top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 305 - ஒருதலைசார்பில் சிக்கிவிடாதீர்கள்...!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-305

ஒருதலைசார்பில் சிக்கிவிடாதீர்கள்.!


  • இன்று வங்கிகளின் வாராக்கடன் பல இலட்சம் கோடிகளில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை 2005 முதல் 2013 வரை வழங்கப்பட்டவை என்று கூறுகின்றனர். இதற்கான காரணம் குறித்து ஆய்ந்த பொருளாதார வல்லுனர்கள், பெரும்பாலான கடன்கள் வியாபாரத்தின் உண்மை நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல், காகித அனுமானங்களின் அடிப்படைகளில் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு என்று கருத்து தெரிவிக்கின்றனர். உலகளவில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும்போது, எல்லாத் தொழில்களும் விரிவாக்கத்திற்கு அளவுகடந்த கடன்களை வாங்கின. எதிர்கால வருவாய் அனுமானங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த கடன்கள் எல்லாம், விரிவாக்க முயற்சி வெற்றிகாணாதபோது, வாராக்கடன்களாக மாறிவிட்டன. வங்கியில் கடன் வழங்குபவர்கள், நிறுவனத்தின் எதிர்கால வருவாயை மட்டும் கருத்தில்கொண்டு, ஒருதலைசார்பாக கடன்களை வழங்கியதால், மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது;

  • ஒரு சில நிறுவனங்கள், வேலைக்கு ஆள்சேர்ப்பதில், எண்ணற்ற எழுதப்படாத விதிகளை கொண்டிருக்கின்றன. உத; சில நிறுவனங்களில் ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப் பட்டிருக்கின்றனர், சில நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டுமே பணியமர்த்தப் பட்டிருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், எல்லாத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக இருக்கும்போது, இன்னும் ஒருதலைபட்சமாக, சில முதலாளிகள் பெண்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பது முட்டாள்தனம் தான். அதேபோல, சில முதலாளிகளின் இனம்சார்ந்த பாரபட்சமும் பரவலாக காணப்படுகிறது. இந்த பாரபட்சங்களினால் ஒன்றும் பாதிப்பில்லையே என்று நீங்கள் வாதிடலாம். ஆனால், குறுகிய வட்டத்தில் இருக்கும் இந்த பாரபட்சமான வியாபாரிகளுக்கு, பல வாய்ப்புகள் தெரியாமலே போய்விடும்!!

கடன் வழங்கும்முன், வியாபாரம் என்ன? அதன் சந்தை நிலவரம் என்ன? இலாப சதவிகிதம் என்ன? அவ்வப்போது ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க என்ன ஏற்பாடுகள் உள்ளன? என்று நிறைய விடயங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆழமான ஆய்வு செய்யாமல், வெறுமனே எதிர்கால வருவாய் குறித்த திட்ட அறிக்கை சமர்பிப்புக்களை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டு, கடன்களை வழங்கினால், வியாபார சுழற்சியில், அந்த நிறுவனங்கள் தாக்குபிடிக்க முடியாமல் திணரும்போது, எல்லாமே இழப்புதான். வங்கி, ஒருதலைசார்பாக காகதி அனுமானங்களை மட்டும் பெரிதாய் நம்பியதால் ஏற்பட்ட விளைவுகள்தான் இந்த பெரிய வாராக்கடன் நிலை. இப்படி வங்கிகள் ஒருதலைசார்பாக ஏமாந்ததுபோல், நீங்கள் என்ன முடிவுகளை ஒருசார்புத் தன்மையில் எடுத்திருக்கிறீர்கள் என்று யோசியுங்கள்?


வாடிக்கையாளரிடம் கனிவாக பேசுவது, ஒருசில நுணுக்கமான வேலைகளை கவனம் சிதறாமல் நேர்த்தியாக செய்வதில் பெண்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். ஆனால் அவர்களை வேலைக்கு அமர்த்தாமல், ஒருதலை பட்சமாக ஆண்களை மட்டும் வேலைக்கு எடுத்தால், தொழில்முன்னேற்றம், உற்பத்திப் பெருக்கம் எப்படி சாத்தியமாகும்? ஒரு குறிப்பிட்ட இன மக்களை மட்டும் வேலைக்கு அமர்த்தும் நிறுவனம், காலப்போக்கில் “அது அந்த சாதிக்காரர் கடை” என்று முத்திரை குத்தப்படநேரிடலாம். சந்தையில், அப்படிப்பட்ட பாகுபாடான முத்திரைகள், எதிர்கால வளரச்சியை பெரிதாய் பாதிக்குமே!


வியாபாரமோ, அன்றாட வாழ்க்கையோ, எங்கும் ஒருதலைபட்சமாக இருப்பது ஆபத்துதான். உங்களின் ஒருதலை பட்சமான கண்ணோட்டம், மற்ற கோணங்களை கவனிக்கத் தவறிவிடுகிறது. அந்த ஒருதலைசார்பு, தான் செய்வது மட்டுமே சரியென்ற அகங்காரத்தை வளரச் செய்துவிடுகிறது. இந்த சார்புநிலையிலிருந்து தப்பிக்க விரும்பினால், என்னென்ன முடிவுகளை நீங்கள் குறுகிய கண்ணோட்டத்தில் எடுக்கிறீர்கள் என்று யோசியுங்கள்.

