top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 299 - கட்டுப்படுத்த முடந்தவைகளை கட்டுப்படுத்துங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-299

கட்டுப்படுத்த முடிந்தவைகளை கட்டுப்படுத்துங்கள்.!


  • எங்கள் ஊரில் வாழைத்தோட்டங்கள் அதிகம். வருடாவருடம் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை காற்று அதிகமாக இருக்கும்போது, எண்ணற்ற வாழைமரங்கள் சாய்வது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் சூரைக்காற்றின் வேகத்தில் முழு வாழைத்தோப்பும் சாய்ந்து பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்படி அடிக்கடி நஷ்டம் ஏற்டுவதால், வாழை விவசாயத்தை விட்டுவிட வேண்டும் என்று விவசாயி நினைத்தால், நமக்கு வாழைப்பழங்கள் எங்கிருந்து கிடைக்கும்? காற்றையும், அதன் திடீர் வேகத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதே சமயம் காற்றுவராத காலங்களில் வாழையை விவசாயம் செய்துமுடிக்கவும் முடியாது (ஏனெனில் அது 10 மாத பயிர்). ஆனால் காற்று காலம் துவங்கும் முன் அந்த வாழைமரங்களுக்கு போதிய முட்டு கொடுத்து சாயாத வண்ணம் ஓரளவு கட்டுப்படுத்துவது அந்த விவசாயிகளின் கைகளில் இருக்கிறதல்லவா!

  • ஒரு குறிப்பிட்ட திட்ட அறிக்கை செய்து முடிக்க இன்னும் இரண்டுநாட்கள் மட்டுமே மீதமிருந்தது. வேலையின் நிலையை பற்றி கேட்டறிந்த மேலாளர், இன்னும் பெரும்பகுதி முடிக்கப் படாமல் இருப்பது கண்டு அதீத கோபம் கொண்டார். குழுவில் பணிபுரிந்த இரண்டு பெண்கள் தான் தாமதத்திற்கு காரணம் என்பதை அறிந்து அவர்களை அதிகமாக திட்டிவிட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த பெண்கள் வேலைக்கு வரவில்லை. அவர்கள் வராததால், செய்யக்கூடிய ஓரிரு வேலைகளும் தடைபட்டது. ஏதோ குற்றம் குறையோடு முடிக்கப்பட்டிருக்க வேண்டிய வேலை, அந்த பெண்கள் வராரததால் முற்றிலும் தடைபட்டது. திட்ட அறிக்கை சமர்பிக்கும் தினத்தை உங்களால் மாற்ற முடியாமல் போகலாம். ஆனால் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, ஊழியர்களை ஊக்குவிப்பது உங்கள் கைகளில் தானே! வேலையின் போக்கை, முன்கூட்டியே கேட்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டியிருந்தால், நேரத்தில் அவற்றை அவர்கள் முடித்திருப்பார்களே!

ஆரம்பகாலத்தில் மரக்குச்சிகளினால் முட்டுகொடுத்து வாழை தார்விட்ட மரங்கள் விழாமல் காத்தனர். இப்போது அடுத்தகட்டமாக, எல்லா மரங்களையும் நான்கு புறமும் கட்டியவண்ணம் முழுதோட்டத்தையும் கையிருகளால் இணைத்து எல்லாபுறமும் பலமாக கட்டிவிடுகிறார்கள். இந்த முறை, கிட்டதட்ட 95% நஷ்டத்தை குறைத்துவிட்டது. காற்றையும், ஆழமான வேரில்லாத வாழைமரம் சாயும் பண்பையும் உங்களால் மாற்ற முடியாது. ஆனால் ஏதேனுமொரு காரணத்தினால் மரம் முற்றிலும் சரிந்துவிடாமல் இருக்க கையிரினால் இணைத்தோ, முட்டுகொடுத்தோ கட்டுப்படுத்த முடிவது உங்கள் கையில்தானே. உங்களால் கட்டுப்படுத்த முடிந்ததை ஏன் கட்டுப்படுத்தாமல் காலம் தாழ்த்தி நஷ்டத்தை சந்திக்கிறீர்கள்!


ஊழியர்கள் அவர்களுக்கு தெரிந்த அளவுதான் பொதுவாக செய்வார்கள். வெகுசிலர் மட்டுமே, அதீத ஆர்வத்துடனும், கற்கும் ஆவலுடன் அடுத்தடுத்து என்ன என்று கேட்டு செய்வார்கள். எல்லா ஊழியர்களும் ஆர்வமுடன் அவர்கள் வேலைகளை செய்ய வேண்டும், எல்லாவற்றையும் அவர்களே சரியாக செய்து குறித்த நேரத்தில் முடித்துவிட வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கலாம் – ஆனால் அவர்களின் ஆர்வம், உத்வேகம், திறமை எல்லாமே ஆளுக்குஆள் வேறுபடும். அவர்களின் திறமையை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் யாரை வேலைக்கு எடுக்க வேண்டும், என்ன வேலை கொடுக்கவேண்டும், எப்படி நிர்வகிக்க வேண்டும், எப்படி உத்தரவுகள் கொடுக்க வேண்டுமென்பது உங்கள் கையில் தானே.


