top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 322 - ஒரே வாடிக்கையாளரை நம்புகிறீர்களா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-322

ஒரே வாடிக்கையாளரை நம்புகிறீர்களா...?"


  • ஒரு சிறுதொழில் செய்துவந்தவர், ஆரம்பத்தில் தன் பொருட்களை பல கடைகளுக்கு சின்ன அளவில் விற்று பணம் வசூலித்து வந்தார். ஒரு பெரிய வணிக வளாகத்தில் வந்த புதிய கடை, அவரிடம் அதிக அளவில் பொருட்களை வாங்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட அந்த சிறுதொழில் நிறுவனத்தின் 90% உற்பத்தி அந்த ஒரு கடைக்கே போதுமானதாக இருந்தது. அந்த ஒருகடை வியாபார தைரியத்தில், அவர் மற்ற சின்ன கடைகளுடனான வியாபாரத்தை முற்றிலும் குறைத்துவிட்டார். எல்லாம் 1-2 ஆண்டுகள் நன்றாக போய்க்கொண்டிருக்க, திடீரென்று ஒருநாள் அந்த பெரியகடை பண நெருக்கடியின் காரணமாக வியாபாரத்தை சுறுக்கியது. இந்த சிறுதொழில் நிறுவனத்திற்கு வெறும் 5%-10% ஒப்பந்தங்கள் மட்டுமே வந்தன. இப்போது அந்த சிறுதொழில் நிறுவனத்தால் பொருட்களை வாங்கும் புதிய கடைகளை உடனடியாக சேர்க்க முடியவில்லை. இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்?

  • இன்று எல்லா பெருநிறுவனங்களும் சீனாவைத் தாண்டி, இன்னுமொரு நாட்டில் உற்பத்திக்களம் அமைக்க வேண்டுமென்று முடிவு செய்து, பலரும் நம் இந்தியாவை நாடி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் கற்றபாடம், ஒரு நாட்டை நம்பினால், ஒரு பொருளாதார கொள்கை மாற்றம், ஒரு போர் சூழ்நிலை, ஒரு வரி மாற்றம், அவர்கள் நாட்டின் மொத்த வர்த்தகத்தையே பாதித்துவிடக் கூடும். அப்படி ஒரு நாட்டை மட்டும் நம்பாமல் பரவலாக வர்த்தகத்தை விரிவடையச் செய்வது நாட்டிற்கு மட்டுமல்ல, எல்லா நிறுவனங்களுக்குமான பொதுவிதி. ஒரு மூலப்பொருள் கொடுப்பவரே, ஒரு வாடிக்கையாளரையோ மட்டும் நீண்டகாலம் நம்பி வியாபாரம் செய்தால், ஒரு நாள் அவருக்கும் சரிவு வரும். அன்று நீங்கள் எப்படி தாக்கு பிடிப்பீர்கள் ?

பல கடைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்த கடைக்காரர், ஒரே கடையில் மொத்த வியாபாரமும் கிடைக்கப் பெறும்போது அந்த புதிய கடையை தேர்வு செய்வது இயல்புதான். ஆனால் அந்த ஒரு கடையுடனான வியாபாரம் ஏதாவத காரணங்களுக்காக பாதிக்கப்பட்டால், அவருடைய நிலைமை என்னவாகும் என்று அவர் முன்கூட்டியே கவனிக்க வேண்டுமல்லவா? ஒரு கடையை நம்பி, முன்னர் கொடுத்துக்கொண்டிருந்த மற்ற கடைகளுடனான உறவை துண்டித்துக்கொண்டால், எப்படி வியாபார வாய்ப்புக்கள் குறைகின்ற காலங்களை சமாளிப்பது. வியாபாரத்தை எப்போதும் பரவலான முறையில் வைத்துக்கொள்வது, யாரையும் சார்ந்திருந்து அவரது வளர்ச்சி-வீழ்ச்சியில் இதுவும் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத் தானே!


இன்று எல்லா பெரிய நிறுவனங்களிலும் ஒருவரை நம்பி முழுதும் கொடுக்கக்கூடாது, வாங்கக்கூடாதென்று விதியை கட்டமைத்து விட்டார்கள். உத; வங்கிகளில் ஒரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கடன் கொடுக்க மாட்டார்கள். ஒரு நிறுவன கூட்டமைப்பிற்கு எவ்வளவு அதிகபட்சம் கடன் கொடுக்க வேண்டுமென்ற எல்லை வகுத்திருப்பார்கள். ஒருவேலை தவறுநேர்ந்தால், நஷ்டம் அளவோடு இருக்கட்டும் என்பதுதான் முக்கிய நோக்கம்; ஒருபுறம் வாடிக்கையாளர்களை பார்த்து பரவலாக அமைக்க முயற்சிப்பதைப் போல், அந்த பொருளை உற்பத்திசெய்ய தேவைப்படும் மூலப்பொருட்களை வழங்கும் நிறுவனமும் கூடியவரை பரவலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஓரிரு நிறுவனங்களை மட்டும் நம்பி களத்தில் நின்றால், அவர்களின் இழுப்பிற்கு நாம் அடியபணிய வேண்டிய நிலைமை வரும்.


ஒரு நிறுவனத்திடம் மட்டும் மூலப்பொருட்களை வாங்குவது சிலசமயம் நன்மையாகத் தெரியக்கூடும். தரம் ஒரேமாதிரி இருக்கும், நிறைய வாங்குவதால், விலை குறைத்து கிடைக்கும், சரக்குகளை கையாள்வது எளிமையாக இருக்கும்...... ஆனால் இந்த சில ஆதாயங்களை மட்டும் பார்த்து வியாபாரத்தை ஒருவரை நோக்கி சுறுக்கினால், அந்த நிறுவனத்தின் தற்காலிக பிரச்சனைகளுக்குக் கூட நீங்கள் திண்டாட வேண்டிவருமே!


