top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 312 - வரவு-செலவுகளை நிர்வகியுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-312

வரவு-செலவுகளை நிர்வகியுங்கள்..!


  • வீட்டு நிர்வாகத்தில், மாதாந்திர வரவுகள் என்ன? அந்தந்த மாதத்தின் செலவுகள் என்ன? என்று பட்டியலிட்டு உங்கள் பெற்றோர்கள் நிர்வகித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிறுவயதில், ஏன் இந்த செலவுகளையெல்லாம் அம்மா-அப்பா எழுதிவைக்கிறார்கள் என்று புரியாமல் இருந்திருப்பீர்கள். நீங்கள் ஓரு பொருளை விரும்பி கேட்கும்போது, அவர்கள் அதை உன் பிறந்தநாளைக்கு வாங்கித்தருகிறோம், தீபாவளிக்கு வாங்கித்தருகிறோம் என்று சற்று தள்ளிப்போட்டு, பின்னர் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். மாத வருவாயை நம்பி வாழ்பவர்களால், திடீரென்று பெரிய செலவுகளை புகுத்த முடியாது. ஆனால், தன் பிள்ளை விரும்பியதை எல்லாம் எப்படியோ அனுசரித்து சிலபல தாமதங்களுக்குப்பின் அந்த பெற்றோர்கள் வாங்கிக்கொடுத்த கதைகள் தான் ஏராளம். அந்த சிலபல தாமதங்கள்தான் அவர்களின் வரவு-செலவு சாமர்த்தியம்.

  • 10 ஆண்டுகளுக்கும் மேலாய் இலாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனம், திடீரென்று ஒருநாள் திவால் நிலையை அறிவித்தது. முந்தைய ஆண்டுமுதல் இலாபக் கணக்குகாட்டி, பங்குகள் சிறப்பாக விற்பனையாக பரிவர்தனையாகிக் கொண்டிருந்த நிறுவனம் ஏன் திடீரென்று கடன் தொல்லையால் திவால் நிலைக்கு ஆளானதென்று எல்லோருக்கும் அதிர்ச்சிதான். பங்குதாரர்களின் கோரிக்கையை ஏற்று விசாரனை நடத்தியவர்கள், நிறுவனத்தில் எதுவும் தில்லுமுல்லு நடக்கவில்லை என்றும், வாராக் கடன்கள் அதிகரித்ததினால் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதென்றும் அறிக்கை அளித்தார்கள். பலருக்கு புரியாத கேள்வி – “அதெப்படி இலாபத்தில் இயங்கும் நிறுவனம் வாராக்கடனால் திவாலாகும், இத்தனை ஆண்டுகளாய் சம்பாதித்த இலாபப்பணமெல்லாம் எங்கே போயிற்று?”

பெற்றோர்கள் எந்த செலவை எப்போது செய்யவேண்டுமென்று பட்டியலிட்டு செய்தார்கள். எதை தவிர்த்து, குழந்தையின் ஆசையை நிறைவேற்றலாம் என்று யோசித்து, தங்களின் தேவைகளை தள்ளிப்போட்டு வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார்கள். அப்படி முறையாக திட்டமிட்டு வாழ்ந்த குடும்பங்கள், பெரிய கடன் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருந்தார்கள். அந்த வரவு-செலவு திட்டமில்லாமல், எப்படியும் சமாளிக்கலாம் என்று கடன்பட்டு வாங்கியவர்கள் பலர், பெரிய கடனாளிகளாய் சிக்கினார்கள்.


நமக்கு எவ்வளவு வருவாய் வரும், எவ்வளவு செலவுகள் இருக்கின்றன, எதை எப்போது செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றையும் முழுமையாக திட்டமிட்டு செய்தால், வாழ்க்கையின் போக்கு நம் கையில் இருக்கும். அந்த திட்டமிடல் இல்லாமல், வரவுக்கு மீறி கடன்பட்டு செலவுகளை செய்தால், பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தான் மிஞ்சும்.


தொடர்ந்து இலாபத்தில் இயங்கும் நிறுவனம் திடீரென திவாலாவது எல்லோருக்குமே அதிர்ச்சியானது தான். ஆனால் அந்த நிலை திடீரென்று ஒருநாளில் உருவாவதில்லை. நீங்கள் வருடாவருடம் கணக்குகளில் இலாபம் காட்டலாம். ஆனால் அவையனைத்தும் காகித இலாபங்களே. வர்த்தகத்தின் முடிவில், அந்த இலாபமெல்லாம் பணமாக வசூலாகிவிட்டனவா என்பதுதான் கேள்வி? நீங்கள் 10 ரூபாய்க்கு வாங்கி 15 ரூபாய்க்கு விற்றால், அதில் உங்களுக்கு 5 ரூபாய் இலாபம்தான். ஆனால், நீங்கள் ரொக்கத்திற்கு வாங்கி கடனுக்குவிற்றிருந்தால், அந்த கடன் வரும்வரை உங்களின் இலாபம் வெறும் காகித எண்களே! அப்படித்தான் அந்த நிறவனத்தின் இலாபமெல்லாம், ஆண்டாண்டுகளாய் வாராக் கடனாய் சிக்கின.


