top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 311 - ஊழியர்களை நீண்டகாலம் தக்கவையுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-311

ஊழியர்களை நீண்டகாலம் தக்கவையுங்கள்..!"


  • ஒரு கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வீடுகள் கட்டிக்கொடுத்து வந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிறுவனம் செயல்பட்டுவந்தாலும், அந்த நிறுவனத்தால் பெரிய வளர்ச்சி காண முடியவில்லை. முதலாளியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை எல்லோரும் நன்றாகத்தான் உழைக்கிறார்கள். ஆனால் நிறைய திட்டங்களை எடுத்து அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. எல்லா வேலையையும் செய்வதற்கு போதுமான ஆட்களை நியமித்திருந்தார். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர், 3-6 மாதங்களுக்கு முன்தான் பணியில் சேர்ந்துள்ளனர். வாடிக்கையாளர் சேவையில் அதீத கவனம் செலுத்தும் அந்த முதலாளி, எல்லா ஊழியர்களின் பணியையும் அன்றாடம் ஆய்வு செய்து திருத்துவதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. அதனால் அவருக்கு இருந்த நேரத்தின் அளவிற்கு மட்டுமே வேலைகளை எடுத்த செய்ய முடிந்தது.

  • ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுபார்க்கும் கடையின் முதலாளி எப்போதும் வெளியில் சுற்றிக்கொண்டே இருப்பார். அடிக்கடி வெளியூர்களுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்வார். ஆனால் அவரது கடையின் வியாபாரம் சிறப்பாக இருந்தது. அவரிடம் காரணம் கேட்டபோது, நான்கு காரணங்களை சொன்னார் {(1) ஊழியர்களில் பாதி பேர், 5 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிடம் பணிபுரிகின்றனர் (2) வாடிக்கையாளர் தொலைபேசி அழைப்புக்களை எப்போதும் தவறவிடுவதில்லை (3) எல்லா ஊழியர்களுக்கும் தொடர்ந்த புதிய உபகரணங்களுக்கான பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்போம் (4) எல்லா அழைப்புக்கள், வேலைகளின் நிலவரங்களை காலை / மதியம் / மாலை என மூன்று முறை தொலைபேசி (வாட்ஸ்அப்) வாயிலாக பகிர்ந்துகொள்வோம் }

கட்டுமான நிறுவனத்தில், குறிப்பிட்ட தொழிற்கல்வி பயின்றவர்களை வேலைக்கு அமர்த்தினாலும், அதன் களப்பணியில், அனுபவம் வாய்ந்தவர்களின் தேவை அதிகம். ஒரு நிறுவனம், தனக்கென ஒரு பாணியை அமைத்து கட்டிட அமைப்புக்களை முடிவு செய்யும். அவர்களின் கட்டுமான ஒப்பந்த ஊழியர்கள் மேலாளர்களின் உத்தரவிற்கேற்ப வேலைகளை செய்வர். அவற்றை நிர்வகிக்கும் மேலாளர்கள் அவ்வப்போது மாறினால், பிரச்சனைதான். வேலை ஒரே சீராக இருக்கும்பொருட்டு, புதியதாக சேர்ந்த நபர் தங்கள் நிறுவனத்தின் பாணியை முழுமையாக புரிந்துகொள்ளும் வரை எல்லாவற்றிலும் முதலாளியின் தலையீடு தேவைப்பட்டது. ஆனால் அந்த புதிய மேலாளர் 6 மாதத்தில் எல்லாவற்றையும் புரிந்தகொள்ளும்போது, வேலையை விட்டு நின்று விடுகிறார். மீண்டும் எல்லாம் முதலில் இருந்து ஆரம்பிக்கிறது. இப்படி மேலாளர்கள் மாறிக்கொண்டே இருந்தால், எப்படி முதலாளியால் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வேலைகளை பார்க்க முடியும்?


வீட்டு உபயோகப்பொருட்கள் பழுதுபார்க்கும் கடையில், அந்த முதலாளியில், தன் ஊழியர்களை ஊக்குவித்து நீண்டகாலம் தக்கவைக்க முடிகிறது. குறிப்பிட்ட ஊழியர்கள் தொடர்ந்து இருப்பதால், வாடிக்கையாளர் உறவு எளிதாக பலப்படுகிறது. பழுதுபார்க்கும் தொழிலில் கற்பதைக் காட்டிலும், அனுபவம் தான் பல பிரச்சனைகளை கண்டுபிடக்க உதவும். அடுத்தபடியாக, அந்த முதலாளி அவர்களுக்கு போதுமான பயிற்சிகளை கொடுத்து, அனுதினமும் குறிப்பிட்ட இடைவெளியில் வேலை நிலவரங்களை அலசுவதால், எல்லோரும் அவரவர் வேலைகளை குறித்தநேரத்தில் திட்டமிட்டு செய்துமுடிக்கிறார்கள். இவற்றை பெரும்பாலும் தன் கைபேசியின் மூலமாக செய்யமுடிவதால், அந்த முதலாளியால் எங்குவேண்டுமானாலும் சுற்ற முடிகிறது (கைபேசியுடன்).


