top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 306 - கடைசி நிமிட பதட்டங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-306

கடைசி நிமிட பதட்டங்கள்...!"


  • முக்கியமான தேர்விற்கு படிக்கும் மாணவர்கள், நன்கு தயாராகி இருந்தாலும், கடைசி நிமிட பதட்டத்தில் தோல்விகளை சந்தித்த கதைகள் நிறைய கேட்டிருப்பீர்கள். சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒருவர், தேர்விற்கு வழக்கமாக தயாராகிக் கொண்டிருந்தார். தேர்விற்கு முந்தைய தினம், ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து அதிக கேள்விகள் வர வாய்ப்பிருக்கிறது என்று ஒரு நண்பன் சொல்ல, அந்த குறிப்பிட்ட புத்தகத்தை இரவு முழுவதும் அவசரத்தில் படித்திருக்கிறார். இரவு முழுவதும் கண்விழித்து படித்த காரணத்தினால், தேர்வின் போது புத்துணர்ச்சி இல்லாமல் தூக்க கலக்கத்தில் இருந்தார். அதனால் ஏற்பட்ட பதட்டத்தின் உச்சமாக, ஒரு கட்டத்தில் மயக்கம் அடைந்தார். பின் மருத்துவமனை சென்று, மருந்து மாத்திரைகளுடன் ஓரிரு நாள் உறக்கத்தில் எல்லாம் சரியானது. ஆனால், இரண்டு தேர்வுகளை எழுதமுடியாமல் போனது. கடைசி நிமிட பதட்டமும், அவசர கதி முடிவும் [சரியாக தூங்காமல் படித்தது], அவரின் 6 மாத கால உழைப்பை வீணடித்துவிட்டது.

  • வணிகவளாகத்தில், ஒரு சில பொருட்களுக்கு தள்ளுபடி விற்பனை அறிவித்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தினங்களுக்கு அறிவிக்கப்பட்ட தள்ளுபடி, கடைசி கட்டத்தை எட்டும்போது, பெரிய விளம்பரங்களை பறக்க விடுவார்கள். “இன்றே கடைசி! பொன்னான வாய்ப்பு! போனால் வராது!” என்று பல வார்த்தை ஜாலங்களில் விற்பனையை அதிகரிக்க முயற்சிப்பார்கள். அதுனால்வரை அந்த வழியாக சென்று வந்தவர்கள் பழைய தள்ளுபடி அறிவிப்பை கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் “இன்றேகடைசி” என்ற அறிவிப்பு போடப்பட்டவுடன், அது என்னவென்று அலசுவார்கள். ஒருவேளை அந்த பொருளுக்கு அவசரத்தேவை இல்லையென்றாலும், இன்று விட்டால் கிடைக்காது என்ற பயத்தில், தேவையில்லாத பொருளையும் வாங்கி வைப்பார்கள். அது ஏனோ! மனிதமனம், “இன்றே கடைசி” என்ற சொற்களை கேட்டவுடன், ஆதீதமாக அந்த பொருளை நோக்கி பயனிக்கிறார்கள்!

ஒரு சாரார் பல நாட்களாக தேர்விற்கு பாடங்களைப் படித்து தயாராகி இருப்பார்கள். இன்னொரு சாரார், எதையும் பொருட்படுத்தாமல் கடைசி வரையில் நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பார்கள். இருவருக்கும், கடைசி 2-3 நாட்களில் ஒரு விதமான தேர்வு பதட்டம் வரும். நன்கு படித்தவனுக்கு எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டுமென்ற பதட்டமும், படிக்காதவனுக்கு எப்படியாவது தேர்வாக வேண்டுமென்ற பதட்டமும் வரும். அந்த பதட்டம் தொடர்ந்தால், படிப்பது எதுவும் பெரிதாய் நினைவில் ஏறாது. அப்படியே படித்தாலும், தேர்வில் அவற்றை நினைவுகூர்ந்து எழுதுவது கடினம். ஏன் இந்த கடைசி நிமிட பதட்டம். முன்னர் படித்தவற்றை கடைசி ஓரிரு நாளில் புரட்டிப் பார்க்க மட்டுமே நேரமிருக்கும். அப்போது, புதிய புத்தகத்தை திறந்து படிக்க ஆரம்பிப்பது கஷ்டம்தான். படித்தவரை, முழுமையாக புரட்டிப்பார்த்து நினைவுகூர்ந்து, தேர்விற்கு பதட்டமில்லாமல் சென்றால், படித்தவரை சிறப்பாக எழுதி தேர்ச்சிபெற முடியும். அந்த அமைதியில்லாமல், பதட்டத்தில் படிக்கவும், எழுதவும் செய்தால், அந்த பதட்டத்தினால் வரும் பயம், உங்கள் நம்பிக்கையை குழைத்து தோல்வியடையச் செய்துவிடும்;


