“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-319
தொட்டதெல்லாம் பொன்னாகுமா?
சிறுவயதில் மிடாஸ் என்ற அரசனின் கதையை பள்ளியில் படித்திருப்பீர்கள். தங்கத்தின்மீது பேராசை கொண்ட அந்த அரசன், தான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று கிரேக்க கடவுளிடம் வரம் கேட்டு பெற்றான். தான் தொடுவதெல்லாம் பொன்னாகிறதென்ற பெரும் மகிழ்ச்சியிலிருந்த அந்த அரசனுக்கு உணவுண்ண வழியில்லாமல், தொடுவதெல்லாம் பொன்னாகின. இறுதியில் தன் அன்புமகளும் பொற்சிலையானால். தன் பேராசையால் தன் அன்புமகளை இழந்தபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. பின் மீண்டும் கடவுளை வேண்டி எல்லாவற்றையும் மாற்றியதாக கதைமுடியும். “பேராசை பெரும் நஷ்டம்” என்ற பழமொழியை பிள்ளைகளுக்கு உணர்த்த இந்த கதையை சொல்லாத பள்ளிகள் இல்லை. அந்த அடிப்படை பழமொழியைக் கடந்து, இந்த கதை, உங்கள் வியாபார உலகிற்கு சொல்லும் பாடம் என்ன?
உலகளவில், முதல்நிலை பெறவேண்டுமென்ற நோக்கில், நடைபெற்றுள்ள மிகப்பெரிய கணக்கியல் ஏமாற்றுதல்களைப் பற்றி இனையத்தில் தேடிப்பாருங்கள். இந்த நூற்றாண்டில் “என்ரான்” நிறுவனம் தொடங்கி “சத்தியம்”, “தோசிபா” என்று அவ்வப்போது சில முன்னனி நிறுவனங்கள் அதீத பேராசையின் காரணமாக, நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியை தடுக்க, நிறுவனத்தின் முன்னனி நிலையை தக்க வைக்க, கடன் வழங்கிய வங்கிகளை சமாளிக்க என்று பல காரணங்களுக்காக வரவு-செலவுகளை மாற்றியமைத்து, போலித்மனமாக எண்களை காட்டுகின்றனர். விளைவு, சில வருடங்களில், அந்த கணக்கியல் ஏமாற்றுவேலை தெரியவரும்போது, நிறுவனம் அகலபாதாளத்தில் வந்து நிற்கிறது. வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வென்பது களத்தின் யதார்த்தம். ஆனால் இந்த நிறுவனங்கள் யதார்த்தத்தை மாற்ற முயற்சித்து மாட்டிக் கொண்டனர்.
கடவுள் உங்களுக்கு வரம் தரத்தயாராக இருக்கும்போது, நீங்கள் உணர்ச்சிவசத்தில் மிடாஸைப்போல தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்றால், உங்கள் நிலைமை கவலைக்கிடம் தான். நீங்கள் என்ன கேட்க வேண்டும் என்பதில் தெளிவாக இல்லாமல், பேராசையில் விளைவுகள் புரியாமல் கேட்டால், கும்பகர்ணனுக்கு கிடைத்த அதே 6 மாத கால நித்திரை கதைதான் நிகழும். உங்களுக்கு இப்போது எந்த இறைவனும் இப்படி வரம் கொடுக்கப்போவதில்லை. ஆனால் அன்றாட வியாபார களத்தில், சின்னச்சின்னதாய் நிறைய கொடுக்கல்-வாங்கல்கள் இருக்கும். பல சூழ்நிலைகளில், உங்களுக்கு என்ன வேண்டும் என்று மற்றரவர்கள் கேட்கக்கூடும். எதையும் வேண்டுமென்று கேட்பதற்குமுன் அதன் சாதக-பாதகங்களைப்பற்றி அலசிப்பார்க்காமல் வாங்கினால், மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்.
அரசன் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று சிக்கினான். இங்கே வியாபார நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் முதன்மை நிலையை தக்கவைக்க முயற்சிக்கிறேன் என்ற பெயரில், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் இறங்கி, கணக்குவழக்குகளை மாற்றி, முதலீட்டாளர்களையும், கடன் கொடுத்தவர்களையும் ஏமாற்றி மாட்டியுள்ளனர். இங்கும் வியாபார பேராசைதான், அவர்களை செய்யக்கூடாதவைகளை செய்ய வைக்கிறது; மிடாஸ் அரசன் வேண்டுமானால் விளைவுகள் தெரியாமல் வரம் கேட்டிருக்கலாம் – ஆனால் இன்று வியாபார உலகில், விளைவுகள் என்ன என்று தெளிவாக தெரிந்திருந்தும், சிலர் அந்த ஏமாற்றுவேலைகளை முயற்சிக்கிறார்கள். குறுகிய கால நோக்கில் செயல்படும் இவர்கள், நீண்ட கால விளைவுகளைப்பற்றி பொருட்படுத்துவதில்லை. இது சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு, பேரின்பத்தை தொலைக்கும் கதைதான்!
