top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 301 - தோற்றம் எவ்வளவு முக்கியம்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-301

தோற்றம் எவ்வளவு முக்கியம்...?


 • பெரிய அளவில் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் ஒரு வர்த்தகர், அடுத்தகட்டமாக, 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு பெரிய உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்து, அதற்கான 50% பணத்தை வங்கியில் கடனாக பெற திட்டமிட்டு பக்கத்து ஊரில் உள்ள பெரிய வங்கியின் தலைமை பொது மேலாளரை சென்று சந்திக்கிறார். அன்றைய தினம் தன் நான்கு சக்கர சொகுசு வாகனத்தை எடுக்காமல், ஏனோ சாதாரண உடையில், பக்கத்திலிருந்து நடந்து சென்றுள்ளார். அவரது மிகமிக சாதாரண தோற்றத்தைக் கண்ட மேலாளரின் செயலாளர், அவரை பெரிதாக பொருட்படுத்தாமல் சற்று காக்க வைத்து பின் அனுமதித்துள்ளார். பொது மேலாளரிடம் தன்னுடைய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டதும், அவரும் பெரிதாய் பொருட்படுத்தவில்லை. அவரது தோற்றத்திற்கும், கேட்கின்ற தொகைக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை என்று வெறுமனே 4-5 கேள்விகளை கேட்டுவிட்டு, உரிய ஆவனங்களை கொண்டுவரச் சொல்லி அனுப்பிவிட்டார். சில நிமிடங்களில் ஜன்னலில் வெளிப்புறம் பார்க்கும்போது, இவர் வங்கிக்கு வெளியில் நடந்துபோவதைக்கண்டு “யாரெல்லாம் 100 கோடி கடன் கேட்பதென்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டதென்று” தனக்குத்தானே எண்ணிக்கொள்கிறார்.

 • ஆஸ்கர் விருதுவாங்கிய ஒரு புகழ்பெற்ற நடிகர், மிகவும் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டவரிடம், ஒருசிறிய நேர்காணல் நடந்தது. அவரது வெற்றிக்கு முக்கியமான காரணம் என்ன? அவரது கடுமையான உழைப்பு, அவரது சிறப்பான நடிப்பாற்றல் என்று நிறைய விடயங்களை பேசினார்கள். அவரிடம் உங்களைப்போல் நடிப்பாற்றல் கொண்டவர்கள் வெற்றி பெறும்போது, ஏன் திரைத்துறையில் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது. அவர் யோசிக்காமல் சொன்னார் - “ஒருவேளை என் முகம் அவலட்சணமாகவோ, உடல் நோஞ்சானாகவோ இருந்திருந்தால், முதற்கண் எனக்கு நடிக்கும் வாய்ப்பே இன்றுவரை கிடைத்திருக்காது. அப்படியே அதிர்ஷ்டவசமாக ஓரிரு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், சரியான தோற்றம் இல்லாவிட்டால், மக்கள் மத்தியில் எந்த வரவேற்பும் இருந்திருக்காது” என்றார்.

முதிலீடு செய்ய 100 கோடி தயாராக வைத்துக்கொண்டு, கூடுதல் 100 கோடி கடன் கேட்க வந்தவரிடம், அடமானம் கொடுக்க போதுமான அளவு சொத்து இருந்தது. அவரது உற்பத்தி நிறுவனத் திட்டமும், அவரது வியாபார அனுபவமும், அவற்றை செயல்படுத்த போதுமானதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் அவர் வங்கிக்கு முதல் முறையாக வந்த தோற்றம், வங்கி அதிகாரிகளுக்கு அவர்மீது எந்தவொரு நம்பிக்கையையும், நல்ல அபிப்பிராயத்தையும் கொடுக்கவில்லை. எந்த இடத்திலும், எப்படிப்பட்ட தோற்றத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, முதற்கண் உங்களை இந்த உலகம் எடைபோடுகிறது. உங்களை முதல்முறை பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்படும் அபிப்ராயம் அவ்வளவு சீக்கிரத்தில் மாறுவதேயில்லை.


திரைத்துறையில் திறமை இருந்தால் தான் வெற்றபெற முடியும் என்பது உண்மைதான். ஆனால் உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பது அதைவிட முக்கியமான தேவை ஆயிற்றே! அவலட்சணமாக இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் யார் கதாநாயகன் வாய்ப்பு தருவார்கள்? கட்டுமஸ்தான உடல் அமைப்பும், இலட்சணமான முக அமைப்பும், அவருக்கு ஆரம்பத்தில் ஓரிரு வாய்ப்புகளை உறுதி செய்தது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார். அவரது தோற்றம் பிடித்துப்போக, அவரது ஆற்றலும், திறமையும் ஏகபோகமாக புகழ்பெற்றது. அடிப்படையில் தோற்றம் சரியில்லையென்றால், கதாநாயகனாக யார் ஏற்பார்கள்?


தோற்றம் குறித்து பிரபலமாக சொல்லப்படும் ஒரு இந்திய மகாராஜாவின் ரோல்ஸ் ராய்ஸ் கடை அனுபவத்தையும், பின்னர் அந்த வாகனத்தை குப்பையல்ல பயன்படுத்திய கதையையும் இணையத்தில் தேடிப் படித்துப்பாருங்கள்.


