top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 316 - அனுமானங்கள் அளவோடு இருக்கட்டும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-316

அனுமானங்கள் அளவோடு இருக்கட்டும்..!


  • சமீபத்தில் உங்கள் நண்பர் ஒரு குறிப்பிட்ட திரைப்படம் நன்றாக இருந்ததென்று சொல்கிறார். நீங்களும் அதை மறுநாள் பார்த்துவிடுகிறீர்கள். உங்களுக்கும் அந்த படம் பிடித்திருக்கிறது. பல நாட்களுக்குப் பிறகு அந்த இயக்குனர் ஒரு பெரிய வெற்றிப்படத்தை தந்திருப்பதாக நண்பர்களுடனான உரையாடலில், சொல்கிறீர்கள். அந்தவார இறுதியில் பத்திரிக்கையில் அந்தபடம் பெரிய தோல்வியை தழுவியதாக வெளியிட்டிருந்தார்கள். உங்களுக்குள் பெரிய குழப்பம். நண்பனும் நன்றாக இருக்கிறதென்றான். தனக்கும் பிடித்திருந்தது. ஆனால் எதனால் அந்தபடம் தோல்வி கண்டுள்ளது? உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் பிடித்திருக்கிறது என்பதற்காக உலகம் ஒரு படத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டுமா? அப்படி ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அனுமானம் சரியா?

  • சமீபகாலங்களில் பல திரைநட்சத்திரங்கள் அரசியல் பிரவேசம் செய்து, சிலகாலம் முயன்றபின் திரும்பிவிட்ட நிகழ்வுகளை பார்த்திருப்பீர்கள். புகழ்பெற்ற நட்சத்திரங்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் கூறும் புகழ்மொழிக்கும், இரசிகர் பட்டாளத்திற்கும் மயங்கி, அரசியலிலும் அப்படியே சாதிக்கலாம் என்று களம் காண்கின்றனர். ஒரு எம்.ஜி.ஆர், ஒரு என்.டி,ஆர், ஒரு ஜெயலலிதா போல முதலமைச்சர் நாற்காலியில் அசைக்க முடியாமல் உட்காரலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் திரைத்துறை வேறு, அரசியல் வேறு என்ன களயதார்த்தத்தை, தேர்தல் தோல்வியில் தான் புரிந்து கொள்கிறார்கள். இவர்களைப்போல நீங்கள் என்னனென்ன அனுமானங்களை கொண்டிருக்கிறீர்கள்?

திரைப்படம் குறித்து நீங்கள் சொல்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது. உங்களின் ஓரிரு நண்பர்கள் கூறினார்கள் என்பதற்காக படம் வெற்றி பெற்று விடாது. உலகம் மிகவும் பெரியது. இங்கு இலட்சோப இலட்சம் மக்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென்று நிறைய அனுமானங்களை வைத்திருப்பார்கள். இந்த கூட்டத்தின் கருத்துக்களை முழுமையாக கேட்காமல், ஒரிருவரின் கருத்துக்களை கேட்டுவிட்டி, இதுதான் எல்லோருடைய கருத்தாக இருக்கும் என்று அனுமானிப்பது எவ்வளவு முட்டாள் தனம்!!


திரைப்படத்தில் நல்ல நடிப்புத்திறன் இருந்தால் வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த நடிப்புத் திறனால் அரசியலில் எந்த பயனுமில்லை. இங்கு ஒரு பெருங்கூட்டத்தை நீங்கள் அரவணைக்க வேண்டும். ஆளுமைத் திறனால், எல்லோரையும் கட்டக்கோப்பாக வழிநடத்த வேண்டும். பலதரப்பட்ட மக்களின் உணர்வுகள், தேவைகள் புரிய வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள 10-20 பேர் சொல்வதைமட்டும் நம்பி களம் கண்டால் அவமானம் மட்டுமே மிஞ்சும்.

  • இங்கு மக்களுடைய விருப்பம் என்ன?

  • இங்கு மக்களுடைய சிந்தனை எப்படி இருக்கிறது?

  • இங்கு மக்கள் எதைப்பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

  • இந்த மக்கள் யாரைத் தேர்வு செய்வார்கள்?

இந்த பொதுவான கேள்விகளுக்கு, உங்கள் மனதிற்குள் ஒரு விடை தயாராக இருக்கும். ஆனால் அதுதான் பொது ஜனங்களுடைய கருத்தாக இருக்குமா? ஆம்! என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அது எவ்வளவு தூரம் சரியாக இருக்குமென்று யாராலும் உறுதிகூற முடியாது. உங்கள் கருத்தென்பது உங்களின் அனுமானம். அந்த அனுமானம் சரியா-தவறா? என்று தெரிந்துகொள்ள ஆசையிருந்தால், கூடுமானவரை பெரிய கூட்டத்திடம் கருத்தைக் கேளுங்கள். அதைத்தான் ஒவ்வொரு நிறுவனமும் சந்தை ஆய்வு என்ற பெயரில் தங்கள் பொருட்களின் வெற்றிக்காக தொடர்ந்து செய்கிறார்கள்.

  • பொருட்களை அறிமுகப்படுத்தும் முன் சந்தையின் தேவையை ஆய்கிறார்கள்

  • பொருட்கள் உபயோகத்தின் போது, வாடிக்கையாளரின் தேவை பூர்த்தியாகிறதா என்று ஆய்கிறார்கள்

  • பொருட்களில் இன்னும் என்ன மேம்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் என்று ஆய்கிறார்கள்

இது சிறந்த கண்டுபிடிப்பு, இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கண்மூடித்தனமாய் அறிமுகப்படுத்திய பொருட்கள் பல தோற்றுவிட்டன. பொருள் சிறந்ததென்று நிறுவனம் அனுமானித்தால் போதாது. அது வெற்றிபெற மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு பெரிய பயன்பாடில்லாத பொருள் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், வரவேற்பில்லாமல் நிராகரிக்கப்டுவது இயல்பே!