மனிதர்கள், தெரிந்தும்-தெரியாமலும் என்னென்ன வகைகளில் மாட்டிக்கொள்கிறார்கள்;
புகழுக்கும், பாராட்டுக்கும் மயங்கி, தன் சக்திக்குமீறிய செயல்களையும் செய்வதாக ஒத்துக்கொண்டு திண்டாடுவது ஒருவகை;
தன்னால் செய்யவியலாது என்று நன்கு தெரிந்திருந்தும், பணத்திற்கு ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்டு பின் திண்டாடுவது இன்னொரு வகை;
அடுத்தவர் முன்னேறிவிடுவார்களோ என்ற பொறாமையில், எல்லாவற்றையும் தன்பக்கம் இழுத்து தானும் வளராமல், மற்றவர்களும் வளர விடாமல் செய்தவது இன்னொரு வகை;
இன்னும் நிறைய வகை மனிதர்களை நீங்கள் கடந்துவரலாம். வியாபாரமோ, விளையாட்டோ, வாழ்க்கையோ, அடிப்படை உண்மை, உங்களின் சிறுவயதில் சொல்லப்பட்ட நீதிதான் – “பேராசை பெருநஷ்டம்”, “ஏமாறாதே - ஏமாற்றாதே”, “அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்”......
எல்லாவற்றையும் சமாளித்து, நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால்
உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன கேட்க வேண்டும்? யாரிடம் கேட்கவேண்டும்? எப்போது கேட்க வேண்டும்? என்ற தெளிவு இருக்க வேண்டும்!
கொடுப்பதும்-பெறுவதும் எதுவானாலும், அதன் குறுகிய கால தாக்கம், நீண்டகால தாக்கம் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும்!
உங்கள் எண்ணங்களையும், செயல்பாடுகளையும், எப்போதும் பேராசையோ, பொறாமையோ ஆட்கொண்டுவிடாதபடி கவனமாக இருக்கவேண்டும்;
வாழ்வதற்கு பணம் ஒரு அத்தியாவசியத் தேவையென்பதில் மாற்றுக்கருத்து இங்கு யாருக்கும் இல்லை. அதற்காகத்தான் இங்கு எல்லாமே செயல்படுகிறதென்றாலும், பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்ற புரிதல் இருந்தால், இருப்பதில் மனநிறைவை அடையமுடியும்;
வியாபாரம், பணம், புகழ், இவற்றைத் தாண்டி, மனித உறவுகளை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்!
வியாபாரத்தில் இலாபம் ஒரு முக்கிய பங்கு. அதேசமயம் வாடிக்கையாளர் சேவை, தரமான பொருட்கள் இல்லாவிட்டால், காலப்போக்கில் வியாபாரம் இல்லாமல் போகும். இன்றைய இலாபம் குறைவானாலும், நீடித்த வியாபார பயனத்திற்கு மற்ற விடயங்களிலும் சமமான கவனம் செலுத்த வேண்டும்;
உங்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்று முழுமையாக கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். கால மாற்றங்களுக்கு ஏற்ப, உங்கள் செயல்களை, முடிவுகளை மறுஆய்வு செய்துகொண்டே இருக்க வேண்டும்;
தொட்டதெல்லாம் பொன்னாகவேண்டும் என்று கேட்டவருக்கு
எப்படி சாப்பிடமுடியும் என்று யோசிக்கத் தோனவில்லை!
அப்படி பின்விளைவுகளைபற்றி யோசிக்காமல் நீங்கள் இருந்தால்
உங்களுக்கு எத்தனை செல்வம் கிடைத்தும் பயனேதுமில்லை!
உலகையாளும் பேராசையில் நிம்மதியை தொலைத்தவர்கள் பலருண்டு!
அதிகவட்டி, இரட்டிப்பு இலாபம் என்ற மாயவார்த்தை நம்பி தொலைத்தவர் பலருண்டு!
எல்லாம் செய்வேன் என்று கைக்குமீறி நிறைய எடுத்து திண்டாடியவர்கள் பலருண்டு!
எத்தனை உணவு தட்டில் இருந்தாலும் வயிறு ஒருசான் தான்!
உங்களால் உட்கொள்ள முடிகின்ற அளவு அவ்வளவுதான்!
நாளைக்காக இன்று சேர்த்து சாப்பிடுகிறேன் என்று எடுக்கவும் முடியாது!
நேற்று எடுக்காததை இன்று சாப்படுகிறேன் என்றாலும் முடியாது!
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று பேராசை கொள்ளாதீர்கள்!
எதுவெல்லாம் பொன்னாக்க வேண்டுமோ
அதைமட்டும் எப்படி செய்வதென்று திட்டமிட்டு செய்யுங்கள்!
- [ம.சு.கு 24.08.2023]
Comments