“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-317
சின்னச்சின்ன வெற்றிகளை கொண்டாடுங்கள்..!
ஒரு சிறுவன், தன் தந்தையின் பெரிய மிதிவண்டியை ஓட்டிப்பழக விரும்பினான். அவன் இன்னும் பெரிதாய் வளராத காரணத்தினால், பெரிய மிதிவண்டியை அரைநிலையில் [குரங்கு பெடல்] ஓட்ட முயற்சி செய்தான். கிட்டத்தட்ட ஒரு மாத கால போராட்டத்தில், சிலபல வீரத்தழும்புகளுடன் அந்த மிதிவண்டியை அரைநிலையில் அவனால் ஓட்ட முடிந்தது. அதை பயின்றவுடன் மகிழ்ச்சியில் ஊரையே சுற்றிவந்தான். வீட்டில் எந்த வேலையானால், தான் சென்று செய்வதாக சொல்லி மிதிவண்டியை ஒய்யாரமாய் கிளப்பினான். உயரபோதாதால், இன்னும் மிதிவண்டியை முழுதாய் ஓட்டக்கூட முடியவில்லை. ஆனால் குரங்குப்பெடல் அவனுக்கு வசமானதில் அளாதியான மகிழ்ச்சி. அதை கொண்டாட ஊருக்கே தான் பழகிவிட்டதை தெரிவித்தான். வளர்ந்தவுடன் இருக்கையில் உட்கார்ந்து ஓட்டவும் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவனுள் முழுமையாக இருந்தது.
தினமும் நடைபயிற்சி செய்யும் ஒரு நண்பருக்கு, ஒரு பெரிய விபத்தில் இருகால்களும் அதீதமாக சிதைவுற்றது. கிட்டத்தட்ட உயிர்பிழைத்ததே அதிசயம் என்கிறளவில் நடந்தவிபத்தில், அவர் தப்பித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவரால் இனிநடக்க முடியுமா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் சிறிதுநாள் கழித்து பார்க்கலாம் என்று சொன்னார்கள். மூன்று மாதங்கள் கழித்து அவரை சந்தித்தபோது, அவர் கோலூன்றி நன்றாக நடந்தார். அவர் சொன்ன வார்த்தைகள், “நான் குழந்தை பருவத்தில் நடைபழகியபோது கூட இவ்வளவு மகிழ்தேனா என்று தெரியவில்லை, ஆனால் முதலில் எழுந்து நிற்கமுடிந்தபோது, முதல் அடியை எடுத்துவைத்தபோது என்னுள் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் நிறைந்தன” என்றார். தன் ஒவ்வொரு சிறுமுயற்சியின் வெற்றியும், தன் மனைவி பிள்ளைகளிடம் சொல்லிச்சொல்லி மகிழ்வுற்றதாக கூறினார்.
தன் சிறிய மிதிவண்டியை மட்டுமே ஓட்டியோட்டி சலித்துப்போன சிறுவனுக்கு, தந்தையின் பெரிய மிதிவண்டியை ஓட்டுவதில் ஆர்வம் அதிகமிருக்கும். அப்படித்தான் நாமும் மிதிவண்டி ஓட்டிப் பழகினோம். அதை பழகியவுடன் அந்த சிறுவர்கள் அதை அளவில்லாமல் கொண்டாடுவது உச்சகட்டம். வீட்டில் தாயார், ஏதாவது தீர்ந்துவிட்டால், உடனே அந்த சிறுவன், மிதிவண்டி எடுத்துப்போய் தான் வாங்கிவருகிறேன் என்று கேட்காமலேயே வேலைசெய்ய தயாராகிவிடுகிறான். அந்த பெரிய மிதிவண்டியை ஓட்டிப்பழகிய அந்த முதல் படிநிலை வெற்றியை கொண்டாடி மகிழ்ந்ததுபோல, இன்று உங்களின் அந்த சின்னச்சின்ன முயற்சியின் வெற்றிகளை கொண்டாடி மகிழ்கிறீர்களா? நான்கு சக்கரவாகனம் ஓட்டிப்பழகியபோது எப்படி கொண்டாடினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்!!
