top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 318 - புத்தம்புதியதா? நிரூபிக்கப்பட்டதா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-318

புத்தம் புதியதா? நிரூபிக்கப்பட்டதா?


  • சமீபத்தில் எனக்கு தெரிந்தவர் ஒருவர் சந்தையில் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நவீனவகை கைபேசி ஒன்று வாங்கினார். அது இன்றைய புதிய தொழில்நுடபம் அனைத்தும் உள்ளடக்கிய அதிநவீன கைபேசி. அந்த கைபேசி வகை உள்ளூர் சந்தையில் இல்லாததால், தன் நண்பர் மூலம், அமெரிக்காவில் இருந்து வாங்கினார். அந்த கைபேசியின் சிறப்பம்சங்கள் அவருக்கு பல விதங்களில் உதவியாக இருந்தது. அவரது வேலையும் எளிதானது. ஆனால், திடீரென்று அதன் செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டபோது, அதை சரிசெய்ய மிகவும் திண்டாடிவிட்டார். அவரது நண்பர்கள், இப்படி முழுதும் நிரூபிக்கப்படாத, வாடிக்கையாளர் சேவை கிடைக்காத, புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கினால் இப்படித்தான் அல்லல்படவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் புதிய தொழில்நுட்பத்தின் செயல்பாடு அவருக்கு பலவிதங்களில் உதவியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் உங்கள் கருத்து என்ன?

  • ஒரு பெண்மனி, தன் வீட்டிற்கு நிறைய விருந்தினர்கள் வருவதை முன்னிட்டு, இணையத்தில் பார்த்து புதிய பதார்த்தங்களை செய்ய பழகினார். முக்கியமான விருந்தினர்கள் என்பதால், புதிய உணவுகளை பரிமாறி அசத்த வேண்டுமென்று முடிவுசெய்தார். அதேசமயம், ஏதேனும் குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது என்ற யோசனையில், கூடுதலாக தனக்கு பழக்கப்பட்ட வழக்கமான சில தென்னிந்திய வகை உணவுகளையும் சுவையாகவே தயார் செய்திருந்தார். விருந்தினர்கள் ஒருசிலர் புதிய உணவை சுவைக்க ஆர்வம் காட்டினர். ஒருசிலருக்கு அது பிடிக்கவில்லை. அதேசமயம், தென்னிந்திய உணவுகள் தயாராக இருந்ததால், அவர்கள் வயிறு நிறைய உண்டனர். கிட்டத்தட்ட வந்தவர்களில் பாதிபேர் புதிய உணவையும், மீதமுள்ளவர்கள் பாரம்பரிய உணவுகளையும் இரசித்து மகிழ்ந்தனர். அந்த பெண்மனி தன் புதிய வகை உணவைமட்டும் நம்பியிருக்காமல், கூடுதலாக தனக்கு பழக்கப்பட்ட பாரம்பரிய உணவையும் செய்திருந்ததால், வந்தவர்களின் மாறுபட்ட தேவைகளை பூர்த்திசெய்ய முடிந்தது. இந்த சிறிய நிகழ்வில், நீங்கள் புரிந்துகொண்டது என்ன?

புத்தம்புது தொழில் நுட்பங்கள் சந்தைக்கு வரும்போது, அது களப்பயன்பாட்டில் புதிய சவால்களை சந்திக்கும் போது, சிலபல கோளாறுகள் வருவது இயல்பு. அதை அந்த நிறுவனங்கள் படிப்படியாய் சரிசெய்து மேம்படுத்தும். ஒன்றிரண்டு கால உபயோகத்தில், அந்த புதிய தொழில்நுட்பத்தில் உள்ள கோளாறுகள் எல்லாம் சரிசெய்யப்பட்டு, பொருள் முழுமையடையும். புதிய தொழில்நுட்பங்களை யாராவது வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே இந்த கோளாறுகள் தெரியவரும். பின் சரிசெய்யப்படும். யாருமே புதியதை வாங்க மறுத்தால், பின்னர் எப்படி அந்த பொருள் மேம்படும். 1000 கணக்கான சோதனைகளை கடந்த வரும் மருந்துகளில் கூட இந்த சிக்கல்கள் வரத்தான் செய்கிறது!


புதிய தொழில் நுட்பத்தை விரும்புவது போல, உணவிலும் புதிய வகை உணவுகளை சாப்பிட நிறையபேர் விரும்புகின்றனர். ஆனால் அந்த புதியவகை உணவு முயற்சி தோற்றால், சமைத்தவரை திட்டுகின்றனர். அந்த சூழ்நிலையில், “இதை சாப்பிடுவதற்கு, பேசாமல் இட்லி செய்து சாப்பிட்டிருந்தால், வயிறு நிறைய சாப்பிட்டிருக்கலாம்” என்பர். இவர்களேதான், புதியதை முயிற்சி செய்யாமல், ஆரம்பத்திலேயே இட்லி செய்துவைத்தால், “எப்போ பார்த்தாலும் இதே இட்லி தானா? புதுசா ஒன்னு செய்யமாட்டீங்களா?” என்றும் கூறுகின்றனர். இப்படி 10 பேர், 10 விதமான எதிர்பார்ப்புக்களுடன் இருந்தால் சமைப்பவரின் நிலை என்னாவது.

