top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 313 - அடிப்படை கண்டிப்பு அவசியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-313

அடிப்படை கண்டிப்பு அவசியம்.!


  • வேலையில்லா திண்டாட்டம், இனப்பிரச்சனை, வீடுகள் பற்றாக்குறை, விவசாயம் செய்ய பூமியில்லை, இயற்கை வளங்கள் இல்லை, கல்வி & மருத்துவத்தில் பின்தங்கிய நிலை, அன்னியர்கள் ஆட்சிகால அவலங்கள், குடிநீர் பிரச்சனை என்று, பெரிய பிரச்சனைகளுக்கான பட்டியலுடன் இருந்த ஒரு குட்டி நாடு, 25 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில், வளர்ந்தநாடாக மாறியது. இன்று இந்தியர்கள் யாரைக்கேட்டாலும், சிங்கப்பூர் போல நம்நாடு எப்போது தூய்மையாகவும், ஒழுக்கமாகவும், வளர்ந்த நாடாகவும் மாறுமோ? என்று ஆதங்கப்படுகிறார்கள். தன் நாட்டின் எதிர்காலத்தை மட்டுமே தன் உயிர்மூச்சாக கொண்டு ஆட்சிக்கட்டிலில் இருந்த 31 ஆண்டுகளில், தன்னுடைய பல முடிவுகளில் பிடிவாதமாக இருந்து வளர்ச்சியை நிரந்தரமாக்கிய மாபெரும் மக்கள் சர்வாதிகாரி திரு. லீ குவான் யூ. அவரது சர்வாதிகார போக்கு சரியானதா?

  • சமீபத்தில் ஒரு முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன். கிட்டத்தட்ட 30-40 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்கள், பழைய ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர். கல்வி & வியாபாரத்தில் வளர்ந்திருந்த பல முன்னாள் மாணவர்கள், பொதுவாக சொன்ன ஒரு விடயம், குறிப்பிட்ட ஆசிரியரின் கண்டிப்பும், கவனிப்பும் தான் தங்களை நல்லவர்களாக, தன்னம்பிக்கை உடையவர்களாக வடிவமைத்தது என்றனர். அவரது பிரம்படிக்கு பயந்துதான் அன்று படித்தேன் என்பார்கள். அதேபோலத் தான் வீட்டில், பெற்றோர்களும் நிறைய கண்டிப்பார்கள். இதை செய்யாதே, இதே பேசாதே என்று நிறைய உத்தரவுகள் வரும். அவைகள் எல்லாமே தங்கள் பிள்ளையின் வளர்ச்சியை மட்டுமே மையமாக கொண்டுவரும் உத்தரவுகள். செய்வதற்கு அப்போதைக்கு கடினமாக இருந்தாலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியதேவைகள் அவை. இந்த பெற்றோர்களின், ஆசிரியர்களின் கண்டிப்பை சர்வாதிகாரம் என்பீர்களா?

ஒருவேளை நான் சவக்குழியில் படுத்திருந்தாலும், சிங்கப்பூரில் ஏதாவது தவறாக நடக்கிறதென்றால், உடனடியாக அதை சரிசெய்ய நான் எழுந்துவருவேன் என்று முழங்கியவர் திரு. லீ. அவரின் ஆளுமையை சர்வாதிகாரம் என்று ஒருகூட்டம் சாடியது. ஆனால் அவர் வளர்ச்சியின் அவசியத்தை தன் அமைச்சர்களுக்கும், மக்களுக்கும் படிப்படியாய் புரியவைத்தார். அரசியல் வேற்றுமைகளை பொருட்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்றால், அதை இரும்புக்கரம் கொண்டு அமல்படுத்தினார். அந்த இரும்புக் கரத்தை சர்வாதிகாரம் என்றார்கள். அவர் அதை பொருட்படுத்தாமல் வளர்ச்சியை நிரூபித்தார். அவரது சர்வாதிகார போக்கு, இன்று சிங்கப்பூரின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதை மற்ற நாடுகள் ஏன் செய்யவில்லை? என்னிடம் பதிலில்லை, உங்களிடம் இருக்கிறதா?


பிள்ளைப் பருவத்தில், உங்களுக்கு புரிவது 10%-20% தான். அந்த குறைவான புரிதலில் நீங்கள் தவறுகளை செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்டிக்கிறார்கள். தேவைப்பட்டால் பிரம்படியும் கொடுக்கிறார்கள். அப்படி பிள்ளைகளை அடிக்கக்கூடாது, மனித உரிமை மீறல் என்று வளர்ந்த நாடுகளில் குரல் எழும்புகிறது. ஒருவேளை அந்த பிள்ளையை சிறுவயதிலேயே வீடும்-நாடும் திருத்தாமல் விட்டால், எதிர்காலத்தில் அழிவுகள் தான் அதிகரிக்கும். எந்தவொரு பெற்றோரும் தன் பிள்ளையை அடிமைப்படுத்த எண்ணி கண்டிப்பதில்லை. எந்தவொரு ஆசிரியரும் தன் மாணவச் செல்வங்களை அடிமைகளாய் கருதுவதில்லை. அவர்களின் ஆசை, தன் மாணவன் ஒருநாள் நாடாள வேண்டுமென்பதே! அதற்கான பாதையில் செய்யும் கண்டிப்புகள் எல்லாம் ஆக்கத்தை நோக்கியதே! அதை சர்வாதிகார போக்கென்று யார்சொன்னாலும், சொல்லிக்கொண்டே இருக்கட்டும். இங்கு தன் பிள்ளையின் வளர்ச்சிதான் முக்கியம், மற்றவர்களின் கருத்துக்களும், அனுமானங்களும் அல்ல!!


நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு தலைவர் தன் ஆளுமைத்திறனால், சர்வாதிகாரயாக ஒரு நாட்டை வடிவமைத்தார். தன் பிள்ளையின் வளர்ச்சிக்காக, பெற்றோரும் ஆசிரியரும் அவ்வப்போது பிரம்பெடுத்த அதிகாரம் செய்கிறார்கள். இந்த அடிப்படை கண்டிப்பை யாரெல்லாம், எங்கெல்லாம் தவறவிடுகிறார்களோ, அங்கெல்லாம் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

  • உங்கள் நிறுவனத்தில், ஊழியர்கள் காலை 9 மணிக்கு வேலைக்கு வந்திருக்கவேண்டும், விடுப்பெடுப்பதற்கு முன்அனுமதி பெறவேண்டுமென்று பல விதிமுறைகள் இருக்கும். அதை பொருட்படுத்தாமல் அவரவர் இஷ்டத்திற்கு வந்து போனால், நிறுவனத்தை எப்படி கட்டுக்கோப்பாக வழிநடுத்துவது!

  • எடுத்த பொருளை, வேலைமுடிந்ததும் எடுத்த இடத்தில் சரியாக வைக்க வேண்டும், ஏற்றுக்கொண்ட வேலையை குறித்த நேரத்தில் முடிக்கவேண்டும், வேலை நேரத்தில் தேவையற்ற அரட்டை கூடாது என்ற கண்டிப்புகள் இல்லாமல் இருந்தால் நிறுவனத்தின் உற்பத்தி எப்படி அதிகரிப்பது!

  • ஒரு ஊழியர், அன்றாடம் குறிப்பிட்ட வேலையை முடித்து மாலை அறிக்கை சமர்பிக்கவேண்டும் என்றால், அதை அனுதினமும் மேலாளர் கவணிக்காமல் போனால், என்னவாகும்? அந்த ஊழியர் நாளடைவில் படிப்படியாக எல்லாவற்றையும் தாமதப்படுத்தி வேலையை தேங்கச் செய்துவிடுவார். விளைவு – வளர்ச்சி தேங்கிவிடும்!

  • பிள்ளைகள் அன்றாடம் நடத்திய பாடத்தை தினமும் மாலை 1-2 மணிநேரம் திருப்பிப் பார்த்தால், தேர்விற்கு தயாராகுதல் எளிதாகும். அனுதினமும் படிக்கவேண்டுமென்று கண்டிப்பு இல்லாவிட்டால், தேர்வுக்கு முந்தையநாள் சிவராத்திரிதான். தேர்வில் தேர்வதே கேள்விக்குறிதான்!

  • அபராதம் கட்டவேண்டும், உரிமம் பறிக்கப்படும் என்ற கண்டிப்பு இல்லாவிட்டால், எப்படி வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியும்!

  • சிறைதண்டனை, மரண தண்டனை என்ற கட்டாய தண்டனைகள் இல்லாமல் எப்படி சமுதாயத்தில் ஒழுக்கத்தையும், அமைதியையும் நிலைநிறுத்த முடியும்!

“எல்லா மனிதர்களும் சமமானவர்கள் தான்! மனித உரிமை முக்கியம்! இங்கு யாருக்கும் யாரையும் அடிமைப்படுத்த உரிமையில்லை! யாருக்கும் யாரையும் தண்டிக்கும் உரிமையில்லை” என்று மனித உரிமை பேசுவதில் தவறில்லை. ஆனால் சமுதாயத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விஷமிகளை கட்டுப்படுத்தாவிட்டால், படிப்படியாக எல்லோரும் சுயநலவாதிகளாகி, பொது விதிகளை தங்கள் வசதிக்கேற்ப வளைக்க ஆரம்பித்து விடுவார்களே!!


வீடோ – நாடோ, வியாபாராமோ – விளையாட்டோ.

களம் எதுவானாலும் அவை சிறப்பாக இயங்க

முறையான விதிமுறைகள்கள் வகுக்கப்பட்டு

அவை கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட வேண்டும்!


எல்லாவற்றிற்கும்

அதன் அடிப்படை விதிகள் தான் அதற்கான அடையாளம்;

அந்த விதிகளை மீறுபவர்களை சிலசமயம்

இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே

இந்த சமுதாயத்தில் நியாய-தர்மங்களை நிலைநிறுத்த முடியும்!


வீட்டின் அடிப்படைகளில் பெற்றோர்கள் கண்டிப்புடன் இருந்தால்

பிள்ளைகள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வருவார்கள்!

நாட்டின் அடிப்படையில் ஆள்பவர்கள் கண்டிப்புடன் இருந்தால்

சமுதாயம் நியாயமாகவும், அமைதியாகவும் அமையப்பெரும்!

வியாபாரத்தின் அடிப்படைகளில் மேலாளர் கண்டிப்புடன் இருந்தால்

வாடிக்கையாளர் சேவை சிறப்புற்று வியாபாரம் வளர்ச்சிகாணும்!!


- [ம.சு.கு 18.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Komentáře


Post: Blog2 Post
bottom of page