காலில் அடிபட்டு நடக்குமுடியுமா-முடியாதா? என்ற நிலையில் இருந்தவருக்கு, எழுந்து நிற்பதே முதல்கட்ட வெற்றிதான். அடுத்ததாக படிப்படியாக நடப்பது. தன் ஒவ்வொரு சிறுமுயற்சியின் வெற்றியையும் தன்னைச் சேர்ந்தவர்களோடு கொண்டாடும்போது, அவை அடுத்தகட்ட முயற்சிக்கு சிறந்த உந்துதலாக அமைகிறது. வெற்றியைச் சுவைத்தவருக்கு கிடைக்கும் பாராட்டுக்கள், ஒரு போதைபோல. அது அவர்களை மீண்டும் மீண்டும் வெற்றிக்காக போராடத் தூண்டும். அந்த உந்துதல் மிகப்பெரிய வெற்றிக்குத்தான் கிடைக்கும் என்றில்லை. நடக்க முடியாமல் கிடந்தவருக்கு, எழுந்து நின்றபோது மகிழ்ந்தது, உந்துதலாக இருந்து அடுத்த முயற்சியை தொடர வைத்தது. ஒரு அடி காலை நகர்த்த முடிந்ததால் ஏற்பட்ட மகிழச்சி, மேலும் தன்னம்பிக்கையை வளர்த்து நடக்கவைத்தது.
ஒவ்வொரு சிறிய வெற்றியையும் கூட்டத்தோடுதான் கொண்டாடவேண்டும் என்று விதியில்லை. உங்கள் மனநிறைவுதான் முதல் நிலை கொண்டாட்டம். உங்கள் முன்னேற்றத்தில், உங்களுக்கு நீங்கள் போதுமான மனநிறைவை அடைந்தால், மனஅழுத்தமும், மனஉளைச்சலும் இல்லாமல் வெற்றியை நோக்கி முன்னேற முடியும். ஒவ்வொரு முன்னேற்றத்தையும் பொருட்படுத்தாமல், மனஅமைதியில்லாமல் ஓடமுற்பட்டால், அதீதமான மனஉளைச்சல் ஏற்பட்டு தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படும்.
இறுதியில் சாதிப்பதுமட்டுமே மகிழ்ச்சி என்று எண்ண இருந்துவிடாதீர்கள். யதார்த்தத்தில், உங்கள் வெற்றிப் பயனத்தின் பாதைதான் உங்களின் உண்மையான மகிழ்ச்சி. ஒரு இலக்கை அடைய 5 ஆண்டுகள் போராடியிருக்கலாம். அந்த இலக்கை அடைந்தவுடன் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால் அந்த மகிழ்ச்சி வெறும் ஒன்றிரண்டு மணிநேரங்களுக்குத்தான். ஆனால் அந்த இலக்கை நோக்கிய பயனத்தில், உங்களின் ஒவ்வொரு சிறிய திட்டமிடலும் சரியாக நிறைவேறியபோது, இடையிடையே ஏற்பட்ட சிலதுவறுகளை சரிசெய்து வெற்றிப்பாதையை உறுதிசெய்தபோது, இலக்குகளின் படிநிலைகள் ஒவ்வொன்றையும் வெற்றிகரமாக கடந்தபோது என்று பல தருணங்களில் உங்களின் சின்னச்சின்ன வெற்றிகளை மனநிறைவோடு கொண்டாடி இருந்தால், அந்த இலக்கை அடையும் மகிழ்ச்சயானது பல்லாயிரம் மடங்கு அதிகமாகியிருக்கும்.
