“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-320
ஆலோசனைகளை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்!
ஒரு நகைச்சுவைக் கதை – ஒரு கோழிப்பண்ணை முதலாளி, அடிக்கடி பறவை இறப்பதை தடுப்பதற்கு ஒரு வல்லுனரிடம் ஆலோசனை கேட்டார். அவரது ஆலோசனைகளை செயல்படுத்தினார். ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில் பறவையிறப்பு குறையவில்லை. கிட்டத்தட்ட பாதி பறவைகள் இறந்துவிட்டன. என்ன செய்வதென்று தெரியாமல், அந்த வல்லுனரிடம் மாற்று ஆலோசனை கேட்டார். மாற்று ஆலோசனையை செயல்படுத்தியதில் சில மாதங்களில் இருந்தவற்றில் பாதி பறவைகள் இறந்தன. மீண்டும் அந்த வல்லுனரிடம் சூழ்நிலையை விளக்கி என்ன செய்வதென்று கேட்டார். எல்லாவற்றையும் அலசிப்பார்த்தபின், புதியவழிமுறையை சொன்னார். இந்தமுறை, 3 மாதத்தில் மீதமுள்ள பறவைகளும் இறந்தன. இப்போது தன் விதியை நொந்துகொண்டு அந்த வல்லுனரிடம் அவர் நடந்ததை விளக்கினார். அந்த வல்லுனர், “அச்சச்சோ!!” என்று பரிதாபப்பட்டுவிட்டு தன்னிடம் இன்னும் புது யோசனைகள் இருக்கின்றன, ஆனால் செயல்படுத்த உன்னிடம் பறவைகள் இல்லையே என்றார் -இதில் உங்களுக்கு கிடைக்கும் பாடம் என்ன?
சமீபத்தில் தெரிந்தவர் ஒருவர், தன் தீராத வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார். ஒருசில பரிசோதனைகளுக்குப்பின் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. விஷயம் கேட்டு பயந்தவர், வேறொரு மருத்துவரிடம் மீண்டும் பரிசோதனை செய்தார். அவரும் அதை உறுதி செய்தார். இருவரும் அவருக்கு “கீமோதெரபி” என்னும் மருத்துவமுறையில் குணப்படுத்த ஆலோசனை வழங்கினர். அதேசமயம், அவரது உறவினர் ஒருவர், கீமோதெரபி எல்லாம் மருத்துவமனைகளின் பணம் பறிக்கும் உத்தி, பக்கத்து மலைப்பகுதியில் ஆதிவாசி கூட்டத்தினரின் மருத்துவ முறையில் இதற்கான நல்ல தீர்வு உண்டு என்று அழைத்துச் சென்றார். கீமோதெரபிக்கு பயந்து நண்பரின் ஆலோசனைப்படி காட்டிற்கு சென்று வைத்தியம் செய்தார். ஆனால், அவரது உடல்நிலை சீக்கிரத்தில் மோசமடைந்தது. கடைசி கட்டத்தில் மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது, இரண்டாம் நிலையிலிருந்த நோயின் தீவிரம் இப்போது நான்காம் நிலைக்கு சென்றவிட்டதென்றும், இனி வாய்ப்பு குறைவென்றும் கூறினர். கடைசியில் இரண்டு மாதத்தில் இறந்துவிட்டார். எந்த விஷயத்தில், யாருடைய ஆலோசனையை, எவ்வளவு தூரம் கேட்கவேண்டும் என்ற சரியான புரிதல் இல்லாமல், தன் உயிரழப்பை தானே வேகப்படுத்திக் கொண்டார்.
வல்லுனர்களின் ஆலோசனை முக்கியம். ஆனால் அவர் அந்த துறையில் நிறைந்த அனுபவம் கொண்ட வல்லுனராக இருக்க வேண்டும். எங்கோ வேலை செய்த இடத்தில், தெரிந்துகொண்ட 10-15 யோசனைகளையும், அரைகுறை கல்வியையும் வைத்துக்கொண்டு வல்லுனர் என்று விளம்பரம் செய்பவர்களை நம்பி முதலீடு செய்தால், ஏமாற்றம் தான் மிஞ்சும்.
மருத்துவ விடயங்களில், நன்கு கற்றறிந்த மருத்துவர்கள் உங்கள் ஊர்களில் நிறைய இருக்கிறார்கள். முக்கிய விடயங்களில், ஒரு மருத்துவரின் கருத்தை உறுதிசெய்ய, இன்னொரு மருத்துவரின் கருத்தும் கேட்கப்படுகிறது. இதில் தவறேதும் இல்லை. அதையெல்லாம் கேட்டபின், நண்பன் சொன்னான் என்று மருத்துவரின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் எங்கோ ஆதிவாசிகளின் மருத்துவ முறைக்கு சென்றார் அது சரியா? யதார்த்தத்தில் ஆதிவாசிகளின் மருத்துவமுறை, அவர்களின் வாழ்க்கைமுறைக்கு மட்டுமே ஏற்றதாய் இருக்கும். நகரத்தில், எண்ணற்ற மாசுகளுக்கிடைய வாழும் நமக்கு அவர்களின் பாரம்பரிய முறைகள் அவ்வளவு ஏற்புடையதாக இருக்க வாய்ப்பு குறைவு. அதுவும் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு இப்படி அனுபவம் இல்லாதவர்களின் ஆலோசனையை கேட்டால், இப்படித்தான் உயிரழக்கவும் நேரிடலாம்!!