  • புதியவகை உணவுகளை முயற்சிசெய்யாமல், அவற்றின் சுவையை எப்படி தெரிந்துகொள்ளவது?

  • புதிய தொழில்நுட்பங்களின் பயன்களை உபயோகிக்காமல் எப்படி வேலையை எளிமையாக்குவது?

  • புதிய ஊர்களுக்கு பயணம் செய்யாமல், எப்படி கலாச்சாரங்களை தெரிந்துகொள்வது?

அளவான மாத ஊதியத்தில் வேலைபார்ப்பவர்கள், சந்தைக்கு வரும் விலை உயர்ந்த புத்தம்புதிய தொழில்நுட்பப் பொருட்களை வாங்கி சோதனை முயிற்சி செய்யமுடியுமா? அதேசமயம், கோடிகளில் சேர்த்தவர்கள், புதிய வாகனம், புத்தம்புதிய கைபேசி என்று சோதனை முயிற்சியில் எதையும் வாங்கி முயற்சிப்பதில் பெரிய நஷ்டமொன்றுமில்லையே!


எப்போதும், பொருட்களை வாங்கும் போது, சந்தையில் உங்களுக்கு நான்கு வகையான தேர்வுகள் இருக்கும்;

  • அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய அறிமுகப் பொருட்கள்

  • வாடிக்கையாளர் பயன்பாட்டு விமர்சனங்களின் மூலம் மேம்படுத்தப்பட்ட, சந்தையில் நிரூபிக்கப்பட்ட பொருட்கள்

  • விலைமலிவான பழைய தொழில்நுட்ப பொருட்கள்

  • விலைமலிவான போலியான முத்திரை கொண்ட பொருட்கள்

சந்தையில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது, இவற்றில் உங்கள் தேர்வு எதுவாக இருக்கும்?


விலையை மட்டுமே குறியாக பார்ப்பவர்கள், விலை குறைவான மூன்றாவது-நான்காவது வகைகளை தேர்வு செய்வார்கள். மேலும் அதைப்பற்றி பொருட்படுத்த அவர்களுக்கு ஒன்றுமில்லை; விலையைத் தாண்டி பொருளின் தரத்தையும், புதிய தொழில்நுட்பங்களையும் அலசுபவர்களுக்குத்தான் நிறைய குழப்பம் – சந்தைக்கு வந்த புதியவற்றை வாங்கி சோதனை முயற்சி செய்யலாமா-வேண்டாமா என்று?

  • நீங்கள் புதிய தொழில்நுட்பத்தை விரும்புபவராக, புதியவற்றை முதல் நபராக ஏற்றுக்கொள்பவராக இருந்தால், தைரியமாக புதியவற்றை வாங்குங்கள். புதியவற்றில் சில சிக்கல்கள் வந்தாலும், சரி செய்து கொள்ளலாம். வரப்போகும் இடர்களுக்கு பயந்தால், புதியவைகளுக்கு மாறவே முடியாது. மற்றவர்கள் தயங்கிக்கொண்டிருக்கும்போது, புதியவற்றுக்கு தைரியமாக மாற முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே பெரிய வெற்றிகளை சாதிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

  • புதியவைகளின் அத்தியாவசியத்தேவை ஏதுமில்லை. வாங்குகின்ற பொருள் எந்த தொந்தரவும் கொடுக்காமல் தரமாக வேலைசெய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள் களப்பயன்பாட்டில் மேம்படுத்தப்பட்ட, சந்தையில் நிரூபிக்கப்பட்ட பொருட்களை வாங்கலாம்.

உங்கள் தேவை எதுவோ – அதன்படி உங்கள் தேர்வுகள் இருக்கட்டும்.

புதுப்புது கண்டுபிடிப்புக்கள் வருகின்றன;

சிலவற்றை சந்தை ஏற்கிறது, சிலவற்றை நிராகரிக்கிறது!

புதியவற்றில் முதலீடு செய்து வெல்பவர்கள் ஒருபகுதி

புதியவற்றில் முதிலீடு செய்து தொலைத்தவர்கள் இன்னொருபகுதி

புதியவற்றை கண்டு ஒதுங்கியவர்கள் மிச்சப்பகுதி!


புத்தம் புதியதில் புகுவது சிறந்ததா? – அல்லது

நிரூபிக்கப்பட்டவற்றில் புகுவது சிறந்ததா?

இந்த கேள்விக்கான சரியான விடை ஏதுமில்லை!

காலச்சூழ்நிலை, சந்தை நிலவரம்,

வாடிக்கையாளர் தேவை, முதலீட்டு அளவுகளை பொறுத்து,

இந்த கேள்விகளுக்கான விடையை நீங்கள் தான் தீர்மாணிக்கவேண்டும்!


உங்கள் தேவைகளுக்கேற்ப புதியவற்றை தேர்ந்தெடுங்கள்!

பகட்டிற்காக தேர்வுசெய்து வளத்தை வீணடிக்காதீர்கள்!


- [ம.சு.கு 23.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page