தோற்றமும், அழகும் தான் முக்கியமா? அறிவும், ஆற்றலும் முக்கியமில்லையா என்று என்னிடம் வாதாட வேண்டுமென்று உங்களுக்கு தோன்றும். நீங்கள் எண்ணுவதுபோல, அறிவும் – ஆற்றலும் அதிமுக்கயம் என்பதில் எனக்கு வேறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அந்த அறிவையும், ஆற்றலையும் வெளிப்படுத்த, முதற்கண் வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறது என்பதுதான் பொதுவான கேள்வி.


உங்கள் தோற்றம் சரியாக இருந்தால், வியாபார்த்தில் அதன் தாக்கம் எப்படி இருக்குமென்றால்:

 • உங்களின் முதல் முயற்சியில், மற்றவர்கள் முகம்சுழிக்காமல் பேசுவார்கள்;

 • உங்களைப் பற்றிய முதற்கண் பார்வை அபிப்ராயம் நல்லபடியாக இருக்கும்;

 • அந்த முதல் வாய்ப்பில் உங்கள் பேச்சாற்றல் சிறப்பாக இருந்தால், அவர்களின் முழுமையான நம்பிக்கையை பெறமுடியும்;

 • உங்களின் தனித்துவம், திறமை அவர்களின் நியாபகத்தில் ஆக்கப்பூர்வமானதாக பதிவாகும்.

நல்ல மிடுக்கான உடையணிந்து (கோட்சூட்) உங்களை பணக்காரர் என்று காட்டினால் தான், உங்களிடம் கோடிகளில் புதியவர்கள் பேசுவார்கள். ஏற்கனவே உங்களைப்பற்றி அறிந்தவர்களுக்கு, உங்களின் தோற்றம் பெரிய விடயமல்ல. நீங்கள் சாதாரணமாக இருப்பதைப்பார்த்து, உங்களை “எளிமையான மனிதர்” என்று பெறுமையாக நினைத்துக்கொள்வார். ஆனால் புதியவர்களுக்கு அப்படியல்ல! உங்களின் முதற்கண் தோற்றம்தான் எல்லாமே!

 • எல்லா நிறுவனங்களிலும், அழகான பெண்களை வரவேற்பறையில் அமர்த்துகிறார்கள். நிறுவனத் தொலைப்பேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களைத் தான் அதிகம் அமர்த்துகிறார்கள் - ஏன்?

 • பொருட்களின் விளம்பரங்கள் எல்லாவற்றிலும், அழகான நடிகர்-நடிகையர்களையே பயன் படுத்துகின்றனர் - ஏன்?

 • மிடுக்காக உடையணிந்து செல்பவரைத்தான் அலுவலகத்தில் முதலில் உட்காரச் சொல்லிவிட்டு பேச ஆரம்பிக்கிறார்கள். சாதாரணமாக தோற்றமளிப்பவரை ஏன்? எதற்கு? என்று விசாரித்தபின்தான் உட்காரச் சொல்கிறார்கள் – ஏன்?

 • அழகும், கவர்ச்சியும் வெளிப்படுத்தும் நடிகர்-நடிகையருக்குத்தான் இங்கு ஊருக்கு ஊர் இரசிகர் மன்றங்கள். நாட்டிற்கு தங்கம் வென்ற வீரர்கள் பலரை மறந்தே விடுகின்றனர் – ஏன்?

மக்களின் முதற்கண் பொதுவான விருப்பம் அழகாக இருக்கவேண்டும். அதைத் தொடர்ந்துதான் அறிவையும், ஆற்றலையும் பார்க்கிறார்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து உங்கள் திறமையை நிரூபித்துவிட்டால், உங்களை கொண்டாடுவார்கள். திறமை நிரூபிக்கப்பட்ட பின், உங்கள் அழகும், தோற்றமும் பெரிதல்ல. ஆனால் முதற்கண் வாய்ப்பை பெறுவதற்கு, உங்கள் தோற்றம் அதிமுக்கியம். தேவைப்படும் இடத்தில், சரியான தோற்றத்தில் நீங்கள் இல்லாவிட்டால், உங்களுக்கான வாய்ப்பு கிடைக்காமலே போய்விடும்.


திறமையும், உழைப்பும் முக்கியம் – ஆனால்

சீக்கிரமாக நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றால்

உங்களின் முதற்கண் தோற்றம் அதிமுக்கியம்!


இலட்சணம் இல்லாதவர்கள் ஜெயிக்க முடியாதா? – இந்தக்கேள்வி

நம்மெல்லோர் மனதிலும் தோன்றும்;

அப்படி ஜெயித்தவர்கள் கடந்துவந்த புறக்கணிப்புக்களையும்

கடினமான பாதையையும், அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!


உங்கள் இலட்சியப் பாதையில் வெற்றிகாண தோற்றம் முக்கியம்

தோற்றம் என்பது அழகுமட்டுமல்ல !

நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்! எப்படி பேசுகிறீர்கள்!

எப்படி உங்களை வெளிப்படுத்துகிறீர்கள்!

என்று பலவிடயங்களை உள்ளடக்கியது!


- [ம.சு.கு 06.08.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page