திட்ட அறிக்கையை செய்யச் சொல்லிவிட்டு நீங்கள் கவனிக்காமல் விட்டால், கடைசி நிமிடத்தில் பிரச்சனைகள் வருவது இயல்பே. வேலையை கொடுத்தபின், குறிப்பிட்ட இடைவெளியில் அதன் போக்கை நீங்கள் ஆய்வுசெய்தால், ஏதேனும் சிக்கல் இருந்தால், ஊழியர்களை வழிநடத்தவும், தேவைப்படும் மாற்று நடவடிக்கைகளை முன்னரே செய்துகொடுக்கவும் உங்களிடம் போதிய நேரம் இருக்குமே. உங்களால் கட்டுப்படுத்த முடிந்த இவற்றை குறித்த நேரத்தில் செய்தால், குழுவின் செயல்பாடு தானாக முன்னேற்றமடைந்துவிடும்.


நம்முடைய அன்றாட வாழ்வில், பலதரப்பட்ட விடயங்களில், பலசெயல்கள் நம் கையில் இல்லை என்று குற்றம் சொல்கிறோம். தவறுகள் நேரும் இடத்தில் அதிர்ஷ்டம் இல்லை என்றும், விதியென்றும் குறைசொல்கிறோம். ஆனால் அந்த எல்லா விடயங்களிலும், உங்களால் கட்டுப்படுத்தக் கூடிய, செய்துமுடிக்கக் கூடிய மற்ற செயல்களை சரிவர செய்தீர்களா?

  • தேர்வு எழுதும் மாணவனுக்கு, கேள்வித்தாள் எளிதாக இருக்குமா? கடினமாக இருக்குமா? என்பதை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தினமும் படிப்பதையும், சந்தேகங்களை ஆசிரியரிடம் நிவர்த்தி செய்வதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து சிறப்புற செய்தால் தேர்வு எளிதாகிவிடுமே!

  • வேலைக்கு நேர்காணல் செல்பவர், நேர்காணலில் யார் இருப்பார்கள்? எப்படி கேள்வி கேட்பார்கள் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த நிறுவனம் குறித்து முன்னரே அலசி ஆராய்ந்து நேர்காணலுக்கு தயாராவது அவர் கட்டிப்பாட்டில் தானே இருக்கிறது. முடிந்தவரை நன்றாக தயாராகி இருந்தால் வெற்றிவாய்ப்பு அதிகம் தானே!

  • உங்கள் துணை எப்படி நடந்துகொள்வார் என்று உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு கோபம் வராதபடி, அவருக்கு பிடிக்காததை செய்யாமல் இருப்பது உங்கள் கையிலல்லவா இருக்கிறது!

  • வியாபாரச் சந்தை எப்படி இருக்கும், போட்டியாளர்கள் என்ன செய்வார்கள் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் தரம், சந்தைப்படுத்தும் முயற்சி, கொண்டு சேர்க்கும் நேரம் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் தானே!

  • விளையாட்டுப் போட்டி தினத்தில் மழைவந்து தடைபடுவதோ, எதிராளி மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதோ உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் கடுமையான பயிற்சி, முறையான உணவுக் கட்டுப்பாடு, மனநிலை ஒருமுகப்படுத்துதல் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் தானே!

  • சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு போக, சற்று முன்னதாக கிளம்புவதும், சரியான பாதையை திட்டமிடுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் தானே!

வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும், உங்களால் கட்டுப்படுத்த முடியாதவைகள் சில இருந்து கொண்டேதான் இருக்கும். அதேசமயம் அவைகளில் ஒரு பகுதியை நீங்கள் கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கும். உங்களால் கட்டுப்படுத்த முடியாதவைகளைப் பற்றி முதலில் கவலைப்படாமல், எவற்றையெல்லாம் உங்கள் ஆக்கப்பூர்வமான செயல்களால் கட்டுப்படுத்த முடியுமோ, அவற்றை முதலில் கவனமாக செய்து முடியுங்கள். முதலில் கட்டுப்படுபவைகளை சரியாக செய்துமுடித்தால், மற்றவைகள் படிப்படியாக நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் நடந்தேறும்.


உங்களால் இயற்கையை, மக்கள் குணங்களை, நாட்டின் பொருளாதாரத்தை, அரசியலை, போக்குவரத்து நெரிசலை, சீதோஷனங்களை, மழையை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உங்களால் உங்கள் எண்ணங்களை, செயல்களை, கண்ணோட்டத்தை, முயற்சியை, திட்டமிடலை, நேரத்தை கட்டுப்படுத்த முடியுமே. எல்லாவற்றிலும் உங்களால் கட்டுப்படுத்த முடந்தவற்றை கட்டுப்படுத்துங்கள். வாழ்க்கை தானாய் உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும்;


முடியாதவைகளை முதலில் கையில் எடுத்துக்கொண்டு

முடிக்கபோராடுவதில் அர்த்தமில்லை

உங்களால் கட்டுப்படுத்த முடிந்தவற்றையெல்லாம்

முதலில் முறையாக செய்து கட்டுப்படுத்துங்கள்

கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகள்

தானாய் குறையத் துவங்கிவிடும்!


உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைப் பற்றி

அதிகமாக கவலைப்பட ஒன்றும் இல்லை – ஏனெனில்

நடப்பது நடந்தே தீரும்!


உங்களால் முடிந்தவற்றை எல்லாம்

முதலில் செய்து முடித்தால்

முடிவாதவைகளின் அளவு குறைந்துவிடும்;

கட்டுப்படுத்த முடியாதவைகளின் பட்டியல் குறையும்போது

அவைதானாகவே உங்கள் எண்ணம்போல்

இயங்கத் துவங்கிவிடும்!!


- [ம.சு.கு 04.08.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page