“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-314
உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள்..!
ஒரு வங்கிக்கு, புதிதாய் சேமிப்பு கணக்கு தொடங்கி, பணத்தை கட்டி வைப்புநிதி வைப்பதற்காக செல்கிறீர்கள். புதிய கணக்கு தொடங்க ஒரு படிவும் கொடுக்கப்படுகிறது. அதில் உங்களைப்பற்றி 25-50 தகவல்களை கேட்பார்கள். எல்லாவற்றையும் பூர்த்தி செய்து ஆதாரங்களுடன் கொடுத்தால், 2-3 அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். ஏதற்காக இந்த கணக்கை துவங்குகிறீர்கள் உட்பட 4-5 கேள்விகள் கேட்கப்பட்டு ஓரிரு நாட்களில் கணக்கு துவங்கப்படும். அதன்பின்னர் நீங்கள் உங்கள் பணத்தை கட்டுவீர்கள். அதற்கென்று ஒருபடிவம் இருக்கும். அதை 2 அதிகாரிகள் சரிபார்த்து கையெழுத்திடுவார்கள். அடுத்ததாக வைப்புநிதிக்கானதொரு படிவம் கொடுப்பீர்கள். அதை 2 அதிகாரிகள் சரிப்பார்த்து ஒப்புதல் அளித்தபின் 1 மணி நேரத்தில் வைப்பு நிதி இரசீது வழங்கப்படும். எதற்காக இத்தனை கையெழுத்து, இத்தனைநேரம் காக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?
உங்கள் நிறுவனத்தில் எந்தெந்த அதிகாரிகள், எத்தனை ரூபாய் அளவுவரை ஒப்புதல் அளிக்க அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் என்ற பட்டியல் இருக்கிறதா? பத்தாயிரம் ரூபாய் வரை ஒரு அதிகாரி, ஐம்பதாயிரம் வரை அவரது உயரதிகாரி, ஒரு இலட்சம் வரை அவருக்கு மேலதிகாரி என்ற முறைமை வகுக்கப்பட்டிருக்கும். ஏன் அந்த கீழ்நிலை அதிகாரிக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கலாமே? அவர் தானே களத்திற்கு அருகாமையிலுள்ள அதிகாரி. அவருக்குத்தானே களநிலவரம் முழுமையாக தெரியும்! ஏன் தலைமை அலுவலகத்தில், குளுகுளு அறையில் அமர்ந்திருப்பவரிடம் அனுமதி தேவைப் படுகிறது? ஒரு பாமரனாக இந்த கேள்வி எழுவது நியாயம் தான். ஆனால் நிர்வாக அமைப்பில் யோசித்துப் பாருங்கள்!!
எதற்காக வங்கியில் ஒரு கணக்கு துவங்க இரண்டு நாட்கள் எடுக்கிறார்கள்? எதற்காக என் பணத்தை என் கணக்கிக் கட்டுப்போது, அதை வைப்பு நிதியாக மாற்றும்போது 2-3 அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள்? ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொருவருக்கு சரியாக பிரித்துக்கொடுத்து ஒருவரையே செய்யச் சொன்னால், வேலை சீக்கிரம் முடியுமல்லவா? என்று உங்களுக்க தோன்றும். ஒருவேளை நீங்கள் எதிர்பார்ப்பது போல வேலை மாற்றியமைக்கப்பட்டால், நீங்கள் பணம் செலுத்தியதும் இரசீது கிடைக்கும். ஆனால் உங்களுக்கு போலியாக ஒரு இரசீது கொடுக்கப்பட்டு, அந்த அதிகாரி பணத்தை வேறொரு கணக்கில் வரவு வைத்தால் என்னாவது? அல்லது அவசரத்தில் அவர் உங்கள் கணக்கு எண்ணை தவறாக பதிவிட்டுவிட்டால் பணம் உங்கள் கணக்கில் வராதே! இதை நீங்கள் கவனிக்கத் தவறினால், யாருக்கு நஷ்டம். மாறாக நீங்கள் கட்டிய பணத்திற்கான படிவத்தை அடித்த மேல்நிலை அதிகாரியொருவர் பரிசோதித்து, பணம் சரியான கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்று கணிணியிலும் சரிபார்த்தால், களத்தில் ஏற்படும் தவறுகள் உடனுக்குடன் சரி செய்ய வாய்ப்பிருக்குமே!
உங்கள் நிறுவனத்தில், களத்தில் இருக்கும் கீழ்நிலை அதிகாரி அவரது கையிலிருக்கும் ஒரு திட்டத்திற்கு மட்டுமே பொருப்பாளி. 1000 பேர் வேலை செய்யும் நிறுவனத்தில் அப்படி எத்தனை அதிகாரிகள் இருப்பார்கள். அவர் எல்லோரும் அவரவர் வேலைக்களுக்கான எல்லா செலவின முடிவுகளையும் கட்டுப்பாடில்லாமல் எடுத்தால், நிறுவனத்தின் நிதிநிலை என்னாவது? இந்த ஆண்டு இந்த குறிப்பிட்ட தொகைதான் திட்டமிடப்பட்டுள்ளதென்று வரையரை வகுத்துவிட்டால், அதற்குள் இயங்க அவர்களுக்கு அதிகாரம் இருக்கும். அதற்கு மேல், ஒரு ரூபாய் செலவு செய்வதானாலும், மேல்மட்டம் வரை அனுமதிக்கு சென்று வரவேண்டும். மேல்மட்டத்தில், நிறுவன அளவிலான மொத்தக் கண்ணோட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும். இப்படி கீழ்நிலையிலிருந்து, தலைவர் வரை யார்யார் என்ன செய்ய வேண்டும், யாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, என்ற “உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள்” முறைமை வகுத்து அதை அவ்வப்போது முறையாக சோதித்து நிர்வகிக்கும் நிறுவனங்கள் மட்டுமே நீண்ட காலம் நிலைத்திருக்கு முடியும். ஒருவேளை அவரவர் இஷ்டம்போல நடக்க அனுமதி அளித்தால், சில மாதங்களிலேயே நிறுவனத்தை மூடவேண்டிய சூழல் வரும்!
