“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-310
வளங்களின் பங்கீட்டை கவனியுங்கள்..!"
ஒரு குறிப்பிட்ட மென்பொருள் தயாரிப்பு அறிக்கை சமர்பிக்க 3 நாட்கள் மட்டுமே இருந்தது. பொதுவாக ஒரு புதிய மென்பொருள் அறிக்கை தயாரிக்க 10-15 நாட்கள் தேவைப்படும். ஆனால் 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஒருபுறம். அதேசமயம், வேறு திட்டச் செயல்பாடுகள் சிலவும் வேகமாக நடந்துகொண்டிருந்ததால், மறுபுறம் ஆட்களுக்கும் பெரிய பற்றாக்குறை இருந்தது. எல்லா நிறுவனங்களிலும் நேரம் & ஆட்கள் எப்போதும் பற்றாக்குறையுடனே நடப்பது வாடிக்கைதான். இந்த சூழ்நிலையில் எப்படி மேலாளர் வாடிக்கையாளர் தேவையை பூர்த்திசெய்கிறார் என்பதுதான் அவரது சாமர்த்தியம்.
நம் வாழ்வின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு சமையலறைக்குத்தான் அதிகம். இன்றைய தேவைமுதல், அடுத்த 1-2 மாதங்களுக்குத் தேவையான பல பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். அதேசமயம், வீட்டிலிருக்கும் வரவேற்பறை, படுக்கையறையை விட, சமையலை பெரும்பாலும் சற்று சிறிதாகவே இருக்கும். அந்த சிறிய இடத்தில் எல்லா பொருட்களையும் தினமும் எடுத்து புலங்குவதற்கு ஏற்ப எப்படி வைக்கவேண்டும் என்ற திட்டமிடல் மிகப்பெரிய வேலை. நம் வீட்டுப் பெண்களின் சாமர்த்தியத்தை அங்கு தெரிந்துகொள்ளலாம். அலமாறியில் எதையெதை வைக்கவேண்டும், எதையெதை பெட்டிக்குள் வைக்கவேண்டும், எதை முன்வரிசையில் வைக்கவேண்டும், எதை பின்வரிசையில் வைக்கவேண்டும், எது தேவைப்படாதென்று கழிக்கவேண்டும் என்று எண்ணற்ற வளப்பங்கீடு குறித்த பாடத்தை சமையலறையை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்;
நிறுவனத்தின் திட்டச்செயல்பாட்டில், எந்த செயல் மிகவும் அவசரம்-அவசியமானது? அதை யாரைக்கொண்டு எப்போது, எப்படி செய்ய வேண்டும்? ஆட்களை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றும் போது, அங்கு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள் என்ன? என்று இருக்கின்ற அளவான வளத்தைக் கொண்டு, கூடியவரை எல்லா வேலைகளையும் முடிக்க, அவற்றை எப்படி பங்கீடு செய்ய வேண்டும் என்ற வித்தைதான் நிறுவனங்களின் வெற்றிக்கான முதல்படி. வளங்களின் அளவும், பங்கீடும் சரியாக இருந்தால், வெற்றிக்காண அடித்தளம் சரியாக அமையப்பெரும்.
ஜப்பானியர்களின் உற்பத்திச் சாலையின் உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கு எண்ணற்ற முறைமைகளை [5S, TPM, TQM,…..] செயல்படுத்தி வெற்றிகண்டனர். இந்த எல்லா முறைமைகளின் அடிப்படை மூலக்கூறுகள் யாவும் சமையலறை முறைமைகளில் இருந்து எடுக்கப்பட்டவைதான். பொருட்களை எங்க, எப்படி வைக்கவேண்டும் என்பதில் தொடங்கி, நேரக்கட்டுப்பாடு, தரக்கட்டுப்பாடு வரை, சமையலறையை மிஞ்சிய சிறந்த பாடசாலை எனக்குத் தெரிந்து ஒன்றுமில்லை.
நீங்கள் பணக்காரரோ, ஏழையோ, எதுவானாலும் உங்களுக்கு ஒரு நாளைக்கு இருக்கும் நேரம் 24 மணித்துளிகள் தான். அந்த 24 மணி நேரம் எனும் வளத்தை எப்படி சம்பாத்தியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், குடும்பத்துடனான குதூகலத்திற்கும் பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் பங்கீட்டுத் திறமை;
உங்கள் நிறுவனம் எதுவானாலும், பொருட்களின் உற்பத்தியை, வாடிக்கையாளர் சேவையை, புதிய ஆராய்ச்சிகளை இருக்கின்ற அளவான ஊழியர்களைக் கொண்டு, குறைவான நேரத்தில் செய்து முடித்தால்தான் வெற்றி காணமுடியும். தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருந்தால் பொருட்செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படும். சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் பங்கீடு, இடம் & இயந்திர நேரப் பங்கீடு, மூலதனப் பங்கீடு என்று இருக்கின்ற அளவான வளத்தை முறையாக பங்கீடுசெய்து பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்;
மருத்துவமனையில் எத்தனை மருத்துவர் வேண்டுமானலும் இருக்கலாம், ஆனால் அபாய கட்டத்தில் ஒரு நோயாளி கொண்டுவரப்பட்டால் அவரை காக்க ஆரம்பத்தில் இருக்கும் நேரம் சில நிமிடங்கள் மட்டுமே. அந்த குறுகிய காலகட்டத்தில் என்னென்ன அவசர சிகிச்சைகள்? எதற்கடுத்து எது? யார் யார் எதை செய்யவேண்டும்? என்று தெளிவான புரிதலோடு படுவேகமாக செயல்பட்டால் மட்டுமே அந்த உயிர் காப்பாற்றப்படும்.