முட்டாள்களைப்போல இலக்கைநோக்கி கண்மூடித்தனமாய் ஓடாதீர்கள். இடையிடையே அந்த பயனத்தின் பாதையை இரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்;
ஒவ்வொரு படிநிலை வெற்றியையும் தனியாகவோ, நட்புக்களுடனோ சின்னதாய் கொண்டாடுங்கள்; அந்த கொண்டாட்டம் தான் உங்களின் மனநிறைவு;
உங்கள் முன்னேற்றத்தை நீங்களே அங்கீகரிக்கும்போது, உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும். உங்கள் தன்னம்பிக்கைதான் அடுத்த பெரிய வெற்றியின் அடித்தளம்;
உங்கள் சிறுசிறு வெற்றிக்கொண்டாட்டங்கள், உங்கள் பயனப்பாதையில் உள்ள மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் பெருமளவு குறைக்கும்; மனம் அமைதியடையும் போது சிந்தனை சீராகி, அடுத்த முயற்சி தவறில்லாமல் நடக்கும்;
உங்கள் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும்போது, உங்கள் இலக்கை நோக்கிய பாதையை, அதற்கான தேவைகளை, அடுத்தடுத்த படிநிலைகளை, சூழல் மாற்றங்களை மறுஆய்வு செய்து, தேவைப்படும் மாற்றங்களை செய்யமுடியும்;
இந்த சின்னச்சின்ன வெற்றிகளை கொண்டாடுவதில் இளைஞர்கள்தான் கில்லாடிகள். எது நடந்தாலும், உடனே விருந்து [பார்ட்டி] கேட்பார்கள். அவர்கள் காதலில் வென்றாலும்-தோற்றாலும், தேர்வில் வென்றாலும்-தோற்றாலும், உலகக்கோப்பையை வென்றாலும்-தோற்றாலும், படம் ஜெயித்தாலும்-தோற்றாலும், நிகழ்வு எதுவானாலும், அவர்கள் கொண்டாட ஏதாவதொரு காரணம் வேண்டும். இளவட்டங்களைப்போல காரணமே இல்லாமல் புதியகாரணம் கண்டுபிடித்து குடித்து கும்மாளம் இடச் சொல்லவில்லை.
உங்கள் இலட்சயப்பாதையில், கஷ்டப்பட்டு அடையும் ஒவ்வொரு படிநிலை வெற்றிகளையும், உங்களுக்குள் அங்கீகரித்து, மனநிறைவு காணுங்கள். அந்த மனநிறைவை, உங்கள் குடும்பத்துடன் கொண்டாடுங்கள். இறுதி வெற்றியை ஒருநாள் மட்டும் கொண்டாடுவதில் பெரிதாய் மகிழ்ச்சியில்லை. செல்லும் பாதையில் அடைந்த எல்லாவெற்றியும் கொண்டாட்டத்திற்குரியதுதான். அதை கொண்டாடத்தவறினால், வாழ்வின் உண்மைச் சுவையை இருசிக்காமலே இழக்கநேரிடும்;
மட்டைப்பந்தாட்டத்தில் 100வது ஓட்டம் மட்டுமே சாதனையில்லை
முதல் ஓட்டம் முதல் எல்லாமே முக்கியத்துவமானதுதான்;
25-ல் ஒரு கொண்டாட்டம், 50-ல் ஒரு கொண்டாட்டம்
75-ல் ஒரு கொண்டாட்டம், 100-ல் ஒரு கொண்டாட்டம்
அதைத் தொடர்ந்து ஈட்டும் ஒவ்வொரு ஓட்டமும் கொண்டாட்டம்தான்!
வாழ்வை ஒவ்வொரு தருணமாக பிரித்துக் கொண்டாடுங்கள்;
வெற்றிப் பாதையை கொண்டாடுகிறேன் என்றபெயரில்
அடையாத இலக்கிற்கு பெருமைபேசி கொண்டாடாதீர்கள்!
அடைந்த படிநிலை இலக்கை,
அதில் அடைந்த மனநிறைவை கொண்டாடி மகிழுங்கள்!
எல்லோருமே, எல்லாமே செய்வது எதற்காக?
அவரவரின் மனநிறைவிற்கும், மகிழ்ச்சிக்கும் தானே!
அந்த மனநிறைவை ஒவ்வொரு படிநிலைவெற்றியிலும்
கண்டுணர்ந்து கொண்டாடி மகிழலாமே!!
- [ம.சு.கு 22.08.2023]
Comentários