top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 304 - தெரிந்தவற்றை மட்டுமே தேர்வுசெய்கிறீர்களா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-304

தெரிந்தவற்றை மட்டுமே தேர்வுசெய்கிறீர்களா..?


  • நீங்கள் ஒரு கடை வைத்து வியாபாரம் துவங்கினீர்கள். வியாபாரம் நன்றாக போகும்போது, அதைவிரிவு படுத்த முடிவுசெய்கிறீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்தினால் அதை நிர்வகிக்க உங்கள் ஒருவரால் மட்டுமே சாத்தியமில்லை. கூடுதலாக நம்பிக்கையான ஓரிரு மேலாளர்களை நியமிக்கவேண்டும். அப்போது உங்கள் மனைவி, அவரது தம்பியை சேர்த்துக்கொள்ளுங்கள், நம்பிக்கையானவனாகவும் நமக்கு கட்டுப்பட்டவனாகவும் இருப்பான் என்று ஆலோசனை கூறுகிறார். இப்போது, அந்த துறைசார்ந்த அறிவுடைய மேலாளர்களை தேடி சேர்ப்பீர்களா? அல்லது அனுபவம் இல்லாத உங்கள் மனைவியின் தம்பியை அந்த வேலைக்கு சேர்ப்பீர்களா?

  • ஒரு சர்வதேச வர்த்தக நிகழ்விற்கு செல்கிறீர்கள். எல்லா வியாபாரிகளும் வெவ்வேறு நாட்டிலிருந்து வரும் மற்ற வர்த்தகர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பக்கத்தில் அமர்ந்தவரிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரைப்பற்றி தெரிந்துகொள்கிறீர்கள். தேனீர் இடைவேளையில் உங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரை அந்த நிகழ்ச்சியில் கண்டு பேச ஆரம்பிக்கிறீர்கள். அடுத்த என்ன நேரும்? அந்த நிகழ்ச்சி முடியும் வரை நீங்களும் அந்த நண்பரும் பக்கத்து இருக்கைக்கு மாறி உட்கார்ந்துகொண்டு, நிறைய பேசுவீர்கள். ஆனால் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள நிறைய புதியவர்களுடன் பேசவேண்டிய இடத்தில், உங்களுக்கு பரிட்சையமானவருடன் நேரத்தை அதிகம் செலவிட்டு புதியவர்களுடனான அறிமுகத்தை முற்றிலும் குறைத்திருப்பீர்கள்!

மேலாளரா? அல்லது மனைவியின் தம்பியா? என்ற கேள்வி வரும்போது, பெரும்பாலானவர்கள் மனைவியின் தம்பியையே தேர்வுசெய்கிறார்கள். ஏன் துறை சார்ந்த திறமையான மேலாளர்களுக்கு பதிலாக, உங்களுக்கு பரிட்சையமான நபரை தேர்வுசெய்கிறீர்கள் என்று கேட்டால், “தெரிந்தவர்கள் நம்பிக்கையானவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம், தெரியாதவர்கள் ஏமாற்றக்கூடும்” என்று பதில் சொல்வார்கள். ஆனால், அவரது தம்பிக்கு தொழில் தெரியாததால், அவர் தெரிந்துகொள்ளும் வரை, நீங்கள் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதனால் நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏன் இப்படி கல்லாப்பெட்டியில் எப்போதுமே உறவினர்களையே உட்காரவைக்க வேண்டுமென்ற குறுகிய நோக்கத்தோடு நம்மவர்கள் பலர் சிந்திக்கிறார்கள் என்பது புரியாத புதிர்தான்!!


எந்தவொரு நிகழ்ச்சிக்குப் போனாலும், தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்றுதான் முதலில் எல்லோருடைய கண்களும் தேடுகின்றன. அவர்களுக்கு தெரிந்தவர்கள் ஓரிருவர் இருந்தால், உடனே அவரது அருகில் சென்று அமர்ந்தபின்தான், ஏதோ ஒரு இனம்புரியாத மனநிம்மதியை உணர்கிறார்கள். புதியவர்களை கண்டு பேச நிறைய தயக்கம். தெரியாதவர்களுடன் என்ன பேசுவது என்று ஒதுங்கிப்போவதால் புதியவற்றை என்றைக்குமே தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைப்பதில்லை. வியாபார நிகழ்ச்சிகளில் புதியவர்களுடன் பேசும்போது, அவர்கள் நாட்டின் வியாபாரம் எப்படி? அங்கு என்ன இருக்கிறது? என்ன இல்லை? அதில் ஏதாவது உங்கள் வியாபாரத்தின் பங்களிப்பை தொடங்க முடியுமா? என்று நிறைய கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் புதியவர்களுடன் பேசுவதற்குத் தயங்கி, தெரிந்தவர்களுடன் மட்டும் நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தால், புதிய ஊர்கள், புதிய சந்தைகள், புதிய பொட்கள் குறித்து சீக்கிரம் தெரிந்து கொள்ள முடியாது.