  • வேலைக்கு ஆள்சேர்ப்பதில் ஆண்-பெண், சாதி-மதம், மொழி போன்ற பாகுபாடுகளை பார்க்கிறார்கள்;

  • கருப்பு, அழகு, அவலட்சனம், கவர்ச்சி என்ற அடிப்படையில், மற்றவர்களைப்பற்றி நிறைய ஒருதலை சார்பான அனுமானங்கள் நிலவுகிறது! [கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் தோற்றத்தைப் பார்த்து ஆட்களை எடைபோட்டு, வியாபார]

  • வயதானவர்களால் இதுசெய்ய முடியும், இது முடியாது என்ற அனுமானங்களும் நிறைய இருக்கிறது!

  • பத்து பேர் செய்கிறார்கள், அதனால் அது சரியாக இருக்கும் என்று கூட்டத்தோடு சேர்ந்துகொள்ளும் நபர்கள் நிறைய இருக்கிறார்கள் [எல்லோருமே செய்கிறார்கள் என்பதற்காக, தவறான செயல்கள் எப்போதுமே நியாயமாகிவிடாது!]. கூட்டம் செய்வது சரியாக இருக்கும் என்ற அனுமானம் சில சமயங்களில் தவறாகக்கூடும்!

  • சமீபத்தில் நடந்த விடயங்கள் மட்டுமே எல்லோருக்கும் நியாபகம் இருக்கும். அதை மட்டுமே கருத்தில்கொண்டு முடிவுகளை எடுத்துவிடக்கூடாது. முழுமையான புள்ளிவிவரங்களை ஆய்வுசெய்து முடிவுகளை சார்புத்தன்மையில்லாமல் எடுக்கவேண்டும்!

  • முதலில் வரும் தகவலை சரியென்று மனம் பதிவு செய்துகொள்ளும். பலசமயங்களில் அது தவறான தகவலாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் அந்த முதல் தகவலை வைத்து நிறைய அனுமானங்களை ஏற்படுத்திக்கொள்வது ஆபத்தாகக்கூடும்.

  • பல சமயங்களில், ஒரு செயல் தன்னால் முடியும், முடியாது என்று சுயமாக அனுமானிக்கிறார்கள். முடியாது என்று அனுமானித்தால், முயற்சி செய்வதை முற்றிலுமாய் நிறுத்திவிடுகிறார்கள். அனுமானங்களைக் காட்டிலும், அந்த செயலுக்கான தேவை, திறமைகள் குறித்து முழுமையாக ஆய்ந்தறிந்து முடிவெடுப்பது சரியாக இருக்கும்!

  • தெரிந்தவர்களை மட்டும் நம்புவது, புதியவர்களை முற்றிலும் சந்தேகப்பார்வையில் வைத்திருப்பதும் ஒருவகையான சார்புத் தன்மைதான்;

  • தலைவர் / மேலாளர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அதிகாரம் சார்ந்த சார்புத் தன்மைகள் மிக அதிகம். யார் சொன்னாலும், சரியா-தவறா என்று தங்களுக்குள் அலசிப்பார்ப்பது அவசியம்!

  • “மற்றவர்களுக்கு என்ன நடக்கிறதென்பதைப்பற்றி தனக்கு கவலையில்லை, தனக்கு நஷ்டம் வராதவரை நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை” என்று ஒருதலைபட்சமாக இருப்பவர்கள் அதிகம்!

இந்த பட்டியல் ஒரு சிறிய உதாரணம் தான். வியாபார உலகில் / அன்றாட வாழ்க்கையில் இதுபோல ஆயிரமாயிரம் தவறான அனுமானங்கள் வந்துகொண்டே இருக்கும். அந்த அனுமானங்களின் அடிப்படைகளை அலசிப்பார்க்காமல், மேலோட்டமாக முடிவெடுத்து செயல்பட்டால், சிலபல சிக்கல்கள் தோன்றக்கூடும். வெற்றி பெற ஆசையிருந்தால், முதற்கண் இந்த ஒருதலைபட்சமான சார்புத் தன்மைகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எந்தவொரு சார்புத் தன்மையிலும் சிக்கிக்கொள்ளாமல், வியாபார சூழ்நிலைகளுக்கு ஏற்ப, முழுமையாக அலசிப்பார்த்து முடிவெடுத்தால், எல்லாவிதமான சிக்கல்களையும் கடந்து வெற்றியை உறுதிசெய்ய முடியும்;


ஆண்-பெண் பாலினம் சார்ந்து அனுமானிக்காதீர்கள்!

சாதி-இனம் சார்ந்து அனுமானிக்காதீர்கள்!

வயது காரணங்களைக் கொண்டு அனுமானிக்காதீர்கள்!

மொழி-இடம் சார்ந்து அனுமானிக்காதீர்கள்!

எல்லா பிரிவிணைகளும், வேறுபாடுகளும் செயற்கையானவை!


உங்கள் தொழில் வெற்றிபெற வேண்டுமானால்

எதிலும் ஒருதலைபட்சமாக முடிவெடுத்துவிடாதீர்கள்;

நீங்கள் தவறவிடும் வாய்ப்புக்களை பயன்படுத்தி

வெற்றிபெற போட்டியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்!


சரி-தவறு, நல்லது-கெட்டது, நல்லவன்-கெட்டவன்,

தூரம்-பக்கம், கடினம்-எளிது, இருக்கிறது-இல்லை,

வரும்-வராது, தெரியும்-தெரியாது, முடியும்-முடியாது,

என்று நீங்களாக எதையும் அனுமானித்துவிடாதீர்கள்!

புள்ளிவிவரங்களைக் கொண்டு சரியாக புரட்டிப்பாருங்கள்!

சான்றோர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!

எதிலும் ஒருதலைபட்சமான நிலைப்பாடு ஆபத்தான ஒன்றுதான்;



- [ம.சு.கு 10.08.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page