top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 300 - மின்னுவதெல்லாம் பொன்னல்ல.!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-300

மின்னுவதெல்லாம் பொன்னல்ல..!


 • நம் தமிழகத்தில், திரைப்படத் துறை என்பது ஒரு மாய உலகம். உங்களில் பலருக்கு மிகப்பெரிய நடிகரைப் போல பேரும், புகழும் பெறவேண்டும் என்ற கனவு ஒருகாலத்தில் இருந்திருக்கும். திரைத்துறையில் எல்லோரும் நிறைய சம்பாதித்து, பெரிய புகழுடன் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றது போன்ற பிம்பம் நமக்குத் தோன்றும். திரைப்படத்தில் வரும் நடிகைகள் பேரழகிகள் என்று எண்ணுவீர்கள். ஆனால் இவையனைத்தும் எவ்வளவு தூரம் உண்மையாக இருக்குமென்று அலசிப் பார்த்திருக்கிறீர்களா?

 • பங்குச்சந்தை முதலீடுகள் – இது இலாபகரமானதா? அபாயமானதா? என்று முடிவு செய்ய முடியாத ஒன்று. பெரிய பணக்காரர்கள் அவர்களின் சொத்துக்களை பெருக்குவது இங்குதான். அதேசமயம், எண்ணற்றவர்கள் கோடிகளில் தொலைத்ததும் இங்குதான். திடீரென்று ஒரு வாரத்தில் ஒரு சில பங்குகளின் விலை இரட்டிப்பாகிறது. அதே பங்கு, சில தினங்களில் கேட்பாரற்றுப் போகிறது. ஏதாவதொரு புதிய தகவல், அனுமானம் தோன்றினால், பங்கின் விலை கிடுகிடுவென மாறுகிறது. ஒருசிலர் அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் பங்கின் விலையை செயற்கையாக ஏற்றி, சிறுமுதலீட்டாளர்களை கவர்ந்து, பின் தங்கள் இலாபத்தோடு வெளியேறி விடுகிறார்கள். இந்த பங்குச் சந்தையில் தினமும் ஏதேனும் ஒன்று மின்னிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த மின்னல் பூச்சியின் வளையில் விழுந்து மடிவதும், அவற்றைகண்டு மயங்காமல் சிந்திப்பதும் உங்கள் கையில்தான்!

திரைப்பட மாயை, நடிகர்-நடிகைகளின் புகழ் எல்லோரையும் கவர்கிறது. ஆனால் அந்த திரைப்படத் துறையின் பின்புலத்தில் ஆயிரமாயிரம் சிக்கல்கள், போராட்டங்கள் நிறைந்திருக்கின்றன. திரையில் மின்னும் நடசத்திரங்கள் நிஜத்தில் பார்க்க சகிக்க முடியாது. அத்தனை அலங்காரம் செய்து மின்னுவார்கள். அவர்கள் திரையில் பேசும், தர்ம நியாயங்கள் பலவற்றை நிஜவாழ்க்கையில் பொருட்படுத்துவதில்லை. ஆனால் திரையில் மின்னுவதை மட்டும் பார்த்துக்கொண்டு ஏமாறும் கூட்டம் மிக அதிகம். அந்த மாயையை நம்பி, ஊரைவிட்டு கிளம்பிவந்து வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம்.


பங்குகளின் விலையை கட்டுப்படுத்த, ஒருசில நிறுவனங்கள் தங்களின் இலாப-நட்டக் கணக்குகளை, ஆண்டு அறிக்கைகளை, தங்கள் தேவைகளுக்கு ஏற்றாற்போல திரித்துக்கூறுகின்றனர். அந்த மாய எண்களை நம்பி ஒருகூட்டம் முதலீடு செய்து ஏமாறுகிறது. இன்னொரு புறம், சுயலாபத்திற்காக, பங்குச் சந்தையில் செயற்கையாக வர்த்தகங்களை கூட்டி விலையை ஏற்றி, வெளியேறி விடுகின்றனர். இந்த சிறு மின்னல் முன்னேற்றங்களை நம்பி இங்கு ஏமாறும் கூட்டம் மிகமிக அதிகம். நிஜத்தில், பங்குச் சந்தையில் சம்பாதித்தவர்களைக் காட்டிலும், பெரும் பணத்தை தொலைத்தவர்கள் தான் ஏராளம். உங்களுக்கு பங்குச் சந்தை அனுபவம் இருக்கிறதா? அங்கு வென்றீர்களா – விட்டீர்களா!!


அன்றாட வாழ்வில் எண்ணற்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் / வார்த்தைகள் / நபர்களை நீங்கள் கடக்கவேண்டி வரும்;

 • உங்களிடம் பணம் இருக்கும்போது, 30%-40% வட்டி, இலாபத்தில் பங்கென்று கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்கள் வரும். அது எப்படி சாத்தியம் என்று ஆராயாமல் முதலீடு செய்தால், போட்ட முதலீடு போட்டதாகவே போய்விடும்;

 • சமூகவளை தளத்தில் தங்கள் பிம்பங்களை பிரம்மாண்டமாய் அமைத்திருப்பார்கள். எங்கோ எடுத்த புகைப்படங்களை மாற்றியமைத்து ஆயிரம் கதை விடுவார்கள். அவற்றை நம்பி ஏமாந்த பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நடுத்தெருவில் நிற்கிறது;

 • சந்தையில் புகழ்பெற்ற எல்லா நிறுவனப் பொருட்களுக்கும் போலியானவை சீக்கரமே வந்துவிடுகின்றன. போலியானவைகள் தான், புதிதுபோலவும், உண்மையானது போலவும் பொலிவுடன் தோற்றமளிக்கிறது. கவனிக்காமல் வாங்கினால், நஷ்டம் உங்களுக்குத்தான்!