பொதுவாக ஒருநிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர்களிக், ஒரு 10% பேர் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் தேவையில்லை. சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, நேர்மையை கடைபிடிப்பார்கள். அதற்கு எதிர்பதமாக இன்னொரு 10% பேர், எதையும் மதிக்க மாட்டார்கள். நீங்கள் எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தலாலும், அதிலுள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து ஏமாற்றுவார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், படிப்படியாக இவர்களை கண்டறிந்து வேலையை விட்டு அகற்றி விடுவார்கள். அதேசமயம் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட 80% பேர் அமைதியான சுயநலவாதிகள்.
இந்த 80% நபர்கள், கட்டுப்பாடுகளும், கண்டிப்பும் இருந்தால், அவர்கள் கவனிக்கப்படுகிறார்கள் என்ற பயம் இருந்தால், அந்த உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகளுக்குள் இயங்குவார்கள். அவர்களை யாரும் கவனிப்பதில்லை, எந்ந கட்டுப்பாடுகளும் இல்லையென்றால், அவரவரின் இஷ்டத்திற்கு, அவரவர் சுயலாபத்திற்கு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இந்த 80% பேர், மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக நேர்மையாக இருக்கிறார்கள். தங்களை யாரும் கவனிப்பதில்லை, தங்கள் தவறுகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிந்தால், இவர்கள் எல்லா தவறுகளையும் கட்டவிழ்த்து விடுவார்கள். எல்லா நிறுவனங்களிலும், எல்லா நாடுகளிலும் அமல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள் எல்லாம் இந்த 80% பேர்களை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்குத்தான்.
போதுமான உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள் நிறுவப்படாமல் இருந்தாலோ, அல்லது ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறைமைகளை யாரும் கடைபிடிக்காமல் இருந்தாலோ, உங்கள் நிறுவனம் என்னவாகும்?
ஊழியர்கள் அவரவர் இஷ்டத்திற்கு நினைத்து நேரத்திற்கு வந்து போவார்கள்
நிறுவனச் செலவினங்களில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் எல்லைமீறிப் போகும்
வாடிக்கையாளருக்கு கடன்களை வாரி வழங்குவார்கள். கடன்களை வசூலிப்பதில் மெத்தனப்போக்கு நிலவும்;
ஒரு சில ஊழியர்கள், நிறுவனத்தின் பொருட்களை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்த துவங்குவார்கள்;
வாடிக்கையாளர் சேவை குறைந்து, படிப்படியாய் ஊழியர்கள் மத்தியில் சோம்பேறித்தனமும், மெத்தனப்போக்கும் நிலைத்துவிடும்;
இந்த அவலநிலை உங்கள் நிறுவனத்திற்கு வராமல் இருக்கவேண்டுமானால்,
இந்த அவலநிலை உங்கள் நிறுவனத்திற்கு வராமல் இருக்கவேண்டுமானால், தொடர்ந்து தவறுகளைச் செய்யும் அந்த 10% பேர்களை இணங்கண்டு அகற்றுவதற்கும், 80% பேர்களை முழுமையாக கட்டுப்படுத்தி வழிநடத்தவும் போதுமான உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகளை நிறுவ வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி முதல், கடைநிலை ஊழியர் வரை எல்லோரும் கட்டாயம் கடைபிடிக்க, போதுமான பயிற்சியும், உத்தரவுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; உத்தரவுகள் வழங்கப்படுவதோடு நின்றுவிடாமல், அவற்றின் செயல்பாட்டை அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டே இருக்கவேண்டும்;
நேர்மையானவர்களை உங்களால் மாற்றமுடியாது
அநீதிக்காரர்களை உங்களால் மாற்றமுடியாது – ஆனால்
இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கூட்டம்தான் இங்கு அதிகம்;
இந்த இடைநிலையானவர்கள்
பழிபாவங்களுக்கு அஞ்சுவதைவிட
மாட்டிக்கொண்டால் அவமானப்பட நேரிடும் என்று
மான-அவமானங்களுக்கு பயந்தவர்கள்;
அந்த பயத்தை பயன்படுத்தி அவர்களிடம் நேர்மையை நிலைநிறுத்த
நிறுவனங்கள் இந்த உட்கட்டமைப்பு கட்டுப்பாடுகளை
தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!!
போதுமான கட்டுப்பாடுகளை வகுத்து
அரசாங்கமும், நிறுவனங்களும் நிர்வகிக்கத் தவறினால்
ஊழியர்கள் மத்தியில் மெத்தனப்போக்கு அதிகரித்து
எல்லாம் படிப்படியாக வீழ்ச்சிகாணும்!!
- [ம.சு.கு 19.08.2023]
Comentarios