இப்படி வெவ்வேறு சூழ்நிலைகளை, உங்களின் அன்றாட வாழ்வில், வேறுபட்ட விதங்களில் பல வியாபாரங்களில் நீங்கள் பார்க்கக்கூடும். புதிதாய் சேர்ந்த ஊழியருக்கும் அந்த நிறுவனத்தின் வேலை முறைமைகள் முழுமையாக புரிவதற்கு 1-2 மாதங்கள் ஆகும். அதுவே 2-3 வருடங்கள் ஆகும்போது, அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எல்லோரும் பழக்கப்பட்டு விடுவார்கள். முதலாளி எங்கிருந்தாலும், செய்ய வேண்டியதை சுருக்கமாக சொன்னாலே போதும், அந்த ஊழியர்கள் சரியாக புரிந்துகொண்டு செய்துவிடுவார்கள். ஒருவேலை புதியவர்களாக இருந்தால், அவர்களுக்கு எல்லாமே விளாவாரியாக சொல்ல வேண்டும். ஊழியர்கள் தொடர்வது இருவருக்குமே நல்லதென்று அறிந்திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில், ஏனோ ஊழியர்கள் அடிக்கடி வேலை மாறுகிறார்கள்.


ஒருசாரார் ஊழியர்கள் சற்று அதிக காலம் வேலைசெய்தால், வாடிக்கையாளர்கள் பட்டியலைக் கொண்டு போட்டியாய் இன்னொரு கடை திறந்துவிடுவார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஆங்காங்கே அப்படியும் சில இடங்களில் நடக்கலாம். ஆனால் அதற்காக உங்கள் வியாபாரத்தின் வளர்ச்சியை நிறுத்துவது அர்த்தமற்றதே!


உங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறார்களா? பெண்கள் சரியான கழிப்பறை வசதியில்லை, மாலை வெகுதாமதமாக வேலை செய்ய வேண்டியுள்ளது என்ற காரணங்களுக்காக நிற்கிறார்கள். ஆண்கள் போதுமான வளர்ச்சி இல்லை, அங்கீகாரமில்லை, ஊதியமில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.

உங்கள் ஊழியர்களை, நீங்கள் நீண்டகாலம் தக்கவைக்க என்ன செய்யவேண்டும்?

  • ஊழியர்களுக்கு ஏதுவான வேலை சூழ்நிலையை கட்டமைக்க வேண்டும்.

  • ஊழியர்களின் வளர்ச்சிக்கு போதுமான வாய்ப்பிருக்கவேண்டும் (பதவி உயர்வு கொடுப்பது)

  • ஊழியர்கள் ஒரே வேலையை செய்து சலிப்படையாமல், தொடர்ந்து புதியவைகளை கற்பதற்கு வாய்ப்பிருக்க வேண்டும்;

  • ஊழியர்களுக்கு சரியான ஊதியம், சரியான நேரத்தில் வழங்கப்படவேண்டும்;

  • ஊழியர்களின் பங்களிப்புக்கள் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட வேண்டும்;

  • ஊழியர்கள் வேலை மற்றும் குடும்பத்திற்கான நேரத்தை சீராக ஒதுக்க வழிவகுக்கவேண்டும்;

  • ஊழியர்களின் கருத்துக்கள் & அலோசனைகள் கேட்கப்பட்டு, சரியானவைகள் செயல்படுத்தப்பட வேண்டும்;

  • ஊழியர்களிக்கு இடையிலான நல்லுவறவை வளர்க்க போதுமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்;

மேற்கூறியவைகள் மட்டுமே இறுதியான பட்டியல் அல்ல. ஒவ்வொரு வியாபாரத்திற்கு, சூழ்நிலைக்கும் ஏற்ப செய்ய வேண்டியவைகள் மாறுபடும். ஊழியர்கள் விடயத்தில், நிறுவனம் எப்போதுமே தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இன்று எல்லாம் சரியாக இருக்கிறதென்று ஓய்வெடுத்துவிட்டால், நாளை புதிய பிரச்சனைகள் வந்துவிடும்.


ஊழியர்கள் தான் உங்கள் வளர்ச்சியின் ஊன்றுகோள்;

ஊழியர்கள் விலகினால் எல்லா பயிற்சிகளையும்

ஆர்பத்திலிருந்து துவக்க வேண்டும்;


ஊழியர்கள் சேர்ந்து, வேலைபழகி சீ்க்கிரத்தில் விலகுவதற்கும்

நீங்கள் நடத்துவது பயிற்சிக்கூடமல்லவே!!


ஊழியர்கள் மாறிக்கொண்டே இருந்தால் – இருக்கின்ற

வியாபாரத்தை தக்கவைக்கவே போராட வேண்டியிருக்கும்!

பயிற்சிபெற்ற, நம்பிக்கையான ஊழியர்கள் தொடர்ந்தால்

அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி

தைரியமாக நீங்கள் காலடி வைக்கமுடியும்!!

உங்கள் ஊழியர்கள், உங்களை நம்பி,

உங்களுக்கு நம்பிக்கையாய் தொடர்கிறார்களா?


- [ம.சு.கு 16.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page