ஒரு வாடிக்கையாளரை, ஒரு மூலப்பொருள் வழங்கும் நிறுவனத்தை, ஒரு ஊழியரை, ஒரு அரசு நிர்வாகத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால், என்ன சிக்கல்கள் வரலாம்;

  • அந்தவொரு பெரிய வாடிக்கையாளர் வியாபாரம் சரிந்தால், உங்கள் பாடு திண்டாட்டம்தான்;

  • மூலப்பொருட்கள் வழங்கும் நிறுவனம் மறுத்தால், எப்படி உற்பத்தி நடக்கும்;

  • எல்லாமே ஒரு ஊழியருக்குத்தான் தெரியும், அவர் யாருக்கும் பயிற்சி கொடுக்கவில்லை என்றால், அந்த ஒரு ஊழியரின் இழுப்பிற்கு நீங்கள் ஆடவேண்டி வரும்;

  • திடீரென்று நாட்டில் குழப்பங்கள் அதிகரித்தால், ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகள் மாறினால், எப்படி உங்கள் உலக வர்த்தகத்தை சமாளிப்பது;

  • ஒருவரை மட்டும் நம்பியிருக்கும்போது, உங்களால் எந்தளவிற்கு பேரம் பேச முடியும். உங்களுக்கு வேறுவழியில்லை என்று தெரிந்தால், எதிராளி கீழிறங்கி வருவானா?

  • ஒருவரை மட்டும் சார்ந்திருக்கும்போது, புதியவைகள் சந்தைக்கு வந்து-போவது தெரியாமலே போய்விடும்;

  • சந்தை ஏற்றத்தாழ்வுகளைக் காட்டிலும், ஒரு நிறுவனத்தின் ஏற்றத் தாழ்வுகள் பெரிய அளவில் உங்கள் வியாபாரத்தை பாதிக்கும்;

ஒன்றைமட்டும் நம்பியிருக்கும் நிலைமையை தவிர்க்க என்ன செய்யலாம்?

  • கூடுயவரை, வாடிக்கையாளர் எண்ணிக்கையும், வாடிக்கையாளர் வகைகளும் பரவலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்; ஒரு ஊர், ஒரு சந்தை, ஒருநாடு என்றுமட்டும் இருந்துவிடாமால், மாறுபட்ட புதிய பகுதிகளில் வாடிக்கையாளர்களை பரவலாக வைத்துக் கொள்ளுங்கள்;

  • மூலப்பொருட்களை ஒரு நிறுவனம் அதிகம் வழங்கினாலும், கூடுதலாக வேறு ஊர்களிலிருந்து அவ்வப்போது வாங்கி, மாற்று ஏற்பாடுகளை தயாராக வைத்திருங்கள்;

  • எல்லா பணிகளுக்கும், ஒரு ஊழியரை மட்டும் நம்பியிறாமல், முடிந்தவரை கூடுதல் ஊழியர்களை பயிற்ச்சித்து தயார் படுத்திக்கொண்டே இருங்கள்;

  • உங்களின் குறுகிய கால – நீண்ட கால நோக்கங்களுக்கு ஏற்ப, உங்கள் தொழிலின் பரவல் தன்மையை உறுதிசெய்யுங்கள்;

வியாபாரத்தில், பரவல் தன்மை என்பது வாடிக்கையாளர், பொருள் கொடுப்பவர், ஊழியர் என்ற விடயங்களில் மட்டுமல்லாது, முதலீடு, வங்கிக்கடன், உற்பத்திக் களம், போக்குவரத்து என்று எல்லா விடயங்களிலும், ஒன்றைமட்டும் நம்பியிருக்காமல், எப்போதும் மாற்று ஏற்பாடுகள் தயாராக இருக்கவேண்டும்;


உங்கள் வாடிக்கையாளர்கள் எத்தனை பேர்?

உங்கள் பொருட்களின் 10% அதிகமாக ஒருநபர் வாங்குகிறாரா?

உங்கள் உற்பத்திக்கான மூலப்பொருட்களை எத்தனைபேரிடம் வாங்குகிறீர்கள்?

ஒருகடை மூடினால், இன்னொருகடையில் உடனே கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?

ஒரு வாடிக்கையாளர் வாங்காவிட்டால், நஷ்டமில்லாமல் விற்க விழியிருக்கா?


இந்த கேள்விகள்தான் சந்தை யதார்த்தங்கள்!

சின்னச்சின்ன சிக்கல்களைத்தாண்டி நிலைத்துநிற்க ஆசையிருந்தால்

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியவேண்டும்!


ஒருவரை மட்டும் நம்பி நீண்டகாலம் இருந்தால்

யாருக்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம்! - ஒருசின்ன மாற்றமும்

உங்கள் வியாபாரத்தின் எதிர்காலத்தை முற்றிலுமாய் சீர்குலைத்துவிடும்;


வியாபாரமோ, விளையாட்டோ

எப்போதும் மாற்று ஏற்பாடுகள் தயாராக இருக்கவேண்டும்!

முக்கிய வாடிக்கையாளர் இழப்பால் நஷ்டமேற்படலாம்!

ஆனால் வியாபாரம் மூடப்படுமளவிற்கு தள்ளப்படுமானால்

அங்கு வியாபாரம் செய்தது நீங்களா? அல்லது உங்கள் வாடிக்கையாளரா?



- [ம.சு.கு 27.08.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page