வியாபாரத்தின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைக்கு, உங்களிடம் இருக்கும் அளவான வளத்தை சரியாக பங்கிட்டால்மட்டுமே அது சாத்தியப்படும்.
பணம், இடம், பொருள், நேரம், மனிதர்கள் என்ற ஐந்து வளங்கள் தான் வெவ்வேறு வடிவங்களில் உங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும். அவற்றை முறையாக பங்கீடு செய்ய என்ன செய்யவேண்டும் என்று யோசியுங்கள்;
நீங்கள் செய்து முடிக்கவேண்டிய வேலை, அடையவேண்டிய இலக்கு என்னென்ன என்று பட்டியலிடுங்கள்;
உங்களிடம் இருக்கும் வளம் எவ்வளவென்று கணக்கிடுங்கள்;
ஒவ்வொரு வேலைக்கும், அதிகபட்ச-குறைந்தபட்ச வளங்களின் தேவையான கணக்கிடுங்கள்;
தேவைகளுக்கேற்ப பங்கீடு செய்யும்போது ஏற்படும் பற்றாக்குறைகளை, சிக்கல்களை கருத்தில்கொண்டு எதுயெதற்கு எவ்வளவு என்பதை தீர்மானம்செய்யுங்கள்;
உங்கள் அனுபவங்கள், மற்றவர்களின் அனுவங்கள், வியாபார சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு பங்கீடுகளை தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றியமையுங்கள்;
எந்த செயலில், என்ன விதமான சிக்கல்கள் வரும், அபாயங்கள் வரும், அதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பதையும் கருத்தில்கொண்டு ஒரு சிறுபங்கு வளத்தை பத்திரப்படுத்தி வையுங்கள்;
அடைய வேண்டிய இலக்கு, கொடுக்கப்படுகின்ற வளம் என்ன என்பதை ஊழியர்களிடம் தெளிவாக விளக்கிவிடுங்கள்;
எதிலெல்லாம் வளங்களின் தேவையை குறைத்து தானியங்கியாக்க முடியுமோ, அவற்றை சீக்கிரத்தில் தானியங்கி ஆக்கிவிடுங்கள்;
ஒரு முறை சரியாக பங்கிடுவது முடிவல்ல. அத்தோடு எதுவும் முடிந்துவிடாது. ஒவ்வொரு கட்ட முன்னேற்றத்திலும் வளங்களின் பங்கீட்டை ஆய்வு செய்ய வேண்டும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும், அவசர-அவசியத்திற்கும் ஏற்ப மறுபங்கீடு செய்ய வேண்டும். உங்கள் ஊழியர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்களுக்கு போதிய வளங்களை கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அதேசமயம், அதிகமான வளங்களைக் கொடுத்து சோம்பேறித்தனத்தையும், ஊதாரித்தனத்தையும் வளர்த்துவிடக் கூடாது.
வளங்களை பங்கிடுவதில்
எதற்கு, எப்போது, எங்கு, எவ்வளவு?
என்ற முடிவுதான் வெற்றியின் அடித்தளம்!
வளங்களை ஒருமுறை பங்கிடுவதில்
உங்கள் வெற்றிப்பயனம் முடிந்துவிடாது!
நேரத்திற்கும், சூழ்நிலைக்கும், அவசர-அவசியத்திற்குமேற்ப
தொடரந்து பங்கீடுகளை மாற்றியமைத்துக்
கொண்டே இருக்கவேண்டும்!
வளங்களின் பங்கீடுகளை நீங்கள் கவனிக்கத் தவறினால்
வெற்றி உங்களை முற்றிலுமாய் கவனிக்கத் தவறிவிடும்!
வாழ்வின் அடித்தளமே இந்த வளங்களை
அறிவதிலும், அளவிடுவதில், பங்கிடுவதிலும்தான்
முற்றிலுமாய் அடங்கியிருக்கிறது!!
- [ம.சு.கு 15.08.2023]
Comments