 • அரசியல் கட்சிகள் ஆயிரமாயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஒருவேளை அவற்றையெல்லாம் செய்வதானால், உங்கள் வருமானத்தையெல்லாம் வரியாய் செலுத்தவேண்டி வரும். வாக்குறுதிகளின் சாத்தியக்கூற்றை பாருங்கள்!

 • எல்லா நோய்களையும், கஷ்டத்தையும் போக்குவதாக போலிச் சாமியார்கள் பிரம்மையை ஏற்படுத்துவார்கள். கண்முன்னே வித்தை காட்டுவார்கள். நம்பிப்போனால், உங்கள் கைப்பையில் ஒன்றும் மிஞ்சாது;

 • கவர்ச்சிகரமான ஊதியம், சன்மானம், சம்பள உயர்வு கிடைக்கும் வேலையென்று உறுதியளிப்பார்கள். ஆனால் அவற்றிற்கு எண்ணற்ற நிபந்தனைகளும், கடுமையான வேலையும் இருப்பதை முன்கூட்டியே சொல்லமாட்டார்கள்;

வியாபாரச் சந்தையில்,

 • சில வர்த்தகங்கள் அதிக இலாபகரமானதாக இருப்பதுபோல தோன்றும், அதேசமயம் அதில் ஆபத்தும், இழப்பும் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கும். பின்னூட்டங்களை கவனிக்காமல் இலாப சதவிகிதத்தை மட்டும் கண்டுமயங்கினால் சிக்கல் தான்;

 • உங்களுக்கு பொருட்களை கொடுப்பவர்கள், மற்றவர்களைவிட குறைந்த விலைக்கு தருவதாக சொல்வார்கள். ஆனால் பொருளின் தரத்தில் அவர்கள் குறைத்துவிடுவார்கள். இன்றைய சந்தை நிலவரத்தில், விலைகுறைப்பு எப்படி சாத்தியமென்று நீங்கள் தான் அலசிப்பார்க்க வேண்டும்;

 • வேலைக்கு ஆள்சேர்க்கும்போது, அவர்களின் அழகான சுயவிவரக் குறிப்பை நம்பி அப்படியே முடிவெடுத்தால் தவறாக நேரிடலாம். நேர்காணல் வைத்து, அவர்களின் அறிவையும், அனுபவத்தையும் சோதிக்கவேண்டியது உங்கள் கடமை.

 • விளம்பரங்கள் செய்வதில், அளவுக்கதிகமான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால், நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய நிறுவனங்கள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட வாக்குறுதிகளை நீங்கள் நம்பினால் முட்டாளாகிவிடுவீர்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் பொருளுக்கு அளித்தால், நீங்கள் ஏமாற்றுக்காரராகிவிடுவீர்கள்;

 • புதிய இடங்களில் கிளை திறக்கும்போது, உங்கள் வியாபாரத்திற்கு ஏற்ற இடத்தை சற்று ஆழமாக ஆராய வேண்டும். ஓரிரு முறை அந்த இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு, அங்கு கூட்டம் இருக்கிறதென்று முடிவு செய்தால் முட்டாள் தனமாகிவிடக்கூடும். அன்றைய தினம் அங்கு திருவிழாவாகக் கூட இருந்திருக்கலாம். புதிய இடங்களில் சற்று ஆழமாக ஆய்வு செய்வது அவசியம்.

நன்றாக பட்டை தீட்டப்பட்ட வைரமும், பொன்னும்

கண்கள் கூசும் வண்ணம் மின்னும் – ஆனால்

அவற்றை விஞ்சும் வகையில் இன்று செயற்கை வைரங்களும்

தங்கம் போன்ற உலோகங்களும் மினுமினுக்கிறது;


தங்கத்தையும், வைரத்தையும் விஞ்சி

போலிகள் மினுமினுப்பதுபோல்

எல்லாத் துறைகளிலும், எல்லா விடயங்களிலும்,

எல்லா கூட்டத்திற்குள்ளும்

நிஜங்களை ஓரம்கட்டி, போலிகள் நிரம்பி

பொலிவுடன் ஜொலிக்கின்றன;


அந்த போலிகளையும், நிஜங்களையும்

நீங்கள்தான் இனங்காண வேண்டும்;

போலிகளின் கவர்ச்சியில் ஏமாறாமல்

நிஜத்தை கண்டுணரும்

பொறுமையை வளர்த்துக்கொள்ளுங்கள்;


“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” – என்ற முதுமொழியை

வாழ்வின் எல்லாதருணங்களிலும் நினைவில் கொள்ளுங்கள்!!


- [ம.சு.கு 05.08.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page