புதிய துறையில், புதிய முறைமையில் ஈடுபடும்போது, நமக்கு எதுவும் தெரியாதபோது, அந்த துறையில் முன்அனுபவம் கொண்டவர்களிடம் ஆலோசனை பெறுவது மிகமுக்கியம். ஏனெனில், அந்த துறைக்கான எதிர்காலம் எப்படி? எதை செய்யலாம்-செய்யக்கூடாது? அதன் நெளிவு-சுளிவுகள் என்னென்ன? என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அவர்களின் அனுபவத்தை அறிவதன் மூலம், சில தவறுகளை நாம் ஆரம்பத்திலேயே தவிர்த்துக்கொள்ளலாம். அதேசமயம், ஆலோசனை கேட்கிறேன் என்ற பெயரில் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் கேட்டு, நூறு கருத்துக்களுடன் உட்கார்ந்தால், உங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. துறை நிபுனர்கள் ஓரிருவரிடன் ஆலோசனை கேட்பதோடு நிறுத்திக்கொண்டு, அந்த ஆலோசனையின் சாதக-பாதகங்களை அலசிப்பார்த்து முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான். முடிவெடுக்க வேண்டிய கடைசி நிமிடம் வரை, எல்லோரிடமும் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருந்தால், எப்போது நீங்கள் யோசிப்பது? எப்போது முடிவெடுப்பது?
உங்கள் தொழில், முதலீடு, விளையாட்டு, வாழ்க்கை எதுவானாலும், சூழ்நிலை எதுவானாலும், கூடியவரை ஆலோசனை கேட்கச் செல்லும்முன் இவற்றை செய்யுங்கள்;
உங்களுக்கு என்ன தேவை? உங்கள் குழப்பங்கள் என்ன? தெரியாதவைகள் என்ன? என்று உங்களுக்குள் தெளிவிருத்தல் வேண்டும்;
எதை? யாரிடம் கேட்க வேண்டும்? என்று தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தேவையில்லாத கேள்விகள், தேவையில்லாத யோசனைகளை உங்கள் எண்ணத்தில் நுழைத்து உங்களை குழப்பிவிடக்கூடும்;
ஒருவரிடம் ஆலோசனை கேட்பதானால், அவர்மீது நம்பிக்கை கொண்டு முழுமையாக கேட்கவேண்டும். அவரது ஆலோசனையை செயல்படுத்தப்போவதில்லை என்று முடிவுசெய்துவிட்டு பின் அவரிடம் கேட்பது, உங்கள் நேரமும் வீண், அந்த செயல் அவரையும் அவமதிப்பதாகும்;
ஆலோசனைகளைத் தாண்டி, அவற்றின் சாதக-பாதகங்களை நீங்கள் தான் முழுமையாக யோசிக்க வேண்டும். யாருடைய அலோசனையைக் கொண்டும் செயலைத் துவங்கும் முன், நீங்கள் கவனிக்க வேண்டியவைகள்;
ஆலோசனை வழங்கியவர், அதில் அனுபவமும், நிபுணத்துவமும் உடையவரா என்பதை உறுதி செய்யுங்கள்; எல்லா பிரச்சனைக்கும் ஒரே வலிநிவாரணி மாத்திரையை மட்டும் பரிந்துரைப்பவராக இருந்துவிட்டால், உங்கள் பாடு திண்டாட்டமாகிவிடும்.
ஆலோசனை வழங்கியவர், அதில் அவருக்கு ஆதாயம் இருக்கிறதா என்று கணக்கு பார்த்து சொன்னாரா என்பதை கவனியுங்கள்; அவருக்கு இலாபம், வருவாய் வரும் இடத்தில் உங்களை முதலீடு செய்யச் சொல்லி, அவர் தரகு பெற்று சென்றுவிடுவார். கடைசியில் சிக்கல் உங்கள் முதலீட்டுக்குத்தான்.
ஆலோசனை வழங்குபவர் உங்கள் சூழ்நிலையை முழுமையாக கேட்டு, புரிந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறாரா என்பதை கவனியுங்கள்;
எத்தனை ஆலோசகர்களை அனுகினாலும், எத்தனை ஆலோசனைகளை பெற்றாலும், இறுதி முடிவு உங்களுடையதுதான். கண்மூடித்தனமாக யாரையும் நம்பி ஏமாறாமல், முடிவுகளை எடுக்கும்முன் உங்களுக்கு நீங்கள் யோசித்துச் செய்யுங்கள்;
இலவசமாகவோ, கட்டணத்திற்கோ
ஆயிரமாயிரம் ஆலோசனைகள் வந்தவண்ணம் இருக்கும்;
பல சமயங்களில் நீங்கள் கேட்காமலேகூட நிறைய ஆலோசனைகள் வரும்;
ஆலோசனை யாரிடம் இருந்துவருகிறது!
அதில் என்ன உள்குத்து இருக்கிறது! என்பதில்
நீங்கள் தான் கவனமாக இருக்கவேண்டும்;
ஆலோசனைகள் உணவில் சேர்க்கும் உப்பைப்போல
அளவாகத்தான் எப்போதும் இருக்க வேண்டும்;
அளவிற்கு மிஞ்சினால் உணவே பயனற்றுப் போகும்;
போலி மருத்துவர்கள், போலி வல்லுனர் நிறைந்திருக்கும் நிலையில்
தவறான இடத்தில் சிக்கி எல்லாவற்றையும் இழந்துவிடாமல்
உங்கள் சுயபுத்தியை அவ்வப்போது உபயோகியுங்கள்;
உங்கள் சுயபுத்தியைத்தவிர உங்களைக்காக்கும்
சிறந்த ஆலோசகர் யாருமில்லை என்பதை மறவாதீர்!
- [ம.சு.கு 25.08.2023]
Comments