில் பெரிய உபத்திரவம் அல்லவா செய்கிறார்கள். முழுமையான பணம் சேருகின்ற சமயத்தில் வேலையை துவக்கி சீக்கிரத்தில் முடித்தால், மக்களுக்கு தொந்தரவுகள் குறையுமே!
வியாபாரம் வளர்ச்சிகாண வேண்டும் என்ற நோக்கில் விரிவாக்கம் செய்தால்தான், நீங்கள் அடுத்தகட்டத்திற்கு போக முடியும். ஆனால் அந்த அடுத்தகட்ட முயற்சி, உங்களின் இப்போதைய வளர்ச்சியையே கேள்விக் குறியாக்கி விடக்கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். இதுவரை சேர்த்த செல்வத்தையெல்லாம் முதலீடு செய்து விரிவாக்கம் செய்வீர்கள். வென்றால் பரவாயில்லை - ஒருவேளை தோற்றால்? இருப்பது போனால் கூட ஏதோ போதாதகாலம் என்று அமைதியடையலாம். இருப்பதைத் தொலைத்ததோடு, கடன்பட்டு நின்றால், உங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுமே. அப்படி அளவுகடந்து கடன்பட்டு தொலைத்ததனால் தானே, தினம்தினம் சில குடும்பங்களின் தற்கொலைகளை நாளிதழ்களில் பார்க்கிறோம்.
விரிவுபடுத்துவதுதான் வளர்ச்சிக்கான ஒரே வழி! – ஆனால்
அந்த விரிவுபடுத்துதலின் அளவு எவ்வளவு என்பதை
தீர்மானிப்பது உங்கள் கையில்;
சரியான அளவில் நின்றால், நீங்கள்தான் இராஜா!
கட்டுப்பாட்டை இழந்தால், ஓடிஒளிய வேண்டியதுதான்!!
சொந்தமாக வீடு கட்டுங்கள்! – நிம்மதியாய்
நீண்ட காலம் வாழ்வதற்காக இருக்கட்டும்!
கடன்பட்டு, நிம்மதியிழந்து, கடனுக்கு பதில்சொல்லி
வாழவேண்டிய அளவிற்கு மாட்டிக்கொள்ளாதீர்கள்!
தொடர்ந்து விரிவாக்கம் செய்துகொண்டே இருங்கள்!
ஒரே சமயத்தில் ஒட்டுமொத்தமாய் கடன்பட்டு செய்யாமல்
படிப்படியாய் சம்பாதித்து விரிவுபடுத்துங்கள்! – அதனால்
சில தாமதங்களும் வியாபார இழப்பும் நேரலாம் – ஆனால்
நீங்கள் கடனாளியாகாமல் நிம்மதியாய் இருப்பது அதிமுக்கியம்!!
- [ம.சு.கு 28.08.2023]
Comments