  • புதிய ஊர்களில் உணவுவிடுதியில் நிறைய உணவு வகைகள் இருக்கும், ஆனாலும் வழக்கமான இட்லி, தோசை இருக்கிறதா என்று கேட்டு அதைமட்டுமே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். புதிய ஊர்களில், அவர்களின் உணவுகளை ஒரு முறை வாங்கி இருசித்துப் பார்க்காமல் விட்டால், எப்படி உலகத்தை, அவர்களது கலாச்சாரத்தை, உணவுகளை பற்றி தெரிந்துகொள்வது;

  • ஓரிரு நாள் இரயில் பயனத்தில், உங்கள் நண்பருடன் மட்டுமே பேசிக்கொண்டு செல்வதானால், சீக்கிரத்தில் சலிப்புதட்டி விடுமே! உடன் பயனிக்கு சக பயனியர் 4-5 நபர்களுடன் பேசினால், அவர்களது ஊர், வியாபாரம், அவர்களது கண்ணோட்டம் என்று நிறைய தெரிந்துகொள்ளலாமே!

  • வேலைக்கு ஆள் சேர்க்கும்போது, திறமை பார்த்து சேர்க்க வேண்டிய இடத்தில், அதீதமாக தெரிந்தவரா? சிபாரிசா? என்று பார்த்து சேர்த்தால், வேலையை எப்படி மேம்படுத்த முடியும்! அதேபோல, மேலதிகாரிகள் பதவி உயர்வுகளை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்தால், திறமையானவர்கள் வெளியேற நேரிடுமே!

  • உங்கள் தயாரிப்பில் புதிய முறைமைகள் நிறைய வந்திருக்கும். ஆனால் மாற்றத்தைக் கண்டு பயந்து, புதிய முறைமைகளை சோதித்துப் பார்க்காமல் இருந்தால், காலப்போக்கில் நஷ்டம் யாருக்கு?

  • பொது காரியங்கள் பலவற்றில், மக்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்லாமல், தங்கள் சாதி, தங்கள் இனம் என்று தங்களுக்குத் தெரிந்த குறிப்பிட்ட மக்களை மட்டும் வேறுபடுத்தி, முக்கியத்துவம் அளித்து செய்யும்போது, ஏற்றத்தாழ்வுகளும், பிரிவிணைகளும் சமுதாயத்தில் வளர்ச்சியை பாதித்துவிடுகிறதே!

  • நீதிமன்றங்களில் கூட, சில சமயங்களில் நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்த மூத்தவழக்கறிஞர்கள் வாதிடும் வழக்குகளில், அவர்களுக்கு நிறைய நேரம் அளிப்பதும், நூலிழை வேறுபாடுள்ள வழக்குகளில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதும் வழக்கமாக நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது!

ஏன் இப்படி, தங்களுக்கு தெரிந்த நபர்கள், தெரிந்த விடயங்களைமட்டுமே மனிதமனம் தேர்வு செய்கிறது?

  • தெரிந்தவற்றை தேர்ந்தெடுக்கும்போது, மனம் ஒரு பாதுகாப்புத் தன்மையை உணர்கிறது. புதியவற்றைத் தொடங்கும்போது ஒருவித பயம் மனதில் இருக்கிறது. அந்த பயத்தை வெற்றிகொள்பவர்கள் ஏனையவற்றை பொருட்படுத்தாமல் புதியவற்றில் பயனிக்கிறார்கள்;

  • ஏதோ ஒருமுறை புதியவர்களை நம்பி ஏமாந்திருந்தால், அதை எல்லா சூழ்நிலைகளுக்கும் அப்படி பொருத்திப் பார்த்து பயப்படுவதால், தெரிந்தவற்றை மட்டுமே மனம் நாடுகிறது!

  • ஓரிரு முறை புதியபொருட்களை வாங்கி முயற்சித்து தோல்விகண்டால், உடனே மனம், நமக்கு புதியவைகள் ஒத்துவராது என்று முடிவுசெய்து, பழமையான முறைகளையே தொடர்ந்து நம்புகிறது!

தெரிந்தவர்கள் இருந்தால் நன்றுதான் – ஆனால்

அவர்களுடன் மட்டுமே நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தால்

புதியவர்களை, புதியவற்றை எப்படி தெரிந்துகொள்வது!


தெரிந்தகரையிலிருந்து விலகிப்போனால் தானே முடியும்!

கரையை பிடித்துக்கொண்டிருந்தால்

எப்படி பயனிப்பது? எப்படி உலகம் தெரிவது?


தொழில் நுட்ப வளர்ச்சியில் உலகம் கையடக்கமாகிவிட்டது!

இங்கு எல்லாமே சாத்தியமாகிவிட்டது! – ஆனால்

அவற்றை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

பழையவற்றை கடந்து புதியவற்றை சோதிக்கத் தயாரா?

தெரியாத முகங்களோடு தயக்கமில்லாமல் பேசத் தயாரா?

புதியவற்றிற்கு நீங்கள் தயாராக இருந்தால்

உங்கள் வெற்றியின் அளவு பெரிதாக வாய்ப்புகள் அதிகம்!


- [ம.சு.கு 09.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page