நிறுவனத்தில் வர்த்திகப் பிரிவில் வேலை செய்தவர்களெல்லாம் இலாபத்தின் அளவை மட்டும் கணக்குப்பார்த்து பொருட்களை கடனுக்கு வாரிக்கொடுத்து வந்தார்கள். அவைகளின் வசூல் படிப்படியாக தாமதமாகி கடைசியில் வாராக் கடன்களாகின. அந்த வாராக்கடன்களை சமாளிக்க, தொடர்ந்து வியாபாரத்தை நடத்த, அந்த நிறுவனம் வங்கிக் கடனை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அதுவும் போதாமல் போகவே, திவால் நிலை அறிவித்தது.

  • உங்கள் நிறுவனத்தின் இலாபங்களெல்லாம் பணமாக மாறுகிறதா? அல்லது வரவேண்டிய கடன்களாக நிற்கின்றனவா?

  • உங்கள் வீட்டின் செலவுகளெல்லாம், அந்தந்த மாதத்தின் வருவாய்க்குள் கட்டுப்பட்டிருக்கின்றனவா? அல்லது மாதாமாதம் கடன்கள் அதிகரித்து வட்டி கட்டிக்கொண்டிருக்கிறீர்களா?

  • உங்கள் நாட்டின் திட்டங்களும், செயல்பாடும் அதன் வரிவருவாய்க்குள் அடங்கியிருக்கின்றனவா? அல்லது உள்நாட்டு, வெளிநாட்டு கடன்கள் அதிகரித்து பொருளாதார சீரழிவு ஏற்படுகிறதா?

வரவு செலவுகள் என்னென்ன, அதில் ஏற்படும் மீதங்களும், பற்றாக்குறைகள் எவ்வளவு என்பது உங்கள் விரல் நுணியில் இருக்கவேண்டும். உங்கள் கையில் வந்துபோகும் பணத்தின் அளவு, அதில் உங்கள் பணம் எவ்வளவு, அடுத்தவர்களிடம் கடன் வாங்கியவைகள் எவ்வளவு, அதை எப்படி திருப்பித் தரப்போகிறோம் என்று எல்லா விடயங்களையும் நீங்கள் பெரிதாய் பொருட்படுத்தாமல் இருந்தால், ஒருநாள் பற்றாக்குறை நிரந்தரமாகி, நம்பிக் கடன்கொடுத்தவர்களையெல்லாம் ஏமாற்ற நேரிடும். அல்லது இருக்கின்ற வீடு வாசல்களையெல்லாம் விற்று கடன் கட்ட நேரிடும். இது வீட்டிற்கு மட்டுமில்லை. பல நிறுவனங்கள் இன்று திவாலாகி, வங்கிகளால் ஏலத்திற்கு விடப்படுவதும் இதனால்தான்.


வியாபார வர்த்தகம் குறைகின்ற பொழுது, ஏனென்று அலசி சரிசெய்ய தாமதித்தால், அல்லது சாத்தியமில்லாத வியாபாரத்தை மூடாமல் தொடர்ந்து கொண்டிருந்தால், வரவுகளின்றி செலவுமட்டுமே இருக்கும். எல்லாச் செலவும் ஒன்றுகூடி, இருக்கும் சொத்துக்களையெல்லாம் ஒருநாள் ஏலத்திற்கு கொண்டுவந்துவிடும். உங்களுக்கு தொழில் தெரிவது மட்டும் இங்கு முக்கியமில்லை. அந்த தொழிலின் வரவு-செலவு நிர்வாகத்தை கண்ணும் கருத்துமாக கவனிக்கத் தெரியவேண்டும். எப்போது வரை அதில் இருக்கவேண்டும், என்று கைகழுவி வெளியேற வேண்டுமென்று தெரியவேண்டும்.


பணத்தின் போக்கை படிப்படியாக அலசத் தெரிந்தால், வரவிற்குள் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தத் தெரிந்தால், மிஞ்சியவற்றை இலாபகரமாக முதலீடு செய்யத் தெரிந்தால், உங்கள் வளவமான வாழ்க்கைக்கு நீங்கள் தான் எஜமான்! இல்லாவிட்டால் உங்கள் வீழ்ச்சிக்கான குழி உங்கள் கைகளாலே தோண்டப்பட்டு விடும்!


வீட்டுப் பொருளாதாரமோ, நாட்டுப் பொருளாதாரமோ,

வியாபாரமோ, தான-தர்மமோ

பணம் கையாளப்படும் இடம் எதுவானாலும்

அதன் வரவும்-செலவும் கருத்துடன் நிர்வகிக்கப்படவேண்டும்;


என்பது தெரியாமல் - நீங்கள் எதைச் செய்தாலும்

நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தரானாலும்

கட்டாயம் ஒருநாள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்!


உங்கள் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும்

நீங்கள்தான் எஜமானன்!

வரவும் செலவும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால்

நீங்கள் வளர்ச்சிக்கான எஜமானன்!

வரவும் செலவும் உங்கள் கைமீறியிருந்தால்

நீங்களேதான் வீழ்ச்சிக்கான எஜமானன்!


- [ம.சு.கு 17.08.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page