அனுமானங்கள் இல்லாமல் வாழ்க்கையில்லை. நாளை எழுவோம் என்ற நம்பிக்கையில், அனுமானத்தில் தான் இன்று எல்லோரும் உறங்கச் செல்கிறார்கள். ஒருவேளை நாளை எழுவோம் என்பது சந்தேகமானால், இங்கு யாருக்காவது தூக்கம் வருமா? உங்கள் வாழ்க்கை நம்பிக்கையோடு நகர, இங்கு நிறைய அனுமானங்கள் தேவை. ஆனால் அவை உங்களுடையது மட்டுமே என்று தெளிவு இருக்கவேண்டும். உங்கள் அனுமாத்தை உலகம் அப்படியே ஏற்கும் என்று எண்ணிக்கொண்டு செயல்பட்டால், பெரிய இழப்புமட்டுமே மிஞ்சும்.

  • ஐந்துபேரின் போற்றல்களையும், ஆலோசனையையும் கேட்டு அரசியல் களம் காணாதீர்கள். இங்கு ஐந்துகோடி பேர் இருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள பல ஆண்டுகள் நீங்கள் அவர்களுடன் பயணம் செய்யவேண்டிய தேவை இருக்கிறது!

  • பொருளின் உற்பத்தி, தரம், பயன்கள் சிறப்பாக இருக்கிறது, அதனால் கட்டாயம் வெற்றி பெறும் என்று அனுமானித்து ஓய்வெடுத்து விடாதீர்கள். சந்தை எப்படி வேண்டுமானாலும் எதிர்வினையாற்றலாம். சந்தையின் போக்கை தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள்;

  • நீங்கள் சொல்வதுதான் சரி, மற்றவரின் கருத்து தவறென்று பிடிவாதமாக வாதிட்டுக் கொண்டிருக்காதீர்கள். ஒரு சிலவற்றில் நீங்கள் சரியாக இருக்கலாம். ஒருசிலவற்றில் மற்றவர் சரியாக இருக்கலாம். மீதமுள்ளவற்றில் இருவருமே தவறாக இருக்கக்கூடும். ஒரே அனுமானத்தில் இறுதி வரை பயனித்துக் கொண்டிருக்காதீர்கள். காலச்சூழ்நிலை, சமுதாய செயல்பாடுகளுக்கேற்ப, உங்கள் அனுமானங்களை சீர்திருத்திக் கொள்ளுங்கள்;

  • உங்களால் முடியும், முடியாதென்று முன்னர் தீர்மானித்தவைகளை, யானைக்கிட்ட விலங்கு போல இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், பழையவைகள் மாற்றியமைக்கப்படலாம்;

  • மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை. அவர் ஆசிரியரானாலும், வல்லுனரானாலும், அவரது கருத்துக்களில் அவர்களுடைய நிறைய அனுமானங்கள் சேர்ந்திருக்கக்கூடும். எல்லாவற்றையும் சற்று யோசித்து, அலசி ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நன்று;

  • பெரிய முடிவுகளை எடுப்பதற்குமுன், குறைந்தபட்சம் 3-4 பேரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. ஒரே கண்ணோட்டத்தில் இல்லாமல், வெவ்வேறு சூழ்நிலையிலுள்ள மனிதர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். பல்வேறு கண்ணோட்டங்களில் ஆராய்ந்து முடிவெடுப்பது சாலச்சிறந்தது;

  • புதிய யோசனைகள், மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்களை காதுகொடுத்து கேளுங்கள். தெரிந்தவரோ-தெரியாதவரோ, பெரியவரோ-சிறியவரோ, யாருடைய தரத்தையும், நபரையும் கவனிக்காமல், அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அலசிப்பாருங்கள்.

உங்கள் அனுமானம் சரியா-தவறா என்பது, அதன் விளைவுகளைப்பொருத்து தெரியவரும். விளைவுகள் ஏற்படும் வரை காத்திருந்து நஷ்டத்தை ஏற்பது முட்டாள்தனம். போகும் பாதையில் தென்படும் சூழ்நிலைகள், மக்களின் வரவேற்பு-நிராகரிப்புக்களை புரிந்துகொண்டு உரிய மாற்றங்களை செய்துகொண்டால், கடைசியில் ஏமாற்றமில்லாமல் வெற்றிகொள்ளலாம்;


ஏதாவதொரு அனுமானத்தில்தான்

எல்லாமே துவங்குகின்றன! – ஆனால்

அதையே கடைசிவரை உடும்புபிடியாக பிடித்திருந்தால்

காலமாற்றத்தில் அவை முற்றிலும் தவறாகக்கூடும்;


அனுமானங்களை தொடர்ந்து மறு ஆய்வு செய்யுங்கள்;

மாற்றங்கள் மட்டுமே இங்கு நிரந்தரம்!

உங்கள் எண்ணம், சிந்தனை, செயல் என்றெல்லாமே

காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்க வேண்டும்!


நிரந்தரமான வெற்றிக்கு

எண்ணங்களிலும், அனுமானத்திலும், செயலிலும்

போதுமான மாற்றங்களை செய்துகொண்டே இருங்கள்!!


- [ம.சு.கு 21.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

留言


Post: Blog2 Post
bottom of page