“இன்றே கடைசி” என்று சொன்னால், உடனே மனிதமனம், இன்று தவறவிட்டால், என்றென்றைக்கும் கிடைக்காது என்று எண்ணிவிடுகிறது. அதனால், கடைசி நிமிடத்தல் ஏதாவதொரு வழியில் அதை அடைய முயற்சிக்கிறது. அதை பதட்டமில்லாமல் செய்யும் திறமையானவர்கள் இலாபகரமாக மாற்றுகிறார்கள். கடைசி நிமிட அவசரத்தில் சிலவற்றை விற்கவோ, வாங்கவோ முடிவெடுக்கும்போது, பொறுமை காக்காமல் பதட்டப்பட்டால், சிலதவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம். அன்றுவரை தேவையற்றது என்று எண்ணிக் கொண்டிருந்தவைகளை, ஜால வார்த்தைகளில் சிக்கி, கடைசி நிமிடத்தில் வாங்கிவிடுவீர்கள். வியாபாரமோ, விளையாட்டோ, அன்றாட வாழ்க்கையோ, எதிலும் கடைசி நிமிட அவசரத்திற்கும், பதட்டத்திற்கும் இடம் கொடுத்தால், அந்த வேலையின் தரம் கடைசி நிமிடங்களில் எப்படி இருக்குமென்று உறுதிபட சொல்லமுடியாது.


ஒரு செயலை செய்து கொண்டிருக்கும்போது, பொதுவாக அந்த வேலையின் இறுதி நிலையை அடையும்போதுதான் அதன் வேகம் அதிகமாக இருக்கும். அதுவும், வீடு கட்டுகிறீர்கள் என்றால், வீட்டின் கிரகப்பரவேஷத்திற்கு முந்தைய மூன்று நாட்களில் தான் எல்லா வேலைகளும் நடந்தேறும். பல நிகழ்ச்சிகள், திட்டங்கள் என்று எங்கு பார்த்தாலும் கடைசி நிமிடங்களில் தான் பல வேலைகள் நடந்தேறுகின்றன. அந்த கடைசி நிமிடத்தில் பல செயல்கள் முடிக்கப்படுவது போல, சில சமயங்களில், கடைசி நிமிட அவசரத்தில் சிலபல தவறுகள் நேர்வதும் சகஜமாக இருக்கிறது. கடைசி நிமிட செயல்களால் ஏற்படும் பதட்டத்தின் சாதக-பாதகங்கள் என்ன என்று பார்க்கலாம்;

  • கடைசி வாய்ப்பு, கடைசி மணித்துளிகள் என்று எண்ணும்போது, மனம் வேகத்தின் அவசியத்தை உணர்ந்து மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்;

  • இறுதி கட்டத்தை நெருங்கும்போது, மக்களின் கவனம் முழுவதும் முடிவை நோக்கி ஒரேபாதையில் குவிந்திருக்கும். அப்போது, எல்லோருடைய உற்பத்தி அளவும் சற்று கூடுதலாகவே இருக்கும்;

  • அதேசமயம், கடைசி நிமிடத்தில் செய்யத் துவங்கும்போது, தேவையற்ற பதட்டமும், மன உளைச்சலும் ஏற்படும்.

  • கடைசி நிமிட அவசரத்தில், தோற்றுவிடுவோமோ என்றபயம் இயல்பாக வந்துவிடும்;

  • அவசரத்தின் காரணமாக பல குறுகியகால முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயம் வரும். அதனால், நீண்டகால நோக்கில், சில நஷ்டங்களும் ஏற்படவாய்ப்பிருக்கிறது;

காலையில் சீக்கிரமாக எழுந்து இரயில், விமானங்ளை பிடிக்க வேண்டும். ஆனால் கடைசி நிமிட வேலைகள் நள்ளிரவு வரை செய்துவிட்டு படுத்துறங்கும்போது, அதிகாலை விழிப்பு தவறிப்போக வாய்ப்பதிகம்தான். மேலாளர் சொன்ன வேலைகளை நாளை செய்யலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்துவிட்டு, கடைசி நாளில் உட்கார்ந்து செய்ய ஆரம்பித்தால், ஆயிரம் சந்தேகங்களும், பிழைகளும் வரத்தான் செய்யும்.


எதையும் காலத்தே துவங்குங்கள். அன்றாடம் படிப்படியாக செய்யும்போது, எல்லாம் உங்கள்வசம் எளிதில் கட்டுப்பட்டு வரும். படிப்படியாக, பொறுமையாக செய்யவேண்டிய இடத்தில், அவசர கதியில் செய்தால், யாருக்கும் உங்கள் மீது நம்பிக்கை வராது. மாறாக அவசரக்குடுக்கை என்று முத்திரைமட்டுமே குத்துவார்கள். கடைசி நிமிட பதட்டங்கள் எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, ஏனெனில், அந்த கடைசி நிமிட பதட்டத்தில், தவறு செய்ததும், இழப்புகளை சந்தித்ததும் தான் அதிகம்;


இன்றுக்கானதை இன்றே செய்யலாம்

இல்லாவிட்டால் நாளை மேலாளர் கேட்கும்போது

அவசரகதியில் செய்து தரலாம்;

இதில் எது தரமாகவும், சரியாகவும் இருக்கும்?


அவசரகதியென்பது எப்போதுமே பதட்டம்தான்!

எல்லா பதட்டமும் எளிதில் தவறான முடிவிற்கு வழிவகுக்கலாம்!


கல்வியோ, விளையாட்டோ, வியாபாரமோ

எல்லாவற்றிலும் கடைசி நிமிட பதட்டத்தை தவிர்த்திடுங்கள்!

கடைசி நிமிட பதட்டம் இல்லாமல்

காலத்தே செய்யப்பட்டால், எல்லாம் நலமாகும்!


- [ம.சு.கு 11.08.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page