“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-321
பின்வாங்குவது சரியாக இருக்குமா.?"
பலகுன்றுகளின் மேலிருக்கும் ஒரு கோவிலுக்கு இரண்டு நண்பர்கள் செல்ல முடிவுசெய்தனர். பாதிமலை ஏறியபோது ஒருநண்பருக்கு சற்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடன்வந்த நண்பன் சூழ்நிலையை புரிந்து, திரும்பிவிடலாமா என்றும் கேட்டிருக்கிறான். ஆனால், இது வழக்கமான வலி என்று கூறி, சிறிது ஓய்வுக்கு பின் தொடர்ந்துள்ளனர். அரைமணிநேர ஏற்றத்திற்குப்பின், அவருக்கு வலி அதிகரித்து நிலைமை மோசமாகியுள்ளது. அதிக தூரம் மேலேறிவிட்டதால், திரும்புவதற்கும் வழியில்லை. கிட்டதட்ட அவர் மயக்கமடைந்துள்ளார். எதேச்சையாக, அங்குவந்த செவிலியர் பயிற்சி மாணவர், அவருக்கு முதலுதவி கொடுத்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார். பின் அவரை கீழே கொண்டுவந்து மருத்துவ உதவி செய்துள்ளனர். இப்படி உடல்நிலை மோசமாவது கூட புரியாமல் செல்வது சரியா?
ஒரு வாரச்சந்தை குத்தகை ஏலம் நடந்தது. கடுமையான போட்டி இருந்த அந்த ஏலத்தில், ஒருகட்டத்தில் விலையேற்றம் கட்டுபடியாகாத எல்லையை தாண்டியது. இரண்டு போட்டியாளர்களைத் தவிர ஏனையவர்கள் விலகிவிட்டனர். இந்த சூழ்நிலையில் அது கௌரவப் பிரச்சனையென இருவரும் கருதியதால், ஏலம் இரட்டிப்பு விலையை தாண்டியது. இருவருக்கும் உடனிருந்தவர்கள் போதும், விலகலாம் என்று அறிவுறுத்தியும் நீண்ட நேரம் தொடர்ந்திருக்கிறார்கள். கடைசியில் ஒருவர் விலகினார். அவரது காசு தப்பித்தது. ஏலத்தில் எடுத்தவருக்கு அதில் பல இலட்சங்கள் நஷ்டம். இப்படி கௌரவம் பார்த்து பின்வாங்காமல் பணத்தை நீங்கள் இழந்திருக்கிறீர்களா?
தன்னால் மலையை முழுமையாக ஏறமுடியும் என்று நம்பிக்கையோடு முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த முயற்சியில் உடல்நிலை மோசமடைவதை தெரிந்துகொள்ளாமல் தொடர்ந்தால், அபாயம் தானே! அப்படி உயிரைப் பணையம் வைத்து வெற்றிகொள்ளும் அளவிற்கு அதிமுக்கியமான முயற்சியா அது? இதேமாதிரி சூழ்நிலை உங்கள் வாழ்க்கைப் பயனத்தில், விளையாட்டில், வியாபாரத்தில் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும். உத; சாலையில் போட்டி போட்டுக்கொண்டு வாகனத்தை வேகமாக ஓட்டுவார்கள். அபாயகரமான இந்த முயற்சி தேவையா? அந்த போட்டியில் நீங்கள் வெற்றிபெற்றால் என்ன தங்கக்கோப்பையா கொடுக்கப் போகிறார்கள். நெரிசலான சாலையில் விபத்தில் சிக்குவதற்கு பதிலாக போட்டியிடாமல் பின்வாங்கலாமே! எதற்காக தேவையற்ற விஷப்பரீட்சை! எதை நிரூபிக்க இந்த விபரீத முயற்சி?
வியாபாரத்தில், போட்டிகள் அவ்வப்போது அதிகமாக இருக்கும். எல்லா போட்டிகளையும் எதிர்கொண்டு சமாளித்தால் தான் வெற்றிகான முடியும். ஆனால் அந்த போட்டி நஷ்டத்தை நோக்கிச் செல்லுமிடத்தில், கௌரவம் பார்த்துக்கொண்டிருந்தால், இலாபத்திற்கு பதிலாக, சேர்த்துவைத்த செல்வத்தை இழக்க நேரிடுமே! ஏலத்தில் கட்டுபடியாகும் விலையை கடந்தபின் எத்தனைபேர் தொடர்ந்தாலும், அதில் ஒருவருக்கு நஷ்டம் உறுதியென்று ஆனபின் எதற்காக தொடர்கிறீர்கள். ஒருவேளை நன்றாக விலையேறிவிட்டபின், மற்றவர் விலகினால் நஷ்டம் உங்களுக்குத்தானே? விலை ஒரு எல்லையை தாண்டும்போது, போட்டியிலிருந்து விலகுவதில் ஏன் தயங்கவேண்டும்? கட்டுபடியாகாததை ஏன் பிடித்துக் கட்டியழுக வேண்டும்!
என்னென்ன காரணங்களுக்காக பெரிய வெற்றியாளர்கள் பின்வாங்குகிறார்கள்;
அவர்களுடைய உடல் நிலை, ஆரோக்கியம் பாதிக்கும் விடயங்களில்
அவர்களுக்கு அதீத மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுத்தும் விடயங்களில்
அவசரம் தேவையில்லை, பொறுமையாக செய்வது சாலச்சிறந்தது என்ற தருணங்களில்
அவர்களின் இலக்குகளில் மாற்றம் செய்யவேண்டிய கட்டாயத் தேவை ஏற்படும் சூழ்நிலையில்
தங்களைத் தாங்களே சுயஅலசல் செய்யவேண்டிய சூழலில்
எதிர்பதமான இருவேறு சூழ்நிலைகளில் ஒருவரே சிக்கும் சூழலில்;
தேவையற்ற வழக்குவிவகாரங்கள் அதிகரிக்கும் சூழலில்
தேவையற்ற கௌரவப் பிரச்சனைகள் முளைக்கும் இடங்களில்;
போதுமான வளங்கள் இல்லாத சூழ்நிலையில் (ஆள்பலம், நேரம், பணம்... குறையும்போது)
எந்தமாதிரியான சூழ்நிலைகளில் வெற்றியாளர்கள் பின்வாங்காமல் கடைசிவரை போராடுகிறார்கள்;
செய்கின்ற வேலை மிகவும் கடினமாகவும், சோதனைக்குரியதாகவும் இருக்கும்போது
மேற்கொண்டு முன்னேறுவது சாத்தியமேயில்லை என்று மற்றவர்கள் சொன்னாலும், இலக்கு உயரியதாகும் இருக்கும்போது, அதை சாதிக்கவேண்டுமென்கிற இடத்தில் புதிய வழியை படைக்கும் முயற்சியில்
அதிகமான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயத்தில்;
மற்றவர்கள் பயந்து ஒதுங்கும்போதும், அவர்களை தேவையில்லாமல் அச்சுறுத்தும்போதும்;
பொருட்களின் பயனாளர் கருத்துக்கள் எதிர்பதமாக இருக்கும் சூழலில், பொருளை கைவிடாமல் அதை மேம்படுத்தி பயன்பாட்டிற்கு ஏற்புடையதாக்க வேண்டிய முயற்சியில்;
வியாபாரச் சூழ்நிலை, விளையாட்டில் களச்சூழ்நிலை, வாழ்க்கையின் அன்றாட சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும். நேற்று முடிவெடுத்த செயல்படுத்தியவைகள், நாளை பொறுத்தமற்றுப் போகக்கூடும். அப்படி மாற்றம் காணும் இடங்களில், மேற்கொண்டு தவறானவற்றை அப்படியே தொடர்ந்து கொண்டிருக்காமல், பின்வாங்குவதில் தவறேதுமில்லை. அதேசமயம், சிக்கல் வரும் எல்லா சூழ்நிலைகளிலும் பின்வாங்கிக் கொண்டிருந்தால், எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது.
எந்த சூழ்நிலையில், எப்போது பின் வாங்க வேண்டும், எப்போது சிக்கல்களைக் கடந்து போராடி முன்னேற வெண்டுமென்பதை, சூழ்நிலைகளுக்கேற்ப நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் அனுபவத்தில், எதை கட்டியழுவதில் அர்த்தமில்லை என்பதை நீங்கள்தான் கண்டுணர வேண்டும்.
சூழ்நிலைக்கேற்ப பின்வாங்குவதில் தவறேதுமில்லை!
பின்வாங்காமல் விட்டால்தான் இழப்புக்கள் அதிகம்! - ஆனால்
எல்லாத் தருணமுமே பின்வாங்க ஏற்புடையதாகவே தோன்றும்!
என்ன முடிவெடுப்பதென்று குழப்பம்வருவது இயல்பே!
எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பயந்தால், எதையுமே செய்ய முடியாமல்
ஆரம்பத்திற்கே திரும்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
எப்போது கைமீறிப் போனதோ, எங்கு சாதிப்பது சாத்தியமற்றுப் போகிறதோ
அங்கு மட்டுமே பின்வாங்குவது சரியாக இருக்கும்!
எதைக் கட்டியழுக வேண்டும்
எதை விட்டுத்தள்ள வேண்டும்
எதை தூரத்தில் வைக்க வேண்டும்
என்று தொடரந்து கவனித்துக்கொண்டே இருங்கள்!
- [ம.சு.கு 26.08.2023]
Comments